பருந்துகள் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
உன்னுடன் சேர்ந்து அதிகாலை வேளைகளில் கண்விழிக்க வேண்டும்! ஆ.... அதைக் கூறுவதற்கு எனக்கு தைரியம் இல்லை. என்னுடைய உடலில் இருக்கும் ஒவ்வொரு உரோமக் குழியையும் இந்தக் காதல் இல்லாத மற்ற எல்லாரிடமிருந்தும் மறைத்து வாழ என்னால் முடிந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! முள்ளம் பன்றியைப் போல முட்கள் அளிக்கப்படுவது, ஒரு புலியைப் போல கூர்மையான, வளைந்த நகங்கள் தரப்படுவது- அதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அந்தக் கொடுமைக்கும் ஒரு நியாயம் இருக்கிறதே! ஆனால், நாம் வாழும் இந்த உலகம் ஒரு பொம்மை விளையாட்டு உலகமாக இருக்கிறது. அதில் நிறம் கொண்ட பொருட்கள் அனைத்தும் மனிதர்களால் உண்டாக்கித் தொங்கவிடப்பட்ட தோரணங்களாக இருக்கின்றன. பொய்கள், வெறும் பொய்கள், மதங்கள், சடங்குகள்... இவை அனைத்தும் பொய்கள். மனிதனின் பிறவியிலேயே இருக்கும் மதிப்பைக் கெடுத்து, அவனை பலவீனமானவனாக ஆக்கும் விஷக்கனிகள்... மனிதர்கள் தங்களுடைய சொந்த முகங்களில் இருந்தும், சொந்தமான சிந்தனைகளில் இருந்தும் அவமானத்துடன் பின்னோக்கிச் செல்லும்போது, வாழ்க்கைக்கான அர்த்தமும் அவர்களுக்கு நஷ்டமாகிறது. எல்லாம் ஒரு பொய்யாகி விடுகிறது. வளர்ந்து வரும் தலைமுறைகளுக்குக் கொடுப்பதற்கு அவர்களின் கையில், பொய்யான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றாகிறது. பல வண்ணங்களில் இருக்கும் அந்த தாள் தோரணங்கள், மரத்தால் உண்டாக்கப்பட்ட சைத்தான் முகங்கள், அந்தப் பொய்யான நீர்நிலைகள் - இவை அனைத்தும் நிறைந்த உலகத்தில் அவர்களும் வளர்கிறார்கள். அவற்றை நீக்கி, மனதிற்குள் இருக்கும் இருட்டைப் போக்கி, மனிதர்களிடம் மீண்டும் அவனுடைய மகத்துவத்தை உண்டாக்க யாரும் முயற்சிப்பதில்லை. அதனால்தான்... இந்திரா, நம்முடைய யுகத்தின் வரலாறு இந்த அளவிற்கு அவலட்சணமாகி விட்டிருக்கிறது.
ஒவ்வொரு நம்பிக்கைகளும் மெதுவாக அழிந்து கொண்டிருக்கின்றன. நான் சுதந்திரமானவனாக ஆகிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை, இந்த வீடு, குடும்பம் எல்லாவற்றையும் உதறிவிட்டு, காதல் தரும் அந்த முட்டாள்தனமான தைரியத்துடன் நான் நம்முடைய சதுரங்க களத்திற்கு வந்து சேரலாம். என்னை திட்ட வேண்டாம். என்னைத் திருப்பி அனுப்பவும் வேண்டாம்.
காதலுடன்
பெப்பே."
"ஹா! என்ன ஒரு ஏமாற்றுக்காரன்!'' - அந்த வார்த்தைகளைக் கேட்டு இந்திரா பின்னால் திரும்பிப் பார்த்தாள். நாற்காலிக்குப் பின்னால் நின்று கொண்டு வெளிறிய முகத்துடன் லீலா மீண்டும் சொன்னாள்:
"என்ன ஒரு ஏமாற்றுக்காரன்!''
"நீ எதற்காக எனக்குப் பின்னால் வந்து நின்று இதைப் படித்தாய்?''
"படிக்கக்கூடாதா? பொய்களை இந்த அளவிற்கு வெறுக்கக் கூடிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை மறைத்து வைக்கத் தோன்றுகிறதா?''
இந்திரா எந்த பதிலையும் கூறவில்லை. அவள் தலையைத் தாழ்த்தி, கண்களை மூடிக்கொண்டு எந்தவிதமான அசைவும் இல்லாமல் இருந்தாள்.
"நீங்கள் எல்லாரும் போலித்தனத்துடன் வாழ்கிறீர்கள்'' - லீலா சொன்னாள்: "காதல், அன்பு, சுதந்திரம்.... ஹா! என்ன அழகான சொற்கள்! அவற்றைப் பயன்படுத்தக் கூடிய தகுதிதான் உங்களுக்கு இல்லை. உங்களுக்கும் இல்லை. அந்த ஆளுக்கும் இல்லை. அந்த ஆள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வசீகரிக்க...''
"லீலா, நீ எதற்கு அந்த ஆள் மீது குற்றம் சுமத்துறே?''
"உங்களுக்கு உண்மைதான் வேண்டுமென்றால் நான் உண்மையைத்தான் கூறுகிறேன். அந்த ஆள் என்னை ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய், இதே மாதிரி உண்மை சொற்பொழிவு செய்தது எதற்கு என்று கேளுங்கள். என் சுதந்திரத்தை அழிப்பதற்கு... கூர்ந்து பாருங்கள்.... என் உடலில் எந்தவொரு மாறுதலும் உண்டாகியிருக்கவில்லையா?''
அவள் தன்னுடைய புடவையை உடலில் இருந்து இழுத்துக் கழற்றித் தரையில் எறிந்தாள்.
"அய்யோ....''
இந்திரா கண்களை மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
"இது உண்மையா?''
"ஆமா.... எனக்கு முறை தவறி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அம்மா... நீங்க அழக்கூடாது. எனக்கு கொஞ்சம்கூட வருத்தம் இல்லை. எங்களுக்கிடையே ஒரு உறவை உண்டாக்க முடிந்ததே என்று நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். காதல் சிந்தனைகள் கொண்ட ஒரு உறவாக இல்லை என்றாலும்கூட ஆழமான ஒரு உறவு. ஆ.... அது சொர்க்கமாக இருந்தது. அந்த அடிமையாகும் செயல்.... அந்த ஆள் கெஞ்சினார். அழுது என்னுடைய கால்களில் வந்து விழுந்தார்... எந்த அளவிற்கு அவலட்சணம் பிடித்த குழந்தைகளாக இருக்கிறார்கள் ஆண்கள்! அம்மா,உண்மையைக் கூறட்டுமா? அது சொர்க்கமாக இருந்தது!''
"நான் ஒரு பருந்தாக இருந்தேன்'' - அவள் தடுமாறிய குரலில் சொன்னாள்: "எல்லைகள் இல்லாத ஆகாயத்தில்கூட நான் எப்படியெல்லாம் பறந்தேன்! பிறகு... நான் விழுந்தேன்... விழுந்து விட்டேன்!''
"என்ன சொல்கிறாய்?'' - அவளுடைய கணவர் கட்டிலின் கால் பகுதியில் நின்று கொண்டு கேட்டார்: "டாக்டர், எனக்கு அவள் கூறுவது எதுவும் புரியவில்லையே!''
"அவங்களுக்கு சுய உணர்வு இல்லை.''
டாக்டர் மீண்டும் ஒரு ஊசியைப் போட்டார். எப்படிப்பட்ட அன்றாடச் செயலும், அவருக்கு ஒரு போர்க்களமாகவே இருந்தது. தான் வெற்றி பெறுவதற்கு அவர் எல்லாவித முயற்சிகளையும் செய்தார். ஆனால், அந்த நோயாளிப் பெண் இப்போதுதான் தன்னுடைய எதிரியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. வாழ்வதற்கான ஆசை சிறிதுகூட மீதமிருக்கவில்லை என்று அர்த்தமா என்ன? அவர் சிவந்த கண்களுடன் நின்று கொண்டிருந்த அந்த நடுத்தர வயது மனிதனைப் பார்த்தார். கீழுதடைக் கடித்து அழுத்தியவாறு ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த இளம் பெண்ணைப் பார்த்தார். அவருக்கு அவள்மீது காரணமே இல்லாமல் ஒரு வெறுப்பு தோன்றியது.
அவர் நோயாளிப் பெண்ணின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். போர்வையை நீக்கினார். கால்விரல்களைச் சோதித்துப் பார்த்தார். சற்று நீர் கட்டியிருந்தது. அவர் மீண்டும் அந்தப் போர்வையை மிகுந்த கவனத்துடன் அந்தக் கால்கள் மீது போர்த்தினார். இவளை சாகவிடக்கூடாது - அவர் மனதில் நினைத்தார். இந்தப் போரிலும் தான் வெற்றி பெற வேண்டும். எப்படி வெற்றி பெறுவோம் என்று அவருக்கே நிச்சயமில்லாமல் இருந்தது.
தான் வெறுத்த அந்தப் பெண் அனைத்து அழகுகளையும் இழந்து, பார்க்க சகிக்காத ஒரு உருவத்தை அடைவதை லீலா பார்த்துக் கொண்டிருந்தாள். மெல்லிய ஒரு வேதனை அவளுடைய மனதிற்குள் வளர்ந்தது. ஒரு முள் செடியைப் போல.... ஆனால், அவளுக்கு முட்களின் அந்தத் தொடுதலும் ருசியாகத் தெரிந்தது. அவள் பகல் முழுவதும், இரவில் பல தவணைகளாகவும், அந்த நோயாளிப் பெண்ணையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பயணத்தின் விடை பெறும் ஒவ்வொரு நிமிடமும் தன்னுடையதாக இருக்கவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அந்த வகையில்...