பருந்துகள் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
அவன் ஹோட்டலுக்குத் திரும்பி வந்தபோது மணி பன்னிரண்டை நெருங்கிவிட்டிருந்தது. கடற்கரையில் நடந்த நீண்ட நடை அவனை மிகவும் களைப்படையச் செய்திருந்தது. அறையின் கதவைத் திறந்து விளக்கைப் போட்டவுடன், தன்னுடைய கட்டிலில் சாய்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டான்.
"என் தெய்வமே... லீலா!''
அவன் கோட்டைக் கழற்றி ஒரு நாற்காலியின்மீது எறிந்துவிட்டு ஓசை உண்டாக்காமல் கட்டிலை நோக்கி நடந்தான். அவள் மலர்ந்த உதடுகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய புருவங்களின் கறுப்பு நிறத்தையும் அந்தக் கன்னங்களின் அழகையும் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் அமைதியாக நிற்காமல் இருக்க அவனால் முடியவில்லை. என்ன காரணத்தாலோ- கடந்துபோன ஒரு காலத்தில், தான் மெலிந்துபோன கால்களைக் கொண்ட ஒரு சிறுவனாக இருந்தபோது ஒரு மரத்தின்மீது ஏறி, ஒரு பறவைக் கூட்டைப் பார்த்தது அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. அதில் இளம் நீலநிறத்தில் மூன்று முட்டைகள் இருந்தன. அவன் அவற்றைத் தொட்டான். ஆனால் எடுப்பதற்கு மனம் வரவில்லை.... அவன் கட்டிலில் உட்கார்ந்தான். அங்கு தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் கை விரல்களை முத்தமிட்டான். அவள் கண் விழிக்கவில்லை. "என்னை மன்னிச்சிடு.. என்னை மன்னிச்சிடு..."
- அவன் தனக்குள் மெதுவான குரலில் கூறினான்: "என் மனைவி லில்லி, என் இந்திரா, என்னைக் காதலிக்கும் மனம் கொண்ட பெண்கள் எல்லாரும் என்னை மன்னிக்க முயற்சிக்கணும். எனக்கு இது ஒரு நோய் என்று தோன்றுகிறது. இந்தக் காதலிக்கும் வெறி..."
"லீலா...''- அவன் அழைத்தான். அவள் கண்களைத் திறந்தாள். அவள் பேசவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நான்கைந்து நிமிடங்களைக் கடத்தினார்கள். பிறகு அவள் எழுந்து உட்கார்ந்தாள். "நான் மின்விசிறியைப் போடட்டுமா? தாங்க முடியாத அளவிற்கு வெப்பம்... நீ வியர்த்து ஓடிக்கிட்டு இருக்கே!''- அவன் சொன்னான்.
"என்னை மன்னிச்சிடுங்க.''
"உன்னையா?''
"ஆமாம்... இங்கே வந்ததற்கு... அழைக்காமலே வந்ததற்கு... நான் அம்மாவின் மேஜை ட்ராயருக்குள் இருந்து சாவியை எடுத்துக் கொண்டு இங்கே வந்துட்டேன். மீண்டும் ஒருமுறை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை.''
"இது முட்டாள்தனம் லீலா... இனி திரும்பிப் போகும்போது அப்பாவோ அம்மாவோ பார்த்தால்...? நீ இதைச் செய்திருக்கக் கூடாது.''
"எனக்கு பதிலாக அம்மா வந்திருந்தால் நீங்கள் சந்தோஷப் பட்டிருப்பீங்க. அப்படித்தானே?''
அவன் எதுவும் பேசவில்லை. அவனுடைய முகத்தின் அழகு முழுவதும் திடீரென்று இல்லாமல் போய்விட்டதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவனுக்கு தைரியம் இல்லாமல் போய் விட்டதைப்போல அவள் உணர்ந்தாள். அந்தக் களைப்பு அவளை அவனுடைய அடிமையாக ஆக்கியது.
"என் குல்ட்டியானோ, நான் உங்களை எந்த அளவிற்கு அதிகமாகக் காதலிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாதா?''
நாற்காலியில் அமர்ந்து அவன் ஷூக்களைக் கழற்றிவிட்டு, காலணிகள் அணிந்திருந்த ஒவ்வொரு பாதத்தையும் மெதுவாகத் தடவினான்.
"நீங்கள் அம்மாவைக் காதலிக்கிறீங்க. ஆனால் எனக்கு என் அம்மாவைப் பற்றி நன்றாகத் தெரியும். இதெல்லாம் அவங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு... அவ்வளவுதான். அவங்களால் ஒரு மனிதனையும் காதலிக்க முடியாது. அப்பாமீது அன்பு இல்லை. இருக்கும் ஒரே மகளான என்மீதும் அவங்களுக்கு அன்பு இல்லை. அவங்க பல போலித்தனங்களுடன் இப்படி வாழ்ந்து கொண்டு இருக்காங்க. அந்தச் சிரிப்பும், அந்த சோர்வடைந்த முக வெளிப்பாடும்... எல்லாவற்றையும் மறந்திடுங்க. அதற்குப் பின்னால் பயங்கரமான ஒரு பெண் இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவங்களுக்கு ஏராளமான காதலர்கள் இருக்காங்க.''
"இல்லை... இவை அனைத்தும் பொய்...''
"இல்லை... என் அப்பிராணி குல்ட்டியானோ, உண்மையை மட்டுமே நான் சொல்றேன். நீங்கள் புத்தகங்கள் எழுதிய ஒரு ஆளாக இருக்கலாம். அறிவாளியாக இருக்கலாம். ஆனால், மன அறிவியலில் உங்களுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும். இவை எல்லாவற்றையும் நீங்கள் நம்பினீர்கள். மற்றவர்களைப்போல நீங்களும் அந்த வலையில் வந்து விழுந்துவிட்டீர்கள். உங்களுடைய விவேகத் தன்மையும் இல்லாமல் போய்விட்டது. வழிபடுவது... அவ்வளவு தான். வேறு எதையும் செய்ய உங்களால் முடியவில்லை. அந்தக் கண்களை, சிவப்பு சாயம் தேய்க்கப்பட்ட அந்தக் கன்னங்களை, எலாஸ்டிக், கஞ்சிப்பசை ஆகியவற்றின் உதவியுடன் அழகாகத் தோன்றச் செய்த அந்த மார்பகங்களை... மொத்தத்தில் அவங்க போலி. பாருங்க... என் தொடையில் அவங்க இஸ்திரிப் பெட்டியைச் சூடாக்கி வைத்த தழும்பை நான் காட்டுறேன். அவங்க அந்த அளவுக்கு மோசமானவங்க. நம்புவதற்கு சிரமமாக இருக்கு. அப்படித்தானே?'' அவன் வெறுப்புடன் எழுந்து நின்றான்.
"நீ எதற்கு இங்கே வந்தே? அவளைப் பற்றி இந்தக் குறைகளைக் கூறுவதற்கா? இல்லாவிட்டால்... என்னிடம் விடை பெறுவதற்கா?''
"என் குல்ட்டியானோ!''- அவள் திடீரென்று குரலை மாற்றிக் கொண்டு அழுதாள்: "எனக்கு உங்களைப் பார்க்கணும்போல இருந்தது. நான் எப்போதும் உங்களைப் பார்க்கணும்னு நினைக்கிறேன்.''
அவன் ஒரு துவாலையை எடுத்து தன்னுடைய தலை முடியையும் நெற்றியையும் அழுத்தித் துடைத்தான்.
லீலா கட்டிலில் எழுந்து உட்கார்ந்துகொண்டு தொடர்ந்து சொன்னாள்:
"நீங்கள் இங்கேயிருந்து திரும்பிப் போகும்போது, எனக்குச் சொந்தமான எதுவும் எஞ்சி இருக்கக் கூடாது. எதுவும் இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை. எல்லாம் உங்களுக்குச் சொந்தமானவையாக ஆகவேண்டும். புரியுதா? புரியலையா?''
அவன் தலையைத் தாழ்த்தி அமர்ந்தவாறு தன்னுடைய கால் நகங்களையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
"என் அப்பிராணிப் பெண்ணே, நீ வீட்டிற்குத் திரும்பிப் போ. அவர்கள் உன்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள். கெட்ட பெயரை வாங்காமல் சீக்கிரமாகத் திரும்பிப் போ. இவ்வளவு இளம் வயதில் நீ எதற்கு கெட்ட பெயரைச் சம்பாதிக்கிறே?''
"இல்லை.... அந்தக் கெட்டபெயர் வாங்குவதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அதை நெற்றியில் இருக்கும் ஒரு செந்தூரப் பொட்டைப் போல நான் எல்லாருக்கும் தெரியும்படி காட்டுவேன்.''
"திரும்பிப் போ, பெண்ணே. உன் காதல் எனக்கு கொஞ்சம்கூட தேவையில்லை. நான் முப்பத்தைந்து வயதான, தலை நரைக்கத் தொடங்கியிருக்கும் ஒரு குடும்ப மனிதன். நான் காதலிக்க - உன்னைக் காதலிக்க எந்தச் சமயத்திலும் முடியாது.''
அவள் கவிழ்ந்த கூந்தலைக் கோதிவிட்டவாறு, அவனுடைய கால்களுக்கு கீழே வந்து விழுந்தாள்.
"நான் தேவையில்லை என்றால், என்னை அழிச்சிடுங்க என்னைக் கொன்னுடுங்க...''
அவளுடைய கன்னத்தின் மீது கண்ணீர் வழிந்து அடையாளங்களை உண்டாக்கி விட்டிருந்தது. அவன் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல் அந்த முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.