பருந்துகள் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
நீண்ட நேரம் அவளுடைய தேம்பி அழும் சத்தம் தன் நரம்புகளின் வழியாகப் பயணித்துக் கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. அவன் சொன்னான்:
"இந்த அழுகையை நிறுத்து. வா.... நான் என்ன செய்யனும்னு நீயே சொல்லு. நான் அதன்படி நடக்கிறேன்.''
துவாலையின் உரசலினால் அவனுடைய தலைமுடி கட்டுப் பாட்டை விட்டுக் காற்றில் பறந்து கொண்டிருந்தது. ஒன்றோ, இரண்டோ சுருண்ட முடிகள் அந்த நெற்றியின்மீது விழுந்திருந்ததைப் பார்த்ததும், லீலா அடக்கி நிறுத்த முடியாத அன்புடன் அவனைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
ஒரு பருந்தை வசீகரித்து வழிக்குக் கொண்டுவர அவள் சற்று சிரமப்பட வேண்டியதிருந்தது. நீண்ட நாட்களாக அவள் வாசல் கம்பிகளில் சாய்ந்து கொண்டு, ஒரு சிலையைப் போல அசையாமல் நின்றவாறு அதன் பயத்தைப் போக்குவதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தாள். அது ஒன்றோ இரண்டோ முறை அவளுக்கு அருகில் மிகவும் நெருக்கமாகப் பறந்து சென்றது. அதன் கனமான சிறகுகளின் வாசனையை அப்போது அவள் உணர்ந்தாள். இறுதியில், அதன் பயம் குறைந்து கொண்டு வந்தது. ஒரு முட்டாள் தைரியத்துடன் அது அவளுக்கு மிகவும் நெருக்கமாக வந்து வட்டம் சுற்றியது. அதன் மஞ்சள் நிறக் கண்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அவள் புன்னகைத்தாள்! ஹா! அறிவு இல்லாத பிறவி. அவள் முணுமுணுத்தாள்: "நீ எனக்குச் சொந்தமானதாக ஆகப் போறே...''
ஆனால், ஆகாயத்தில் மட்டுமே பறக்கும் அந்த உயிரினங்கள் மண்ணைப் பார்த்து பயப்படுகின்றன. மண்ணில் ஆபத்துகள் இருக்கின்றன என்ற விஷயம் அவற்றுக்குத் தெரியும். அதனால் சிறகுகளைத் தந்து யாரோ படைத்து விட்டு, இந்தப் பறவைகள் பூமியை விட்டு விலகி, உயரத்தில் பறக்கின்றன. ஆனால், ஆகாயத்தின் அமைதியான சூழ்நிலையும் தகர்க்கப்படும் அல்லவா? சில நேரங்களில் மழை மேகங்கள் வந்து கூடும்போது ஆகாயம் ஒரு போர்க்களத்தைப் போல ஆகிவிடும். அது குலுங்கும். அது அலறும். கர்ஜிக்கும். அது நெருப்பு மழையைப் பொழியும். வேறு சில வேளைகளில் கூர்மையான மழைத்துளிகளைப் பொழிந்து, அது குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கும். அப்போது அந்த அப்பிராணிப் பறவைகள் நடுங்கிக் கொண்டிருக்கும் சிறகுகளுடன், மரங்களின் கொம்புகளில் போய் அபயம் தேடும். சில நேரங்களில் அவை பறப்பதற்கு மத்தியில் தளர்ந்து போய், அலகுகளைப் பிளந்து கொண்டு தரையில் விழும். மண்ணில் விழுந்து அதுவும் மண்ணாகும். அதன் உடல்மீது மரங்கள் அவற்றின் தாகம் எடுத்த வேர்களை ஓடச் செய்யும்.
ஒரு நாள் அவள் அந்தப் பருந்தை ஒரு கூட்டிற்குள் அடைத்தாள். அதற்கு மாமிசத் துண்டுகள் இரையாகப் போடப்பட்டன. மிகவும் கவனமாக அவள் அதைக் கட்டிப்போட வேண்டிய கடமையை தன்னுடைய வேலைக்காரர்களிடம் ஒப்படைத்தாள்.
பிறகு, அவளுடைய வாழ்க்கை முழுவதுமே அந்தப் பருந்தாக ஆனது. காலையில் எழுந்தவுடன், அவள் வராந்தாவிற்குச் செல்வாள். அந்தப் பறவை முதலில் சிறகுகளால் மோதிக்கொண்டும் வராந்தாவின் கம்பிகளில் அலகுகளால் உரசிக் கொண்டும் இருந்தது. அதன் கூர்மையான நகங்கள் தரையில் எப்போதும் உரசியவண்ணம் இருந்தன. ஒருநாள் அதன்மீது இரத்தக் கறைகள் இருந்தன. தான் உண்பதற்காக வைக்கப்பட்டிருந்த மாமிசத் துண்டுகளை அது ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு அருகில் வந்து நின்று கொண்டு தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை அது பார்த்தது. பார்த்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.
"நீ என்னுடைய அடிமை...'' - அவள் சொன்னாள்: "உன்னுடைய பறக்கும் செயல் முடிவுக்கு வந்திடுச்சு.'' நாட்கள் செல்லச் செல்ல அந்தப் பறவை மெலிந்து கொண்டே வந்தது. இரவு நேரங்களில், அந்தச் சங்கிலியின் சத்தத்தை அவள் கேட்கவில்லை. அந்தப் பறவை சிறகுகளை அசைக்காமல் வராந்தாவின் ஒரு மூலையில், தான் அசிங்கமாக்கிய ஒரு மூலையில், செயல்பட முடியாத நிலையில் இருந்தது. அதன் கண்களில் ஒரு திரை வந்து விழுந்திருந்தது. அது ஆகாயத்தைப் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. மாலை நேரத்தில் காகங்கள் வாசல் பக்கம் வந்து சத்தம் உண்டாக்கியவாறு பறக்கும்போதுகூட, அது திரும்பிப் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. அது ஒரு பறவையாக இல்லாமல் ஆனது. வெறும் ஒரு மிருகமாக ஆனது. அது ஆர்வத்துடன் மாமிசத் துண்டுகளைக் கொத்தியது. ஆர்வத்துடன் நீரைக் குடித்தது. அதன் மஞ்சள் நிறக் கண்களைப் பார்த்துக் கொண்டே அந்தப் பெண் சொன்னாள்:
"உனக்கு இப்போ பறக்கத் தெரியாது இல்லையா? இப்போ நீ என்னுடைய அடிமை....''
இரவு வேளைகளில் தூக்கத்தில் இருந்து தட்டுத்தடுமாறி எழுந்து அவள் வாசலுக்குச் செல்லும்போது, அடிமையாக்கப்பட்ட அந்தப் பறவை திறந்த கண்களுடன் சுருங்கிப்போய் உட்கார்ந்து கொண்டிருக்கும். அவள் ஒரு நெருப்புக் கொள்ளியை எடுத்து அதன் கண்களில் குத்துவாள். அது ஓசையே உண்டாக்காது.
"உனக்கு வேதனை உண்டாகவில்லையா?'' - அவள் கேட்பாள். அவள் டார்ச்சை எடுத்து அந்த மஞ்சள் நிறக் கண்களில் அடிப்பாள். ஒரு இரவு வேளையில், அது இறந்து விட்டது. அசைவே இல்லாமலிருந்த அந்த உடலைக் கண்டபோது, அவளுக்கு கடுமையான ஏமாற்றம் உண்டானது. "நீ என்னை ஏமாத்திட்டே'' - அவள் சொன்னாள்.
"இந்திரா...'' - இரவில் தனக்கு அருகில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த மனைவியிடம் அவர் கேட்டார்: "உனக்கு என்ன ஆச்சு?''
அவள் தலையைக் குலுக்கினாள். அவள் அவருடைய கை விரல்களை எடுத்துத் தன்னுடைய கன்னங்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டாள்.
"எனக்கு முடியல... கொஞ்சம்கூட முடியல....''
"இது வேண்டும் என்றே வரவழைத்துக் கொள்வது என்று எனக்குத் தோணுது. வாழ்க்கைக்கு சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டுக் கிடைக்கக் கூடிய சுதந்திரம், நமக்கு எந்தச் சமயத்திலும் ஆனந்தத்தைத் தராது!''
"உங்களுக்கு சுதந்திரத்தைப் பற்றி என்ன தெரியும்? மற்றவர்கள் உண்டாக்கிய ஒரு அறையில், எல்லா தனித்துவத்தையும் மறந்துவிட்டு, ஒரு மூலையில் சுருண்டு போய் வாழும் ஒரு கேவலமான பிறவிதான் உங்களுடைய மனம்! அது எந்தச் சமயத்திலாவது சுதந்திரத்தை அறிந்திருக்கிறதா? என்னுடைய மனம்? அது பருந்தைப் போல வானத்தில் பறக்கிறது. நீர்நிலைகளுக்கு மேலே, மரங்கள் அடர்ந்த தோப்புகளுக்கு மேலே... வானத்தில் எல்லைகள் இல்லை.... சதி செய்து உண்டாக்கப்பட்ட குழிகள் இல்லை....''
"நீ மன அமைதியுடன் இருப்பதற்காக முயற்சித்திருக்கிறாயா? அது இந்த சுதந்திரத்தைவிட சிறந்தது. எதன் மீதாவது நம்பிக்கை வைக்க முயற்சி செய். கடவுள் மீது - முடியுமானால்...''