பருந்துகள் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
நீங்க தேர்ந்தெடுத்த ஆடைகளை மட்டும் அணிந்தேன். நீங்க தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் சேர்ந்து விளையாடினேன். நீங்க அழைக்கும்போது வருவேன். போகச் சொல்றப்போ போவேன். நீங்க என் தாய் இல்லை. எஜமானி... எனக்கு வாழ்றதுக்கு சுதந்திரம் வேணும். எனக்கு சு...தந்...திரம்...''- அவளுடைய அழுகைச் சத்தம் மேலும் அதிகமானது.
இந்திரா அவளை முத்தமிட்டவாறு கேட்டாள்: "நீ அந்த ஆளைக் காதலிக்கிறே... அப்படித்தானே?''
லீலா தலையைக் குலுக்கினாள்.
"இனிமேல் நீ அந்த ஆளைப் பார்க்கக்கூடாது. அந்த ஆள் இங்கே வந்தால் நீ உன்னுடைய அறையை விட்டு வெளியே வரக்கூடாது.''
"என்னால பார்க்காமல் இருக்க முடியாது. நான் அவரைக் காதலிக்கிறேன். நான் எப்போதும்... எப்போதும்... அவரைப் பற்றி மட்டுமே நினைக்கிறேன்.''
"நீ இதையெல்லாம் மறந்திடுவே. நீ சின்னக் குழந்தை. இந்த வயதில் உனக்குக் காதல் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது. ஆனால் கொஞ்சம் பெரியவளா ஆனால்...''
"பெரியவளா ஆனால்?''
"பிறகு... காதலை மறக்க நமக்கு சக்தி இல்லாம ஆயிடும். வாழ்க்கையின் அர்த்தமே அதுதான் என்றாகிவிடும். ஒரு ஆணின் சிரிப்பு, ஒரு பார்வை...''
"அம்மா.''
"என்ன?''
"நான் அவரோட மனைவியாக ஆகணும்.''
"ச்சே... லீலா, நீ எப்படியெல்லாம் முட்டாள்தனமா பேசிக்கிட்டு இருக்கே! அந்த ஆளுக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருக்காங்க.''
"அவங்களை விட்டுட்டு வரக்கூடாதா?''
"முடியாது... அந்த ஆளின் இனத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் விவாகரத்து என்ற ஒரு விஷயம் இல்லை.''
"அம்மா, நான் என்ன செய்யணும்?''
லீலா தன் தாயின் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். திறந்திருந்த ஜன்னல் வழியாக ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த பருந்தை இந்திரா பார்த்தாள்.
"மகளே...''
"ம்...''
"அந்தப் பருந்தைப் பாரு. நாம் அதைப் பிடிக்கணும். பிறகு அதை வராந்தாவில் சங்கிலியில் கட்டிப் போடணும். பிறகு... அதை பட்டினி போட்டுக் கொடுமைப்படுத்தி கொடுமைப்படுத்தி, இறுதியில் கொல்லணும்... சரியா?''
லீலா பயத்துடன் தன் தாயின் முகத்தையே பார்த்தாள். அவள் திடீரென்று பிடியை விட்டு, அறைக்கு வெளியே ஓடினாள். அன்னை அழகாகக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
இந்தியாவிலிருந்து திரும்பி வருவதற்கு முந்தைய நாள், குல்ட்டியானோ ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு அவர்களின் வீட்டிற்குச் சென்றான். அவனுடைய முகம் எந்தவிதமான உணர்ச்சிகளும் இல்லாமலிருந்தது. கேமராவை விட்டு கண்களை உயர்த்துவதற்கே அவன் தயங்கினான்.
தேநீருக்குப் பிறகு அவன் சொன்னான்: "இனி தோட்டத்திற்குச் சென்று சில புகைப்படங்கள் எடுப்போம். லீலா நீயும் இருக்கணும்.''
தன்னுடைய தலை முடிச் சுருள்களுக்குள் கைவிரல்களைச் செலுத்தியவாறு கவலையுடன் நின்றிருந்த லீலா தலையை ஆட்டினாள்.
"லீலா, நீ இல்லாமல் சரியாக இருக்காது.''
"என் புகைப்படம் வேண்டாம்.''
"அது ஏன்? அம்மாவின் அருகில் அமர்ந்திருக்கிற ஒரு புகைப்படம்...''
"அப்படியொரு புகைப்படம் வேண்டாம்.''
"என்ன?''
"வேண்டாம்...''- அவள் தன் கை நகங்களைக் கடித்துக்கொண்டே அழுகையை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தாய், கணவனிடம் என்னவோ கூறிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அன்று தோட்டத்தில் அவள் தந்தை கண்களை மூடிக்கொண்டு தூங்கத் தொடங்கியவுடன், குல்ட்டியானோ தீவிரமான விஷயங்களை நோக்கிப் பேச்சைத் திருப்பினான். லீலா புல்லில் அமர்ந்தவாறு, கடலின் வெள்ளைநிறக் கரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நம்பிக்கை இல்லையென்றால் அங்கு உண்மையான காதல் இல்லை என்று நான் நினைக்கிறேன்.''
குல்ட்டியானோ சொன்னான்: "அது உங்களால் காதலைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாததால் தோன்றுகிற விஷயம். வேறு எந்த உணர்ச்சியையும் தொட்டு உரசிக் கொண்டு அது நிற்கவில்லை. அது கலப்படமில்லாத, நட்பு இல்லாத தனிமையாக இருக்கும் ஒன்று. அது புனிதமானது. அது வேறு எந்தப் பாடத்தையும் படிக்க வேண்டியதே இல்லை...''
தன் தாயின் குரலில் கண்ணீரின் வெளிப்பாடு இருக்கிறதோ என்று லீலா சந்தேகப்பட்டாள். ஏய்... இல்லை... அவள் என்ன அழகாக சிரிக்கிறாள்! மலர்களின் இதழ்கள் காற்றில் பறந்து விழுவதைப்போல அவளுடைய புன்சிரிப்பு தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.
"எனக்கு அது எதுவும் புரியவில்லை. எவ்வளவோ பழமையான, இயல்பான ஒரு விஷயம் அன்பு, காதல் என்பதுதான் என்னுடைய கருத்து. ஒருவனைக் காண வேண்டும் என்று தோன்றுவது... ஒருவனுக்காகத் தன்னையே சமர்ப்பிப்பது... அப்படிப்பட்ட அன்பை மட்டுமே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.''
அவனுடைய வார்த்தைகள் வெறுப்பு கலந்தவையாக இருந்தன. மாலை நேர வெளிச்சத்தில் அவனுடைய உடல் யானையின் தந்தத்தால் உண்டாக்கப்பட்ட ஒரு சிலையைப்போல அழகாக இருந்தது. லீலா கண்களை எடுக்காமலே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் அவளுடைய மனம் அந்தக் கண்களின் வழியாக வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் எதையும் பார்க்கவில்லை. பார்த்தே இருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
"இல்லை... நான் காதலுடன் அழிந்துபோக விரும்பவில்லை. காதலைத் தந்த பிறகும் நான் எஞ்சி இருக்க வேண்டுமா?''- தொடர்ந்து மீண்டும் காரணமே இல்லாமல் அந்தத் தொடர் சிரிப்பு அந்த மாலை நேரத்தில் கேட்டுக் கொண்டேயிருந்தது.
சிறிது நேரம் தாண்டியவுடன், அவளுடைய தாய் சொன்னாள்:
"லீலா, இப்போ நீ எழுந்து போய் எதையாவது படி.''
"நான் படிப்பதற்கு எதுவும் இல்லை.''
"அப்படின்னா போய் முகத்தைக் கழுவி சுத்தமா இரு.''
"என்னுடைய முகம் கழுவுவதால் வெளுத்துப் போவதோ அழகாக ஆகப் போவதோ இல்லை. இந்த நிறம் சதிவலையைப் போன்றது. அதிலிருந்து தப்புவதற்கும் முடியவில்லை.''
"ஆ... லீலா! எவ்வளவு அழகாகப் பேசுகிறாள் இவள்!''
குல்ட்டியானோ எழுந்து அவளுக்கு அருகில் சென்றான். காரணமே இல்லாமல் வியர்ப்பதாக லீலா உணர்ந்தாள். அவளுக்கு திடீரென்று அழுகை வந்தது.
"லீலா, ஏன் அழுறே?''
"உங்களைப் பிரிந்திருக்க என்னால் முடியாது... இது உண்மை.''
குல்ட்டியானோ பதைபதைத்துப் போய்விட்டான்.
"லீலா....''- அவளுடைய தாய் உரத்த குரலில் அழைத்தாள்: "இங்கேயிருந்து போ. வாய்க்கு வந்ததைப் பேசிக்கிட்டு இருக்காதே. இல்லாவிட்டால் நான் அப்பாவை எழுப்பி இதையெல்லாம் சொல்லிடுவேன். குல்ட்டியானோ, இவள் ஒரு பைத்தியக்காரி. எதைச் சொல்லணும்னு தெரியல. பதினாறு வயது தாண்டியும் சின்னக் குழந்தையைப்போல ஒவ்வொண்ணையும் புலம்பிக்கிட்டு இருக்கிறா.''
லீலா எழுந்து தன்னுடைய புடவையின் தலைப்பால் முகத்தைத் துடைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குள் சென்றாள். கடலின் அலைகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்த பருந்து மீண்டும் மீண்டும் தேம்பி அழுதுகொண்டிருப்பதைப்போல அவள் உணர்ந்தாள்.