பருந்துகள் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
"இந்திரா... கீழே வாங்க''- தாயின் படுக்கையறைக்குள்ளிருந்து அந்த புகழ்பெற்ற உரத்த சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்த அளவிற்கு இனிமையாக- அந்த அளவிற்கு லாவகத்துடன் சத்தம் போட்டுச் சிரிக்க முடிந்த தன் தாய்மீது லீலாவிற்குக் கடினமான பொறாமை தோன்றியது. தாயின் வசீகர சக்திகளுக்கு எந்தச் சமயத்திலும் குறைவு என்பதே இருக்காதா? எப்போதும் வரவேற்பறையில், பொன்னைப்போல மின்னிக் கொண்டிருக்கும் தன்னுடைய தாயின் அருகில் ஒரு போலி நகையைப்போல அவமானச் சுமையைச் சகித்துக்கொண்டு தான் வாழவேண்டியதிருக்குமோ? அவளுடைய கை நகங்கள் பிரம்பு நாற்காலியின் கைகளில் அழுத்தின.
அவளுடைய தாய் நீலநிறப் பட்டுப் புடவையின் ஒவ்வொரு மடிப்புகளுடனும் பேசிக் கொண்டே நடந்து வந்தபோது, குல்ட்டி யானோ ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் எழுந்து நின்றான். அவளுடைய அன்னைக்கு நாற்காலியை இழுத்துப் போடும்போதும், தாயின் தலைக்குப் பின்னால் பட்டுத் தலையணையை வைக்கும் போதும் அவனுடைய கைகள் சற்று நடுங்குவதை லீலா கண்டுபிடித்தாள். அதன் அர்த்தம் என்ன? அவனும் அவளுடைய தாயை வழிபட ஆரம்பித்துவிட்டானா? "ஓ... அப்பாவி மனிதர்களே" என்று கூறவேண்டும்போல அவளுக்கு இருந்தது. "கண்களை விழித்துப் பாருங்க... இந்த பவுடர் பூசிய, சாயம் தேய்த்திருக்கும் பெண் ஒரு தேவதை அல்ல. சுயநலம் கொண்ட ஒரு பெண்... அவ்வளவுதான். அவளுக்கு இதய நோயும் இல்லை. அவளுக்கு அழகும் இல்லை. அவளுடைய இதயத்தில் வேறு யாருக்கும் இடமில்லை." ஆனால் லீலா பேசாமல் உட்கார்ந்துகொண்டு தன்னுடைய கைகளின் நகங்களைக் கடித்து, கீழே உதிர்த்தாள்- விரல் நுனிகளில் ஆழமாகப் பதிந்திருந்த, மை தோய்ந்த தன்னுடைய கை நகங்களை.
அன்றைய நாளின் நிறமே நீலமாக இருந்தது. ஆகாயத்தில் தனியாக நின்றிருந்த மேகத் துண்டை நீக்கினால், கண்கள் போய்ச் சேரும் எல்லா இடங்களிலும் நீலநிறம்தான் தெரிந்தது. நீல ஓரங்களைக் கொண்ட நீலக் கடல்... நீலநிறப் புடவை... நீலநிறச் சங்கு மலர்கள்...
"பாருங்க... என்னுடைய பருந்து...''
அவளுடைய தாய் சொன்னாள். எல்லாரும் மேலே பார்த்தார்கள். அந்தப் பறவை ஒரு நடனப் பெண் தன்னுடைய கைகளை விரித்திருப்பதைப்போல சிறகுகளை விரித்துக்கொண்டு ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. முதலில் சிறிய வட்டங்கள். பிறகு பெரிய வட்டங்களாக ஆயின. பிறகு, ஆகாயத்தை தன்னுடைய பலம் கொண்ட சிறகுகளால் கிழித்தவாறு அது தூர தூரமாக எங்கோ பறந்து சென்றது. அதன் அழுகைச் சத்தம் நீண்ட நேரம் லீலாவின் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது.
"ஒருநாள் நான் அதைப் பிடிப்பேன்''- அவளுடைய அன்னை சொன்னாள்.
"எதற்கு?''
குல்ட்டியானோ அவளுடைய தாய்க்கு அருகில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு மீண்டும் கேட்டான்:
"எதற்கு? அந்தப் பருந்தை எதற்காகப் பிடிக்க வேண்டும்?''
"அதை என்னுடைய வராந்தாவில் இருக்கும் கம்பிகளில் நான் கட்டிப் போடணும்- ஒரு கைதியைப்போல. நான் அதை வெறுக்கிறேன்.''
"ஹா... ஹா... வெறுக்கப்படுபவர்களைப் பிடித்துக் கொண்டு வந்து கைதிகளாக எதற்கு ஆக்க வேண்டும்? அன்பு கொண்டவர்களைக் கட்டிப் போட்டதில் திருப்தியடைய முடியவில்லையா?''
அவளுடைய தாய் எழுந்து நின்றாள். "எனக்கு முடியல. நான் மேலே போய் படுக்கட்டுமா?''
யாரும் தடுக்கவில்லை. தடுத்தால் நிற்கக்கூடிய ஒருத்தியல்ல அவள் என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும்.
"மிஸ்டர் குல்ட்டியானோவிற்கு,
என் பிரியமான பெப்பே, நான் உன்னை நம்புவதற்கு எந்த அளவிற்கு முயற்சிக்கிறேன் என்பதற்கான ஆதாரம்தான் இந்தக் கடிதம். இதோடு சேர்த்து நான் என்னுடைய வாழ்க்கையையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன். எனினும் எனக்குள்ளிருந்து, விவேகத்தை விடாத ஏதோவொன்று என்னிடம் முணுமுணுக்கிறது- இப்போது செய்வது ஒரு தவறு என்று. ஆனால் தவறுகளைப் பற்றி நான் எதற்கு நினைத்துப் பார்க்க வேண்டும்? உன்னைக் காதலிக்கத் தொடங்கியதுதானே எனக்கு உண்டான பைத்தியம் பிடிக்கச் செய்த தவறு? இனி என்னவெல்லாம் நடக்கும்? நீ என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லி என் பெயர் கேலிக்கு உரியதாகத் தாழ்ந்து போய்விட்டாலும்கூட, எனக்கு அவமானங்களில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு வழி தெரியும். நீ தந்த கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அந்த இடத்தில் இருக்கும் நரம்புகளைத் துண்டிப்பது... எவ்வளவு எளிதான ஒரு தப்பித்தல்!
என்னுடைய வாழ்க்கையில் முதன்முறையாக நான் காதலை உணர்கிறேன். நான் நினைத்திருந்ததைப்போல ஒன்றும் இது இல்லை. இதை எதிர்த்து நிற்பதற்கான பலம் எனக்கு இல்லாமல் போயிருக்கிறது. கால்கள் இறங்கிச் செல்லும் ஒரு சதுப்பு நிலத்தில் வந்து நான் சிக்கிக் கொண்டதைப்போல எனக்குத் தோன்றுகிறது. என்னால் இனிமேல் என்ன செய்ய முடியும்? நீ பிடித்து இழுத்துக் கொண்டு போகும் அந்த அடித்தட்டை நோக்கித் தாழ்ந்து தாழ்ந்து போவதைத் தவிர... நான் உன்னைக் காதலிக்கிறேன். கவலையின் ரேகைகள் தெரிந்து கொண்டிருக்கும் உன்னுடைய சிறிய கண்கள்... என் காதுகளில் நீ முணுமுணுத்துக் கொண்டிருந்த அந்த வார்த்தைகள்... என் உடம்பெங்கும் ஓடிக் கொண்டிருந்த அந்த மினுமினுப்பான விரல் நுனிகள்... எல்லாம் எல்லாம் என் செல்லமே, நீ என்ன ஒரு பாம்பா? மார்போடு சேர்ந்து சுருண்டு படுத்துக் கொண்டு நீ கொல்லப் புறப்பட்டிருக்கிறாயா? காடுகளில் பெரிய மரங்களுக்கு மத்தியில் ஓடித் திரிந்த ஒரு மிருகமா நீ? உனக்கு வேதனையைத் தர மட்டும்தான் தெரியுமா? நான் இந்த சக்தியை வேறு எங்கும் பார்த்ததில்லை. நீ என்னைத் தொடும்போது வெறும் புனிதமான வழிபாடாகவே நீ தெரிகிறாய். இவையனைத்தும் ஒரு நடிப்பு மட்டுமே என்றால், நான் அந்த நடிப்பிற்காக நன்றி கூறுகிறேன். நீ என்னைப் பார்த்தவாறு அசாதாரணமான ஒரு அழுகையுடன் என்னைக் கட்டிப்பிடித்து அணைக்கும்போது நான் என்னைப் பற்றிய நினைப்பையே மறந்துவிடுகிறேன். என்னுடைய அனைத்து வெட்கங்களையும் மறக்கிறேன். வெட்கத்தின் ஒரு எல்லைகூட என்னுடைய உடலில் எஞ்சி இருக்கவில்லை. மிகச் சிறந்த ஒரு பாடகனின் கையில் சிக்கிய ஒரு வீணைக்கு ஒருவேளை என்னுடைய அனுபவங்கள் புரிந்திருக்கலாம். பெப்பே, என் பிரியமான, பிரியமான பெப்பே, நீ என்னை வெறுமனே விட்டிருக்கலாமே? பூக்களுடனும் புத்தகங்களுடனும் நான் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டு இருந்திருப்பேன்- வேதனை தெரியாமல். நீ என்னுடைய இதயத்தை ஒரு குழந்தையின் இரக்கமற்ற தன்மையுடன் தட்டிப் பறித்துவிட்டாய். அதற்குப் பிறகு நீ என்னிடம் விடைபெற்றுப் போவதற்குத் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறாய். உனக்கு இது இன்னொரு லாபம் மட்டுமே. உன் இதயம் அணிந்து கொண்டிருக்கும் அந்த மண்டையோடுகளின் மாலையில் சேர்ப்பதற்கு இன்னொரு மரணம்.