பருந்துகள் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
சில நேரங்களில் வரவேற்பறையில் விருந்தாளிகளுடன் சேர்ந்து உட்கார்ந்து பல விஷயங்களையும் பற்றிப் பேசவும் சிரிக்கவும் செய்யும் தாய் திடீரென்று மகளை நினைப்பாள். பிறகு அவள் உள்ளே சென்று மகளின் அறைக் கதவைத் தட்டுவாள்.
கதவைத் திறக்கும்போது அந்தப் பெண்ணின் கன்னத்தில் மைக் கறைகள் இருக்கும். நகத்திலும் மை இருக்கும். தாய் கூறுவாள்:
"லீலா, நீ முன் அறையில் வந்து உட்கார்றியா? நான் அவர்களிடம் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.''
மகள் தலையை ஆட்டுவாள். "வேண்டாம்... வேண்டாம்... வேண்டாம்...''
"இந்தக் கூச்சம் உனக்கு நல்லது இல்லை. அதை மாற்றணும்.''
"எதற்கு?''
தாய் திரும்பிச் செல்வாள். இரவு நேரத்தில், மகள் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்குள் ஒரு திருடியைப்போல ஓசை உண்டாக்காமல் சென்று, நிலவில் மூழ்கிய அந்த முகத்தையே அவள் பார்த்துக் கொண்டு நின்றிருப்பாள். ஒருமுறை அவள் பாய்ந்தோடிக் கொண்டிருந்த பாசத்தை அடக்கி நிறுத்த முடியாமல் அந்தப் பெண்ணின் பாதங்களை முத்தமிட்டாள். பாசம் மட்டுமா அது? அல்லது குற்ற உணர்வா? அவளாலேயே அந்தக் கேள்விக்கு சரியான பதிலைக் காண முடியவில்லை. தான் தன் மகள்மீது பாசம் வைத்திருக்கவில்லையா? தன் இதயம் எந்தச் சமயத்திலும் அந்தப் பெண்ணிடம் கீழ்ப்படிந்து நடந்ததில்லையா? பாசம்! உண்மையிலேயே தான் பாசம் வைத்திருந்தது யார்மீது? தான் பிறந்தவுடன் மரணத்தைத் தழுவிய தாயிடமா? பதினைந்து வயதிலேயே ஒரு மனிதனுக்குத் திருமணம் செய்து கொடுத்து திருப்தியடைந்த தந்தையிடமா? இல்லை... ஒருவேளை தன் இதயம் அதன் தேவைகளை மறந்துவிட்டு, தரிசாகக் கிடந்து கொண்டிருக்க வேண்டும்.
"என் செல்ல மகளே''- அவள் அந்தக் கால்களை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள். "என்னை மன்னிச்சிடு. எனக்கு எப்படி அன்பாக இருப்பது என்பதைச் சொல்லிக்கொடு.'' மகள் அசையவில்லை. கண்களைத் திறக்கவேயில்லை. ஆனால், மறு நாளிலிருந்து அவள் தன்னுடைய படுக்கையறையின் கதவைப் பூட்டத் தொடங்கினாள். அந்தப் பூட்டப்பட்ட கதவு தாயின் இதயத்தை ஒரேயடியாக நொறுங்கச் செய்தது. அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சந்திக்கும்போது கண்கள் ஒன்றோடொன்று சந்திப்பதில்லை. தேர்வு முடிவுகள் வெளியானபோது, மகள் மிகவும் தூரத்திலிருந்த இன்னொரு நகரத்தில் இருந்த கல்லூரியில் சேர்ந்தாள். ஹாஸ்டலுக்குப் பெட்டிகளுடன் செல்லும் மகளை வழியனுப்பியவாறு தாய் சொன்னாள்:
"எல்லா வாரமும் எனக்குக் கடிதம் எழுதணும்.''
"ம்...''
தொடர்ந்து தாயின் கையைப் பிடித்துக் குலுக்கிய அந்தப் பெண் கேட்டிற்கு அருகில் சிவந்த கண்களுடன் நின்று கொண்டிருந்த வயதான வேலைக்காரிக் கிழவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு விடை பெற்றாள்.
தாயின் தொண்டையில் ஒரு பதைபதைப்பு உண்டானது. தான் தலை சாய்ந்து தரையில் விழப் போவதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவள் மெதுவாக சுவர்களைப் பிடித்து நடந்து கொண்டே படுக்கையறைக்குள் போய் விழுந்தாள். மங்கலான வெளிச்சத்தில் நீரைப்போல ஒளிர்ந்து கொண்டிருந்த நிலைக் கண்ணாடியிடமும், உயிரற்ற மலர்களிடமும், தன்னுடைய சில்க் தலையணையிடமும் அவள் கெஞ்சினாள்: "என்மீது அன்பு செலுத்து... தயவு செய்து என்மீது அன்பு செலுத்து...''
இப்படியே நாட்கள் கடந்து சென்றன. மாதங்கள் கடந்தன. அவளுடைய உடலில் சற்று சதைப்பிடித்தது. ஆனால் அந்தக் கண்கள் மேலும் பெரிதாயின. உதடுகள் வெளிறிப்போய்க் காணப்பட்டன. அவள் முகத்தில் இளஞ்சிவப்புநிற சாயங்களைத் தேய்த்து அழகை அதிகப்படுத்தினாள். அந்தக் கண்ணாடிக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு அவள் தன்னுடைய கணவரிடம் கேட்டாள்:
"நான் அழகிதானே?''
அவர் எதுவும் சொல்லவில்லை. அவளுடைய நடவடிக்கைகளில் மனக் குழப்பத்தின் அடையாளங்கள் இருப்பதை அவர் கண்டுபிடிக்கத் தொடங்கியிருந்தார். அவள் கூறிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் முப்பது வயதைத் தாண்டிய ஒரு பெண் கூறக்கூடிய வார்த்தைகளா? "எனக்குப் பயமா இருக்கு... என்மீது யாருக்கும் அன்பு இல்லை... எனக்குத் துங்குறதுக்கு பயமா இருக்கு..."- இப்படி சிறிய குழந்தைகளைப்போல ஒவ்வொன்றையும் புலம்பிக் கொண்டு அவள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.
விடுமுறையில் வீட்டிற்கு வந்த மகளுடன் சேர்ந்து தோட்டத்தில் இருந்துகொண்டு தந்தை தளர்ந்துபோன குரலில் சொன்னார்:
"உன்னுடைய தாய்க்கு சோர்வே இல்லாத காலம்... இடையில் அவ்வப்போது வெளியே போவது உண்டு. போன சனிக்கிழமை திரைப்படம் பார்க்கப் போனாள்...''
"அம்மாவா?''
"ம்...''
மகள் ஒரு செடியின் இலைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டே சிரித்தாள்.
"அப்பா, நீங்க வற்புறுத்தி அழைச்சிட்டுப் போயிருப்பீங்க. அப்படித்தானே?''
"நானா? நான் எங்கேயும் போகல. மூன்று மாதங்கள் இந்தியாவில் இருப்பதற்காக வந்திருக்கும் அந்த பிலிப்பினோவைப் பற்றி நான் சொன்னேன்ல? அவன்தான் அம்மாவைக் கட்டாயப்படுத்தி அழைச்சிட்டுப் போனான்.''
"அப்படியா?''
அதற்குப் பிறகு சில நிமிடங்களுக்கு அவர்கள் ஒருவரோடொருவர் எதுவும் பேசவில்லை. தோட்டக்காரன் ஒரு மூலையில் நின்றுகொண்டு ஒரு கரையைப்போல வளர்ந்து விட்டிருந்த மருதாணிச் செடிகளின் மேற்பகுதிகளைப் பெரிய கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தான்.
"அப்பா, உங்களுடைய அசோகா மரம் வளர்ந்து வருகிறது. இல்லையா?''
மகள் கேட்டாள். தந்தை புன்னகைத்தார்.
"நான் நல்ல மழை பெய்த நாட்களில் அந்தச் செடியை ஒரு பந்தலுக்குக் கீழே நிற்கச் செய்து மேலே க்யான்வாஸ் இட்டேன்.''
அந்த வகையில் மாலை நேரத்து பொன்நிற வெயிலில் அவர்களுடைய தோட்டத்தில் அமர்ந்துகொண்டு மரங்களைப் பற்றியும் மலர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தபோதுதான், குல்ட்டியானோ என்ற மனிதனை லீலா முதல் முறையாகப் பார்த்தாள். அவன் கேட்டைக் கடந்து அவர்களைப் பார்த்தவாறு ஒரு நிமிடம் அசைவே இல்லாமல் நின்றிருந்தான். தொடர்ந்து தன்னைத்தானே சுய உணர்விற்குக் கொண்டு வருவதைப்போல தலையைத் தட்டியவாறு புன்னகைத்தான்.
"வாங்க குல்ட்டியானோ''- தந்தை சொன்னார்: "வாங்க. என் மகளிடம் அறிமுகமாகிக் கொள்ளுங்கள்.'' அவன் புல்பரப்பின் வழியாக அகன்ற காலடிகளுடன் நடந்தான். பிலிப்பைன் தீவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அளவிற்கு உயரம் இருக்கும் என்று லீலா நினைத்திருக்கவில்லை. சிறிய கண்களையும் வட்ட முகத்தையும் சிறிய சதைப்பிடிப்பான கைகளையும் கால்களையும் கொண்ட ஒரு மஞ்சள் நிறத் தோலைக் கொண்ட மனிதனைத்தான் அவள் எதிர்பார்த்திருந்தாள். அவள் அவனுடைய முகத்திலிருந்து தன்னுடைய கண்களை பதைபதைப்புடன் பின்னோக்கி எடுத்து தன் வலது கையை நீட்டினாள். தன்னுடைய உள்ளங்கை காரணமே இல்லாமல் வியர்த்துக் கொண்டிருப்பதாக அவள் உணர்ந்தாள்.
உரையாடிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் பல தடவை குல்ட்டியானோ மேலே வராந்தாவை நோக்கிப் பார்ப்பதை லீலா பார்த்தாள். சற்று நேரம் தாண்டியதும், அவன் எழுந்து நின்று உரத்த குரலில் அழைத்தான்: