யாருக்குத் தெரியும்? - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6976
சிறிது நேரம் அவர்கள் இருவரும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். பிறகு வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “பாவம்...”
பட்டாளக்காரன் ஒரு அதிர்ச்சியுடன், அதே நேரத்தில் ஆசை மேலோங்க அவளின் முகத்தை உற்றுப் பார்த்தவாறு கேட்டான்: “யார். யாரைச் சொல்ற?”
அவள் சொன்னாள்: “அந்தக் குழந்தையைச் சொல்றேன். அதாவது - யூதர்களின் தலைவனா வரப்போற குழந்தையை. இந்த மாதிரி விதிகளை உண்டாக்கினது யார்? நான் விபச்சாரியா ஆனதும் அவனோட வருகை குழந்தைகளின் இரத்தத்தின் மூலமான்றதும் ஒரே விதிப்படிதான் நடக்கிறதா?”
சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள்: “ஒரு ரட்சகன் பெருமைகளோடு அல்லவா வரணும்? அந்தக் குழந்தை இந்த இரத்தத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? அவன் இந்தக் கடனை எப்படி தீர்ப்பான்?”
பட்டாளக்காரன் சொன்னான்: “அவன் உயிரோட தப்பிச்சாத்தானே?”
வீட்டுச் சொந்தக்காரியும் பட்டாளக்காரனும் மீண்டும் அமைதியானார்கள்.
“யாருக்குத் தெரியும்?” - பட்டாளக்காரன் மீண்டும் சொன்னான்: “ஒருவேளை எனக்கு அடையாளம் தெரிஞ்சிருந்தா நான் அவனைக் கொல்லாமக்கூட விட்டிருப்பேன்.”
வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “அதே நேரத்துல அவனை நீங்க அடையாளம் கண்டுபிடிச்சு... நீங்க முதல்ல கொன்னதே அவனைத்தான்னு இருந்தா...? மற்ற குழந்தைங்க மரணத்தைத் தழுவ வேண்டிய அவசியம் இல்லையே!”
“ஆனா, அப்போ...” - பட்டாளக்காரன் சொன்னான்: “ரட்சகனோட வருகை நடக்காமலே போயிடும். இனி நடக்குறது நடக்கட்டும், ரட்சகன் உயிரோட இருந்தாலும் இருக்கலாம். இல்லையா?”
வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “நீங்க சொல்றது சரிதான்!”
அவள் கையை நீட்டி அவனின் முழங்காலைத் தொட்டவாறு சொன்னாள்: “நமக்கு கட்டாயம் ரட்சகர்கள் வேணும். இரத்தத்தின் மூலமாகவோ பெருமைகளோடவோ அவர்கள் வரட்டும். பட்டாளத்துக்காரனுக்கும் விபச்சாரிக்கும் ரட்சகர்கள் கட்டாயம் வேணும்...”
“ஆமா...” - பட்டாளக்காரன் சொன்னான்.
அவன் கேட்டான்: “தண்ணி இன்னும் சூடாகலியா?” - உள்ளே தாழ்ப்பாள் போட்டிருந்த அறையில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த அழுகையை யாரோ நிறுத்தினார்கள். பட்டாளக்காரனின் முகத்தில் இலேசான ஒரு புன்சிரிப்பு நிழலாடியது. “விபச்சாரம் நடக்குற வீட்டுக்கு யாரும் ரட்சகனைத் தேடி வரல. இல்லியா? அந்தக் குழந்தை யாரோடது? அது... ஆண் குழந்தையா? இதுவரை அந்தக் குழந்தையை யார்கிட்டயாவது விற்கலியா?”
வீட்டுச் சொந்தக்காரி முகத்தில் எந்தவித உணர்ச்சி மாறுபாடையும் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்: “அது என் பூனையோட குட்டி. குழந்தை அழுறது மாதிரியே இருக்குல்ல அது அழறது?”
பட்டாளக்காரன் புன்சிரிப்பு தவழ சொன்னான்: “நீ தேவையில்லாம பொய் சொல்ல வேண்டாம். அந்தக் குழந்தை யூதர்களின் ரட்சகனாகவே இருந்தாக்கூட எனக்கென்ன? நான் இங்கே குளிக்க வந்திருக்கேன். வேலை முடிஞ்சு ஓய்வெடுக்க வந்தவன் நான். சரி... தண்ணி சூடாயிருச்சா?” - அவன் காலணிகளை நீக்கி ஒரு ஓரத்தில் வைத்தான். விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரி தன்னுடைய முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள். செயற்கையான உயிரோட்டமில்லாத ஒரு புன்சிரிப்பை வரவழைத்தவாறு அவள் கேட்டாள்: “குளிச்சு முடிஞ்சவுடனே, நான் என்கிட்ட இருக்குற புது பெண்ணை உங்கக்கிட்ட அனுப்பி வைக்கட்டுமா?”
“வேண்டாம்...” - பட்டாளக்காரன் சொன்னான்: “நீ எனக்கு குளிக்கிறதுக்கு தண்ணி தா. இரத்தம் இல்லாத ஒரு ஆடையும் வேணும். எனக்குத் தேவை இவ்வளவுதான்” - அவன் முணுமுணுத்தான்: “குளிக்கணும்...” வீட்டுச் சொந்தக்காரி எழுந்து உள்ளே போனாள்.
பட்டாளக்காரன் தன்னுடைய இரத்தம் தோய்ந்த அங்கியைக் கழற்றி கீழே போட்டான். குளியலறையில் பாத்திரங்கள் உரசும் ஓசையும், தண்ணீர் ஊற்றும் சத்தமும் கேட்டது. பட்டாளக்காரன் குளியலறையை நோக்கி நடந்து போனான். அவனின் ஆடைகளையும் காலணிகளையும் அவன் படுத்துறங்கிய விரிப்பையும் ஒரு வேலைக்காரி மனதில் வெறுப்பு மேலோங்க கையால் இழுத்துக் கொண்டு போனாள்.
பாதி இரவு தாண்டிய பொழுது பட்டாளக்காரன் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான். உள்ளேயிருந்து தாழ்ந்த குரலில் யாரோ பேசினார்கள்.
உள்ளேயிருந்த கதவு மெதுவாகத் திறந்தது. இருட்டினூடே இரண்டு பெண்களும் ஒரு ஆணும் பட்டாளக்காரன் படுத்திருந்த கட்டிலைத் தாண்டி நடந்தார்கள். ஒரு பெண் தன் நெஞ்சோடு சேர்த்து எதையோ பிடித்திருந்தாள். அவர்கள் வாசல் கதவைத் திறந்தார்கள். நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்க தெருவில் இறங்கினார்கள். அங்கே ஒரு கோவேறு கழுதை அவர்களுக்காக காத்து நின்றிருந்தது.
விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரி தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடமிருந்து அவள் நெஞ்சோடு சேர்த்து பிடித்திருந்த குழந்தையை வாங்கினாள். அதன் முகத்தில் நட்சத்திரத்தின் ஒளி படும் விதத்தில் இரு கைகளையும் உயர்த்தி முகத்தை உற்று பார்த்தவாறு அவள் சொன்னாள்: “பாவம்... பாவம்... ரட்சகன்...” பிறகு குனிந்து குழந்தையின் நெற்றியிலும் சின்ன பாதங்களிலும் அவள் முத்தம் கொடுத்தாள். அந்தப் பெண் அதற்குள் கழுதை மேல் ஏறியிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரி குழந்தையை அந்தப் பெண்ணின் கையில் திரும்பக் கொடுத்தாள். அவள் மீண்டும் அதை வாங்கி தன் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள். வீட்டிற்குள்ளிருந்து மூன்று நான்கு பெண்கள் இருட்டினூடே அமைதியாக நடந்து வெளியே வந்தார்கள். அந்த ஆண் கழுதையின் மூக்கணாங் கயிறைப் பிடித்தான். கழுதை மேல் அமர்ந்திருந்த பெண் எல்லோரையும் பார்த்துச் சொன்னாள்: “நன்றி. எங்களுக்கு பாதுகாப்பு தந்ததுக்கு நன்றி. என் குழந்தையோட நன்றி. உங்களுக்கு பதிலுக்குப் பதில் உபகாரம் செய்ய எங்களால முடியல...”
வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “ம்... உன் மகன் வளர்ந்து ராஜாவா ஆகுறப்போ எங்களையும் காப்பாற்றச் சொல்லு. நாங்க விபச்சாரிகள். ஆனா, அம்மாவோட வார்த்தைகளை அவன் கட்டாயம் கேட்பான்...”
கோவேறு கழுதை நடக்க ஆரம்பித்தது.
விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரி முன்னால் ஓடிச்சென்று சொன்னாள்: “அந்தப் பட்டாளக்காரனையும் காப்பாற்றணும். உங்களுக்கு நல்லது நடக்கட்டும்!”
அடுத்த வளைவு திரும்பி ஒற்றையடிப் பாதை வழியாக அந்த ஆணும் கோவேறு கழுதையம் அந்தத் தாயும் குழந்தையும் இருட்டுக்கு மத்தியில் மறைந்தே போனார்கள்.
விலை மாதர்கள் இருட்டினூடே பட்டாளக்காரனைத் தாண்டி வீட்டிற்குள் போனபோது அவன் உறக்கத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்: “தண்ணி சூடாயிருச்சா?”