
லீலாவதியின் கையைப் பிடித்துக் கொண்டு அவர் பேருந்தில் ஏறுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தார். கமலாக்ஷி வேகமாக பாடியில் முடிச்சு போட்டு, இரவிக்கையையும் புடவையையும் சரி பண்ணி விட்டு, குழந்தை யைத் தூக்கிக் கொண்டு சாலைக்கு வந்தாள். இந்த முறை பேருந்தில் ஏறி விடலாம் என்று எல்லாரும் முடிவு செய்தார்கள். பேருந்து நெருங்கி வந்தது. பேருந்திற்குள் ஏறுவதற்கு கமலாக்ஷி அவசரப்பட்டாள்.
“நின்றவுடன் ஏறினால் போதும்'' என்று பத்மநாபன் தடுத்தார்.
“இடம் இருக்கிறதா?'' ஓட்டுநர் பின்னால் அழைத்துக் கேட்டார். “இல்லை... போகட்டும்...'' நடத்துனர் பின்னிருக்கையில் இருந்து கொண்டே பதில் சொன்னார். பேருந்தின் வேகம் அதிகமானது. அது இரைச்சல் எழுப்பிக் கொண்டே வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.
இந்த முறை பத்மநாபன் மட்டுமல்ல- கமலாக்ஷியும் லீலாவதியும் ஏமாற்றத்திற்குள்ளாகி விட்டார்கள். அருகில் நின்று கொண்டிருந்த கிழவன் பத்மநாபனுக்கு ஆறுதல் கூறினான்: “பரவாயில்ல... ஒரு மணி நேரத்திற்குள் இன்னும் பேருந்து வரும். அதற்குள் குழந்தைக்கு ஏதாவது வாங்கி கொடுங்க. இல்லாவிட்டால் அது மிகவும் களைத்துப் போய்விடும். வாங்க... நாம தேநீர் கடைக்குப் போகலாம்.''
“வேண்டாம்... நீங்க போங்க..'' பத்மநாபன் வெறுப்புடன் சொன்னார். கிழவன் என்ன சொல்வது என்று தெரியாமல் மெல்லிய ஒரு இளிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். பத்மநாபன் எதுவும் பேசாமல் கவலையுடன் நின்று கொண்டிருந்தார்.
அவளுடைய இதயம் லேசாகிவிட்டது. அவளுக்கும் பசி எடுக்க ஆரம்பித்தது. தன் கணவர்மீது இருந்த எதிர்ப்புகள் எல்லாவற்றையும் அவள் மறந்துவிட்டாள். அவள் அருகில் வந்து கணவருக்கு ஆறுதல் சொல்ல முயற்சித்தாள்: “இதற்காக ஏன் இப்படி கவலைப்பட வேண்டும்? இனியும் பேருந்து இருக்குல்ல?''
கமலாக்ஷி அமைதியான மனநிலைக்கு வந்தவுடன், பத்ம நாபனுக்கு அவள்மீது இருந்த கோபமும் பேருந்து கிடைக்காததால் உண்டான ஏமாற்றமும் அதிகமாயின. “ஹோ... அங்கேயே இரு. உனக்கு என்ன தெரியும்!'' அவர் நிலை குலைந்த நிலையில் கைகளைக் கோர்த்து பிசைந்து கொண்டே திரும்பி நின்றார். “நேற்று போயிருந்தால், இந்த சிரமங்களெல்லாம் உண்டாகி இருக்குமா?'' அவர் தன் பற்களைக் கடித்துக்கொண்டே முணுமுணுத்தார்.
நேற்றே புறப்படாமல் போய்விட்டது தவறாகிவிட்டது என்பதை கமலாக்ஷியும் உணர்ந்தாள். அவள் ஒரு தவறு செய்துவிட்டவளைப் போல கூறினாள். “அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்னை அழைத்திருந்தால், நான் உங்க கூடவே வந்திருப்பேன். வற்புறுத் தாமல் இருந்ததால், அந்த அளவிற்கு முக்கியமில்லைன்னு நான் நினைச்சிட்டேன்.''
பத்மநாபன் திரும்பி நின்றார்: “என் பக்கத்துல இருந்து போடீ... முக்கியமில்லைன்னு இவள் நினைச்சாளாம்! நீதிமன்றத்துக்குப் போவது முக்கியமான விஷயமில்லையா!''
கமலாக்ஷி சுற்றிலும் பார்த்துக்கொண்டே கெஞ்சுகிற குரலில் சொன்னாள்: “அய்யோ! மெதுவா சொல்லுங்க... இது வழிதானே?''
“வழியாக அமைந்து போனது உன்னுடைய அதிர்ஷ்டம்.'' அவர் திரும்பி நடந்து சென்று சிறிது தூரத்தில் போய் நின்றார். நேரம் ஒன்பது மணியைத் தாண்டி விட்டிருந்தது. கமலாக்ஷியின் கவலையும் பதைபதைப்பும் அதிகமாக ஆரம்பித்திருந்தன. தன் கணவர் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்- அது மிகவும் முக்கியமான விஷயம். அதன் முக்கியத்துவத்தை அவள் அப்போதுதான் முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தாள்.
லீலாவதிக்கு அவளுடைய பசியைப் பற்றி புகார் செய்வதற்கு ஆள் இல்லை. தந்தை கோபத்தில் இருக்கிறார். தாய் கவலையில் இருக்கிறாள். யாரிடம் கூறுவது? அவள் கடவுளிடம் கூறுவதைப் போல உரத்த குரலில் கூறினாள்: "எனக்கு பசிக்குதே!''
“இங்கே வா மகளே.'' கமலாக்ஷி தன் மகளை அருகில் வரும்படி அழைத்தாள்.
“வா மகளே... காப்பி வாங்கித் தர்றேன்.'' பத்மநாபனும் மகளை அழைத்தார்.
லீலாவதி தன் தந்தையின் அருகில் ஓடிச் சென்றாள். அவர் தன் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.
“எங்கே போறீங்க?'' கமலாக்ஷி உரத்த குரலில் அழைத்துக் கேட்டாள். பத்மநாபன் திரும்பிப் பார்த்தார். தன் மனைவி மிகுந்த கவலையுடன் நின்று கொண்டிருக்கிறாள் என்பதை அவர் புரிந்துகொண்டார். கணவன் என்பவனுக்கு இருக்கக் கூடிய அவருடைய இதயம் இளகியது. அவர் அமைதியான குரலில் கூறினார்: “தேநீர் கடையில் குழந்தைக்கு சிறிது காப்பி வாங்கித் தரணும்.''
“நான் இங்கேயே நிற்கணுமா?''
“அப்படின்னா வா... நாமும் கொஞ்சம் காப்பி குடிப்போம். நீ எதுவுமே சாப்பிடலையே! அங்கே உட்காருவதற்கு வசதி இருக்கிறது.''
மனமில்லா மனதுடன் கமலாக்ஷி மெதுவாக நடந்தாள். அருகில் சென்றதும் அவள் சொன்னாள்: “அங்கே எப்படி போய் உட்காருவது?''
“பிறகு என்ன செய்வது? இப்படியே எவ்வளவு நேரம் தண்ணிகூட குடிக்காமல் நின்று கொண்டிருப்பாய்?''
“அவர்கள் மெதுவாக நடந்தார்கள். வடக்கு திசையிலிருந்து ஒரு சத்தம்- ஹாரன் ஒலி! பதமநாபன் திரும்பி நின்றார்: “பேருந்து வந்துகொண்டிருக்கிறது. நாம இங்கேயே நிற்போம்.''
பேருந்து வளைவைத் தாண்டி வந்து கொண்டிருந்தது. பத்மநாபன் கையைக் காட்டினார். பேருந்து ஓடி வந்து அவர்களுக்கு முன்னால் நின்றது. நடத்துநர் கீழே இறங்கினார். தெரிந்த ஆளைப்போல காட்டிக் கொண்டு மரியாதையான குரலில் சொன்னார்: “இரண்டாவது இருக்கையில் போய் உட்காருங்க.''
பத்மநாபன் லீலாவதியைத் தூக்கி பேருந்திற்குள் ஏற்றினார். தொடர்ந்து அவரும் ஏறினார். தன் மனைவியின் கையிலிருந்து குழந்தையை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, வலது கையை நீட்டினார். கமலாக்ஷி தன் கணவரின் கையைப் பற்றி பேருந்திற்குள் ஏறினாள். எல்லாரும் உட்கார்ந்தார்கள். கமலாக்ஷி தன் கணவரைப் பார்த்து வெற்றி பெற்றுவிட்டதைப்போல புன்னகைத்தாள். பத்மநாபன் நிம்மதியாக ஒருமுறை மூச்சுவிட்டார்.
“ம்... போகலாம்.'' நடத்துனர் அனுமதி கொடுத்தார்.
பேருந்து முன்னோக்கி நகர்ந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook