ஆசாரிப் பெண்ணின் திருமணம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4509
ஆசாரி தயார்படுத்திக் கொண்டான். பிரிக்கப்பட்டிருந்த திரைச் சீலைகளின் இடைவெளியைச் சாதகமாக ஆக்கிக் கொண்டு அம்பு எய்ததைப் போல உள் நோக்கி பறந்தான்.
ஆசாரியின் மனைவியின் பாக்கியம் என்றுதான் கூற வேண்டும். இந்த முறை ஆசாரிக்கு எதுவுமே அசம்பாவிதம் உண்டாகவில்லை.
அந்த வெற்றியின் உற்சாகத்தில் உள்ளே வந்த அதே வேகத்தில் ஆசாரி ஏணிப் படிகளுக்கு மேலே முதல் தளத்தை இலக்காக்கி பறந்தான்.
அங்கு போய் சேர்ந்த பிறகும் ஆசாரிக்கு ஒரு தும்பும் கிடைக்கவில்லை. இடது பக்கமும் வலது பக்கமும் அறைகள். முன்னாலும் பின்னாலும் அறைகள். பெரியவரின் படுக்கையறை எங்கே இருக்கிறது? பெரியவருடைய மனைவியின் படுக்கையறை எங்கே இருக்கிறது? நகைகள் எங்கே இருக்கின்றன? நகைகள் வைக்கப்பட்டிருக்கும் பித்தளைப் பெட்டி எங்கே இருக்கிறது? ஆசாரி எதையும் பார்க்கவில்லை. ஆசாரி சிறிதும் திரும்பவில்லை.
பல அறைகளுக்கு முன்னாலும் சிறகுகளை விரித்து பறந்த பிறகு, இரண்டையும் நினைத்தவாறு, ஒரு அறைக்குள் நுழைந்து சென்றான்.
என்ன பார்த்தான்? அவனுடைய மனைவியிடம் கூட கூற முடியாது. காகமாக இருந்தாலும், மொத்தத்தில் கூசிப் போய் விட்டான். கண்களை மூட முடியவில்லை. காகம் அல்லவா? கை இருக்கிறதா என்ன?
‘அது என்ன?’
‘பயப்பட வேண்டாம். காகம்தான்.’
‘காகம் எப்படி உள்ளே வந்தது?’
‘பறந்து... பறந்து காகங்கள் வீட்டிற்குள் நுழைந்து வர ஆரம்பித்து விட்டனவா? உன்னை நான்...’
பெரியவர் கையில் கிடைத்த தலையணையை எடுத்து அலமாரிக்கு மேலே நின்று கொண்டிருந்த காகத்தை இலக்கு வைத்து எறிந்தார். எறிந்தது சரியாக விழவில்லை. குறி தவறி விட்டது.
காகம் அலமாரியின் மேலிருந்து பறந்து சாளரத்தில் சென்று அமர்ந்தது.
‘அது அங்கேயே இருக்கட்டும். பிண்டம் சாப்பிடும் காகம்.’
பெரியவருடைய மனைவி கூறினாள்:
‘பிண்டம் சாப்பிடும் காகத்தைத் தொல்லைப்படுத்தக் கூடாது. அது அங்கேயே இருக்கட்டும்.’
ஆசாரி சாளரத்தின் மீது நின்று கொண்டு நான்கு பக்கங்களிலும் பார்த்தான். திடீரென்று ஆசாரியின் கண்கள் ஒளிர்ந்தன. பித்தளைப் பெட்டி அறையின் மூலையிலிருந்த ஒரு ஸ்டூலின் மீது.... சாவி, சாவி துவாரத்தில்.
‘தெய்வங்கள் துணை இருக்கட்டும். என் மகளுக்கு ஒருவன் வருவான். அவளுக்கொரு வழி பிறக்கும்.’
‘காகம் பார்க்கிறது’ – பெரியவரின் மனைவி கூறினாள்.
பெரியவர் கூறினார்: ‘பார்க்கட்டும்... பிண்டம் சாப்பிடும் காகம்.’
‘எனக்கு வெட்கமாக இருக்கிறது.’
‘காக்காவிற்கு எதுவும் புரியாது. வெட்கப்பட வேண்டாம்... நீ என்னுடைய தங்கக் குடமாச்சே! நீ என் தங்கக் குடம்...’
காகம் முகத்தைத் திருப்பியது. ஆசாரியின் மனைவி ஒரு காகமாக வந்திருக்கலாம். ஆசாரியின் மனைவி இதைச் சிறிது பார்த்திருக்க வேண்டும்.
நேரம் போய்க் கொண்டிருந்தது. வெயில் குறைந்து கொண்டிருந்தது.
ஆசாரியின் பொறுமை போய்க் கொண்டிருந்தது.
பெரியவரும் பெரியவரின் மனைவியும் சாளரத்தில் அமர்ந்திருந்த பறவையை மறந்து விட்டிருந்தார்கள். அவர்கள் உலகத்தையே மறந்திருந்தார்கள்.
ஆசாரிக்கு தைரியம் வந்தது. சத்தம் உண்டாக்காமல் நகைப் பெட்டியின் அருகில் பறந்து சென்று நின்றான். சாவியைத் திருப்ப கை இல்லை. அலகு இருக்கிறது. அலகு போதாது. திரும்பாது. அசையாது. கை வேண்டும். கை எங்கே? காகம் அல்லவா? கை இருக்குமா?
ஆசாரி திரும்பிப் பார்த்தான். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உலகத்தையே மறந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். காகத்தை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
காகம் ஒரு நிமிடம் மீண்டும் ஆசாரியாக மாறி சாவியைத் திருப்பியது. கதவு திறந்தது. மீண்டும் காகமாக ஆனது.
கண்கள் கூசின. வளையல் வேண்டுமா? மாலை வேண்டுமா? அரைஞாண் வேண்டுமா? எதை எடுக்க வேண்டும்? எதை எடுக்க வேண்டும்?
பத்து பவுன் போதும். ஆசாரிப் பெண்ணுக்கு அது போதும்.
ஆசாரி ஒரு மாலையைக் கொத்தி எடுத்தான். பத்து இருக்குமா? பத்து இருக்கும். பத்து போதும். ஆசாரியின் மகள் அல்லவா?
காகம் அலகில் மாலையுடன் கீழ் நோக்கி பறந்தது. வெளியே பறந்தது. வீட்டை நோக்கி பறந்தது.
அப்போது நான்கு ஆட்கள் பார்த்தார்கள். ஊரில் உள்ளவர்களும் பார்த்தார்கள்.
‘காகம் போகிறது’ – நான்கு ஆட்கள் கூறினார்கள்: ‘பொன்னாலான மாலையைக் கொத்தியவாறு காகம் போகிறது.’
‘அதை பிடி.... அதை அடி.... அதை கொல்லு.’
ஊர்க்காரர்கள் கூறினார்கள்.
ஆசாரி உயரத்தில் பறந்தான். உயரத்தில்.... உயரத்தில் பறந்தான்.
ஊர்க்காரர்கள் மேலே பார்த்தார்கள். அவர்கள் ஓடினார்கள். கல்லை எடுத்து எறிந்தார்கள். கவன் எடுத்து எறிந்தார்கள். கத்தியை எடுத்து எறிந்தார்கள்.
ஆசாரியின் மீது அவை விழுந்தன. ஆசாரி பயந்தான். ஒரு மாமரத்தைப் பார்த்தது. மாமரத்தின் கிளையின் மீது போய் அமர்ந்தது. தோற்றம் மாறி, ஆசாரியாக ஆனது. நகையை எடுத்து மடியில் வைத்தான்.
ஆசாரி மரத்தின் கிளையில்!
‘ஆசாரியே! ஆசாரியே! நீ அங்கே என்ன செய்கிறாய்?’ – ஊர்க்காரர்கள் மேலே பார்த்தார்கள்.
‘ஒரு காகம்... அலகில் நகையை வைத்திருக்கும் ஒரு காகம்... அதைப் பிடிப்பதற்காக ஏறினேன்.’
ஆசாரி மெதுவாக இறங்கினான்.
‘ஆசாரியே.... ஆசாரியே.... மழை போய், வெயில் வந்தது. வெயில் போய், மழை வந்தது. ஆசாரிப் பெண்ணுக்கு எப்போது திருமணம்?’
ஆசாரி கூறினான்:
‘துலாம் மாதம் பதினெட்டாம் நாள் ஆசாரிப் பெண்ணின் திருமணம். மழை இருந்தால் மழை. வெயில் இருந்தால் வெயில். துலாம் பதினெட்டன்று திருமணம்.’
‘பொன் இருக்கிறதா, ஆசாரி?’
‘பொன் இருக்கிறது, ஊர்க்காரர்களே!’
‘பத்து பவுன் இருக்கிறதா, ஆசாரி?’
‘பத்து இருக்கிறது, ஊர்க்காரர்களே!’
‘நாங்கள் செல்கிறோம். காகத்தைப் பிடி. அதை அடி. அதை கொல்லு. திருட்டு காகம்... கருங்காகம்... கலிகால காகம்...’
ஊர்க்காரர்கள் காகத்தைத் தேடி ஓடினார்கள்.
ஆசாரி பின்னாலிருந்து உரத்த குரலில் கூறினான்:
‘துலாம் மாதம் பதினெட்டாம் நாளன்று ஆசாரிப் பெண்ணுக்கு திருமணம். நீங்களும் வரணும், ஊர்க்காரர்களே! ஊர் முழுவதும் வரணும், ஊர்க்காரர்களே!’