க்ரயோஜனிக் எஞ்சின் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7295
சொல்லிவிட்டு ஜன்னல் வழியாக ஆகாயத்தை நோக்கி அது பறந்துபோகிறது. சற்று தூரத்தில் "சொர்க்கம்" என்று எழுதப்பட்டிருக்கும் கதவுகள் தானே திறப்பதையும், இயந்திரம் அந்த வாசல் வழியே நுழைந்து மறைவதையும் குட்டிகிருஷ்ணன் இங்கிருந்தபடியே பார்க்கிறான். திடீரென்று ஒரு சத்தம். என்னவென்று அவன் திரும்பிப் பார்த்தால், அறை நிறைய போலீஸ்காரர்கள். குட்டிகிருஷ்ணன் சொர்க்கத்தின் வாசலை நோக்கி இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயர்த்தியவாறு உரத்த குரலில் சத்தமிடுகிறான்: "என்னைக் காப்பாத்துங்க...'' இயந்திரம் சொர்க்கவாசல் அருகில் மீண்டும் தெரிகிறது. ஒரு நீளமான கதிர் அதில் இருந்து புறப்பட்டு குட்டிகிருஷ்ணன் மேல் பட்டு, அது அவனை சொர்க்கத்தை நோக்கி அழைத்துக் கொண்டு போகிறது.
சாயங்காலம் ஆனபிறகும் குட்டிகிருஷ்ணன் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து மைலாடி பாப்பன் என்ற கார் திருடன் அவனைத் தட்டி எழுப்பினான். குட்டிகிருஷ்ணன் எழுந்ததும், அவனைப் பார்த்துச் சொன்னான்: "அடி கிடைக்கிறப்போ இந்த மாதிரிதான். ஒண்ணு செய். கொஞ்சம் உன்னோட மூத்திரத்தைக் குடிச்சுப் பாரு. உடம்பெல்லாம் மூத்திரத்தைத் தேய்ச்சுவிடு. உடம்பு வலிக்கு அதுதான் சரியான மருந்து.''
குட்டிகிருஷ்ணன் உட்கார்ந்து உள்ளங்கையில் சிறுநீர் கழிக்க முயன்றான். அவன் முகம் வேதனையால் அஷ்டகோணலாகியது. மூத்திரத்திற்கு பதிலாக கொஞ்சம் இரத்தத் துளிகள்தான் கையில் வந்து விழுந்தன. பாப்பன் அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டு தலையை ஆட்டினான். பிறகு அவன் சொன்னான்:
"இங்க வா... நான் மூத்திரம் தர்றேன். வாழ்க்கையில நாம வாழ்றதே ஒரே ஒரு முறைதான்...''
மூத்திர சிகிச்சை முடிந்தபிறகு, குட்டிகிருஷ்ணனுக்கு கொஞ்சம் உற்சாகம் வந்தது மாதிரி இருந்தது. மைலாடி பாப்பனும், தோப்பும் படி குட்டப்பனும், ரட்சகன் அப்புவும், பிணம் தின்னி ஸ்ரீனியும் சேர்ந்து குட்டிகிருஷ்ணனைப் பார்த்துக் கேட்டார்கள்: "எப்படி நீ உள்ளே வந்தே? சரியான அடி கிடைச்சிருக்கும்போல இருக்கே! சரி... உன்னோட பேர் என்ன?''
குட்டிகிருஷ்ணன் பேசுவதற்காக வாயைத் திறந்தான். ஆனால், முகத்திலும், தலையிலும் இருந்த நரம்புகள் அறுந்துவிடுகிற அளவிற்கு முறுக்கேறி நின்றன. அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மயக்கமடைந்து "மடார்" என கீழே விழுந்தான். பாப்பன் நண்பர்களைப் பார்த்துச் சொன்னான்: "சரியான அடி விழுந்ததுதான் காரணம். காலையில பிணத்தை எடுக்குறதுக்கு தயாரா இருந்துக்கோ...''
அன்று இரவு தங்கத்தால் செய்யப்பட்ட இயந்திரம் மீண்டும் குட்டிகிருஷ்ணன்முன் தோன்றியது. அவன் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் இரும்புக் கம்பிகள் வழியே அது ஒளி வீசிக்கொண்டு உள்ளே வந்தது. அது குட்டிகிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னது: "உன்னை நான் காப்பாத்துறேன். நீ பயப்படாதே. எல்லா விஷயங்களையும் உனக்கு நான் சொல்லித் தர்றேன். நான் என்ன சொல்றேனோ அதை செஞ்சா போதும்.'' இதைக் கேட்டதும் குட்டி கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான். இயந்திரம் சொன்னதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டான்.
மறுநாள் பாப்பனும் அவனது நண்பர்களும் பிணத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க, குட்டிகிருஷ்ணன் சிறைக்கம்பிகள் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றிருந்தான். அவன் திரும்பி நின்று அவர்களைப் பார்த்துச் சொன்னான்: "நான் நீங்க தூக்கம் கலைஞ்சு எந்திரிக்கிறதுக்காகக் காத்திருந்தேன். இங்கே இருந்து தப்பிக்க என்கிட்ட ஒரு வழி இருக்கு. நான் உண்மையில் யார்னு உங்களுக்குத் தெரியுமா?''
அவர்கள் சொன்னார்கள்: "இல்ல..''
குட்டிகிருஷ்ணன் சொன்னான்: "இந்தியாவுல எல்லா ராக்கெட்டுகளையும் கட்டுப்படுத்துற விஞ்ஞானி நான். ஒரு ரகசிய தேடலுக்காக நாவிதனா நான் நடிச்சுக்கிட்டு இருக்க, என்னோட விரோதிகள் எப்படியோ அதைக் கண்டுபிடிச்சு, இங்க கொண்டுவந்து சேர்த்துட்டாங்க. என்னைக் காப்பாத்துறதுக்கு இன்னைக்கோ இல்லாட்டி நாளைக்கோ நிச்சயம் ஒரு ராக்கெட் வரும். தங்கத்தாலான இயந்திரத்தைக் கொண்ட ராக்கெட். நான் அதுல ஏறிப் பறந்து போயிடுவேன். நீங்க யாராவது என்கூட வர்றதா இருந்தா இப்பவே சொல்லிடுங்க. மூத்திரம் தந்து என்னைக் காப்பாத்தினதுக்கு நான் உங்கமேல என்றைக்குமே நன்றி உள்ளவனா இருப்பேன்.''
அவர்களுக்கு குட்டிகிருஷ்ணன் சொன்ன விஷயம் சரியாக மனதில் ஏறவில்லை. மைலாடி பாப்பன் கேட்டான்: "தங்கத்தாலான இயந்திரத்துக்கு பெட்ரோல் போடுறீங்களா இல்லாட்டி டீஸலா?''
குட்டிகிருஷ்ணன் சொன்னான்: "ரெண்டுமே இல்ல... பண்ணையிலிருந்து கொண்டு வர்ற பால்தான் அதுல ஊத்தப்படுது. தங்கத்துக்கு அதுதான் சரியா இருக்கும்.''
பாப்பன் வாகனங்களைப் பற்றிய தன்னுடைய அறிவை வைத்துக் கொண்டு கேட்டான்: "ஆமா... இது என்ன எஞ்சின்? மெட்டடோரா? இல்லாட்டி மஹேந்திராவா?''
குட்டிகிருஷ்ணன் சொன்னான்: "கரையிற எஞ்சின் அப்படின்னு தான் இதை எல்லாரும் சொல்றாங்க. இதோட உண்மையான பேரு யாருக்கும் தெரியாது. அது விஞ்ஞான ரகசியம்...''
குட்டிகிருஷ்ணனை போலீஸ்காரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது பாப்பன் மற்றவர்களிடம் கேட்டான்: "நாமளும் இது என்னன்னு பார்த்திடுவோமா?''
அவர்கள் அரை சம்மதத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். ரட்சகன் அப்பு சொன்னான்: "பிடிபட்டா ரெண்டு அடி கிடைக்கும். இல்லாட்டி நாம பறந்துபோயிடலாம்...''
"இந்த ஆளு போகிற இடத்துக்கு நம்மளையும் அழைச்சிட்டுப் போவாரா? இல்லாட்டி பாதி வழியிலேயே இறக்கிவிட்டுடுவாரா?''
"ஆமா...இந்த ஆளு எங்கே போறாரு?'' ஸ்ரீனி கேட்டான்.
"என்ன இருந்தாலும் போறது ராக்கெட்ல ஆச்சே! அமெரிக்கா இல்லாட்டி ரஷ்யாவுக்கா இருக்கும்! இல்லாட்டி டெல்லியாகூட இருக்கலாம்.'' மைலாடி பாப்பன் சொன்னான்.
"இருந்தாலும்... பாலை ஊத்தி எஞ்சினை ஓட வைக்க முடியுமா என்ன?'' அப்பு கேட்டான்.
"ராக்கெட்டைப் பத்தின விஷயமா இருக்குறதால அதைப்பத்தி எனக்கு சரியா தெரியாது. என்ன இருந்தாலும் எவ்வளவு பெரிய விஞ்ஞானி! சும்மா சொல்வாரா என்ன?'' கார் திருடன் சொன்னான்.
"போற இடம் அமெரிக்காவா இருந்தா, நல்லா இருக்கும்...'' பிணம் தின்னி சொன்னான்.
"பாகிஸ்தான்லயோ இல்லாட்டி அது பக்கத்துல இருக்குற ஏதாவதொரு நாட்லயோ போய் விழாம இருந்தா நம்ம அதிர்ஷ்டம். நீ பாட்டுக்குப் பெருசா கனவு காணாதே!'' ரட்சகன் சொன்னான்.
"நாம இந்த ஆளுக்கு மூத்திரம் தந்தது எவ்வளவு நல்லதாப் போச்சு.'' மைலாடி பாப்பன் சொன்னான்.
அது சுய தம்பட்டம் என்றாலும்கூட, மற்றவர்கள் "ஆமாம்" என்று தலையாட்டி வைத்தார்கள். மருத்துவப் பரிசோதனை முடிந்து குட்டிகிருஷ்ணன் திரும்பி வந்தபோது, அவனை இரண்டு போலீஸ்காரர்கள் தாங்கிப் பிடித்திருந்தார்கள். மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடம்பில் பல இடங்களில் காயங்களும், சிராய்ப்புகளும் இருந்தன. அவனது ஒரு கை ஒடிந்து தொங்கிக் கொண்டிருந்தது.