க்ரயோஜனிக் எஞ்சின் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7295
"இங்குள்ள வைத்தியர்கள்தான் பரிசோதனை செஞ்சிருக்காங்க...'' பாப்பன் சொன்னான்.
யாருமே ஒன்றும் பேசாமல் மவுனமாக நின்றிருந்தார்கள்.
அவர்கள் ராக்கெட் வருமா வராதா என்பதைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ, அந்தச் சிந்தனையை விட்டு அகன்றார்கள்.
பிணம் தின்னி சொன்னான்: "மூத்திரத்தைக் கொடுத்துப் பார்ப்போமா? ஒருவேளை ஆயுள் பலமா இருந்தா பிழைச்சுக்கலாம்ல...''
அவர்கள் நான்கு பேரும் மூத்திரத்தைப் பெய்து தங்களாலான விதத்தில் குட்டிகிருஷ்ணனுக்குச் சிகிச்சை செய்தார்கள்.
சிறிதுநேரம் சென்றதும், குட்டிகிருஷ்ணன் எழுந்து உட்கார்ந்தான். வெளியே தள்ளிக்கொண்டிருந்த வலது கண்ணாலும், ரத்தம் கட்டிக் கொண்டிருந்த இடது கண்ணாலும் அவர்களை அவன் பார்த்தான். பிறகு என்ன நினைத்தானோ, கஷ்டப்பட்டு தானாகவே அவன் எழுந்து நின்றான்.
"எப்படியோ ஆள் பிழைச்சாச்சு...!'' பாப்பன் சொன்னான்.
ஆனால், குட்டிகிருஷ்ணன் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. அவன் பறக்கப் போவதைப்போல இரண்டு கைகளையும் இருபக்கங்களிலும் நீட்ட முயற்சித்தான். ஒடிந்து போயிருந்த கை அசைக்கவே முடியாமல் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு கையை நடுங்கியவாறு நீட்டினான்.
குட்டிகிருஷ்ணனின் நசுங்கிப்போயிருந்த கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது.
"ராக்கெட் வந்திருச்சு...!'' குட்டிகிருஷ்ணன் சொன்னான்: "கரையிற இயந்திரம் என்னைக் கூப்பிடுது!''
மைலாடி பாப்பனும், அவனின் நண்பர்களும் ஆர்வத்துடன் சிறைக்கூடத்தைச் சுற்றிலும் பார்த்தார்கள். குட்டிகிருஷ்ணன் அடுத்து என்ன செய்யப்போகிறான் என்பதை எதிர்பார்த்து அவர்கள் காத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து ஏதாவது ஒலியோ, இரைச்சலோ கேட்கிறதா என்று தங்களின் காதுகளைத் தீட்டிக்கொண்டு அவர்கள் நின்றிருந்தார்கள்.
குட்டிகிருஷ்ணன் நெஞ்சம் நிறைய புன்னகைத்தவாறு தங்கத்தாலான ராக்கெட்டில் பறக்க ஆரம்பித்தான்.
பாப்பனும், அவனது நண்பர்களும் ஓடிச்சென்று பிடிப்பதற்குள் குட்டிகிருஷ்ணன் ராக்கெட்டில் பறக்கிறேன் என்று முன்னோக்கிப் பாய்ந்தான். அடுத்த நிமிடம் தலை குப்புற விழுந்து இறந்தான்.
"கஷ்டம்...'' ரட்சகன் அப்பு சொன்னான்: "இந்த ஆளு உண்மையிலேயே நல்ல ஆளுன்னு நினைக்கிறேன்...'' பாப்பன் பாரா பார்க்கும் ஆளைக் கூப்பிடுவதற்காகப் போனான்.
கடவுள் நம்பிக்கை கொண்ட பிணம் தின்னி சொன்னான்: "ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி...!''
"இந்த ஆளைத் தேடி ராக்கெட் இனிமேல் வருமோ?'' தோப்பும்படி குட்டப்பன் பொதுவாகக் கேட்டான்.
"ஏய்... அந்தப் பிரச்சினையே இப்போ இல்ல... இந்த ஆளு செத்துப்போன விஷயம் ஏற்கெனவே அவங்களுக்குத் தெரிஞ்சு போயிருக்கும். எல்லாமே ரகசிய காரியங்கள்தானே?'' ரட்சகன் சொன்னான்.
குட்டிகிருஷ்ணன் உறுப்பினராக இருக்கும் பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஒரு வாரம் கழித்து இப்படியொரு செய்தி பிரசுரமாகியிருந்தது: "கிழக்குகோட்டை கைரளி கட்டிங் சலூன் உரிமையாளரான தோழர் குட்டிகிருஷ்ணன் (வயது 49) காலமானார். அவர் கட்சியின் ஆயுள் உறுப்பினராக இருந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். அவரின் தந்தை கொச்சு நாராயணன் (வயது 78) கட்சியின் ஆரம்ப காலத் தொண்டராக இருந்தவர். உடல் அடக்கம் நடந்து முடிந்தது."
மற்ற பத்திரிகைகள் குட்டிகிருஷ்ணன் மரணமடைந்த விஷயத்தை அறிந்திருக்கவே இல்லை. இலவச சவரம் செய்வதற்காகப் போன பத்திரிகையாளர்கள், எந்நேரமும் பூட்டப்பட்டுக் காணப்பட்ட சலூனைப் பார்த்து ஒருவித கேள்விக்குறியுடன் திரும்பிப்போவது அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் ஒரு காட்சியாக இருந்தது.