கடைசி இரவு - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7320
“ம்...” மெல்ல முனகினார் கேசவன்.
நாளை... நாளை என்று எங்கே இருக்கிறது? அவரைப் பொறுத்தவரை இனி எல்லாமே நேற்றுத்தான்!
“கேசவன்! உத்தியோகத்தை வச்சு ஏதாவது சம்பாதிச்சிருக்கியா?”- ஒரு நாள் மேனன் கேட்டார்.
அவரிடம் உண்மையை மட்டுமே கூற முடியும்.
“கடைசித் தங்கச்சியோட ரெண்டு புள்ளைங்க வேலையிலே இருக்கு.” கேசவனைப் பொறுத்தவரை மருமக்கள்மாரின் படிப்பும், வேலையுந்தான் பெரிய சம்பாத்தியம்.
“நான் அதைக் கேட்கல்லே. பணமோ, பூமியோ ஏதாவது தேடி வச்சிருக்கியா?” -மீண்டும் கேட்டார் மேனன்.
“இல்லை, நான் ஒரே ஓர் ஆள்தானே? எனக்கெதுக்குப் பணமும் பூமியும்?”
“போடா மடையா! ஒரே ஆளாம், ஒரு ஆள்! கொஞ்ச நாள் ஆனா உனக்கு உதவி செய்ய ஓர் ஆள் இல்லாம நீ மட்டும் தனியா நின்னுக்கிட்டிருப்பியா? அதுக்குப் பெறகு ஒரு நாள் மூச்சு அடங்கிப்போய்க் கிடப்பே.” - அவரை மேனன் கேலி செய்வதுபோல் பார்த்தார்.
அது நடந்து ஒரு மாதம் கழித்த பிறகு இந்த இடத்துக்குக் கேசவனுக்கு மேனன் வேலை மாற்றம் வாங்கிக் கொடுத்தார். உத்தியோகத்தைக் கொண்டு ஏதாவது சம்பாதிக்கும் வகையில் அவ்வப்போது தேவைப்பட்ட சலுகைகளும் அளித்து வந்தார் மேனன். அறிந்த நல்ல மனிதரிடமிருந்து பிரிந்து வரவே மனமில்லை கேசவனுக்கு.
“போடா. இதுக்கா போய்க் கலங்கி நிற்கிறே? அன்பு, உறவு இந்த இரண்டையும் மாத்திரம் நினைச்சுக்கிட்டிருந்தா வாழ்க்கையில் ஒண்ணும் சம்பாதிக்க முடியாது. உனக்குன்னு ஒரு காலம் இருக்கு. அன்னிக்கு உன்னைக் காப்பாத்த இந்தப் பரந்த உலகத்திலே ஓர் ஆத்மாகூட இருக்காது. அதனால்...” மேனன் சொல்ல வந்ததை முழுமையாக முடிக்கவில்லை.
பிரியும்போது மேனன் கூறினார். “வாழ்க்கை என்பது எப்பவுமே இப்படித்தான். எல்லாரும் எப்போதும் சேர்ந்திருக்கவே முடியாது. சரி; போய் வா!” அவருக்கும் தம்முடன் இதுவரை இருந்த ஊழியனைப் பிரிய வருத்தமாக இருந்திருக்குமோ?
அதன்பிறகு கேசவன் மேனனைப் பார்க்கவே இல்லை.
இந்தச் சோதனைச் சாவடிக்குக் கேசவன் வந்து சுமார் ஒரு மாதம் ஆகியிருக்கும். அப்போதுதான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த நிகழ்ச்சி நேர்ந்தது. மேனன் கோடநாட்டில் நடைபெற்ற யானை ஏலத்துக்காகப் போயிருக்கிறார். அங்கே அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது. அது அதிக நேரம் அவரைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. காட்டுப் பிரதேசத்தை தம் உயிரினும் மேலாகக் கருதி அன்பு செலுத்திய அந்த மாமனிதர் காட்டு மண்ணுடனேயே ஐக்கியமாகிவிட்டார்.
அதை நினைத்துப் பார்த்தபோது கேசவனின் நெஞ்சம் கனப்பது போல் தோன்றியது. கண்களைச் சுற்றிலும் ஒரு வகையான இருள்போர்வை போர்த்திக்கொண்டு வருவது போல் தோன்றியது. கேசவனுக்கும் மேனனுக்குமிடையே அப்படியென்ன நெருக்கமான உறவு? தம்மை வெறும் வேலைக்காரன் என்றா நினைத்து நடத்தினார் மேனன்!
இந்தச் சோதனைச் சாவடிக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு வருஷங்கள் ஆகிவிட்டன. இங்கு வந்தால் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் அவர்கள் எல்லாருக்குமே நன்கு தெரியும். ஆறு மாதத்துக்கு மேல் இங்கே நிரந்தரமாக யாரும் வேலை பார்த்ததில்லை. ஒருவர் பின் ஒருவராக இங்கே வேலைக்கு வரப் போட்டி போட்டுக் கொண்டிருப்பார்கள். கேசவனின் நெருங்கிய நண்பர்கள் பலரும் வந்து, வந்த மாதிரியே பின்னொரு நாளில் போகவும் செய்திருக்கிறார்கள். புதிது புதிதாக எத்தனையோ முகங்கள் அங்கு வந்தன! ஆனால், கேசவனை மட்டும் இடமாற்றம் செய்ய இதுவரை எந்த மேலதிகாரியும் முன் வரவில்லை. மேனனின் அன்புக்குக் கட்டுப்பட்ட ஆள் கேசவன் என்பது பொதுவாக எல்லாருக்கும் நன்கு தெரியும். இன்று அவர் இல்லை; இருந்தாலும், அவருடைய புகழ் நிலைத்து நிற்கிறது.
இதோ, நேரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கடந்து கொண்டிருக்கிறது. எஞ்சி நிற்பதோ ஒரு சில நிமிஷங்கள்தான். இன்னும் சிறிது நேரத்தில் கேசவன் தான் பல வருஷங்களாகப் பழகி வந்த இந்த இடத்திலிருந்து என்றென்றைக்கும் விடை பெற்றுக் கொள்ளப் போகிறார்.
லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருந்தன. சான்றிதழைப் பரிசோதித்த கேசவன் வழக்கம்போல் சரியாக இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்தார். டப்பாவில் நாணயங்களும், நோட்டுகளும் நிறைந்து கொண்டிருந்தன. அரிக்கன் விளக்கு சிம்னி கரி படிந்து, விளக்கொளியை முழுமையாக மறைத்து விட்டிருந்தது. மர உச்சியிலிருந்து சோதனைச் சாவடியின் மேற்கூரை மேல் பனித்துளிகள் ‘சொட் சொட்’ என்று விழுந்து கொண்டிருந்தன.
நீலகண்ட பிள்ளையின் குறட்டை ஒலி பெரும்பாலும் நின்று போயிருந்தது.
சாலையோரம் தொங்கவிடப்பட்டிருந்த அரிக்கன் விளக்கு எப்போது அணைந்ததோ தெரியவில்லை.
லாரிகளின் வரவு கொஞ்சங் கொஞ்சமாய் நின்று போயிருந்தது.
பொழுது புலரப் போகிறது.
ஐயப்பன் கோயிலிலிருந்து அதிகாலை ஐந்தரை மணிக்கு முண்டக்கயம் செல்கிற பஸ், வளைவு திரும்பி வந்து கொண்டிருக்கவே, பனிப்படலத்தினிடையே பஸ்ஸின் விளக்கொளி இழையோடிக் கொண்டிருந்தது.
டிரைவர் இறங்கி வந்தார். சிகரெட் ஒன்றை உதட்டில் பொருத்தியபடி, “இன்னிக்கு மற்ற நாட்களைவிடக் குளிர் கொஞ்சம் அதிகம்... உங்களுக்குச் சிகரெட் வேணுமா?” என்றார்.
“வேண்டாம்.” இதைச் சொல்லும்போது கேசவனின் சிந்தனை வேறொன்றைப் பற்றியதாக இருந்தது. இந்தக் குளிரின் கடைசி நிமிஷங்களை முழுமையாகத் தாம் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார் கேசவன். இன்னும் ஒரு சில மணித்துளிகள் சென்றால், இந்தக் குளிர், பனிப் போர்வை எல்லாம் அவரைப் பொறுத்தவரை நினைவுச் சின்னங்கள் மட்டுந்தான்!
அருகில் இருந்த மர உச்சியில் கூடு கட்டியிருந்த குருவி ஒன்று மெல்லச் சலசலத்தது. அதன் சத்தத்தில் உறக்கமிழந்த காட்டுக்கோழி ஒன்று அலறியது.
நீலகண்ட பிள்ளை சோம்பல் முறிக்கும் சத்தம் கேட்டது.
இரண்டு கைகளையும் தேய்த்தபடி தட்டி மறைவுக்கு அந்தப் புறத்திலிருந்து வந்தார் அவர்.
“சார், எப்போ புறப்படணும்?” வரும்போதே வினவினார் நீலகண்ட பிள்ளை.
“கோட்டயம் போற முதல் பஸ்ஸுக்கு. ஜில்லா ஃபாரஸ்ட் ஆபீஸுக்குப் போகணுமில்லே?” பட்டென்று கூறினார் கேசவன். கூறியிருக்க வேண்டியதில்லை என்று மனத்தின் ஓர் ஓரத்தில் பட்டது. பொழுது புலர்ந்த பிறகு போனால் போதுமே என்று கூடத் தோன்றியது.
நீலகண்ட பிள்ளை சோதனைச் சாவடியின் பின் பகுதிக்குப் போனார். ஸ்டவ்வின் ‘உஸ்’ என்ற ஒலி அங்கிருந்து கேட்டது.
ஆவி பறக்கும் காபியைக் கேசவனின் முன் மேஜை மேல் வைத்தார் நீலகண்ட பிள்ளை.
“சார், குளிச்சிட்டுத்தானே போறீங்க? வேணும்னா தண்ணி சூடாக்கட்டா?” - நீலகண்ட பிள்ளை தம் முகத்தையே பார்ப்பதுபோல் தோன்றியது கேசவனுக்கு.