
சோதனைச் சாவடியினுள் இருக்கும் விளக்கின் சிம்னி தெளிவானது! வெளியே இருக்கும் விளக்கின் சிம்னியோ சிவப்பு வண்ணம் கொண்டது.
ஒரு சில நிமிஷ நேரந்தான் சென்றிருக்கும். மீண்டும் ஆரவாரம் உண்டாகத் தொடங்குகிறது. பாரம் ஏற்றிய லாரிகள் மேலிருந்து கீழ்நோக்கி மெல்ல ஓசை எழுப்பியபடி ஒன்றன்பின் ஒன்றாய் வந்துகொண்டிருந்தன. இரண்டு கைகளுக்குள் அடங்காத மரக்கட்டைகளை ஏற்றி, அவற்றை மிகப்பெரிய கயிறுகளால் பிணைத்துக் கட்டியிருக்கிறார்கள். மரக்கட்டைகளின் ஒரு பக்கம் எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏலம் எடுத்த கான்ட்ராக்டர்கள் ஏற்றி அனுப்புபவை அவை. சோதனைச் சாவடியில் முன் ஓர் ஓரமாக மெல்ல வந்து நிற்கிறது லாரி. ப்ரேக் போடும் போது வரும் ‘கரகர’ சத்தம் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கிறது. அதனுடன் மரக்கட்டைகளின் பாரம் தாங்காமல் முனகும் கயிறுகளின் சத்தமும் சேர்ந்து ஒலிக்கிறது.
தலையையும் காதுகளையும் ‘மஃப்ளர்’ கொண்டு மூடியிருக்கும் லாரி டிரைவர் சோதனைச் சாவடியினுள் நுழைந்து, மரத்தின் பெயர், அது சம்பந்தமான விவரங்கள் எழுதப்பட்டிருக்கும் சான்றிதழை மேஜையின் மேல் வைக்கிறார். அதன்பின், தம் ஜேபியிலிருந்த பீடி ஒன்றைப் பற்ற வைத்து உதடுகளுக்கிடையே வைத்துப் புகைக்கிறார்.
காவல் அதிகாரி கேசவன் டார்ச் விளக்கு ஒன்றைக் கையில் எடுத்துச் சாலையில் இறங்குகிறார். லாரியில் ஏற்றியிருக்கும் மரக்கட்டைகளை டார்ச் விளக்கு வெளிச்சத்தில் சோதனை செய்து பார்க்கிறார். காட்டிலாக்காவிலிருந்து தமக்கு ஏற்கனவே கிடைத்திருக்கும் மரம் சம்பந்தமான விவரங்களும், சான்றிதழில் குறித்திருக்கும் விவரமும் சரியாக இருக்கின்றனவா என்று ஒரு முறை ஒப்பிட்டுப் பார்க்கிறார். மரங்களின் எண்ணிக்கை, அளவு எல்லாம் சரியாக இருந்ததால் இரண்டு இடங்களில், ‘பரிசோதனை செய்தாகிவிட்டது. சட்ட விரோதமான கடத்தல் எதுவுமில்லை’ என்று எழுதினார்.
டிரைவர் தம் ஜேபியிலிருந்து ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து மேஜைமேல் வைக்க, அதை எடுத்து டப்பாவினுள் போட்டார் காவல் அதிகாரி.
இது இன்று நேற்று நடைபெறும் ஒரு சம்பவமன்று. எத்தனையோ வருஷங்களாகத் தொன்று தொட்டு நடந்து வரும் ஒன்று.
ஒவ்வொரு மாத இறுதியிலும் டப்பாவில் இருக்கும் அந்தத் தொகையை வெளியே எடுப்பதுடன் தலைக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொள்வதும் வழக்கம். சோதனைச் சாவடிக் காவல் அதிகாரிகள், காடுகளைப் பார்வையிடும் காட்டிலாக்கா அதிகாரிகள், ரேஞ்சர் இவர்கள்தாம் பங்குதாரர்கள். மாதக் கடைசியில் எப்போதாவது காட்டிலாக்கா அதிகாரியும் ரேஞ்சரும் சோதனைச் சாவடியில் வேலை ஒழுங்காக நடைபெறுகிறதா என்று பரிசோதனை செய்ய வருவார்கள். சம்பந்தப்பட்ட தொகை அவர்களின் கையை அடைந்து விட்டால், சோதனையாவது மண்ணாவது!
பரிசோதனை முடிந்துவிட்டால் சாலையின் குறுக்கே போடப்பட்டிருக்கும் மரத் தடியை நீக்குவார் கேசவன். அடுத்த நிமிஷம் லாரி முனகிக்கொண்டு கீழ்நோக்கிச் செல்லத் தொடங்கும். வளைந்து வளைந்து செல்லும் சாலையில், ‘ங்... ங்...’ என்று இரைச்சலிட்டுக்கொண்டு செல்லும் லாரி நாலு திசைகளிலும் பரவியிருக்கும் பனிப்படலத்தினூடே மறைந்து போவதைப் பார்க்கும்போது கேசவனது மனத்தின் அடித்தளத்தில் ஒருவித அச்சம் இழைவிடத் தொடங்கும்.
இரவு முழுவதும் கொஞ்சமேனும் உறக்கம் வர வேண்டுமே! லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சோதனைச் சாவடியின் ஓரமாக நிற்கின்றன. பரிசோதனை செய்யாமல் ஒரு லாரியையும் விட முடியாது. ஏற்றப்பட்டிருக்கும் மரக்கட்டைகளின் எண்ணிக்கை தவறுவதையோ, டப்பாவில் விழும் நாணயம் குறைவதையோ கொஞ்சமும் அனுமதிக்க மாட்டார் கேசவன்.
காவல் அதிகாரிகள், பொதுவாக இரவு நேரங்களில் சற்றேனும் கண்ணயர மாட்டார்கள். என்னதான் உடலில் அசதி இருந்தாலும் கண்ணைத் திறந்து கொண்டிருப்பார்கள். நீலகண்டபிள்ளை வந்தபிறகுதான் இந்த நிலையிலும் ஒரு மாற்றம் உண்டாயிற்று. இரவு, தன் பார்வையை உலகின்மீது விரிக்க ஆரம்பித்து விட்டாலே, காலை நீட்டத் தொடங்கிவிடுவார் நீலகண்டபிள்ளை. அவருடைய தகரப்பெட்டியிலே கார்க் போட்டு மூடிய பச்சை வண்ணப் புட்டியில் எப்போதும் பட்டைச் சாராயம் இருக்கும். மாலை நேரம் வந்து விட்டால் இரண்டு மடக்காவது சாராயம் தொண்டைக்குள் இறங்கி ஆக வேண்டும். அது முடிந்துவிட்டால் நீலகண்ட பிள்ளைக்கு உறக்கம் ஓடி வந்து அவரை இருகரம் நீட்டி அணைத்துக் கொள்ளும். சாராயம் தீர்ந்து விட்டால் அடுத்த நிமிஷமே அண்டையிலுள்ள ஊர்வரையில் போய், மீண்டும் புட்டியை நிரப்பி வைத்த பிறகுதான் மறுவேலை பார்ப்பார்!
நீலகண்ட பிள்ளையின் நித்திரையை ஒருபோதும் கேசவன் தடுத்ததில்லை. பாவம், அவர் உறங்கட்டுமே. ஒவ்வொரு மாத இறுதியிலும் பணம் பங்கு வைக்கும்போது நீலகண்ட பிள்ளை அதற்காகவெல்லாம் கவலைப்பட மாட்டார்.
பொழுது புலரும் நேரத்தில் கேசவனின் கண்கள் மெல்லச் செருக ஆரம்பிக்கும். கண்ணைச் சுற்றியுள்ள தசைப்பகுதிகள், இரவு முழுவதும் தூக்கமில்லாததால் சற்று வீங்கிப்போய் காணப்படும். அப்போது சில நேரங்களில் அயர்வு அதிகமானால், கொஞ்சங்கூட எழாமல் பகல் நேரம் முழுவதும் அடித்துப் போட்ட பிணம் மாதிரி உறங்குவார் கேசவன். சோதனைச் சாவடியைப் பொறுத்தவரை பகல், இரவு இரண்டுமே ஒன்றுதான். அதற்குமேல் விசேஷமாகச் சொல்ல அங்கே என்ன இருக்கிறது?
எப்படியோ, வருஷங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிக் கடந்து கொண்டிருக்கின்றன. இதோ, இந்தப் பகலும் போய் இரவின் ஆதிக்கத்தில் அடங்கிக் கிடக்கிறது உலகம்.
கேசவன் தன் உடலை மூடியிருக்கும் கம்பளியை மேலும் சற்று நன்றாக இழுத்து விட்டுக்கொண்டார். அவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போய்விட்டது போல் தோன்றியது. பனிப்படலத்தினூடே சாவடியில் கட்டியிருக்கும் அரிக்கன் விளக்கின் ஒளி மங்கலாகத் தெரிந்தது.
நேரம் இப்போது என்ன இருக்கும்? முண்டக்கயத்திலிருந்து புறப்படும் கடைசி பஸ் போய் எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?
தன் கால்களை நாற்காலியின் மேல் முடக்கி அமர்ந்த கேசவன், பீடி ஒன்றை எடுத்து இழுக்க ஆரம்பித்தார்.
இதுதான் அவருடைய உத்தியோக வாழ்க்கையின் கடைசி இரவு. இதுவரை பார்த்து வந்த வேலையினின்று நாளை முதல் ஓய்வு பெற்றுக் கொள்ளப் போகிறார். அடுத்த மாதத்திலிருந்து பென்ஷன் தொகை வர ஆரம்பிக்கும். அதன்பின்... அதன்பின்? இனம் புரியாத ஒரே சூனியம்! உறக்கமில்லாமல் இருக்கும் சுகம்... ஊஹும்.
இந்த இரவில் கழியும் ஒவ்வொரு மணித் துளியும் அவரைப் பொறுத்தவரை விலை மதிக்க முடியாதது. வாழ்க்கையின் மிகப் பெரிய பகுதியைச் செலவிட்டார், அந்த இடத்தில் அவர். இனி அங்கே இருக்கப் போவதோ ஒரு சில மணிகள்தாம். நாளை முதல் இந்தப் பனிப் போர்வை, காட்டாறு, மரக்கட்டைகள் எல்லாமே அவரைப் பொறுத்த வரை நினைவுச் சின்னங்கள்தாம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook