காய்கறிக்காரி நாராயணி - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8246
ஒரு பாத்திரத்தில் சாதமும், கூட்டும், குழம்பும் கொடுக்கப் பட்டது. நாராயணி அதை கூடையில் வைத்துக்கொண்டு கிழக்குப் பக்கம் இருக்கும் வீட்டை நோக்கி நடந்தாள். அங்கு போனதும் சமையலறைத் திண்ணையில் தன்னுடைய கூடையை இறக்கி வைத்தாள். அந்த வீட்டு அம்மா நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். நாராயணி வாசற்படியில் உட்கார்ந்தாள். கூடையின் மேற்பகுதியில் இருந்த பாத்திரத்தைப் பார்த்த செக்ரட்டரியின் மனைவி கேட்டாள்:
“இது என்ன நாராயணி?”
“சாதம் சின்னம்மா, பிள்ளைங்களுக்கு கொடுக்குறதுக்காக எடுத்துட்டுப் போறேன். வக்கீல் எஜமானோட பொண்டாட்டி ஒவ்வொரு நாளும் இப்படி ஏதாவது தருவாங்க. நான் பிள்ளைங்களுக்கு கொண்டு போயி கொடுப்பேன். இளகிய மனசு உள்ள சின்னம்மா அவங்க...” கூடையில் இலையில் கட்டி வைத்திருந்த ஒரு பிச்சிப்பூ மாலையை எடுத்து செக்ரட்டரியின் மனைவியின் கையில் தந்துவிட்டு நாராயணி சொன்னாள்:
“சின்னம்மா, இந்த மாலையை இப்பவே தலையில வச்சிக்கோங்க. காலையில உங்க தலைமுடியைப் பார்த்தப்பவே நான் நினைச்சேன்- பிச்சிப்பூ மாலை வாங்கிக்கொண்டு வரணும்னு. இவ்வளவு அழகான தலைமுடியை நான் வேற எங்கேயும் பார்த்தே இல்ல, சின்னம்மா. ஒவ்வொரு நாளும் பிச்சிப்பூ வச்சாத்தான் அந்த முடியோட அழகு முழுசா ஆகும்.”
“நான் முன்னாடி இருந்த வீட்டுல ஒவ்வொரு நாளும் ஒரு பையன் பிச்சிப் பூவும் முல்லைப்பூவும் கொண்டு வந்து தருவான்.”
“இனிமேல் ஒவ்வொரு நாளும் நான் கொண்டு வந்து தர்றேன் சின்னம்மா.”
“அந்த வீட்டுல அவளுக்கு தலையில் முடி நிறைய இருக்கா?”
“ச்சே... பூனை முடியைப் போல அஞ்சாறு முடி இருக்கு. அதைக் கட்டியிருக்கிறதைப் பார்த்தா, சீரகத்தை முடிஞ்சு வச்சிருக்கிற மாதிரி இருக்கும்.”
“ஒவ்வொரு நாளும் தவறாம பிச்சிப்பூ கொண்டு வரணும் நாராயணி...”
“கட்டாயம் கொண்டு வர்றேன் சின்னம்மா. உங்களுக்கு என்ன வேணும்னாலும் இந்த நாராயணிக்கிட்ட சொல்லிட்டா போதும். ஆனா, பிச்சிப்பூ வாங்கணும்னா கொஞ்ச தூரம் என் நாத்தனார் வீடு வரை போகணும். சின்னம்மா. அங்கே போறதுன்னா கிழிஞ்சுபோன துணியைப் போட்டுக்கிட்டு போனா நல்லாவா இருக்கும்? நான் பெரிய அளவுல வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்- பெரிய பெரிய உத்தியோகத்துல இருக்குறவங்களோட வீட்டு அம்மாக்களோடதான் எனக்கு பழக்கம்னு அங்கே முழுவதும் பேச்சு. அப்படி இருக்குறப்போ இந்த கிழிஞ்சு போன துணியை அணிஞ்சிக்கிட்டு நான் எப்படி போவேன்?”
அவ்வளவுதான்- அடுத்த நிமிடம் சின்னம்மா எழுந்து உள்ளே போனாள். ஒரு புடவையையும் ப்ளவ்ஸையும் எடுத்துக்கொண்டு வந்து நாராயணியிடம் தந்தாள்.
“இப்போ இதைக் கொண்டு போ. நாராயணி. சலவைக்குப் போட்ட துணிகளைக் கொண்டு வர்றப்போ உனக்கு வேற ஒரு புடவையும் ப்ளவ்ஸும் தர்றேன்.”
“எனக்கு எதுவுமே இல்லைன்னாலும் நான் அதைப் பெரிசாகவே எடுக்க மாட்டேன். பிள்ளைங்களோட அப்பா போடுறதுக்கு துணியில்லாம நடக்குறதைப் பார்த்தாத்தான்...”
சின்னம்மா மீண்டும் உள்ளே போய் ஒரு சலவை செய்த வேஷ்டியை எடுத்துக்கொண்டு வந்தாள்.
“இது என் கணவரோட வேஷ்டி. ரெண்டு தடவையோ மூணு தடவையோதான் சலவைக்கே போயிட்டு வந்திருக்கு. இதைக் கொண்டு போயி பிள்ளைங்களோட அப்பாவுக்குக் கொடு நாராயணி.”
நாராயணி காய்கறிகளை எடுத்துப் பரப்பினாள். சின்னம்மா கேட்டாள்:
“இது ஒவ்வொண்ணோட விலை எவ்வளவு?”
“விலையை எல்லாம் பிறகு பார்த்துக்கலாம் சின்னம்மா. இதை முதல்ல கொண்டு போய் உள்ளே வைக்கச் சொல்லுங்க.”
“இதை உள்ளே எடுத்து வைடி...” சின்னம்மா வேலைக்காரிக்குக் கட்டளையிட்டாள்.
வேலைக்காரி முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு வந்தாள். அவள் முகத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு காய்கறிகளை உள்ளே எடுத்துக்கொண்டு போனாள்.
“நாராயணிக்கு சாதம் கொடுடி...” சின்னம்மா கட்டளை பிறப்பித்தாள்.
“நான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடுறேன் சின்னம்மா. பிள்ளைங்களோட அப்பாவுக்கும் இன்னைக்கு கொஞ்சம் சாதம் கொடுத்தது மாதிரி இருக்கும்...”
வேலைக்காரி முணுமுணுத்துக் கொண்டே சமையலறைக்குள் போனாள். அவள் முணுமுணுத்ததை யாரும் கேட்கவில்லை. ஒரு பாத்திரத்தில் சாதம், குழம்பு, கூட்டு எல்லாவற்றையும் கொண்டு வந்து அவள் நாராயணியிடம் தந்தாள். அவள் அதை கூடையில் வைத்துக்கொண்டு கிளம்பினாள்.
அடுத்த நாள் காலையில் நாராயணி வேகமாக அசிஸ்டெண்ட் செக்ரட்டரியின் வீட்டுக்குச் சென்றாள். வாழையிலையில் கட்டிய பிச்சிப் பூவையும், கொஞ்சும் கீரையையும் எடுத்து சமையலறை திண்ணையில் வைத்து விட்டு வருத்தமான குரலில் அவள் சொன்னாள்:
“இனிமேல் இங்கே வரமுடியுமோ என்னமோ?”
“ஏன் நாராயணி அப்படிச் சொல்ற? வேற எங்கேயாவது போறியா என்ன?”
“ஒண்ணு அவ... இல்லாட்டி நான்... ரெண்டு பேர்ல ஒருத்தி சாகுறது நிச்சயம் சின்னம்மா.”
“அவள்னு யாரைச் சொல்ற? எதற்கு சாகணும்?”
“சின்னம்மா, நான் சொல்றதைக் கேளுங்க. பிள்ளைங்களோட அப்பா க்ஷயரோகம் பாதிச்சு ஆஸ்பத்திரியில கிடக்குறப்போ பங்கஜாக்ஷிக்கிட்ட நான் பத்து ரூபாய் கடன் வாங்கினேன்.”
“எந்த பங்கஜாக்ஷி?”
“என் வீட்டுக்கு தெற்குப் பக்கத்துல இருக்குறவ அவ. என்னைப் போல அவளும் ஒரு வியாபாரிதான். ஆனா, அவளோட புருஷன் திருடப் போவான். என் புருஷன் திருடப் போறது இல்ல. அவகிட்ட நான் கடன் வாங்கி ஒரு மாசமாச்சு. அவ இப்போ வந்து என் வீட்டு திண்ணையில உட்கார்ந்துக்கிட்டு இருக்கா. ரூபாயை உடனே தரலைன்னா தூக்குல தொங்கிடுவேன்றா. அவ புருஷன் வாசல்ல வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கான். அவ செத்துப் போயிட்டா என்னைக் கொன்னுடுவேன்றான் அவன். ரூபா என் கையில இருந்தா நான் கொடுக்காம இருப்பேனா சின்னம்மா? தண்ணி இல்லாத இடத்துல முங்குன்னா எப்படி! சின்னம்மாகிட்ட கடன் வாங்கி கொடுடின்னு பிள்ளைங்களோட அப்பா சொன்னாரு. நான் யார்கிட்ட கேட்குறது சின்னம்மா?”
என்னென்னவோ சொல்லி பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு போனாள் நாராயணி. வேலைக்காரி சொன்னாள்:
“அவ சரியான திருடி, சின்னம்மா...”