காய்கறிக்காரி நாராயணி - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8246
“என்ன?”
“அவளோட புருஷன் ராத்திரி நேரத்துல திருடிட்டு வர்ற தேங்காய்கள்தான் அது. கிடைக்கிற விலைக்கு அதைத் தர வேண்டியதுதானே!”
“அவ புருஷன் திருடனா?”
“திருடினதுக்காக ஒரு வருடம் சிறைக்குப் போயிட்டு வந்தவன் அவன். பிறகு கள்ளச்சாராய கேஸ்லயும் சிறைக்குப் போயிட்டு வந்திருக்கான். குறைவான விலைக்குக் கிடைக்குதுல்ல? சின்னம்மா, தாராளமா வாங்குங்க. ஆனா, சில நேரங்கள்ல போலீஸ்காரங்க பின்னாடி வந்தாலும் வருவாங்க.”
அதற்குப் பிறகு எஞ்சினியரின் மனைவி பங்கஜாக்ஷியிடம் தேங்காய் வாங்கவேயில்லை. பங்கஜாக்ஷியின் கணவன் கள்ளச்சாராய வழக்கில் சிறைக்குப் போய் விட்டு வந்தவன் என்பது உண்மைதான். ஆனால், அவன் தேங்காய் திருடன் அல்ல. பங்கஜாக்ஷி விற்கும் தேங்காய் யாரும் திருடியதுமில்லை.
ஒருநாள் வக்கீலின் மனைவி ஜானகியிடம் ஒரு குலை பூவன்காயும், ஒரு குலை மலை வாழையும் வாங்கினாள். அதற்கான பணத்தையும் தந்தாள். வயிறு நிறைய கஞ்சியும் கொடுத்தாள். ஜானகி அந்த விஷயத்தை நாராயணியிடம் சொன்னாள்.
“நீ சொன்னியேடி நாராயணி? வக்கீல் எஜமானோட பொண்டாட்டி யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டாங்கன்னு?”
“நான் உண்மையைத்தான் சொன்னேன். அதுக்கு என்ன?”
“நான் இன்னைக்கு அவங்களுக்கு ரெண்டு குலை கொடுத்தேன். எனக்கு பணத்தையும் தந்தாங்க. வயிறு நிறைய கஞ்சியும் தந்தாங்க.”
“பணமும் தந்தாங்க. வயிறு நிறைய கஞ்சியும் தந்தாங்க. ஆனா, இனி குலையைக் கொண்டு அங்கே போனா உனக்குத் தெரியும்.”
“ஏன்? என்ன நடக்கும்?”
“என்ன நடக்கும்னு கேக்குறியா? யானைக்கு அரைப் பணம் பாக்குற சின்னம்மா அவங்க. கஞ்சி தந்து உன்னை மயக்கிட்டாங்க. இனிமேல் நீ விலை சொல்றதைக் கேட்டாங்கன்னா... நீ இனி குலையை எடுத்துட்டுப் போ. அப்போ தெரியும்.”
நாராயணி நேராக வக்கீலின் வீட்டுக்குச் சென்றாள். அவள் முகத்தை ஒரு மாதிரி தூக்கி வைத்துக்கொண்டு சொன்னாள்:
“சின்னம்மா, நான் இனிமேல் இங்கே வரமாட்டேன்.”
“ஏன் நாராயணி?”
“நாங்க ஏழைங்க, சின்னம்மா. அன்னன்னைக்கு வேலை செஞ்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்குறவங்க. ஒரு நேரம் பட்டினி கிடந்தா உங்கக்கிட்ட உண்மையைச் சொல்லுவேன். பட்டினி கிடக்கிறோம், படி அரிசிதாங்கன்னு. திருடி, ஏமாத்தி பிழைக்கிறவங்க இல்ல நாங்க....”
“நாராயணி, உன்னை திருடின்னு யார் சொன்னது?”
“யாரும் சொல்லை, சின்னம்மா. இனிமேல் அப்படி நீங்க சொல்லிடக் கூடாதேன்னு பாக்குறேன்.”
“சொல்ல வர்றதை தெளிவா சொல்லு, நாராயணி.”
“அவ இங்கே வந்தாளா, சின்னம்மா?”
“யாரு?”
“ஜானகி...”
“வாழைக்குலை கொண்டு வந்தவளா?”
“அவளேதான்... ஒரு மாதிரி கொழைஞ்சிருப்பாளே! அவதான்.”
“அவ இங்கே வந்தா. அவகிட்ட நான் ஒரு பூவன் குலையும் ஒரு மலை வாழைக் குலையும் வாங்கினேன். அதுக்கு என்ன?”
“அதுக்கு என்னவா? சின்னம்மா, ஒரு விஷயத்தை நீங்க கேக்குறீங்களா? வக்கீல் எஜமானோட வீட்டுக்கு நான்தான் காய்கறி கொடுக்க வேண்டியவ. இப்பவும் நான்தான் கொடுத்துக்கிட்டு இருக்கேன். இதற்கிடையில ஒரு நாளு ஜானகி என்கூட வந்தா, வாழைக்குலையை எடுத்துக்கிட்டு. நான் சின்னம்மாக்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறப்போ அவள் கொஞ்சிக்கிட்டே குழந்தைக் கிட்ட போயி நிக்கிறதைப் பார்த்தேன். குழந்தை யார்னு கேக்குறீங் களா? வக்கீல் எஜமானோட மூத்த மகளோட குழந்தை...”
“பிறகு?”
“பிறகு என்ன நடந்துச்சுன்றீங்க? நான் சாயங்காலம் வீட்டுக்குப் போய் பாத்திரம் தேய்ச்சு, அடுப்பு பத்த வச்சு, சீனிக் கிழங்கை அறுத்துக்கிட்டு இருந்தேன். பிள்ளைங்களோட அப்பா எங்கேயோ வெளியே போயிருந்தாரு. அப்போ போலீஸ்காரன் ஏறி வீட்டுக்குள்ளே வர்றான். உடனே என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னான். போகாம இருக்க முடியுமா சின்னம்மா?”
“எதுக்கு உன்னை அழைச்சிட்டுப் போனாங்க?”
“சின்னம்மா கேளுங்க... நான் போனப்போ வக்கீல் எஜமானோட சமையல்காரியும் வேலைக்காரனும் அங்கே நின்னுக்கிட்டு இருந்தாங்க. ஜானகியும் அங்கே இருக்கா. விஷயம் என்ன தெரியுமா? குழந்தையோட இடுப்புல இருந்த தங்கக் கொடியைக் காணோம். எங்க எல்லாரையும் அங்கே நிக்க வச்சுட்டு, போலீஸ்காரங்க ஜானகியை மட்டும் கொஞ்சம் தள்ளி அழைச்சிட்டுப் போனாங்க. ஒரு அலறல் சத்தம் கேட்டது. கொஞ்சம் நேரம் போனதும், போலீஸ்காரங்க தங்க இடுப்புக் கொடியைக் கொண்டு வந்தாங்க. அவங்களுக்குப் பின்னாடி ஜானகி வர்றா.”
“அவளா அதை எடுத்தா?”
“பிறகு யார்ன்றீங்க?”
“எடுத்து எங்கே வச்சிருந்தா?”
“அதை எப்படி சொல்லுவேன். சின்னம்மா? சொல்ல முடியாத இடத்துல வச்சிருந்தா.”
நடந்த சம்பவம் என்னவோ உண்மைதான். ஆனால், இடுப்புக் கொடியை எடுத்தவள் ஜானகி அல்ல. நாராயணி சொன்னாள்:
“இங்கேயிருந்து அவ எதையாவது திருடிட்டுப் போனாலும் போவா. நீங்க தேவையில்லாம என்மேலே சந்தேகப்படலாம். போலீஸ்காரங்க கூப்பிட்டா, நானும்தானே போகணும்? அதனாலதான் சொல்லுறேன், நான் இனிமேல் இங்கே வரலைன்னு...”
அதற்குப் பிறகு ஜானகியை அந்த வீட்டில் ஏற விட்டால்தானே!
இதற்கிடையில் வக்கீலின் வீட்டுக்குக் கிழக்குப் பக்கம் இருந்த வீட்டுக்கு புதிதாக ஒரு குடும்பம் வந்தது. ஒரு அசிஸ்டென்ட் செக்ரட்டரியும் அவரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் அந்த வீட்டில் குடியிருக்க வந்தார்கள். சமையல்காரியும் இருந்தாள். செக்ரட்டரியின் மனைவி இரண்டு குழந்தைகளைப் பெற்றிருந்தா லும், பார்க்க மிகவும் அழகாகவே இருந்தாள். வந்த நிமிடத்திலேயே ஜன்னல் அருகில் போய் நின்று வக்கீல் வீட்டை ஒரு பார்வை பார்த்தாள். வாசலில் ஒரு கொடியைக் கட்டி அதில் சில பட்டுப் புடவைகளையும் ப்ளவ்ஸ்களையும் எடுத்து விரித்துப் போட்டு விட்டு, ஜன்னலருகில் சென்று நின்று பார்த்தாள். தான் செய்வதை வக்கீல் வீட்டிலிருக்கும் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தாள். உடல் முழுக்க நகைகளை அணிந்த வண்ணம் வாசலில் இங்குமங்குமாய் நடந்தவாறு தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தாள்.
அதைப் பார்த்த வக்கீலின் மனைவி தன்னிடமிருந்த நகைகள் அனைத்தையும் எடுத்து அணிந்தாள். சில புடவைகளையும் ப்ளவ்ஸ்களையும் எடுத்து வாசலிலிருந்த கொடியில் கொண்டு போய் போட்டாள். பிறகு சமையலறைக்குள் சென்று மறைந்து நின்று பார்த்தாள்- புதிதாக வந்திருப்பவர்கள் தன்னைப் பார்க்கிறார்களா என்று. செக்ரட்டரியின் மனைவி வானொலியை "ஆன்” செய்தாள். வக்கீலின் மனைவியும் வானொலியை "ஆன்” செய்தாள்.
இப்படி இரண்டு வீட்டைச் சேர்ந்த பெண்களுக்கிடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாராயணி வக்கீலின் வீட்டைத் தேடி வந்தாள். வக்கீலின் மனைவி அவளைப் பார்த்து கேட்டாள்.
“அதைப் பார்த்தியா, நாராயணி?”
“என்ன, சின்னம்மா?”