ஒரு சிறிய குறும்புத்தனம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4517
'நாம் வீட்டிற்குச் செல்வோம்' - நான் சொன்னேன்.
'எனக்கு.... எனக்கு இந்த சறுக்கல் வண்டியில் வேகமாக பயணித்தது பிடித்திருந்தது. நாம் இன்னொரு முறை போகலாமா?' - அவள் கேட்டாள்.
சறுக்கல் வண்டியில் வேகமாக பயணிப்பது 'பிடித்திருந்தது' என்றாலும், வண்டியில் ஏறும்போது, அவள் முழுமையாக வெளிறிப் போய் காணப்பட்டாள். நடுங்கிக் கொண்டிருந்தாள். முன்பைப் போல மூச்சு விடுவதற்கு அவள் சிரமப்பட்டாள்.
மூன்றாவது தடவையாக நாங்கள் கீழ் நோக்கி ஊர்ந்து இறங்கினோம். உதடுகளின் அசைவை கூர்ந்து கவனித்தவாறு அவள் என்னையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதை நான் தெரிந்து கொண்டேன். பாதி வழி சென்று கொண்டிருந்தபோது, துவாலையால் முகத்தை மூடி இருமியவாறு நான் கூறினேன்: 'நாதெங்கா, எனக்கு உன்னை எந்த அளவிற்கு பிடித்திருக்கிறது, தெரியுமா?'
அந்த வகையில் அவளுடைய சந்தேகம் தீர்க்கப்படாமல் கிடந்தது. நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து அவளுடைய வீட்டை நோக்கி திரும்பியபோது, அவள் மிகவும் மெதுவாக நடப்பதில் கவனமாக இருந்தாள். நான் அந்த வார்த்தைகளை மிகவும் உரத்த குரலில் அவளிடம் கூறுவதை எதிர்பார்த்திருப்பதைப் போல..... அவளுடைய பொறுமையின் ஆழத்தை என்னால் பார்க்க முடிந்தது. 'ஏய்.... அதை காற்று கூறியதாக இருக்க முடியாது. அப்படி இருக்கக் கூடாது' என்று சத்தம் போட்டு கூறாமல் இருக்க அவள் படாதபாடு பட்டாள்.
மறுநாள் பொழுது புலரும் வேளையில் எனக்கொரு அறிவிப்பு கிடைத்தது: 'இன்று நீ மலைக்குச் செல்வதாக இருந்தால், என்னையும் அழைக்கணும்.'
அன்று முதல் எல்லா நாட்களிலும் நாங்கள் மலைச் சரிவிற்குச் சென்றோம். கீழ் நோக்கி ஒவ்வொரு முறை இறங்கும்போதும், நான் மெதுவான குரலில் கூறுவேன்: 'நாதெங்கா, உன்னை எனக்கு எந்த அளவிற்கு பிடித்திருக்கிறது, தெரியுமா?'
மதுவிற்கோ, மார்ஃபீனுக்கோ என்பதைப் போல அந்தச் சிறிய வார்த்தைக்கு அவள் உடனடியாக அடிமைப்பட்டாள். அது இல்லாமல் அவளால் வாழ முடியாது என்ற நிலை உண்டானது.
மலைச் சரிவில் கண்களை விழித்துக் கொண்டு இறங்குவது என்பது அவளுக்கு இப்போதும் பயமான ஒரு விஷயம்தான். அந்த பயம் காற்றில் உயர்ந்து ஒலிக்கும் அந்த காதல் நிறைந்த வார்த்தைக்கு பலம் சேர்த்தது. காற்றா, நானா... அவளிடம் 'பிடித்திருக்கிறது' என்று முணுமுணுப்பது யார் என்று அவளுக்கு தெரியவில்லை. அது யார் என்பது இப்போது அவளுக்கு ஒரு பிரச்னையாக இல்லாமற் போனது. 'பருகும் மது, போதை தருவதாக இருக்கும் பட்சம், அது இருக்கும் குவளை எப்படி இருந்தால் என்ன?'
ஒரு சாயங்கால வேளையில் நான் தனியாக அந்த மலைச் சரிவில் போய்க் கொண்டிருந்தபோது, ஆட்களின் கூட்டத்திற்கிடையில் நாதெங்கா வந்து கொண்டிருந்தாள். நான் எங்கே பார்த்து விடப் போகிறேனோ என்று சுற்றிலும் பார்த்தவாறு, தயங்கித் தயங்கி அவள் படிகளில் ஏறிக் கொண்டிருந்தாள். தனியாக சறுக்கி இறங்குவது என்பது எவ்வளவு பயம் கலந்த விஷயமாக இருக்கும்! பயங்கரம்! பனியைப் போல வெளிறிப் போய், நடுங்கிக் கொண்டே அவள் ஓரத்தில் நடந்தாள். ஏதோ தீர்மானித்ததைப் போல, ஒருமுறை கூட திரும்பிப் பார்க்காமல்... நான் இல்லாமல் தனியாக கீழ் நோக்கி இறங்கும்போது, அந்த இனிமையான வார்த்தை கேட்குமா என்பதைச் சோதித்துப் பார்க்கக் கூடிய முயற்சியாக அது இருந்தது. அவளுக்கே தெரியாமல் நான் பார்த்துக் கொண்டு நின்றிருக்க, பயத்தால் வெளிறிப் போய் காணப்பட்டாள். வாயைத் திறந்து வைத்தவாறு, அவள் ஒரு சறுக்கல் வண்டியில் ஏறினாள்... கண்களை மூடி, இந்த உலக வாழ்விலிருந்து விடை பெற்றுக் பெற்றுக் கொள்ளும் தீவிர எண்ணத்துடன் மலையின் கீழ்ப் பகுதியை நோக்கி வேகமான பாய்ச்சல்.... அவள் அந்த வார்த்தைகளைக் கேட்டாளா என்று எனக்கு தெரியாது. தளர்ந்து, செயலற்ற நிலையில் அவள் சறுக்கல் வண்டியிலிருந்து இறங்குவதை மட்டுமே நான் பார்த்தேன். ஏதாவது காதில் விழுந்ததா என்று அவளுக்கே நிச்சயமில்லை என்ற விஷயத்தை அந்த முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். தனியாக மேற் கொண்ட சாகசச் செயலுக்கு மத்தியில், பயத்தின் காரணமாக ஓசைகளை அடையாளம் கண்டு பிடிக்கக் கூடிய ஆற்றல் அவளுக்கு இல்லாமற் போயிருக்கும்.
அந்த வகையில் மார்ச் மாதம் வந்தது. வசந்தமும்.... எங்களுடைய மலைச் சரிவில் இருண்ட நிறம் விழ ஆரம்பித்தது. பனி உருகி, அதன் பிரகாசம் இல்லாமற் போனது. எங்களுடைய சாகசப் பயணங்களும் நின்றது. இனிமை நிறைந்த அந்த வார்த்தைகளை இனிமேல் நாதெங்காவால் கேட்க முடியாது. காற்று நின்றது. நான் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்குச் செல்ல போகிறேன் - நீண்ட காலத்திற்கு... ஒருவேளை... என்றென்றைக்குமாக.
பயணம் ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பொழுது மங்கலான ஒரு சாயங்கால வேளையில் நாதெங்காவின் வாசலைத் தாண்டி இருந்த மிகவும் உயரமான முள் வேலியால் எல்லை உண்டாக்கப்பட்டிருந்த தோட்டத்தில் நான் அமர்ந்திருந்தேன். குளிர் முழுமையாக விலகிச் சென்றிருக்கவில்லை. இங்குமங்குமாக பனியும் காணப்பட்டது. ஆனால், முன்னால் வசந்தத்தின் நறுமணம் இருந்தது. இரவில் தூங்குவதற்காக கூடுகளைத் தேடி வரும் பறவைகள் உரத்த குரலில் கத்தின. நாதெங்கா வாசலுக்கு வந்தாள். கவலையும் எதிர்பார்ப்பால் உண்டான ஏமாற்றமும் நிறைந்த கண்களை உயர்த்தி வானத்தைப் பார்த்தாள். கவலை நிறைந்த முகத்தில் வேகமாக வீசிய வசந்தக் காற்று, அவளுக்குள் இரைச்சலுடன் வீசிய காற்றையும், காதுகளில் பதிந்த வார்த்தைகளையும் நினைவுபடுத்தின. அவளுடைய முகத்தில் இருந்த கவலை மேலும் அதிகமானது. கன்னத்தில் ஒரு துளி கண்ணீர் உருண்டு இறங்கியது. பாவம்! 'இன்னொரு முறை என்னிடம் அவ்வாறு கூறு' என்று கெஞ்சுவதைப் போல அவள் காற்றிற்கு நேராக இரண்டு கைகளையும் நீட்டினாள். காற்று வீசிக் கொண்டிருக்க, நான் சொன்னேன்: 'நாதெங்கா, எனக்கு உன்னை எந்த அளவிற்கு பிடித்திருக்கிறது, தெரியுமா?'
என் கடவுளே! அவளை அப்போது பார்த்திருக்க வேண்டும். அவள் அழுது விட்டாள். சந்தோஷத்தால் பிரகாசமான அந்த முகம் மேலும் சிவந்தது.
நான் வீட்டிற்குள் நுழைந்து பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். எவ்வளவோ நாட்களுக்கு முன்பு நடைபெற்றது அது. இப்போது நாதெங்கா திருமணமானவள். ட்ரஸ்ட்டீஸ் போர்டு செயலாளருக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்தார்கள். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் - அவள் தன்னுடைய விருப்பப்படி அந்த மனிதரை திருமணம் செய்து கொண்டாள். இரண்டில் எது நடந்திருந்தாலும், பெரிய வேறுபாடில்லை - மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பனியில் சறுக்கி நடக்கச் சென்றதையும், 'உன் மீது எனக்கு எவ்வளவோ விருப்பம்!' என்று காற்று முணுமுணுத்ததையும் அவள் இப்போதும் மறக்கவில்லை. அவளுக்கு மிகவும் இனிமையான, விலை மதிப்புள்ள நினைவு அது.
எனக்கும் வயதாகி விட்டது. அதே நேரத்தில் - அன்றைய அந்த குறும்புத்தனம் எதற்காக என்று எனக்கு இப்போதும் தெரியவில்லை.