ஓநாய் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4613
'ஓ.... சாரா? எப்போ வந்தீங்க?'
'இன்னைக்கு. நலம்தானே?'
'நலம்! அந்நிய நாட்டில் வாழும் நீங்கள்லாம் கொடுத்து வைத்தவர்கள்!'
கேட்க வேண்டிய என்னிடம் எதிர்த்துக் கூறுவதற்கு இருந்தது. இரண்டாயிரம் கிலோ மைல்கள் தூரத்திலிருந்து வருவது அதற்காக அல்ல.
'திருசூரில்தான் அதிகம். ஒவ்வொரு நாளும் பத்து, பதினைந்து பேர் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.'
'ஒரு வாந்தியும் பேதியும். முடிஞ்சது...!'
'இரண்டு நாட்களில் மக்கள் அனைவரும் ஊசி போடப் போறாங்க.'
'ஊசி போட்டால் காலரா வராதா? கலிகாலம். வர வேண்டியது வரும். எதைக் கொண்டும் தடுக்க முடியாது.'
'எவற்றையெல்லாம் பார்க்க வேண்டியதும், கேட்க வேண்டியதும் இருக்குமோ! தெரியவில்லை.... குருவாயூரப்பா!'
நகரம் வரை நடந்தான். நகரத்திற்கும் மாறுதல் இருந்தது. முகம் வாடியிருந்தது. தலையில் நாகத்தின் படத்துடன் நடந்து திரிந்து கொண்டிருந்த சேவல்களின் கண்களிலும் தளர்ச்சி காணப்பட்டது. வறுமை. பவுலோஸின் காபி கடைக்குள் நுழைந்தான். தெருவைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தான் எப்போதும் இருப்பதைப் போல. எத்தனையெத்தனை மாலை வேளைகளை நான் இங்கே அமர்ந்து கொன்றிருக்கிறேன்! எத்தனையெத்தனை சிகரெட்டுகளை நான் இங்கே அமர்ந்து சாம்பலாக ஆக்கியிருக்கிறேன்! கண்ணாடி அலமாரியில் பலகாரங்கள் எதுவுமில்லை. உலர்ந்து போன ஐந்தாறு வறுத்த காய் மட்டும்!
'சார்... எப்போ வந்தீங்க?'
'இன்னைக்கு.'
'வியாபாரம் ரொம்பவும் மோசம் சார். இந்தக் காலத்துல வியாபாரம் பண்ணி பிழைக்கவே முடியாது.'
பிழைக்க முடியாது என்று யார் சொன்னது? பிழைக்க வழி மட்டுமே இருக்கிறது. மூலதனம் மட்டுமல்ல. ஒரு 'ரிஸ்க்'கிற்குத் தயாராக்கிக் கொண்டு இருக்க வேண்டும். அர்ப்பணிப்பும் வேண்டும். இந்த விஷயம் இனியும் உங்களுக்குத் தெரியாதா?
பவுலோஸின் கடையை விட்டு வெளியே வந்தபோது, வானத்தில் மின்னல். இடி. குளிர்ந்த காற்று. நல்லது! மழை பெய்யட்டும். அதுவும் இனி தேவைதான்.
வழியில் குட்டப்பனைப் பார்த்தான். வாசலில் நின்றிருந்தான். ஓடி வந்தான். பழைய நன்றி. தலை முழுவதும் நரைத்திருந்தது. நெற்றியில் வெற்றிலை நாக்கை ஒட்டி வைத்திருக்கிறான். புகார்கள் ஆரம்பித்தன. வியாபாரம் மிகவும் மோசம். மா, பலா மரங்களுக்கு அடியில் மூலதனம் திரவ வடிவத்தில் புட்டிகளில் கிடக்கிறது. யாரும் வரவில்லை. திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. பட்டினி கிடக்கும்போது எப்படி சாராயம் குடிக்க முடிகிறது குட்டப்பா?
குட்டப்பன் கண்களால் அழைக்கிறான். கெஞ்சுகிறான். வேண்டாம் குட்டப்பா. இப்போது வேண்டாம். கவர்ச்சிகளுக்கு நான் இரையாக மாட்டேன். திரும்பி நடந்தேன். குட்டப்பன் பரிதாபமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
அரிசிக்கு பஞ்சம் என்று கேள்விப்பட்டான். ஆனால், பணத்தைக் கொடுத்தவுடன், பத்து நிமிடங்களுக்குள் அரிசி வந்து சேர்ந்தது. பணியாள் குட்டி தலையில் வைத்துக் கொண்டு வந்தான். கோணியில் தும்பைப் பூவைப் போன்ற அரிசி.
நளினி அக்காவின் குழந்தைகள், தாஸ் அண்ணனின் குழந்தைகள் ஆகிய எல்லா குழந்தைகளுக்கும் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்தான். அவர்களுடைய தந்தைகளுக்கும், தாய்களுக்கும் வாங்கிக் கொடுத்தான். புடவை வேண்டியவர்களுக்கு புடவை. மேற் துண்டு வேண்டியவர்களுக்கு மேற் துண்டு. சட்டை வேண்டியவர்களுக்கு சட்டை. குழந்தைகளுக்கு பந்தும், கோலிகுண்டுகளும் வாங்கிக் கொடுத்தான். பெண் பிள்ளைகளுக்கு வளையல்களும் ரிப்பனும்.
எல்லோருக்கும் மிகவும் சந்தோஷம்.
சோறு சாப்பிட்டு உற்சாகமான குழந்தைகள் வாசலில் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பெண் பிள்ளைகளின் கண்களில் மை. கைகளில் வளையல்கள்.
சந்தோஷம் தோன்றுகிறது. பாக்கெட்டின் அடிப்பகுதி தெரிகிறது. கண்களை மூடிக் கொண்டு, அந்த உண்மையை நிராகரித்தான். நிராகரிக்க முயற்சித்தான். உங்களுடைய சந்தோஷம் என்னுடைய சந்தோஷமும்....
எல்லா நாட்களிலும் சாயங்கால வேளைகளில் குட்டப்பனைப் போய் பார்க்கிறான். அழுக்கு பெண் அழுக்கு பெண்ணாக ஆவாள். ஆக வேண்டும். குட்டப்பனின் குழந்தைகளும் நன்றாக உணவு சாப்பிடட்டும். அவர்களும் புதிய ஆடைகள் அணியட்டும். குட்டப்பா, நீயும் உன்னுடைய மனைவியும் உன்னுடைய குழந்தைகளும் சாப்பிடும் சோற்றில் என்னுடைய இரத்தமும் இருக்கிறது. பரவாயில்லை. ஆனால், நகரத்தில் கனாட் சர்க்கஸ். கொட்லா, முபாரக்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஏராளமான குட்டப்பன்கள் என்னுடைய இரத்தத்தைக் குடித்திருக்கிறார்கள். இனியும் குடிப்பார்கள். நீ ஒரு குட்டப்பன் மட்டுமல்ல - எத்தனையோ குட்டப்பன்மார்கள்....
மழை. இடி இடிக்கிறது. காற்றில் மரங்கள் வேர் பெயர்ந்து விழுகின்றன.
பாக்கெட்டின் அடிப் பகுதியைப் பார்த்து விட்டான். கடன் வாங்க ஆரம்பிக்கிறான். திரும்பிச் செல்லும்போது மாட்டு வண்டியில் ஏற வேண்டிய சூழ்நிலை உண்டாகுமோ? கேரவனில் மதிப்புடன் வந்தவன். தேற்றிக் கொள்ள முயற்சிக்கிறான். காசு ஒரு பிரச்னை இல்லை. பணம் வருகிறது. போகிறது. நிரந்தரமற்றது. தாள் துண்டு.... நிரந்தரமானது சந்தோஷம். தாள் துண்டு அல்லாதது. நான் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
ஓநாய்கள் ஊளையிடுகின்றன. இரவு பகல் வேறுபாடு இல்லாமல் சத்தமிட்டுக் கொண்டிருக்கும் ஓநாய்கள். சந்தோஷம் நீங்குகிறது. உற்சாகம் குறைகிறது. உறங்குவதற்கு இயலவில்லை. நடப்பதற்கு முடியவில்லை. சிரிக்க முடியவில்லை. ஓநாய்கள்.... ஓநாய்கள்.... குட்டப்பன் மட்டுமே ஆறுதலுக்கு இருக்கிறான். அவனுக்கு இப்போது பணம் தேவையில்லை. நகரத்திற்குச் சென்று அனுப்பினால் போதும். குட்டப்பன் தெய்வம். மழை, காற்று எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல் அவனைப் பார்ப்பதற்காக செல்கிறான். மழை நிற்காத நாளில் அங்கேயே படுத்து உறங்குகிறான்.
கண்ணாடியில் பார்க்கும்போது கன்னத்தின் எலும்புகள் வெளியே தெரிகின்றன. கண்களில் குழிகள். இனி என்ன செய்வது? செய்யாமல் இருப்பது? போதும்.... சந்தோஷமாக இருந்தது. போதும்... உண்ணாவிரதத்தை ஆரம்பி. தாடியை வளர்.... பாத்திரத்தைத் தயார் பண்ணு.
'பேக்' பண்ண ஆரம்பிக்கிறான். பேக் செய்வதற்கு எதுவுமில்லை. எல்லாம் குறைந்து போயிருக்கின்றன. எட்டு சட்டைகள் இருந்தது நான்காக ஆகியிருக்கிறது. செருப்பு இல்லை. தாஸ் அண்ணன் ஷீ அணியாதது அதிர்ஷ்டம். எல்லாம் போகட்டும். உங்களுடைய சந்தோஷமே என்னுடைய சந்தோஷமும். ரிஸர்வேஷன் இல்லை. மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய வேண்டும். பூரம் திருவிழா நடைபெறும் இடத்தைப் போல இருக்கும். பரவாயில்லை. இங்கேயிருந்து தப்பிக்க வேண்டும். முடிந்த அளவிற்கு சீக்கிரமாக...
இன்னும் விடுமுறை இருக்கிறது. முப்பத்தைந்து நாட்கள். கேன்சல் செய்யலாம். பாஸீக்கு சந்தோஷம் உண்டாகட்டும்.
நான் செல்கிறேன்.
கடுக்காய் தின்ன போகிறேன். கஞ்சா தீனியாக ஆகப் போகிறது. துறவியாக ஆகப் போகிறேன்.