ஓநாய் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4613
'இதோ... ஆதாரம். உனக்கு பித்தம்.'
அவன் ஒரு பெரிய கோமாளி. அவன் நார்மன் விஸ்டம் தொடங்கி நாகேஷ் வரை உள்ள அனைவரையும் கொண்டவன். அவன் காட்டக் கூடிய ஏராளமான தமாஷ்களில் ஒன்றாக அதை நினைத்தான். எனக்கு பித்தம் வராது. சயரோகம்தான் வரும். உஷ்ண நோயே வரும்.
பித்தம் வந்தால் சந்தோஷம் தோன்றுமா? சயரோகமும் உஷ்ண நோயும் வந்தால் தோன்றுமா? அப்படியென்றால், பித்தம் வரட்டும். சயரோகம் வரட்டும். உஷ்ண நோய் வரட்டும். இயலாது. ஓநாய்களின் சத்தத்தைக் கேட்க இயலாது. கடுக்காய் தின்றால், துறவியாக ஆகவும் முடியாது.
ஒருநாள் திடீரென்று தோன்றியது - கிராமத்திற்குப் போனால் என்ன? அங்கு போய் நான்கைந்து வருடங்களாகி விட்டன. விருப்பம் இல்லாமலில்லை. அதை விட பெரிய விருப்பங்கள் வேறு இருப்பதால்தான். குளு, சிம்லா ஆகிய இடங்களைச் சுற்றிச் சுற்றி வந்தான். வசந்த விழா நடத்தினான். மிருகத்தனமான ஆர்வம் இருந்தது. அதனால் இதுவரை ஊருக்குப் போக முடியவில்லை. இதோ... இப்போது போகலாம். போக வேண்டும். வேண்டாம் என்று வைத்திருக்கிறான். இந்த முறை வசந்த விழா சோர்வையும் வெறுப்பையும் எரிச்சலையும் தந்தது.
ஊருக்குச் செல்கிறான். உற்சாகத்தால் மூச்சு விட முடியவில்லை. இந்த வாசலை என்ன காரணத்தால் நீ இதுவரை பார்க்கவில்லை? சந்தோஷம் நிறைந்த வாசல் இது. உனக்கு முன்னால் திறந்து கிடந்தது. எனினும், நீ பார்க்கவில்லை. ஆச்சரியம்தான்.
ஊரைப் பற்றிய சிந்தனைகள் நிறைய தோன்றுகின்றன. தலையில், நறுமணம் நிறைந்த சிந்தனைகள். அழகான சிந்தனைகள். வேதனை தரும் சிந்தனைகள். வாசலில் அமர்ந்திருக்கிறான். தாய் பழைய கதைகளைக் கூறுகிறாள். பள்ளிக் கூடம் விட்டு பிள்ளைகள் தெருவின் வழியாக சிதறி நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். வெளுத்த சீருடை அணிந்த ஆண் பிள்ளைகள். நீலமும், வெள்ளையும் உள்ள சீருடை அணிந்த பெண் பிள்ளைகள். பவுலோஸின் காபிக் கடை, வீனஸ் திரையரங்கம். ப்ரண்ணன் கல்லூரி.... சிறகுகள் இருந்திருந்தால், நான் இப்போது பறந்திருப்பேன். நான் இந்த நகரத்தை வெறுக்கிறேன். வாட் 69, விலைமாது, கேடு கெட்ட மனிதர்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த நகரத்தை. நீ முட்டாள். நான்கைந்து வருடங்களாகியும், போகவில்லை. ஒரு தடவை கூட. மகா முட்டாள்....
பரபரப்பான அலுவலகத்திற்குச் சென்றான். ப்யூனை மணியடித்து அழைத்தான். பணத்தை எடுத்துக் கொடுத்தான். 'போய் டிக்கெட் புக் செய். உடனே... உடனே...' என்றான். அரை மணி நேரம் கடந்ததும், ப்யூன் திரும்பி வந்தான். டிக்கெட் இல்லை. டீலக்ஸும் ஜீடியும் சதர்ன் எக்ஸ்ப்ரஸ்ஸும்... அனைத்தும் ஃபுல். டிக்கெட் வேண்டுமென்றால், பதினைந்து நாட்கள் காத்திருக்க வேண்டும். அட்வான்ஸ் புக்கிங்....
இனி என்ன செய்வது? பதினைந்து நாட்கள் எப்படி காத்திருப்பது? சாத்தியமில்லை. இறந்து விடுவான். பதினைந்து நிமிடம் காத்திருக்க முடியாது.
மேஜைக்கு உள்ளிருந்து செக் புத்தகத்தைத் தேடி எடுத்தான். மேஜையின் மீது குறிப்பை எழுதி வைத்து விட்டு, வெளியேறினான். வாடகைக் காரில் ஏறி வங்கிக்குள் வேகமாக நுழைந்தான். வங்கியிலிருந்து அடியில் இருந்தது வரை தோண்டியெடுத்து விட்டு, திரும்பி வந்தான். இனி உனக்கும் எனக்குமிடையே எந்தவொரு உறவுமில்லை.
கேரவனில் இருக்கை முன்பதிவு செய்து கொண்டிருந்தார்கள். சென்னைக்கு 24 ரூபாய். பரவாயில்லை. பணம் எதற்காக? வாழ்வதற்குத்தானே! பணத்தின் விலை, மதிப்பு ஆகியவற்றைப் புரிந்து கொள்கிறான். ஆனால், ஒரு மிகச் சாதாரண சுகத்தைக் கூட அடிமைப்படுத்த நீ தயாராக இல்லை.
ஒரு புதிய சூட்கேஸை அவன் வாங்கினான். புடவையும் மேற் துண்டும், ரசகுல்லாவும் வாங்கினான். புடவை நளினி அக்காவிற்கு. மேற் துண்டு அம்மாவிற்கு. ரசகுல்லா பிள்ளைகளுக்கு. சாயங்காலம் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு, பேக்கிங் செய்ய ஆரம்பித்தான். அவனுடைய உதட்டில் முனகல் பாட்டு வந்தது. என் உதட்டில் முனகல் பாட்டா? அவன் ஆச்சரியப்பட்டான்.
அமைதியாக இருந்த மனதில் தாளம் நிறைந்த சலனங்கள். வெளிச்சம்... குளிர்ந்த காற்று....
இரண்டு மாதங்கள் விடுமுறை. திரும்பி வரும்போது வேறொரு மனிதனாக இருக்க வேண்டும். சந்தோஷங்கள் நிறைந்த, பலமும் உற்சாகமும் கொண்ட வேறொரு மனிதன்.... நல்லவன்.... கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாத, துறவியாக இல்லாத வேறு ஒருவன். ஆமாம்... உண்மையிலேயே. இப்போது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. நான் காண்பவை அனைத்தும் பல வர்ணங்களும், பிரகாசமான வெளிச்சமும் நிறைந்தவையே.
முற்றிலும் மரியாதையே இல்லாமல் உள்ளே நுழைந்து வந்தாள். கதவைத் தட்டாமல். திறந்து, திரும்பி நின்று கதவை அடைத்து தாழ்ப்பாளைப் போடும்போது கோபத்துடன் சொன்னாள்:
'ஒரு மணி நேரமாக காத்திருக்கிறேன்.'
'ஸாரி.... மன்னிக்கணும் குழந்தை....'
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் 'குழந்தை' என்று அழைக்கிறான். அன்பு தோன்றும்போது மட்டுமே 'குழந்தை' என்று அழைப்பான். அப்படி இல்லாத வேளைகளில் மிஸ். ரேணு மேனன், ரேணு, அன்னிஹோத்ரி, ரேணு குப்தா, ரேணு ஹுஸைன்....
'ஏன் 'பேக்' செய்றீங்க?'
பதில் கூறவில்லை. யோசித்துக் கொண்டிருந்தான். நேற்று வரை அவள் மீது எந்தவொரு ஈடுபாடும் இருந்ததில்லை. வெறுப்புதான் இருந்தது. அவளைப் பார்க்காமலே, விலகி இருந்தான்.
'புடவை... யாருக்கு?'
'உனக்கு இல்ல.'
'என்னைக்காவது வாங்கி தந்திருக்கீங்களா?'
நாற்காலியை அருகில் நகர்த்திப் போட்டு, அமர்ந்து கொண்டே சொன்னாள்.
'நான் சொந்த ஊருக்குப் போறேன். நாளைக்கு....'
அவளுடைய கண்களிலும் மூக்கின் மீதும் உதடுகளிலும் ஆச்சரியம்.
'என்ன விசேஷம்?'
'எதுவுமில்லை. உனக்கு தேநீர் வேணுமா?'
'பசிக்குது.'
'சாப்பிடலையா?'
'இல்ல...'
'வா...'
சூட்கேஸை மூடி வைத்தான். அறையைப் பூட்டினான். முனகல் பாட்டு, பாடலாக மாறியது.
ரெஸ்ட்டாரெண்டிற்குள் இருந்த செயற்கை மரத்திற்குக் கீழே அமர்ந்தார்கள் - ஒருவரையொருவர் பார்த்தவாறு. புலாவ் சாப்பிட்டார்கள். அவள் வேக வேகமாக அள்ளித் தின்றாள். நல்ல பசி இருக்கிறது. அப்படித்தானே?
அவள் நள்ளிரவு வரை அறையில் இருந்தாள். 'பேக்' பண்ணுவதற்கு உதவியாக இருந்தாள். தேநீர் தயாரித்தாள். குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். நள்ளிரவில் வாடகைக் கார் நிறுத்தத்தில் கொண்டு போய் விட்டான். விளக்குக் கால்களுக்குக் கீழே அவளுடைய வாடகைக் கார் ஓடி மறைந்தது. ஒரு காலத்தில் உன் மீது எனக்கு பைத்தியமாக இருந்தது. தொலைபேசியில் உன்னுடைய குரலைக் கேட்க வேண்டும். உன்னைப் பார்க்க வேண்டும். உன்னுடைய கண்களையும் மூக்கையும் கூந்தலையும் பார்க்க வேண்டும். தொட வேண்டும். கடிகாரமோ வளையலோ இல்லாத உன் கையைப் பார்க்க வேண்டும். தொட வேண்டும். எப்போதும் பருத்தியால் ஆன புடவையை அணியும், நீளமான கைகளைக் கொண்ட ரவிக்கையை அணியும் நீ... உன்னை ஒரு காலத்தில் எனக்கு உயிராக இருந்தாய். இப்போது யாருமில்லை. கவலை இருக்கிறது. மனம் முழுக்க ஓநாய்கள்.... உனக்கு இருந்த இடத்தை அவை பிடித்துக் கொண்டு விட்டன.