புத்தாண்டு பரிசு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7229
தனியாக உணவு சாப்பிட்ட பிறகு ஜாக்வஸ் ரான்டல் தன்னுடைய வேலைக்காரனைப் போகும்படி கூறினார். அதற்குப் பிறகு அவர் கடிதங்கள் எழுத ஆரம்பித்தார்.
கடந்த புது வருடத்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பற்றியும், முடிந்துபோன காரியங்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப மனதில் நினைத்துப் பார்த்தும், கனவுகள் கண்டும், அவற்றைப் பற்றி எழுதியும் அவர் ஒவ்வொரு வருடத்தையும் முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார்.
அதே மாதிரி அவருடைய நண்பர்களின் முகங்கள் அவரின் மனதில் தோன்றின. ஜனவரி முதல் தேதியின் விடியலை வாழ்த்தி அவர் தன் நண்பர்களுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தார்.
மேஜையை இழுத்துத் திறந்து, அதிலிருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியே எடுத்தார். சிறிது நேரம் பார்த்த அவர், அதை முத்தமிட்டார். அந்தப் புகைப்படத்தை மேஜைமீது வைத்துவிட்டு, அவர் எழுத ஆரம்பித்தார்.
‘என் அன்பிற்குரிய ஐரீன்,
இதற்குள் நான் அனுப்பிய பரிசு உனக்குக் கிடைத்திருக்கலாம். உன்னிடம் கூறுவதற்காக மட்டுமே நான் இந்த மாலை நேரத்தில்...’
அங்கிருந்து பேனா முன்னோக்கி நகர மறுத்தது. ஜாக்வஸ் எழுத்து அறையில் இங்குமங்குமாக நடக்க ஆரம்பித்தார்.
கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு ஒரு காதலி இருக்கிறாள். வேறு பலருக்கும் இருப்பதைப்போல ஒரு தாசியாகவோ, உடல் சுகத்தை அளிப்பதற்கென்றே இருக்கக் கூடிய பெண்ணாகவோ அவள் இருக்கவில்லை. உண்மையாகவே காதலித்து, காதலிக்கப்பட்ட ஒரு உறவு அது. உண்மையாகச் சொல்லப் போனால், அவர் ஒரு இளைஞனாக இல்லை என்றபோதும், இளமை விட்டுப் போயிராத ஒரு ஆணாக இருந்தார். சிந்தனைகளிலும் செயல்களிலும் ஆவேசத்துடனும் தீவிரத்தன்மையுடனும் அவர் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். தனி நபர்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றபடி தன் வாழ்க்கைக்குள் நுழைந்தும், முடிந்தும் கொண்டிருந்த நட்பின் ஒரு ‘பேலன்ஸ் ஷீட்’டை ஒவ்வொரு வருடமும் தயார் பண்ணுவது என்பது அவருடைய வழக்கமாக இருந்தது. தன்னுடைய உணர்ச்சியின் வெப்பம் குறைந்தபோது ஒரு வியாபாரியின் கடமை என்பதைப்போல அவளுடன் உறவுகொண்டு தன்னுடைய இதயத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதையும், எதிர்காலத்தில் அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் தனக்குத் தானே கேட்டுக்கொண்டார். மென்மைத்தனமும் ஆழமான நன்றியுணர்வும் நெருக்கமான நட்பும் நிறைந்த பலம் கொண்ட உறவே அது என்பதை அவர் கண்டுபிடித்தார்.
அழைப்பு மணியின் ஓசை அவரை அதிர்ச்சியடையச் செய்தது. கதவைத் திறப்பதா வேண்டாமா என்று அவர் யோசித்தார். ஒருவேளை, புது வருடத்திற்கு முந்தின இரவில் அந்த வழியாகக் கடந்து போய்க் கொண்டிருக்கும் அறிமுகமில்லாத மனிதனாக அவன் இருக்கலாம். யாராக இருந்தாலும் சரி, கதவைத் திறக்க வேண்டியது தன் கடமை ஆயிற்றே என்று அவர் நினைத்தார்.
அவர் மெழுகுவர்த்தியைத் தேடி எடுத்துக்கொண்டு கூடத்தைக் கடந்து சாவியை நுழைத்துக் கதவைத் திறந்தார். கதவைத் திறந்தபோது தன்னுடைய காதலி ஒரு இறந்த பிணத்தைப்போல, வெளிறிப்போய் சுவரில் சாய்ந்து நின்றிருப்பதை அவர் பார்த்தார்.
அவர் நடுங்கிக் கொண்டே கேட்டார்: “உனக்கு என்ன ஆச்சு?”
அவள் பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டாள்:
“நீங்க தனியாகவா இருக்கீங்க?”
“ஆமா...”
“வேலைக்காரர்கள் இல்லையா?”
“இல்ல.”
“நீங்கள் வெளியே போகலையா?”
“இல்ல...”
அந்த வீட்டிற்குள் மிகவும் பழக்கம் கொண்டவள் என்பதைப்போல அவள் நடந்து சென்றாள். வரவேற்பறையை அடைந்த அவள் அங்கிருந்த ஸோஃபாவில் சாய்ந்தாள். தொடர்ந்து தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
அவர் அவளுக்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தார். அவளுடைய முகத்திலிருந்த கைகளைப் பிடித்து விலக்க முயற்சித்த அவர் உரத்த குரலில் கேட்டார்:
“ஐரீன்... ஐரீன், உனக்கு என்ன ஆச்சு? உனக்கு என்ன நடந்ததுன்னு தயவுசெய்து என்கிட்ட சொல்லு. நான் உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்குறேன்.”
தன்னுடைய அழுகைக்கு மத்தியில் அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “இப்படியே நீண்ட காலம் என்னால வாழ முடியாது.“
அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
“இப்படியே என்றால் நீ என்ன சொல்ல வர்ற?”
‘’ம்... இப்படியே நீண்ட காலம் என்னால வாழ முடியாது... நான் அந்த அளவுக்கு இதுவரை பொறுமையா இருந்துட்டேன். இன்னைக்கு அவர் என்னை அடிச்சிட்டாரு.”
“யாரு? உன் கணவரா?”
“ஆமா... என் கணவர்தான்.”
“அப்படியா?”
அவளுடைய கணவர் இந்த அளவிற்குக் கொடூரமாக நடந்து கொள்வார் என்று சிறிதுகூட எதிர்பார்க்காத காரணத்தால், அவர் அதிர்ச்சியடைந்துபோய் விட்டார். நல்ல குணங்களைக் கொண்ட, க்ளப்பிற்குச் செல்லும், குதிரைகள்மீது ஈடுபாடு கொண்ட, நாடகங்கள் பார்ப்பதற்கு தினமும் போகக்கூடிய, சிறந்த ஒரு வாள் பயிற்சி வீரரான, பொதுவாக நல்ல ஒரு குடும்பத் தலைவருமான அருமையான மனிதராக அவர் இருந்தார். ஆனால் முறையான கல்வி இல்லாததாலும், நாகரீகமாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாததாலும், உயர்ந்த நிலையில் சிந்திக்கத் தெரியாத மனிதராக அவர் இருந்தார்.
பணக்காரர்களும் படித்தவர்களுமாக இருப்பவர்கள் செய்வதைப்போல அவரும் தன் மனைவியை வழிபட்டார். அவருடைய விருப்பங்களைப் பற்றியும் ஆடைகளைப் பற்றியும் உடல்நலத்தைப் பற்றியும் அவர் தேவைக்கும் அதிகமாக ஆர்வம் காட்டினார். அதையும் தாண்டி அவர் அவளுக்கு முழுமையான சுதந்திரத்தைத் தந்திருந்தார்.
ஐரீனின் நண்பராக இருந்த ஜாக்வஸ் ரான்டலுக்கு அவளுடைய கணவரின் அன்பு நிறைந்த கை குலுக்கல் கிடைத்தது. சிறிது காலம் ஐரீனின் நல்ல நண்பராக இருந்த ரான்டல் அவளுடைய காதலராக ஆனார். அதைத் தொடர்ந்து அவளுடைய கணவருடன் அவர் கொண்டிருந்த நெருக்கம் மேலும் அதிகமானது.
அவர்களுடைய குடும்பத்தில் இப்படியொரு சூறாவளி வீசும் என்று ஜாக்வஸ் கனவில்கூட நினைத்ததில்லை. சிறிதும் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி அவருக்குள் பயத்தை உண்டாக்கியது.
அவர் அவளிடம் கேட்டார்:
“அது எப்படி நடந்தது? என்கிட்ட சொல்லு.”
அந்த இடத்திலேயே தன்னுடைய வாழ்க்கையின் நீளமான வரலாற்றை, தன்னுடைய திருமண நாளில் இருந்து இருக்கும் தன்னுடைய வரலாற்றை அவள் விளக்கமாகக் கூறினாள். சாதாரண விஷயங்களில் உண்டாகும் சண்டையிலிருந்து மாறுபட்ட குணங்களைக் கொண்ட இரண்டு பேருக்குமிடையே கருத்து வேறுபாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டிருப்பது வரை அவள் எல்லாவற்றையும் கூறினாள்.
தொடர்ந்து சண்டைகள்... முழுமையான, தெளிவற்று இருந்தாலும் உண்மையான பிரிதல்... சமீப காலமாக அவளுடைய கணவர் தீவிரமாக தன் எதிர்ப்பைக் காட்டினார். சந்தேகம் கொண்ட மனிதராக அவர் ஆனார். அவளை அடிக்கும் நிலைக்கு மாறினார்.
அவர் இப்போது பொறாமை கொண்டவராகவும் ஆகிவிட்டார். ஜாக்வஸ் ரான்டல்மீது அவருக்குப் பொறாமை... இன்றும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உண்டாக்கிய பிறகு, அவர் அவளை அடித்திருக்கிறார்.