புத்தாண்டு பரிசு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7233
தன்னுடைய முடிவு என்ன என்பதையும் அவள் அப்போது கூறினாள்: “நான் அவர்கிட்ட திரும்பிப் போகப் போறது இல்ல. நீங்க உங்க விருப்பப்படி என்னை எது வேணும்னாலும் செய்துக்கலாம்.”
ஜாக்வஸ் அவளுக்கு நேர் எதிரில் உட்கார்ந்தார். அவருடைய முழுங்கால்கள் அவளுடைய முழங்கால்களுடன் உரசின. அவர் அவளுடைய கைகளைச் சேர்த்துப் பிடித்தார்.
“என் அன்பான ஐரீன், நீ ஒரு பெரிய முட்டாள்தனமான காரியத்தை செய்யப் போற. நீ உன் கணவரை வேண்டாம்னு உதறிவிட்டு வர்றதா இருந்தா, ஒரு பக்கம் மட்டும் குற்றம் சுமத்து. அந்த வகையில் ஒரு குடும்பப் பெண் என்ற உன் ஸ்தானத்தைக் காப்பாற்றிக் கொள்ளணுமே!”
அவரை அமைதியற்ற மனதுடன் பார்த்தவாறு அவள் கேட்டாள்:
“அப்படின்னா நீங்க எனக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புறீங்க?”
“திரும்பிப் போயி வாழ்க்கையுடன் இரண்டறக் கலக்கப் பாரு. ராணுவத்துல பாராட்டு மெடல் கிடைக்கிற மாதிரி, விவாகரத்து கிடைக்கும் அந்த நாள் வரும்வரை, கணவருடன் இருக்கும் உன் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்து.”
“கோழைத்தனமான ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லியா என்னை நீங்க அறிவுறுத்துறீங்க?”
“அப்படி இல்ல. புத்திசாலித்தனமான, அறிவுப்பூர்வமான ஒரு காரியம் அது. உன்னைக் காப்பாத்திக்க உயர்ந்த பதவி இருக்கு. நல்ல பேர் இருக்கு. நண்பர்கள் இருக்காங்க. உறவினர்கள் இருக்காங்க. அறிவில்லாமல் செயல்பட்டு நீ அது எதையும் பாழாக்கிக்கொள்ளக் கூடாது.”
அவள் எழுந்து கோபத்துடன் கொன்னாள்:
“சரி... வேண்டாம்! எனக்கு இனிமேல் எதுவுமே தேவையில்லை. எல்லாவற்றையும் நான் முடிவுக்குக் கொண்டு வர்றேன்!”
தொடர்ந்து இரண்டு கைகளாலும் தன் காதலரின் தோளைப் பற்றிக்கொண்டே அவருடைய முகத்தைப் பார்த்து அவள் கேட்டாள்:
“நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?”
“ஆமா...”
“உண்மையா... சத்தியமா...”
“ம்...”
‘’அப்படின்னா, என்னை ஏத்துக்கங்க.”
அவர் அதற்கு மறுப்பு சொன்னார்.
“உன்னை ஏத்துக்கறதா? இங்கேயா? என்ன, உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா? அப்படி நடந்தால், உன்னை நீ முழுமையா இழுந்திடுவே. திரும்பி வராத அளவுக்கு இழப்பு உண்டாயிடும். உனக்கு உண்மையிலேயே பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.”
மெதுவாக, அதே நேரத்தில் கம்பீரமான குரலில் தன்னுடைய வார்த்தைகளின் பாதிப்பு என்ன என்பதை அறியக்கூடிய ஒரு பெண்ணைப்போல அவள் அதற்கு பதில் சொன்னாள்.
“இங்கே பாருங்க ஜாக்வஸ். உங்களை நான் பார்க்கக் கூடாதுன்னு அவர் சொல்றாரு. உங்களைப் பார்ப்பதற்காக இப்படி பொய் சொல்லிட்டு நடத்துற தமாஷான நாடகத்தை இனிமேல் நடத்த நான் தயாராக இல்லை. ஒண்ணு - நீங்க என்னை இழக்கணும். இல்லாட்டி - நீங்க என்னை உங்களுக்குச் சொந்தமா ஆக்கிக்கணும்.”
“என் அன்பிற்குரிய ஐரீன், விஷயம் அப்படிப் போகுதுன்னா, நீ விவாகரத்து வாங்க பாரு. நான் உன்னைத் திருமணம் செய்துக்குறேன்.”
“ஆமாம்... நீங்க என்னைத் திருமணம் பண்ணுவீங்க. அதாவது - இரண்டு வருடங்கள் கழிச்சு... உங்களோடதுதான் பொறுமையான காதலாச்சே! என்ன, நான் சொல்றது சரிதானா?”
“இங்கே பாரு ஐரீன்! நீ கொஞ்சம் சிந்திச்சுப் பாரு. நீ இங்கே வந்து வசித்தால், அவர் நாளைக்கே இங்கேயிருந்து உன்னைத் தூக்கிக்கொண்டு போயிடுவாரு. அவர் உன்னோட கணவர். அவருக்கு அதற்கான உரிமை இருக்கு என்பதால் நீயும் அவர் கூடத்தான் இருப்பே.”
“நீங்க என்னை இங்க தங்க வைக்கணும் என்று நான் சொல்லல. நீங்க என்னை எங்கே வேணும்னாலும் கொண்டு போங்க... அதைச் செய்யும் அளவிற்கு மனதின் ஆழத்தில் நீங்கள் என்னைக் காதலிக்கிறீங்கன்னு நான் நம்புறேன். நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். குட்பை.”
அவள் எழுந்து அறையின் வாசலை நோக்கி நடந்தாள். அவர் அப்போதே அவளுக்குப் பின்னால் சென்றதால், கதவிற்கு வெளியிலாவது அவளைப் பிடிக்க அவரால் முடிந்தது.
“இங்கே பாரு ஐரீன்.”
அவர் கூறுவதை கேட்க ஆர்வம் இல்லாமல், அவள் அவரை விட்டு விலகி நின்றாள். அப்போது அவளுடைய கண்கள் நீரால் நிறைந்திருந்தன. அவளுடைய உதடுகளிலிருந்து இந்த வார்த்தைகள் வெளியே வந்தன.
“என்னைத் தனியா விடுங்க! தனியா விடுங்க!”
அவர் அவளைப் பிடித்து உட்கார வைத்தார். அவளுக்கு முன்னால் முழுங்காலிட்டு அமர்ந்துகொண்டு அவள் கூறுவது மாதிரி செயல் வடிவில் நடந்தால், அதனால் உண்டாகக்கூடிய ஆபத்தான விளைவுகளைப் பற்றியும் அதற்குள் இருக்கும் முட்டாள்தனத்தைப் பற்றியும் கூறி, அவற்றை அவள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அறிவுரை கூறிக்கொண்டிருந்தார் அவர். அவளுடைய மிகப்பெரிய நோக்கமே தன்னுடைய காதல்தான் என்பதை நன்கு அறிந்திருந்த அவர், அவள் ஏற்றுக்கொள்வதற்காக ஒரு விஷயத்தைக்கூட, தான் கூறும்போது விடாமல் பார்த்துக்கொண்டார்.
அவளுடைய கோபம் சற்று அடங்கியபோது, அவள் அமைதியாக ஆனபோது, தன்னுடைய அறிவுரையைக் காதுகொடுத்துக் கேட்கும்படி, தான் கூறுவதை அக்கறையுடன் கவனிக்கும்படி, தன்னை நம்பும்படி அவர் அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
அவர் பேசி முடித்ததும், அவள் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொன்னாள்.
“என்னைக் கை விட்டுடறதுன்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்களா? அப்படின்னா, நீங்க உங்க கைகளை எடுத்தால், நான் எழுந்திருக்க முடியும்.”
“நான் சொல்றதைக் கேளு ஐரீன்..”
“நீங்கள் என்னைப் போக விடுறீங்களா?”
“ஐரீன்... உன் முடிவை மாற்றிக்கொள்ள முடியாதா?”
“என்னைப் போகவிடுங்க.”
“உன்னோட இந்த முட்டாள் தனமான, உறுதியான முடிவை, எதிர்காலத்தில் உன்னைக் கவலைகொள்ள வைக்கப்போகும் இந்த முடிவை மாற்றிக் கொள்ள நீ தயாராக இல்லைன்னா சொல்ற?”
“ஆமாம்... என்னைப் போக விடுங்க.”
“அப்படின்னா, நில்லு. இங்கே பாதுகாப்பு இருக்குன்னு உனக்கு தெரியும்ல... நாளைக்குக் காலையில நாம் எங்கேயாவது போவோம்.”
அவர் அதைக் கூறி முடித்த பிறகும், அவள் எழுந்து தன்னுடைய குரலைக் கடுமையாக வைத்துக்கொண்டு சொன்னாள்:
“இல்ல... மிகவும் தாமதம் ஆயிடுச்சு. ஒரு தியாகத்தை நான் விரும்பல... வழிபடுறதைத்தான் நான் விரும்புறேன்.”
“நில்லு... நான் செய்ய வேண்டியதைச் செய்து முடிச்சிட்டேன். சொல்ல வேண்டியதை நான் சொல்லி முடிச்சிட்டேன். உன் விஷயத்தில் இதற்குமேல் பொறுப்புகள் இருப்பதை நானே விரும்பல. என் மனசாட்சிக்கு இப்போ சமாதானம் உண்டாயிடுச்சு. இனி உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நீ எதைச் சொன்னாலும் அதன்படி நடக்குறேன்.”