
அவள் மீண்டும் ஸோஃபாவில் அமர்ந்தாள். நீண்ட நேரம் அவரையே கண்களை எடுக்காமல் பார்த்தாள். பிறகு மிகவும் அமைதியான குரலில் அவள் கேட்டாள்: “அப்படின்னா, விளக்கமா சொல்லுங்க.”
“அது எப்படி? நான் எதை விளக்கிச் சொல்லணும்னு நீ சொல்ற?”
“எல்லாவற்றையும்...! இந்த முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடி நீங்கள் சிந்திச்ச ஒவ்வொன்றையும்! நான் என்ன செய்யணும்னு அப்போத்தான் முடிவு செய்ய முடியும்.”
“ஆனால், எதைப்பற்றியும் நான் சிந்திக்கல. நீ முட்டாள்தனமான காரியத்தைச் செய்யப் போறேன்ற விஷயத்தைக் கூற வேண்டியது என் கடமை. ஆனால், நீ அந்த விஷயத்தில் பிடிவாதமா இருக்கே. அதே நேரத்தில், நானும் இப்போது அந்த முட்டாள்தனமான செயலில் பங்கு கொள்கிறேன்னு சொல்றேன். நான் அதில் உறுதியாகவும் இருக்கேன்.”
“இவ்வளவு சீக்கிரமா ஒரு ஆள் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்வது என்பது அவ்வளவு இயற்கையா தெரியல...”
“நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு ஐரீன். தியாகமோ, வழிபாடோ சம்பந்தப்பட்ட ஒரு விஷயமில்லை இது. உன்னைக் காதலிக்கிறேன்ற விஷயத்தைப் புரிஞ்சிக்கிட்ட நாளன்று, நான் இதை என்கிட்டயே சொல்லிக்கிட்டேன். இந்த விஷயத்தில் எல்லா காதலர்களும் தங்களுக்குள் கூறிக்கொள்வது இதுவாகத்தான் இருக்கும். ஒரு பெண்ணைக் காதலிக்கும் ஆண், அவளுடைய
காதலை அடைவதற்காக முயற்சி செய்பவன்... இதில் ஆண் சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி... பெண் சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி... பொதுவான ஒரு ஒப்பந்தம் உண்டாகத்தான் செய்யுது. ஒரு விஷயத்தை நீ கவனிக்கணும். இது உன்னைப் போன்ற ஒரு பெண்ணின் விஷயத்தில்தான்... மாறாக, துள்ளிக் குதிக்கும் ஒரு பெண்ணின் விஷயத்தில் அல்ல...”
“மிக உயர்ந்த சமூகத்தின் அங்கமாவும், சட்ட ரீதியான கூறுகள் கொண்டதாகவும் திருமணம் இருந்தாலும், அது நடக்கும் சூழ்நிலைக்கேற்றபடி மதிப்பிட்டுப் பார்க்கும்போது, என் கண்களில் அதற்குப் பல நேரங்களில் தார்மிகத் தன்மை மிகவும் குறைவாகவே இருக்கிறது.”
தான் காதலிக்காத ஒரு ஆணுடன் சட்ட ரீதியாக இணைக்கப்படும் ஒரு பெண், சுதந்திரமான இதயத்தைக் கொண்ட ஒரு பெண் தன்னைக் காதலிக்கும் ஒரு ஆணைச் சந்திக்கிறப்போ, வேறு எந்தவித தொடர்புகளும் இல்லாத அந்த ஆணுடன் இல்லற வாழ்க்கையைத் தொடர்வது சட்டப்படி இல்லையென்றாலும், சமூகத் தன்மை கொண்ட ஒன்றுதான் அதுவும். மேயருக்கு முன்னால் முழுமையான சம்மதத்துடன் உண்டாக்கப்படும உறவைவிட பலமானதாக இருக்கும் அது.
அந்த ஆணும் பெண்ணும் முழுமையான உண்மைத் தன்மையுடன் இருப்பார்களேயானால், அந்த உறவு ஆழமானதாகவும், நலம் விளைவிக்கக் கூடியதாகவும், உண்மையான உணர்வு கொண்டதாகவும் இருக்கும்.
ஆனால், அந்தப் பெண் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாள். அவள் தன்னுடைய எல்லாவற்றையும்... இதயம், மனம், ஆன்மா, உடல் எல்லாவற்றையும் அந்த ஆணுக்கு சமர்ப்பணம் செய்வதாலும், எதையும் தியாகம் செய்ய அவள் தயாராகிறாள் என்பதாலும், எதையும் நேருக்கு நேர் சந்திக்கக் கூடிய தைரியம் அவளிடம் இருப்பதாலும் - அவளைக் கொல்வதற்கு உரிமை இருக்கும் கணவரையும், கண்டிக்க உரிமை கொண்ட சமூகத்தையும் - அந்தப் பெண் எல்லா ஆபத்துகள் நிறைந்த சாத்தியங்களையும் தன் கையில் எடுக்கிறாள். அதனால் தான் தன்னுடைய இல்லற நம்பிகையில், அவள் இந்த அளவிற்கு தைரியம் உள்ளவளாக இருக்கிறாள். அதனால்தான் அவளுடைய காதலன், அவளை வரவேற்கிற அதே நேரத்தில், எதிர்காலத்தில் நடக்கலாம் என்று இருக்கும்
பிரச்சினைகளைக்கூட முன்கூட்டியே பார்க்கிறான். எனக்கு இதற்குமேல் கூறுவதற்கு எதுவும் இல்லை. ஒரு பக்குவப்பட்ட மனதைக்கொண்ட மனிதனைப் போல நான் உனக்கு முன் கூட்டியே எச்சரித்தேன்... அது என்னுடைய கடமையாக இருந்தது. இனி... இப்போது ஒரு ஆண் மட்டுமே எனக்குள் எஞ்சி இருக்கிறான் - உன்னைக் காதலிக்கும் காதலன். சொல்லு... நான் என்ன செய்யணும்?”
சந்தோஷம் பளிச்சிடும் முகத்துடன் எழுந்து, தன்னுடைய உதடுகளால் அவருடைய உதடுகளைக் கவ்விய அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
“அது உண்மையில்லை டார்லிங்! அப்படியொரு சம்பவமே நடக்கல... என் கணவருக்கு என்மீது எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால், நீங்க எனன் சொல்வீங்கன்னு, செய்வீங்கன்னு தெரிஞ்சிக்க நான் ஆசைப்பட்டேன். உங்களிடமிருந்து நான் ஒரு புத்தாண்டு பரிசை விரும்பினேன். உங்களுடைய இதயத்திலிருந்து வரக்கூடிய பரிசு... நீங்கள் சமீபத்தில் எனக்குத் தந்த வைர மாலை இல்லாமல் இன்னொரு பரிசு... நீங்க எனக்கு அதைத் தந்துட்டீங்க... நன்றி! நன்றி! நீங்க எனக்கு அளித்த சந்தோஷத்திற்கு கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகணும்!”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook