குட்டிச்சாத்தானும் ரொட்டியும் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6643
சாத்தான் விவசாயியின் வீட்டிற்குச் சென்றான். அவன் சென்றிருந்த நேரத்தில் விவசாயி தன்னுடைய வசதி படைத்த பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து அவர்களை மது அருந்தச் செய்து கொண்டிருந்தான். அவனுடைய மனைவி விருந்தாளிகளுக்கு மதுவைப் பரிமாறினாள்.அப்படி பரிமாறியபோது, ஒரு மேஜையில் பட்டு அவள் தடுமாறி கீழே விழுந்தாள். அப்போது ஒரு குவளை முழுக்க இருந்த மது கீழே கொட்டிவிட்டது.
அதைப் பார்த்து விவசாயி பயங்கர கோபத்திற்கு ஆளானான். அவன் தன் மனைவியைப் பார்த்து திட்டினான். "நீ மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே, நாசம் பிடிச்சவளே? இது என்ன சாதாரண வாய்க்கால் நீர்னு நினைச்சிட்டு இருக்கியா? இதன் மதிப்பு என்னன்னு தெரிஞ்சிருந்தா நீ இதை தரையில கொட்டுவியா?"
இப்போது குட்டிச்சாத்தான் தன் எஜமானான சாத்தானைப் பார்த்துச் சொன்னது: "பார்த்தீங்களா? இந்த மனிதன்தான் ரொட்டி காணாமப்போனதுக்காக கொஞ்சம் கூட கவலைப்படாம இருந்தவன்!"
இப்போதும் விடாமல் தன் மனைவியைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்த விவசாயி மதுவைத் தானே கையில் எடுத்துக்கொண்டு போய் பரிமாறினான். அப்போது யாரும் அழைக்காமலே ஒரு ஏழை விவசாயி தன் வேலையை முடித்துவிட்டு அங்கு வந்தான்.அவன் அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தவாறு அங்கு உட்கார்ந்து, எல்லாரும் மது அருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அன்று முழுவதும் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்ததால், தனக்கும் கொஞ்சம் மது அருந்தினால் நன்றாக இருக்கும் என்பதாக அவன் நினைத்தான். அவன் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய வாயில் எச்சில் ஊறியது. ஆனால், விவசாயி அந்த மனிதனுக்கு எதுவும் தரவில்லை. அதற்குப் பதிலாக "வர்றவங்களுக்கெல்லாம் மது தர்றதுக்கு நான் எங்கே போவேன்?" என்று அவன் முணுமுணுத்தான்.
அதைக் கேட்டு சாத்தான் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அப்போது குட்டிச்சாத்தான் சொன்னது. "கொஞ்சம் இருங்க. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதுன்னு பாருங்க".
வசதி படைத்த விவசாயிகள் மத அருந்தியிருந்தார்கள். அவர்களை அழைத்திருந்த விவசாயியும் நன்கு மது அருந்தியிருந்தான். இப்போது அவர்கள் ஒருவரோடொருவர் பொய்யாகப் பேச ஆரம்பித்தார்கள்.
சாத்தான் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தான். முடிவில் அவன் குட்டிச்சாத்தானைப் பார்த்து பாராட்டினான்.
அவன் சொன்னான்: "மது இவங்க எல்லாரையும் குள்ளநரியா ஆக்கிடுச்சு. ஒருத்தரையொருத்தர் ஏமாற்றப் பாக்குறாங்க. இவங்க எல்லாரும் ரொம்ப சீக்கிரமே நம்ம கைக்கு வந்திடுவாங்க."
"கொஞ்சம் காத்திருங்க. அடுத்து என்ன நடக்குதுன்னு பார்ப்போம்"- குட்டிச்சாத்தான் சொன்னது. "இவங்க எல்லாரும் இன்னொரு குவளை மது அருந்தட்டும். இப்போ இவங்க ஒவ்வொருவரும் நரியா மாறியிருக்காங்க. வாலை ஆட்டிக்கிட்டு ஒருத்தரையொருத்தர் வளைச்சுக்கப் பாக்குறாங்க. சீக்கிரமே இவங்களை நீங்க ஓநாயா பார்க்கலாம்."
விவசாயிகள் இன்னொரு குவளை மது அருந்தினார்கள். இப்போது அவர்களின் பேச்சு உரத்தும் கடுமை நிறைந்ததாகவும் இருந்தது. வெறுமனே பேசிக்கொண்டிருந்ததற்கு மாறாக அவர்கள் திட்டுவதும் ஒருத்தரையொருத்தர் பல்லைக் கடித்துக் கொண்டு உறுமுவதுமாக இருந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் ஒருவரோடொருவர் சண்டை போட ஆரம்பித்தார்கள். ஒருவர் மூக்கில் ஒருவர் குத்தினார்கள். மது அருந்த அழைத்திருந்த விவசாயியும் அந்தச் சண்டையில் கலந்து கொண்டான். அவனும் நன்றாக உதை வாங்கினான்.
சாத்தான் நடந்து கொண்டிருந்த காட்சிகளைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். "நல்ல விஷயம்தான்!" என்று சொன்னான்.
அதற்கு குட்டிச்சாத்தான் சொன்னது: "கொஞ்சம் இருங்க. இன்னும் முக்கியமான ஒண்ணு நடக்க வேண்டியதிருக்கு. இவங்க எல்லாரும் மூணாவது குவளை மது அருந்துறதுவரை காத்திருப்போம். இப்போ இவங்க ஒருத்தரோடு ஒருத்தர் ஓநாய் மாதிரி சண்டை போட்டதைப் பார்த்தோம். இன்னொரு குவளை மது உள்ளே போனபிறகு இவங்க ஒவ்வொருத்தரும் பன்றியா மாறப் போறாங்க. பாருங்க."
விவசாயிகள் மூன்றாவது குவளை மதுவை அருந்தினார்கள். அடுத்த நிமிடம் அவர்கள் மிருகத்தைப் போல் மாறினார்கள். அவர்கள் முணு முணுத்தார்கள்; பற்களைக் கடித்தார்கள்; கூச்சல் போட்டார்கள். எதற்கு இப்படியெல்லாம் செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்தார்கள். ஒருவர் பேசுவதை இன்னொருவர் கேட்கத் தயாராக இல்லை. இப்போது அந்த விருந்து முடிவுக்கு வந்தது. சில விவசாயிகள் தனியாகச் சென்றார்கள். சிலர் இரண்டு பேராகச் சேர்ந்து சென்றார்கள். சிலர் மூன்று நபர்களாகச் சென்றார்கள். எல்லாரும் தெருவில் ஆடியபடி சென்றார்கள். விருந்திற்கு அவர்களை அழைத்திருந்த விவசாயி விருந்தினர்களாக வந்திருந்த விவசாயிகளை வழியனுப்புவதற்காக வெளியே சென்றான். ஆனால், அவனே போதையில் தேங்கியிருந்த தண்ணீரில் தடுமாறி விழுந்துவிட்டான். அதே இடத்தில் எழுந்திருக்க முடியாமல் அவன் பன்றியைப் போல் உறுமியவாறு கிடந்தான். அதைப் பார்த்து சாத்தான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அவன் சொன்னான்: "நீ ரொம்பவும் அருமையான மதுவை உண்டாக்கியிருக்கிற. ரொட்டி விஷயத்துல நீ பண்ணின தப்பை இப்போ சரி பண்ணிட்ட. இப்போ எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும். இந்த மதுவை நீ எப்படி உண்டாக்கின? முதல்ல நீ நரியோட இரத்தத்தை அதுல போட்டிருக்கணும். அதனாலதான் அந்த விவசாயிகள் எல்லாரும் நரி மாதிரியே நடந்துக்கிட்டாங்க. அதுக்குப் பிறகு நீ ஓநாயோட இரத்தத்தை சேர்த்திருக்கணும். அதனாலதான் அவங்க ஓநாய் மாதிரியே நடந்தாங்க. கடைசியில நீ பன்றியோட இரத்தத்தை சேர்த்திருக்கணும். அதுனாலதான் அவங்க பன்றி மாதிரி நடந்திருக்கணும்..."
"இல்ல..."- குட்டிச்சாத்தான் சொன்னது: "நீங்க சொன்ன மாதிரி நான் அந்த மதுவை உண்டாக்கல. அந்த விவசாயிக்கு எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமா தானியம் கிடைக்கிற மாதிரி செஞ்சேன். மிருகத்தோட இரத்தம் எப்பவும் மனிதன்கிட்ட இருக்கத்தான் செய்யுது. தன் தேவைக்கு எவ்வளவு தானியம் தேவையோ, அந்த அளவு மட்டும் கிடைக்கிறவரைக்கும் அவன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடக்கமா இருக்குறான். அந்த நிலையில இருந்ததால், அந்த விவசாயி ரொட்டி காணாமப் போனதுக்காக கொஞ்சம்கூட முணுமுணுக்கல. அதே நேரத்துல கொஞ்சம் தானியம் அதிகமா வந்தவுடனே, அவன் சந்தோஷத்துக்கான வழிகளைத் தேட ஆரம்பிக்கிறான். அதுனாலதான் நான் அந்த சந்தோஷத்தை அவனுக்குக் காட்டினேன்- மது! அவன் கடவுளோட நல்ல பரிசுகளை தன்னோட சொந்த மகிழ்ச்சிக்காக எப்போ மதுவா மாற்ற ஆரம்பிச்சானோ அப்பவே அவனுக்குள்ளே ஏற்கெனவே இருக்குற நரி இரத்தமும், ஓநாய் இரத்தமும், பன்றி இரத்தமும் வெளியே வர ஆரம்பிக்குது. இப்படியே மது அருந்திக்கிட்டே இருந்தான்னா அவன் எப்பவும் மிருகமாகவேதான் இருப்பான்."
சாத்தான் குட்டிச்சாத்தானைப் பாராட்டினான். அது முதலில் செய்த தவறை அவன் மன்னித்ததுடன் நிற்காமல், குட்டிச்சாத்தானுக்கு ஒரு உயாந்த பதவியைக் கொடுத்து உயர்த்தியும் விட்டான்.