பட்டாளத்துக்காரன் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6499
பின்னிரவு ஆகிவிட்ட பிறகும்கூட, அங்கு சிறிது நேரம்கூட தூங்காமல் ஒரு ஆள் மட்டும் இருந்தான். அவன்தான் ராமன். தனக்கு இந்தப் பெயரை வைத்தது யார் என்று அவன் வியப்புடன் நினைத்துப் பார்த்தான். நாயர் என்ற பட்டம் தனக்கு எப்படி வந்தது? தெருத் தெருவாக பிச்சையெடுத்து சுற்றிக் கொண்டிருந்த இளம் வயதில் அந்தப் பெயரைச் சொல்லி அவனை யாரும் அழைக்கவில்லை. வாழ்க்கையில் எப்போதிருந்து தனக்கு அந்தப் பெயர் வழங்க ஆரம்பித்தது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
“நான் வரல... எனக்கு விடுமுறை எதுவும் வேண்டாம்.”
இந்த வார்த்தைகள் ஒரு சாபத்தைப் போல அவனுடைய காதுகளுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. தான் அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம் என்று இப்போது அவன் நினைத்தான். கேரளத்தில் எங்காவது ஒரு மூலையில் அந்த அதிர்ஷ்டமில்லாத பெண் இருப்பாள்- அம்மா! இல்லாவிட்டால் அந்த ஆண்- தந்தை! இல்லாவிட்டால் தான் கிடந்த வயிற்றில் தனக்கு முன்போ பின்போ பிறந்த யாராவது ஒரு ஆள்! இப்படித் தன்னைப் பற்றி எண்ணிப் பார்க்க ஒரு ஆள் உலகத்தில் இல்லாமலா இருக்கும்? ஒருவேளை முயற்சி செய்து பார்த்தால் அப்படி ஒருவரைப் பார்க்க நேர்ந்தாலும் நேரலாம்.
அவன் பல ஊர்களைப் பார்த்தான். பல இனத்தைச் சேர்ந்தவர்களுடனும் பழகினான்- பல மொழிகளையும் பேசக் கேட்டான். ஆனால், கேரளத்தில் தெருத்தெருவாகப் பிச்சையெடுத்து சுற்றினால்கூட, உடம்பில் சோர்வு என்ற ஒன்றே இருக்காது. அங்குள்ள பச்சைத் தண்ணீருக்குக்கூட ஒரு சிறப்பு இருக்கவே செய்கிறது. அங்குள்ள உச்சி வெயில்கூட அவனைத் தளர்வடையச் செய்யாது. மலையாளிகளின் சிரிப்பு மட்டுமே இதயபூர்வமானது. அந்த மொழிக்கு அன்பை மேம்படுத்த மட்டுமே தெரியும்.
பிறந்த மண் பெற்ற தாயைப்போல அவனை ‘வா வா’ என்று அழைத்தது. கேரளத்தில் சுகமான காற்று வீசிக் கொண்டிருக்கும். தென்னைமர நிழலில் படுத்துறங்க வேண்டும். பரந்து கிடக்கும் வெளிகளில் அலைந்து திரியவேண்டும். கேரளத்தில் ஒரு பிடி சோறாவது சாப்பிட வேண்டும்.
அதிகாலையில் மற்ற எல்லாரையும்விட அவன் முன்னால் எழுந்துவிட்டான். மற்றவர்கள் எழுந்தபோது, அவன் பயணம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தான்.
ஆலப்புழை நகரத்தின் எல்லா சாலைகளிலும், சாலை முனைகளிலும் ஒரு பட்டாளக்காரனை மூன்று நான்கு நாட்களாகப் பலரும் பார்த்தார்கள். நகரத்தின் எல்லாப் பகுதிகளிலும் மூன்று நான்கு தடவை அவன் தென்பட்டான். இரவு நேரங்களில்கூட அவன் நடந்து கொண்டேயிருந்தான். ஒரு இரவு படகுத்துறையில் நின்றிருந்த போலீஸ்காரனிடம் ஒரு வயதான சுமை தூக்கும் முஸ்லீம் கிழவர் அவனைப் பற்றி என்னவோ சொன்னார். அவன் எங்கு தங்கியிருக்கிறான் என்பதோ எங்கிருந்து வந்திருக்கிறான் என்பதோ யாருக்கும் தெரியாது.
ஒரு நாள் அவன் காணாமல் போனான். மறுநாள் காலையில் கொல்லத்தில் ஆனந்தவள்ளீஸ்வரம் கோயிலுக்குப் பக்கத்தில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டின் படி வாசலில் அவன் நின்று கொண்டிருப்பதைப் பலரும் பார்த்தார்கள். கையில் ஒரு இரும்புப் பெட்டியைத் தூக்கிப் பிடித்திருந்தான். சாலையில் நடந்துபோன ஒரு சிறுவன் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்று அவனைப் பார்த்துச் சொன்னான்.
அப்போது கோவிலிருந்து வெளியே வந்த ஒரு படித்த மனிதரைப் பின்பற்றி அவன் நடந்தான். சிறிது தூரம் சென்ற பிறகு அந்த மனிதர் ஒரு வாசலை நோக்கி திரும்பினார்.
“நான்... ராமன்...”
அந்தக் குரலைக் கேட்டு அந்த மனிதர் திரும்பிப் பார்த்தார். பெட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சிலையைப் போல அந்தப் பட்டாளக்காரன் நின்றிருந்தான்.
“ராமனா? எந்த ராமன்?”- அந்த மனிதர் கேட்டார்.
அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியாமல் சிறிது நேரம் அதே நிலையில் நின்றிருந்த அவன் மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தான். தூரத்தில் சாலையின் திருப்பத்தில் அவன் மறையும் வரை அந்த மனிதர் பார்த்தவண்ணம் நின்றிருந்தார். ராமன்! அப்படிப்பட்ட ஒரு ஆளை அவருக்கு ஞாபகத்திலேயே இல்லை.
சின்னக்கடையிலிருந்த ஒரு ஹோட்டல் கதவில் ‘ராமன்’ என்ற பெயர் கத்தி நுனியால் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பட்டாளக்காரன் ஹோட்டல் சொந்தக்காரனிடம் சொன்னான்:
“அதை நான்தான் எழுதினேன்.”
அதற்கு அந்த உரிமையாளர் எதுவும் சொல்லவில்லை.
யாராவது கண்ணில் படமாட்டார்களா என்ற எண்ணத்துடன் அவன் திருவனந்தபுரத்தில் அலைந்து திரிந்தான். யாராவது கண்ணில் பட்டால்தானே!
இப்படியே பதினைந்து நாட்கள் ஓடி முடிந்துவிட்டன. பழக்கமான ஒரு புன்னகையை அவன் எந்த இடத்திலும் பார்க்கவில்லை. ‘எப்போ வந்தே?’ என்ற கேள்விக்காக அவன் கேரளத்தில் ஒவ்வொரு நகரமாக அலைந்து திரிந்தான். யாராவது தன்னிடம் பேசமாட்டார்களா என்று ஏங்கினான். ஐந்து, ஆறு, ஏழு என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. கண்ணில் பார்ப்பவர்களையெல்லாம் பார்த்து அவன் பேசினான். சிலர் மட்டுமே அவனைத் ‘தம்பி’ என்று அழைத்தார்கள். கண்ணில் காண்பவர்களையெல்லாம் பார்த்து அவன் சிரித்தான். ஒரு ஆளைக்கூட அவனால் ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை. பார்த்தவர்களில் ஒரு ஆள்கூட அவனை நினைத்துப் பார்க்கக் கூடியவராக இல்லை. கோழிக்கோடு முதல் நாகர்கோவில் வரை அவன் பறவை வேகத்தில் பயணம் செய்தான். இப்படியே இருபத்தெட்டு நாட்கள் ஓடிவிட்டன. இனி இருப்பதே இரண்டு நாட்கள்தான். இப்போதும் எங்கேயாவது சாப்பிட்டு முடித்தால், பணத்திற்காக கையை நீட்டுகிறார்கள். ஒரு பெயர் சொல்லி அவனை யாரும் அழைப்பதில்லை. இந்த பெயர் என்பது எதற்காக வந்தது?
பைத்தியம் பிடித்த நகரங்களைவிட்டு நீண்ட தூரம் தாண்டி அமைதி நிறைந்திருக்கும் கிராமப் பகுதி. மலைச்சரிவில், வயல் பகுதியில், பசும் மரங்களுக்கு மத்தியில் ஒரு சிறு வீடு. அந்த வீட்டு வாசலிலிருந்த ஒரு குத்து விளக்கிற்கு முன்னால் அமைதியாக அமர்ந்து அந்தப் பட்டாளக்காரன் உணவருந்திக் கொண்டிருக்கிறான். அவன் சாப்பிட உட்கார்ந்து நீண்ட நேரமாகிவிட்டது. ஒரு வயதான கிழவி சாதத்தையும் குழம்பையும் அவனுக்கு அருகில் கொண்டுவந்து வைத்து அவனுக்குப் பரிமாறுகிறாள். ஏதோ சொல்லிக்கொண்டே அவனுக்கு அவள் சாப்பாடு போடுகிறாள்.
அவன் அந்தக் கிழவியை ‘அம்மா’ என்று அழைக்கிறான். அம்மா! அந்தக் கிழவி அவனை ‘மகனே’ என்று கூப்பிடுகிறாள். அவர்கள் பேசிக் கொண்டிருப்பது கூட வீடு சம்பந்தப்பட்ட விஷயம்தான்.
அந்தத் தாய் கூறுகிறாள்:
“என் மகனே! எல்லாம் ஒழுங்கா நடக்கணும். நல்ல துணி உடுத்தணும். சாப்பிடணும். இந்த இடம் நம்ம இடம்தான். போன வருஷம் நல்ல கப்பை விளைச்சல்... கொஞ்சம் குழம்பு ஊத்துறேன். நல்லா சாப்பிடு மகனே... பிறகு மோர் ஊற்றி சாப்பிடலாம்.” - கிழவி அவனுக்குக் குழம்பை ஊற்றினாள்.