பயணத்தின் ஆரம்பம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6059
மிகவும் முன்பு... அன்று... உள்ளங்கையில் வைத்திருந்த இலைகளை மெதுவாக நசுக்கி வாய்க்குள் போட்டு ஒதுக்கிய அந்த முரட்டு மனிதர்களில் ஒருவன்தான், இப்போது மஞ்சள் நிற சட்டை அணிந்து எனக்கு முன்னால் அமர்ந்திருக்கிறான் என்று தோன்றியது.
நான் கூறவில்லை- அந்த ஆள் வந்ததிலிருந்தே மிகவும் உரத்த குரலில் சுற்றியிருந்தவர்களிடம் பேசிக் கொண்டேயிருந்தான். ஆட்கள் தன்னிடம் பதிலுக்கு உரையாட வேண்டுமென்ற கட்டாயம் அவனிடம் இருக்கிறதென்று தோன்றவில்லை. ஒரு கடமையை நிறைவேற்றுவதைப்போல அவன் பேசிக் கொண்டேயிருந்தான். வெளிநாட்டில் எங்கோ நீண்டகாலம் வேலை செய்தது. ‘இனி போதும்’ என்று நினைத்து எல்லாவற்றையும் உதறியெறிந்துவிட்டு ஊருக்குத் திரும்பி வந்தது. இங்கு நிலவிக் கொண்டிருக்கும் திருப்தியில்லாத சூழ்நிலைகளைப் பார்த்து மனதில் வெறுப்பு உண்டாகி மீண்டும் புறப்பட்டு வந்த திசைக்கே திரும்பிச் செல்வது, தனக்கு ஏ.ஸியில் முன்பதிவு கிடைக்காமல் போனது- இப்படி பலவற்றைப் பற்றியும் அவன் பேசிக் கொண்டேயிருந்தான். இதற்கிடையில் ஒன்றுக்குப் பிறகு இன்னொன்றாக அந்த ஆள் சிகரெட்டைப் புகைத்துத் தள்ளிக் கொண்டிருந்தான். கேள்விகளை யாரிடம் என்றில்லாமல் கேட்பது, பல நேரங்களில் தானே அவற்கு பதில் கூறுவது, நிறுத்தாமல் புகைபிடிக்கும் செயல் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.
ஆனால், யாரும் அவனிடம் அதைப் பற்றி எதுவும் எதிர்த்துப் பேசவில்லை. ‘தயவு செய்து இந்த ஆட்களின் கூட்டத்தில் இருந்து கொண்டு சிகரெட் புகைக்காமல் இருக்க’ என்று கூறவேண்டுமென நான் நினைத்தேன். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும், அப்படி கூறக் கூடிய தைரியத்தைக் கொண்டுவர என்னால் முடியவில்லை. அதனால் ‘சக பயணிகளுக்கு ஆட்சேபனை இருக்கும் பட்சம், வண்டிக்குள் அமர்ந்து புகைபிடிப்பது தண்டனைக்குரியது’ என்று முன்பு எப்போதோ ரயில்வே இலாகாவினர் எழுதி வைத்ததை மீண்டும் மீண்டும் வாசித்து, நான் அமைதியாக உட்கார்ந்திருக்க மட்டுமே செய்தேன்.
பயணத்தில் எப்போதோ எனக்கருகில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் முன்னோக்கி நகர்ந்து, அந்த ஆளிடம் என்னவோ மெதுவான குரலில் கூறுவதைப் பார்த்தேன். என்னைப் பற்றித்தான் கூறியிருக்க வேண்டுமென்று நினைத்தேன். நான் நினைத்தது சரியாகவே இருந்தது. தங்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல் முடிவடைந்ததும், அவன் என்னையே வெறித்துப் பார்த்தான். அவனுடைய முகத்தில் ஏதோ சந்தேகம் நிழலாடுவதைப் போல இருந்தது. அவன் தலையை அசைத்தவாறு சொன்னான்- “இல்லை... இல்லை... நான் இப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. நான் ஏராளமாக வாசிக்கக்கூடிய ஒரு மனிதன் எனினும், இதுவரையில்... இல்லை கேள்விப்பட்டதே இல்லை.”
தொடர்ந்து ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்துவிட்டு அவன் மீண்டும் சொன்னான்- “அப்படியே இருந்தாலும், இப்போது யார் கதை எழுதாமல் இருக்கிறார்கள்? எல்லாருமே எழுத்தாளர்கள்தான். ஆனால், எழுதுவதாக இருந்தால், கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சமீபத்தில் எழுதினாளே... தெய்வத்தைப் பற்றியோ என்னவோ... அப்படி எழுதணும். அமெரிக்காக்காரன் அந்த இளம்பெண்ணுக்கு, புத்தகத்தை அச்சடிப்பதற்கு முன்பே மூன்றரை கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறானே. மூன்றரை கோடி? நம் நாட்டில் இதற்கு முன்பு யார் இப்படி எழுதி மூன்றரை கோடியை முன்பணமாக வாங்கியிருக்கிறார்கள்? எழுவதாக இருந்தால்...”
கனமாக இருந்த தங்கச் சங்கிலியையும் ப்ரேஸ்லெட்டையும் கைக் கடிகாரத்தையும் அணிந்திருந்த பயணி, இந்த விஷயங்களையெல்லாம் மிகுந்த சந்தோஷத்துடன் கூறிக்கொண்டிருந்தான்.
நான் எல்லாவற்றையும் மிகவும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். உஷ்ணம், சத்தம், ஆட்களின் கூட்டம் ஆகியவற்றுக்கும் மேலாக, உரிய நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாமல் போனதால் ஏற்பட்ட களைப்பையும் கடந்து, மேலோட்டமான வார்த்தைகளும் சேர்ந்தபோது- நீருக்குள் மூழ்கிக் கீழே போய்க் கொண்டிருக்கும் ஒருவன் எப்படியோ நிமிர்ந்து வந்து மிதந்துகொண்டிருக்கும் ஒரு கட்டையைப் பிடித்து, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலிருக்கும் ஆழத்தில் செயலற்ற நிலையில் எங்கேயோ இழுத்துச் செல்லப்படுவதைப்போல...
கிளம்பும்போது மனைவி கேட்டாள்-
‘இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இப்போது இவ்வளவு தூரத்திற்கு போயே ஆகணுமா? அதுவும் இந்த பகல் வண்டியில்... நோயைப் பற்றி சொல்லி, வர முடியாதுன்னு சொல்லக் கூடாதா?’
போகாமலிருக்க முடியாதென்று நான் கூறியபோது, மனைவி மீண்டும் சொன்னாள்-
“அப்படின்னா, கொஞ்சம் முன்னாடியே அவங்க சொல்லியிருக்காலாமே. இல்லைன்னா ஒரு ஏ.ஸி.யோ முதல் வகுப்போ டிக்கெட் எடுத்து அனுப்பியிருக்கலாமே! அங்கு வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு ஏராளமாக பணம் செலவாகுமில்லியா? ஆனா, உங்களுடைய பயணம்னு வரும்போது...”
நான் மீண்டும் எதுவும் கூறாமல் இருந்தவுடன், மனைவி வெறுப்புடன் சொன்னாள்:
'இல்லை... நான் எதுவும் சொல்லலை. உங்க விருப்பப்படி எல்லாத்தையும் செஞ்சுக்கங்க. ஆனா, மருந்து விஷயத்தை மறந்துடக் கூடாது. நான் எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கேன், மதிய உணவிற்குப் பிறகு சாப்பிட வேண்டியது... சாயங்காலம்... ராத்திரி... எல்லாம் தனித்தனியாக எடுத்துவச்சிருக்கேன். மறக்காம இருந்தால் போதும்...
'இல்லை... மறக்கமாட்டேன்' என்று மனைவியை அப்போது சமாதானப்படுத்தினேன்.
அந்த அளவிற்காவது செய்ய வேண்டுமே! ஆனால், இப்போது...
மதிய நேர உணவு கூட சாப்பிட முடியவில்லை. அதற்குப் பிறகு தானே மருந்து...
ஆனால், மருந்து மிகவும் முக்கியமானதுதான். இதயத்தின் செயல்பாட்டை சீர்படுத்துவது... பிரச்சினை எதுவும் வராமல் பார்த்துக் கொள்வது... ஒருமுறை பிரச்சினை வந்தபோது காப்பாற்றியது...
டாக்டரும் சொன்னார்.
'கவனமா இருக்கணும். உரிய நேரத்தில் மருந்தை சாப்பிடணும். எந்த சமயத்திலும் அது நின்னுடக்கூடாது. பிறகு... உங்களுடைய இந்த பயணம் இருக்கிறதே... இலக்கியம், இசைன்னு சொல்றது... நான் சொல்லலை. ஒரு கட்டுப்பாடு... ஒரு கண்ட்ரோல்... அது கட்டாயம் வேணும்.'
நானும் டாக்டரிடம் கூறினேன்:
'இல்லை டாக்டர்... ஒரு பிரச்சினையும் வராது. இன்னைலயிருந்து எல்லா விஷயங்களும் மிகவும்...'
'பிறகு...'
நான் அவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.
பகல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்த வண்டி மாலையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
இனி சிறிது நேரம் கடந்தால், இறங்கவேண்டிய இடம். இறுதி ஸ்டேஷன்.
வண்டியில் இப்போது ஆட்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள்.
பலரும் வழியில் வந்த ஸ்டேஷன்களில் இறங்கிவிட்டார்கள். மஞ்சள் நிற டீஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்த, தடிமனான பயணியும் போய்விட்டிருந்தான்.
தன்னுடைய பெரிய பெட்டியை எடுத்துக் கொண்டு அவன் சென்றபோது நான் பார்க்கவில்லை. நினைத்துப் பார்த்தபோது, எனக்கு ஆச்சரியம் மட்டுமல்ல, வருத்தமும் உண்டானது. எவ்வளவு சீக்கிரம் நாம்...
ஸ்டேஷன்.
நான் ப்ளாட்ஃபாரத்தில் சிறிது நேரம் தயங்கி நின்றிருந்தேன்.
கடலிலிருந்து வந்து கொண்டிருந்த குளிர்ச்சியான காற்று ப்ளாட்ஃபாரத்தை வருடியவாறு போய்க் கொண்டிருந்தது.