புதிய புதிய முகங்கள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6038
“அந்த லெஸ்பியனின் கதைதானே கோபி?”
டீச்சர் கண்ணாடியின் வழியாக சிரித்தாள்.
“இந்தப் பெண்களுக்கு இதையெல்லாம் எழுதுவதற்கு எப்படி தைரியம் வருகிறது டீச்சர்?”
கோபியின் நண்பன், சங்குவின் நண்பன் கஃபூர் ஆச்சரிப்பட்டான்.
“சங்கு இன்னைக்கு வர்றான்ல?”
“மெயிலுக்கு கோபி.”
“எனக்கு கடிதம் வந்திருந்தது.”
கஃபூர் பைக்குள்ளிருந்து கடிதத்தை எடுத்துக் காட்டினான்.
பயணிகள் அறைக்குள் சென்றமர்ந்து லெட்யுக்கின் புத்தகத்தை சற்று வாசித்துப் பார்த்தாள். அப்போது தூரத்தில் வண்டியின் கூவல் சத்தம் கேட்டது. வண்டி எப்போதும் தூரத்தைப் பற்றி அவளை சிந்திக்க வைக்கும். நகரங்களுக்கிடையே இருக்கக்கூடிய தூரம்... நாடுகளுக்கிடையே விரிந்துகிடக்கும் தூரம்... கோளங்களுக்கிடையில் இருக்கக்கூடிய தூரம்...
“அம்மா...”
தோளில் கைவந்து விழுந்தபோதுதான் அவள் சங்குவையே பார்த்தாள். டீச்சரின் பதைபதைப்பு சற்று அடங்கியது. காதுகளிலிருந்து வண்டியின் இரைச்சல் சத்தம் இல்லாமல்போனது. பெல்பாட்டம் பேண்ட் அணிந்த, பாத்திக் ஷர்ட் அணிந்த, கிருதாக்கள் வளர்த்திருக்கும் சங்கு எங்கே? வெள்ளை வேட்டியும் சட்டையும், அடர்த்தியான மீசையும்... இளம் சிவப்பு நிறத்திலிருந்த சாந்தம் தவழ்ந்து கொண்டிருந்த கண்கள்... இந்தப் பக்குவம் எங்கிருந்து கிடைத்தது? தாய்க்கு சந்தோஷம் உண்டானது. நான் பார்ப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய சங்கு இதுதான்... இதுதான்....
“வாழ்த்துகள் அம்மா!”
“எதுக்கு மகனே?”
“இப்போது ப்ரின்ஸிப்பல் இல்லியா? அம்மா, உங்க கடிதம், கிளம்புறதுக்கு முந்தைய நாள்தான் கிடைச்சது!”
“எனக்கு பி.எச்.டி. இருக்கா? இருந்தாலும் கிடைச்சது. மகனே, உன்னோட அதிர்ஷ்டத்தால்தான் இருக்கணும்.”
சங்குவின் கையைப் பிடித்தவாறு அவள் வெளியே நடந்தாள்.
அவனுடன் சேர்ந்து நடக்கும்போது தான் சிறிதாகிவிட்டதைப் போல அவளுக்குத் தோன்றியது. என்ன ஒரு உயரம்! அவனுடைய தந்தைக்கு இந்த உயரமில்லை. அவளுக்குமில்லை. பிறகு இந்த உயரம் எங்கிருந்து கிடைத்தது?
“அப்போ... சொன்ன வண்டியிலேயே வந்துட்ட..! அப்படித்தானே?”
மாதவன் காரின் கதவைத் திறந்துவிட்டான். டீச்சர் முதலில் காருக்குள் ஏறினாள். சங்கு பின்னால் ஏறியபோது, மாதவன் குரலைத் தாழ்த்திக் கொண்டு ஒரு திருட்டுத்தனம் கலந்த சிரிப்புடன் அவனுடைய காதில் சொன்னான்.
“மருந்து ஏதாவது கொண்டுவந்திருக்கியா? மாதவனை மறந்துடாதே?”
“கஞ்சாவை நிறுத்தியாச்சு மாதவா.”
“அப்படின்னா இப்போ என்ன?”
“கஞ்சாவைவிட சிறந்த ஒரு சரக்கு.”
டீச்சர் சங்குவின் கையை இறுகப் பிடித்தாள்... மயக்க மருந்துகளின் மத்தியிலிருந்து அவனைப் பிடித்து கரைக்குக் கொண்டு வருவதைப் போல... காப்பாற்றுவதைப்போல...
“அப்படின்னா... சாயங்காலம் பார்க்கலாமா?”
கோபியும் கஃபூரும் காரின் அருகில் வந்து நின்றார்கள்.
கார் நகர்ந்தது.
“நீ அம்மாவுக்கு என்னடா கொண்டு வந்திருக்கே மகனே?”
சங்கு குளியலும் சாப்பாடும் முடிந்தபிறகு, ஒரு சிகரெட்டுடன் தன்னுடைய கட்டிலுக்குச் சென்று படுத்தான். பத்து இருபது வருடங்களாக படுத்த கட்டில். ‘எவ்வளவு... எவ்வளவு முறை நான் இந்தக் கட்டிலில் படுத்து கைமுட்ட அடித்திருக்கிறேன்!’ சங்கு நினைத்தான்.
“அம்மா, உங்களுக்கு ஒரு பொருள் கொண்டு வந்திருக்கேன்.”
“என்ன?”
“உங்களால் யூகிக்க முடியாது.”
“புத்தகத்தைத் தவிர நீ வேறென்ன கொண்டு வந்திருப்பே? பிறகு... கோபியிடமிருந்து ஒரு புத்தகம் வாங்கியிருக்கேன். இதோ...”
“ஆன்ட்டி நாவல். அம்மா, நீங்க இதையெல்லாம் வாசிக்கிறீங்களே!”
சங்கு புத்தகத்தை நகர்த்தி வைத்தான்.
“அம்மா, நான் உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறது இதுதான்.”
பெட்டிக்குள்ளிருந்து, ஸெல்லோ ஃபைனில் சுற்றுப்பட்டிருந்த ஒரு பிடி ‘பங்க்’கை சங்கு வெளியே எடுத்து வைத்தான்.
“என்ன மகனே இது?”
“பங்க்...”
“நீ எனக்காக கொண்டு வந்திருக்கிறது இதுதானா?”
டீச்சரின் முகம் வாடியது.
“நான் கஞ்சா, மது எல்லாத்தையும் நிறுத்திட்டேன்மா. இப்போ இது மட்டும்...”
“கஞ்சா, மதுவை நிறுத்தியதால் என்ன லாபம்? அதைவிட பெரிய விஷயமாச்சே இது?”
“பங்க் என்னை சொர்க்கத்துக்கு கூட்டிப்போச்சுன்னு நான் சொல்லலை அம்மா.”
சங்கு தன் அன்னையின் மடியில் தலை வைத்துப்படுத்தான்.
“ஆனா, பழைய கட்டுப்பாடில்லாத தன்மையிலிருந்து அது என்னைக் காப்பாத்திச்சு. இப்போ என்னுடைய வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இருக்கு. சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்குப் போறேன். நல்ல முறையில வேலை செய்யறேன். சாயங்காலம் அலுவலகத்திலிருந்து நேரா வீட்டுக்கு வந்திடறேன். ஒரு குவளை பங்க் குடிப்பேன். பிறகு... உணவு தயாராகிற வரை வாசித்துக் கொண்டிருப்பேன். சாப்பிட்டு முடிச்ச பிறகு, ஒண்ணுரெண்டு மணி நேரம் டேப் ரிக்கார்டருக்கு பக்கத்துல பாட்டு கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருப்பேன். காலையில புத்துணர்ச்சியோட கண் விழிப்பேன். சுருக்கமா சொல்றதா இருந்தா பங்க் என்னை நிம்மதி நிறைஞ்சவனா ஆக்குது. அம்மா, ஒரு இடத்தில் நிலையா இருக்குற மனநிலை கொண்டவன் நானில்லைன்ற விஷயம்தான் உங்களுக்குத் தெரியுமே! புத்தி தெரிஞ்ச காலத்திலிருந்து நான் அனுபவிச்ச நிம்மதிக் குறைவு... அதிலிருந்து பங்க் என்னைக் காப்பாத்திச்சு. நான் இப்போ சந்தோஷமா இருக்கேன். ”
“எனக்கும் சந்தோஷம் சங்கு. ஆனா, மகனே...”
“அம்மா, பயப்படவே வேணாம். கொஞ்ச காலம் பங்க்கை தொடர்ந்து பயன்படுத்தினா ‘சூப்பர் ஈகோ’ நீங்கிகும்ங்கற விஷயத்தை நான் சமீபத்தில் எங்கோ வாசித்தேன். சமூகத்தின் பழக்கவழக்கங்களிலிருந்து விடுதலை ஆவேன். சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவேன். ஐ டோண்ட் மைன்ட் இட். அதைத் தவிர பங்க் வேறு எந்த கெடுதலையும் செய்யாது.
“இருந்தாலும், மகனே...”
“மனசுக்கு நிம்மதி தரக்கூடிய வேறெதாவது கண்டா நான் இதை விட்டுடுவேன். அதுவரை மட்டுமே...”
சங்கு சட்டையைக் கழற்றினான். வேட்டியை மடித்துக் கட்டினான். தன் தாயின் அருகில் முழங்காலிட்டு அமர்ந்து அவன் ‘பங்க்’கை அரைக்க ஆரம்பித்தான். அன்னை அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அரைத்த பங்க்கை துணியைக் கொண்டு ஒரு கண்ணாடிக் குவளையில் வடிகட்டினான். பால், சர்க்கரை, மிளகுப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கலக்கினான். நுரைத்துக் கொண்டிருந்த பானத்தை அவன் இரண்டு குவளைகளுக்குள் ஊற்றினான்.
“மகனே...”
“கொஞ்சம் ருசி பார்த்தா போதும். நான் பங்க் குடிக்கும்போது நீங்க குடிக்காம இருந்தா, நம்மோட உறவு முழுமையில்லாததா இருக்குமே அம்மா.” அவன் கண்ணாடிக் குவளையை தன் அன்னையின் கையில் கொடுத்தான். அவனுடைய கண்களில் தன் தாயின்மீது கொண்டிருக்கும் சந்தோஷம் நிறைந்த வெளிப்பட்டது.