புதிய புதிய முகங்கள் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6038
“ச்யேர்ஸ்...”
சங்கு, குவளையை உயர்த்தி ஒரே இழுப்பில் முழுவதையும் குடித்தான். அன்னை முதலில் ஒரு மடக்கு பருகிறாள். சர்க்கரையும், பாலும், மிளகும்... என்ன ஒரு அருமையான ருசி! அவள் மீண்டும் ஒரு மடக்கைப் பருகினாள். பிறகு... எந்தவித பிரச்சினையும் இல்லாமல் குவளையை காலி செய்தாள். ‘என்னுடைய எல்லாமுமாக இருக்கக்கூடிய மகன்... என்னுடைய தங்க மகன் குடிக்கக்கூடியது இது. அப்படியென்றால்... நான் எதற்கு சந்தேகப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டும்?’ அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.
“அம்மா, அதோ... அந்த நாற்காலியில் உட்காருங்க.”‘
அவன் சொன்னபடி அவள் நடந்தாள். சங்கு தன் தாய் அமர்ந்திருந்த நாற்காலியின் கையின்மீது, அவளுடைய கழுத்தில் கை போட்டவாறு அமர்ந்தான்.
“சொல்லு மகனே, உன்னோட நகரத்தைப் பத்தி சொல்லு. அம்மா கேட்கிறேன்.”
“பாராளுமன்றதுக்கு முன்னால் எப்போதும் ஆர்ப்பாட்டங்கள். அமைதியே இல்லாத பல்கலைக் கழக சூழல்... போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கிட்டிருக்கு...”
“இதுக்கு நீ ஏதாவதொரு பரிகாரத்தைக் காணலையா, சங்கு?”
“இல்லை.,,”
“பதில் இல்லாத ஏதாவது ஒரு கேள்வி இருக்கா மகனே?”
“மனிதன்...”
தாய் மெதுவாக சிறிது புன்னகைத்தாள். அவளுடைய வாய்க்கள் மேற்பகுதி உலர ஆரம்பித்தது. ‘பங்க்’ செயல்பட ஆரம்பித்தது.
“அம்மா, உங்களுக்கு என்ன பரிகாரம் தோணுது?”
“நீங்க... இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யணும்.”
“என்னன்னு நீங்களே சொல்லுங்களேன்...”
“ஒரு புதிய சொஸைட்டியை உருவாக்கணும். ஒரு புதிய நேஷன்...”
“இந்தியாவில் அந்த விஷயம் ‘புத்திஸம்’ போன்ற ஒரு மதத்தால் மட்டுமே முடியும். அசோக சக்கரவர்த்தியை போரிலிருந்து பின்னோக்கித் திரும்பி வரச் செய்த புத்த மதத்தால் நம்மை ஊழலிலிருந்தும் ‘ப்ளாக் மெயிலிங்’கில் இருந்தும் விடுதலை பெற வைக்க முடியுமோ என்னவோ? அதை கண்டுபிடிக்கணும் அம்மா.”
“சங்கு, எனக்குத் தெரிந்த சொல்யூஷன், ‘புத்திஸம்’ அல்ல.”
“பிறகு?”
சிகரெட்டின் புகையை ஊதிப்பறக்கவிட்டவாறு அவன் தன் தாயின் முகத்தையே வெறித்துப் பார்த்தான்.
“யூ மேக் ரெவல்யூஷன். ஒரு அமைதிப் புரட்சி...”
அவனுடைய அன்னையின் பார்வை தூரத்தை நோக்கி நீண்டு சென்று கொண்டிருந்தது. அவளுடைய நினைவு காலத்திற்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்தது. படைப்புகளின் இறப்பைத் தாண்டியிருக்கும். உலகத்திற்கு ‘பங்க்’கின் சிறகுகளைக் கொண்டு அவள் பயணத்தை ஆரம்பித்தாள். அன்னையின் கண்கள் மூடின...
· · ·
“இங்க சாரு இல்லையா?”
சாரு வாசலுக்குள் நுழைந்தான். சாருவின் தாய் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றாள். அவள் தான் அணிந்திருந்த துணியைக் கொண்டு முன்னறையில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சைத் துடைத்து சுத்தம் செய்தாள்.
“உட்காரு மகனே. நீ எப்போ வந்தே?”
“நேத்து... நான் கொஞ்சம் சாருவைப் பாக்கணும்.”
சாருவின் தாய் சுவரின்மீது சாய்ந்து நின்றிருந்தாள். அவள் எதுவும் பேசவில்லை. சங்குவின் முகத்தைப் பார்ப்பதற்கு அவளால் முடியவில்லை.
“நான் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்.”
“உன் அம்மாவுக்கு தாங்க முடியாத அவமானத்தையல்லவா அவ உண்டாக்கிட்டா? அந்த மகாபாவி இப்படி செய்வான்னு யார் நினைச்சது மகனே?”
“அம்மாவுக்கு என்ன அவமானம்? தவறு எல்லாருக்கும் நடக்கறதுதானே? நான் கொஞ்சம் சாருவைப் பார்க்கணும்.”
“என் மகனே, நீ அவளைப் பார்க்க வேணாம். அந்த மகாபாவியின் முகத்தை நீ பாக்க வேணாம்.”
உள்ளே கதவிற்கு அப்பால் ஒரு வெடித்துச் சிதறும் அழுகைச் சத்தம். சங்கு உள்ளே நுழைந்தான். சாரு உள்ளே நுழைந்தான். சாரு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தாள். அழும்போது அவளுடைய முதுகு குலுங்கியது. அவளுடைய பாதத்தில், தரையில் சில கண்ணீர்த் துளிகள் விழுந்து உடைந்தன.
“சாரு...”
“அண்ணா, போயிருங்க என்னைப் பார்க்க வேணாம்.”
“சாரு, நான் ஒண்ணு கேட்டால் நீ சொல்லுவியா?”‘
அவள் சங்குக்கு நேராகத் திரும்பி நின்றாள். கர்ப்பத்தின் சோர்வு நிறைந்த, ஈரமான கண்கள்... கன்னங்களில் உதிர்ந்து விழுந்துகிடக்கும் தலைமுடி...
“சொல்லுவியா? அப்படின்னாதான் கேட்பேன்.”
“ம்...”
அவள் உள்ளங்கையால் கண்களைத் துடைத்தாள்.
“யாரு?”
“கோபி”
“புத்தகக் கடையின்...”
அவள் ஒரு வெடிக்கும் அழுகையுடன் உள்ளே ஓடிப்போனாள்.
“அம்மா...”
தாயும் மகனும் சாப்பிடும் மேஜைக்கு அருகில் அமர்ந்திருந்தார்கள்.
“ம்...?”
“அம்மா, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”
“என்னடா மகனே?”
“எனக்கு திருமணம் நடக்கணும்.”
தாயின் கண்களில் சந்தோஷம் மெழுகுவர்த்தியைப் போல எரிந்து படர்ந்தது.
“அம்மா, கொஞ்ச காலமாவே நீங்க என் கல்யாணத்தைப் பற்றி சொல்லிட்டு வர்றீங்களே?”
சங்கு கூறியதை அவளால் நம்பவே முடியவில்லை. தனக்கு எந்தச் சமயத்திலும் திருமணமே வேண்டாமென்றும், தனி ஒருவனாகத்தான் தான் பூமிக்கு வந்து சேர்ந்ததாகவும், தனி ஒருவனாகவே திரும்பிச் செல்ல வேண்டுமென்பதுதான் தன்னுடைய விருப்பமென்றும் அவன் உறுதியான குரலில் சமீபகாலமாக கூறிக் கொண்டிருந்தான். அதற்குப் பிறகு திருமண விஷயத்தைப் பற்றி அவனுடைய தாய் பேசுவதேயில்லை.
“இந்த முறையே...”
“அம்மாவுக்கு இதைவிட ஒரு பெரிய சந்தோஷமில்லை, மகனே.”
“ஆனால்...”
“ஒரு ஆனாலும் இல்லை, சங்கு. உடனே நடக்கணும். உடனே...”
தாய்க்கு சந்தோஷத்தால் மூச்சுவிட முடியவில்லை.
“பெண்ணை நான்தான் தேர்ந்தெடுப்பேன்.”
“பிறகு... அதைப்பற்றி சொல்லணுமா சங்கு?”
“எனக்கு விருப்பமான பெண்ணுக்கு எதிர்ப்பு சொல்லமாட்டேன்னு உறுதிமொழி தாங்கம்மா. ஸ்வயர் அப்பான் மீ...”
“இதோ, வாக்குறுதி தர்றேன்.”
“நான் சாருவை கல்யாணம் செஞ்சுக்கிறேன்.”
தாய் அதிர்ச்சியடைந்துவிட்டாள். இன்று வழக்கத்தைவிட அதிகமாக ‘பங்க்’ பருகிவிட்டானோ?
“நீ என்னிடம் விளையாடுறியா?”
“இல்லை அம்மா... ஐ ஆம் சீரியஸ்...”
அன்னை மிகவும் அமைதியாக இருந்தாள். சங்குவின் கண்களிலிருந்து தெளிவையும் அவனுடைய குரலிலிருந்த உறுதியையும் பார்த்தபோது, அவன் சுய உணர்வுடன்தான் பேசுகிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவள் உணவே சாப்பிடாமல் எழுந்து போய்விட்டாள். சங்கு அவளை பதைபதைக்கச் செய்துவிட்டான். சாரு நல்ல ஒரு இளம் பெண்தான். வயதிலும் தோற்றத்திலும் சங்குவுக்குப் பொருத்தமானவள்தான். ஆனால், இந்த உலகத்தில் இருப்பது தானும் சங்குவும் மட்டுமல்லவே! ஊரிலுள்ளவர்கள் என்ன கூறுவார்கள்? அவர்களின் முகத்தை எப்படிப் பார்ப்பது? யாரோ ஒருவனின் கர்ப்பத்தை வயிற்றுக்குள் சுமந்து கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணை...