சித்திக்கி - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6873
"வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் இரண்டு போர்த்துக்கீசியர்கள் என்னை அடித்துக் கொல்லப் பார்த்தார்கள். என்னுடைய பணப் பையை அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். நான் ஒரு பிரிட்டிஷ் குடிமகனான வியாபாரி. பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு தந்தி அடித்து என்னைப் பற்றிய தகவலை தெரிவித்த பிறகு அல்லாமல் வண்டியை விடுவதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.''
சித்திக்கியின் அசைக்கக் கூடிய குரல்தான் அங்கு காதில் விழுந்தது. ஆங்கிலமும் போர்த்துக்கீசிய மொழியும் கலந்த ஒரு மொழியில் தைரியத்துடனும் மிடுக்குடனும் இருந்த ஒரு கம்பீரமான சொற்பொழிவு.
"உங்களை யார் தொந்தரவு செய்தது?'' கார்டின் கேள்வி.
"இரண்டு போர்த்துக்கீசியர்கள்.''
"அவர்கள் எங்கு போனார்கள்?''
"எங்கும் போகவில்லை. இந்த வண்டியில் இரண்டாம் வகுப்பு அறைகளில் எங்கோ மறைந்திருக்கிறார்கள்.''
"உங்களுக்கு ஏதாவது காயம் உண்டானதா?''
"காயமா? என்னை அவர்கள் குத்தி ஒரு வழி பண்ணியிருக்கிறார்கள். பாருங்கள்... என்னுடைய ஆடையை.''
கிழிந்து போயிருந்த சட்டையையும் ஸ்வெட்டரையும் காட்டிய வாறு சித்திக்கி ஆண்மைத்தனம் நிறைந்த குரலில் சொன்னார்:
"உங்களுடைய போர்த்துக்கீசிய நாட்டில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இதை நான் தெரிவிக்காமல் விட மாட்டேன்.''
சித்திக்கி பிடிவாதம் பிடித்தவாறு அங்கேயே நின்றிருந்தார்.
கார்டு கவலைக்குள்ளானார். போர்த்துக்கீசிய எல்லையில் வைத்து இப்படி ஒரு பிரிட்டிஷ் குடிமகன் தொல்லைக்குள்ளானார் என்பது பெரிய ஒரு விஷயம்தான் என்று கார்டிற்கும் தோன்றியது. அவர் எல்லாவற்றையும் விசாரித்து தேவையானதைச் செய்வதாகவும், தற்போதைக்கு வண்டியில் ஏற வேண்டுமென்றும் சித்திக்கியிடம் கூறினார். சித்திக்கி காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
"என்னுடைய ஐந்தாறு பெட்டிகள் வண்டியில் எங்கெங்கோ கிடக்கின்றன. அவற்றைச் சற்று கீழே இறக்கிக் கொடுத்தால் போதும். வண்டியில் அல்ல. நான் மருத்துவமனைக்குப் போக வேண்டும். நீங்கள் இவற்றுக்கெல்லாம் பதில் கூற வேண்டியிருக்கும். ஞாபகம் இருக்கட்டும்.'' சித்திக்கி கார்டைப் பார்த்து எச்சரித்தார்.
கார்டின் அமைதியான போக்கும் சித்திக்கியின் பிடிவாதமும் சிறிது நேரம் நீடித்தது. இறுதியில், அடுத்த பெரிய ஸ்டேஷனில் "தீவிரமான ஒரு குற்றத்தை விசாரணை செய்வதற்காக வரும்படி” அங்குள்ள போலீஸ் கமிஷனருக்கு கார்டு தொலைபேசி மூலம் அறிவித்த பிறகுதான் சித்திக்கி வண்டியில் ஏறவே சம்மதித்தார்.
அடுத்த ஸ்டேஷனில் போலீஸ் கமிஷனர் வந்தார். அக்கிரமக் காரர்களான அந்த இரண்டு போர்த்துக்கீசிய இளைஞர்களையும் போலீஸ் தேடிப்பிடித்து கமிஷனருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.
"இவர்கள்தான் உங்களுக்கு தொல்லைகள் கொடுத்தார்களா?'' -கமிஷனர் சித்திக்கியிடம் கேட்டார்.
"ஆமாம்... இவர்கள் இருவர்தான்.'' சித்திக்கி அவர்களை வெறுப்புடன் சுட்டிக்காட்டியவாறு சொன்னார்.
"நீங்கள் எங்கே இருந்தீர்கள்?''
"எனக்கு இரண்டாவது வகுப்பு டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் மூன்றாவது வகுப்பு அறையில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.''
"இவர்கள் எதற்காக அங்கே வந்தார்கள்?''
"அதை இவர்களிடமே கேளுங்கள். நான் பெஞ்சில் ஏறி படுத்திருந்தேன். இவர்கள் திடீரென்று உள்ளே நுழைந்து என்னை கீழே பிடித்து இழுத்து, ஒரு நூறு முறை குத்து விட்டிருப்பார்கள். பிறகு என்னுடைய சட்டையையும் ஸ்வெட்டரையும் பிடித்துக் கிழித்து, நான் ஸ்வெட்டருக்குள் வைத்திருந்த பணப் பையை எடுத்துக் கொண்டார்கள். இறுதியில் எனக்கு ஒரு மீதியைத் தந்துவிட்டு, இவர்கள் பாட்டு பாடிக் கொண்டே திரும்பிச் சென்றுவிட்டார்கள். இதுதான் நடந்தது.''
போலீஸ் கமிஷனர் அந்தப் போர்த்துக்கீசிய இளைஞர்களை நோக்கித் திரும்பினார். "இவை எல்லாம் நீங்கள் செய்தவைதானா?''
அந்த இளைஞர்கள் முட்டாள்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு பேந்தப் பேந்த விழிக்க முயற்சித்தார்கள். தாங்கள் என்ன செய்தோம் என்பதைப் பற்றி அவர்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை. அவர்களுடைய மூளையிலும் கண்களிலும் மதுவின் போதை மறையாமல் இருந்தது.
"இந்த இந்தியாக்காரன் என்னை பீர் புட்டியால் அடிப்பதற்காக ஓங்கியதால்தான் நாங்கள் இவனைக் குத்தினோம்.'' இளைஞர்களில் ஒருவன் சித்திக்கியைச் சுட்டிக் காட்டியவாறு தாழ்வான குரலில் சொன்னான்.
"பீர் புட்டியால் நான் அடிப்பதற்காக ஓங்கினேனா? வெறும் பொய்... என் கையில் சிறு புட்டிகூட இல்லை. இதோ... இங்கே கூடி நிற்பவர்களிடம் கேளுங்க... வெறுமனே அமர்ந்திருந்த என்னை யார் கீழே பிடித்து
இழுத்து அடித்தார்கள் என்பதை...'' சித்திக்கி சற்று முனகியவாறு சொன்னார்.
பீர் புட்டியின் கதையைக் கேட்டதும், எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள் சித்திக்கியைப் பிடித்து இழுத்து அடித்ததன் ரகசியம் எனக்கு மட்டும் தெரிந்துவிட்டது.
"உங்களுடைய பணப் பையில் எவ்வளவு பணம் இருந்தது?'' -கமிஷனரின் கேள்வி.
"பன்னிரண்டு பவுனும் இருபது எஸ்க்யூடோஸும் (போர்த்துக்கீசிய கிழக்கு ஆப்பிரிக்கா நாணயம்) இருந்தன. என்னுடைய பணப் பையை அவர் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஒரு கோப்பை தேநீர் பருகுவதற்குக்கூட இனி என் கையில் காசு இல்லை.'' -சித்திக்கி கோபத்துடன் கூறினார்.
கமிஷனர் அங்கிருந்த பயணிகளில் சிலரிடம் விசாரணைகள் நடத்தினார். அந்த இரண்டு இளைஞர்களும் மது அருந்தி கட்டுப்பாடே இல்லாமல் பல அட்டகாசச் செயல்களையும் செய்ததாக பலரும் வாக்குமூலம் தந்தார்கள்.
கமிஷனர் அந்த இளைஞர்களை நோக்கித் திரும்பினார்: "நீங்கள் இவருக்கு இந்த இடத்திலேயே பன்னிரண்டு பவுனையும் இருபது எஸ்க்யூடோஸையும் கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இல்லாவிட்டால் சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறீர்களா?''
அந்தப் போர்த்துக்கீசிய இளைஞர்கள் முதலில் கூறிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, எதுவும் கூறாமல் பன்னிரண்டு பவுனையும் சில்லரையையும் எடுத்துக் கொடுத்தார்கள். கமிஷனர் தொகையை சித்திக்கியிடம் நீட்டினார். அவர் அதை வாங்கத் தயாராக இல்லை.
"எனக்கு கிடைத்த அடியைப் பற்றி...''
கமிஷனர் நல்ல வார்த்தைகள் கூறி சித்திக்கியைச் சமாதானப் படுத்தி, ஒரு விதத்தில் பணத்தை அவரைப் பெற்றுக்கொள்ளும்படி செய்தார்.
"இவர்கள் பிடித்து இழுத்துக் கிழித்த என்னுடைய புதிய ஸ்வெட்டருக்கான விலையையாவது எனக்குத் தராமல் இருக்க கூடாது.'' சித்திக்கி கிழிந்த ஸ்வெட்டரைச் சுருட்டி அவர்களுக்கு முன்னால் எறிந்தார்.
இறுதியில் கமிஷனர் அதற்கான விலையாக மேலும் ஒரு பவுனையும் அக்கிரமங்கள் செய்தவர்களிடமிருந்து வற்புறுத்தி வாங்கிக் கொடுத்தார்.
அந்த வகையில் எல்லா விஷயங்களும் ஒரு மாதிரி சமாதானமாக முடிந்தவுடன், வண்டி பயணத்தைத் தொடர்ந்தது.
வண்டி நகர்ந்து சிறிது நேரம் ஆனவுடன், யாரோ வந்து கதவைத் தட்டுவது கேட்டது.
"யார் அது?'' நான் அழைத்துக் கேட்டேன்.
"நான்தான்... சித்திக்கி.''
நான் கதவைத் திறந்தபோது, சித்திக்கி குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு என்னை இறுகப் பிடித்துக் கொண்டார்.
"ஹும்? என்ன இது? பணம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியா?'' -நான் கேட்டேன்.