சித்திக்கி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6873
சித்திக்கி மேலும் ஒரு சிகரெட்டை எடுத்து நெருப்பைப் பற்ற வைத்தார்.
யானைத் தந்த வர்த்தகத்திற்காகப் புறப்பட்டிருக்கும் அந்தப் பெரிய பணக்கார மனிதரை, ஒரு பெட்டி வியாபாரியாக நினைத்து விட்ட என்னுடைய அறிவுக் குறைவைப் பற்றி நான் மனதிற்குள் வருத்தப்பட்டேன்.
"யானைத் தந்த வர்த்தகத்தில் எந்தச் சமயத்திலும் இழப்பு உண்டாகாது. அது கெட்டுப் போகாத, விலை குறைப்பு இல்லாத ஒரு பொருள். தங்கத்தைவிட நாம் தந்தத்தை நம்பலாம்.'' சித்திக்கி தலையை வெளியே நீட்டிக்கொண்டு சொன்னார்.
"அது மிகவும் உண்மை.'' நானும் அவர் சொன்னதை ஒப்புக் கொண்டு சொன்னேன்.
வண்டி ஏதோ ஒரு புகைவண்டி நிலையத்தில் நின்றது. ப்ளாட் ஃபாரத்தில் இருந்த பயணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சித்திக்கி, "சோட்டு பாயி.. சோட்டு பாயி...'' என்று அழைத்தவாறு வேகமாக எழுந்தார்.
"பைராவில் நான் பார்க்கப் போகும் என்னுடைய நண்பர் இதோ இங்கே இருக்கிறார். நான் இங்கு இறங்குறேன். நீங்கள் தயவு செய்து என்னுடைய பெட்டிகளை சாளரத்தின் வழியாக வெளியே தள்ளுவதற்கு கொஞ்சம் உதவ வேண்டும்.''
சித்திக்கி வேகமாக வெளியேறினார். நான் அவருடைய பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே நீட்டினேன். அந்தப் பெட்டிகள் எடையே இல்லாமல் இருந்தது என்னை ஆச்சரியப்படச் செய்தது. அனைத்தும் எதுவுமே இல்லாத பெட்டிகளாக இருக்குமோ என்று ஒரு தோணல். ஒரு பெட்டி மட்டுமே கொஞ்சம் கனமாக இருந்தது.
"தேங்க் யூ வெரி மச். குட்பை'' என்று கூறியவாறு, ஒரு கருப்பின சுமை தூக்கும் மனிதனை பெட்டிகளை எடுக்கச் செய்து சித்திக்கி ஓடுவதை பிறகு நான் பார்த்தேன்.
நான் படுக்கையை விரித்து, தூங்குவதற்காக படுத்தேன்.
மறுநாள் காலையில் வண்டி பைராவை அடைந்தது. நான் என்னுடைய சூட்கேஸை எடுத்துக்கொண்டு ப்ளாட்ஃபாரத்தில் கால் வைத்தபோது, ஆச்சரியம் என்றுதான் கூற வேண்டும். சித்திக்கியும் அவருக்குப் பின்னால் ஆறு பெட்டிகளையும் தூக்கிக்கொண்டு ஒரு கறுப்பின மனிதனும் வேகமாக வெளியே ஓடிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்தேன்.
சித்திக்கியை பைராவில் அதற்குப் பிறகும் நான் இரண்டு முறை பார்த்தேன். துறைமுகத்திற்குச் சமீபத்தில் இருக்கும் "பாவலியோன்” பீர் கடையில் அவர் பீர் அருந்திக் கொண்டிருந்தபோது, நான் உள்ளே நுழைந்தேன். அவர் வாயில் கூர்மையான வாளைப் போல இருந்த பற்களைக் காட்டி சிரித்தவாறு என்னை வரவேற்று, ஒரு புட்டிக்கு ஆர்டர் கொடுத்தார்.
நான் வேண்டாம் என்று கூறிவிட்டுச் சொன்னேன்: "நான் மது அருந்த விரும்பவில்லை. உங்களைப் பார்த்ததால் இங்கு வந்தேன். யானைத் தந்த வியாபாரம் எப்படி இருக்கிறது?''
சித்திக்கி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியவாறு தலையை ஆட்டிக் கொண்டே சொன்னார்: "இங்கே இருக்கும் கொலைகாரர்களான சிந்தி வியாபாரிகளுடன் போட்டியிடுவது என்பது முடியாத விஷயம். யானைத் தந்தம் வியாபாரத்தை முழுமையாக அவர்கள் தங்களின் கைகளில் வைத்திருக்கிறார்கள்.''
"அப்படியென்றால் நீங்கள் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டீர்கள். அப்படித்தானே?'' நான் பரிதாபத்தை வெளிப்படுத்திய வாறு கேட்டேன்.
"எதுவும் கூறுவதற்கில்லை... பிறகு, நீங்கள் மது அருந்தவில்லையென்றால்... சரி... நாம் பிறகு பார்ப்போம்.''
சில நாட்கள் கடந்தன.
நான் "பைரா”விலிருந்து "ஸ்டேலன்டயரி”க்கு ஏறிய புகைவண்டி "வில்லெமச்சாதோ” நிலையத்தை அடைந்தபோது, மாலை நேரம் கடந்துவிட்டிருந்தது. வண்டி நிலையத்தை விட்டுக் கிளம்பியபோது, ஒரு மனிதர் மேலும் கீழும் மூச்சு விட்டவாறு ஓடி வருவதைப் பார்த்தேன். கவனமாகப் பார்த்தபோது, நம்முடைய சித்திக்கி. பின்னால் ஒரு குள்ளமான கறுப்பின மனிதனின் தலையிலும் தோளிலும் அந்த அரை டஜன் பெட்டிகள் நகர்ந்து வந்து கொண்டிருந்தன.
பெட்டிகள் அனைத்தையும் காரிடாரில் இறக்கி வைத்துவிட்டு, சித்திக்கி தயக்கத்துடன் அங்கேயே நின்றிருந்தார். சிறிது நேரம் கடந்ததும், அவர் என்னுடைய அறையைச் சற்று எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்ததும் வித்துவானுக்கு ஆச்சரியத்தைவிட சிரிப்புத்தான் அதிகம் உண்டானது. "ஓ... நீங்களும் ஏறியிருக்கிறீர்களா?'' என்று கேட்டவாறு சித்திக்கி என்னுடைய அறைக்குள் நுழைந்தார். பிறகு அறையில் இருந்த பயணிகளின் முகங்கள் அனைத்தையும் சற்று கூர்ந்து பார்த்தார்.
"இரண்டாவது வகுப்பு கிடைக்கவில்லை.'' அவர் கவலை கலந்த குரலில் தாடியைச் சொறிந்து கொண்டே சொன்னார்: "இடம் இல்லையாம். நாளை நான் ந்யாஸாலன்டிற்குப் போய் சேராமல் இருக்க முடியாது. அதனால் மூன்றாவது வகுப்பு டிக்கெட் வாங்கியிருக்கிறேன்''.
எங்களுக்குச் சற்று முன்னால் இருக்கும் அறைதான் மூன்றாவது வகுப்பு. ந்யாஸாலன்டிற்குச் செல்லும் புகைவண்டியில் மூன்றாவது வகுப்பு என்று சொன்னால், கறுப்பின மக்கள் ஏறக்கூடிய ஒரு மாட்டுத் தொழுவம்தான் அது. வெளிச்சமும் நீரும் இல்லாத- சுத்தமே இல்லாத ஒரு கூடு. அதற்குள் இருக்கும் நாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. அங்கு உட்கார்ந்து கொண்டு மிகப்பெரிய மனிதரான சித்திக்கி இரவு நேரத்தைக் கழிக்கப் போகிறார் என்பதைக் கேட்டவுடன்,
நான் அதிர்ந்து போய்விட்டேன். அவசரச் செயல்கள் உண்டாகும்போது, மனிதன் எதையும் சகித்துக் கொள்வதற்குத் தயாராகி விடுவானே?
"என்னுடைய பெட்டிகளில் ஒன்றிரண்டை இங்கு எங்காவது வைப்பதற்கு இடமிருக்கிறதா?'' சித்திக்கி ஒரு கெஞ்சுகிற குரலில் கேட்டார்.
எங்களுடைய அறையில் இருந்த நான்கு பெர்த்களிலும் ஆட்கள் இருந்தார்கள். அறை முழுவதும் சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன.
"இரண்டு மூன்று பெட்டிகளை வைக்கலாம் என்று தோன்றுகிறது.'' -சித்திக்கி சில காலி இடங்களைப் பார்த்து என்னைப் பார்த்துக் கூறினார்.
"வைக்க முடிந்தால், வையுங்கள்.'' நான் அந்த இந்திய நண்பருக்கு சம்மதம் அளித்தேன்.
அவர் இரண்டு தோல்பெட்டிகளை இரண்டு இடங்களில் திணித்து வைத்துவிட்டு, மீதமிருந்த பெட்டிகளுடன் காரிடாரிலேயே நின்று கொண்டிருந்தார்.
வண்டி பயணத்தைத் தொடர்ந்தது. அருகில் இருந்த மூன்றாவது வகுப்பு கறுப்பின மனிதர்களின் கூட்டத்திற்குள் இருந்து பாட்டுகளும் கறுப்பினப் பெண்களின் "ஹை- ஹெஹேய்'' என்ற உரத்த சிரிப்புச் சத்தங்களும் குழந்தைகளின் அழுகைச் சத்தமும் பல வகைப்பட்ட ஆரவாரங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. இடையில் அவ்வப்போது பழைய பிணக் குழியைத் தோண்டும்போது, வெளியே பரவுவதைப் போன்ற நாற்றம் காற்றில் எங்களுடைய அறைக்குள் நுழைந்து வந்து கொண்டிருந்தது.
இரண்டு மணி நேரங்கள் கடந்தன. நான் இடைவெளியைப் பார்த்தபோது, அங்கு சித்திக்கி இல்லை. வெளியே சென்று திரும்பிப் பார்த்தபோது, வித்துவான் இடைவெளியில் இருந்த தோலால் ஆன
வாசலின் வழியாக மூன்றாவது வகுப்பிற்குள் நுழைந்து, அங்கிருந்த ஒரு பெஞ்சில் மிடுக்குடன் உட்கார்ந்திருந்தார். அவருக்கு மிகவும் அருகில் ஒரு வெளுத்த கறுப்பினப் பெண் உட்கார்ந்திருந்தாள்.