சித்திக்கி - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6873
"கையைவிட்டுப் போகாத பணம் திரும்பக் கிடைத்த சந்தோஷம்.'' சித்திக்கி நடனம் ஆடியவாறு சொன்னார். "சுவாரசியத்தைக் கேட்கிறீர்களா? என்னுடைய பணப் பையைத் தவிர, பணம் என்று ஒரு எஸ்க்யூடோகூட கையை விட்டுப் போகவில்லை. பணப் பையும் போகவில்லை. நான் வீசி எறிந்து விட்டேன். என்ன நடந்தது
தெரியுமா? நான் மூன்றாவது வகுப்பில் அந்த வெளுத்த கறுப்பின பெண்ணுக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். அந்த போர்த்துக்கீசிய குடிகாரர்களுக்கு அதைப் பார்த்ததும் ஒரு பெறாமையோ கோபமோ ஏதோவொன்று உண்டாகிவிட்டது. அவர்கள் என்னிடம் வந்து வேறு இடத்தில் போய் அமரும்படி சொன்னார்கள். நான் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது அவர்கள் என்னைக் கீழே பிடித்து இழுத்து ஒரு குத்து விட்டு, அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்கள். அது மட்டும்தான் நடந்தது. பிறகு எல்லாவற்றையும் மனதில் நினைத்தபடி செய்தது நான்தான். நான் பணப்பையிலிருந்து பணம் எல்லாவற்றையும் எடுத்து என்னுடைய ஷூக்களுக்குள் திணித்து வைத்துவிட்டேன். பணப்பையை வெளியே எறிந்து விட்டேன். போலீஸ் என்னைப் பிடித்து எங்கே சோதனை செய்து விடுவார்களோ என்றொரு முன்னெச்சரிக்கையால்தான் அதைச் செய்தேன்.
பிறகு நான் என்னுடைய பழைய ஸ்வெட்டரைப் பிடித்து இழுத்துக் கிழித்தேன். அந்தச் சிறிய புகை வண்டி நிலையம் நெருங்கியவுடன் வண்டியின் அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தியும் விட்டேன். அதற்குப் பிறகு நடந்தவை அனைத்தும் உங்களுக்குத்தான் தெரியுமே!''
"சரியான புத்திசாலிதான்!'' நான் சித்திக்கியின் முதுகைத் தட்டியவாறு அவருடைய திறமையைப் பாராட்டினேன்.
சித்திக்கி குனிந்துகொண்டு தன்னுடைய ஷூக்களுக்குள்ளிருந்து நோட்டுகளை வெளியே எடுத்துக்கொண்டே சொன்னார்: "இந்த போர்த்துக்கீசிய போக்கிரிகளிடம் பிரச்சினை உண்டாகாமல் இருக்க, இப்படிப்பட்ட பல வழிமுறைகளைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களுடைய நாடாயிற்றே!''
"ஆமாம்... ஒரு அடி கிடைத்தது போனால் போகட்டும். பன்னிரண்டு பவுனை பிடுங்கி விட்டீர்களே?'' "பன்னிரண்டு பவுன் எனக்கு புல் மாதிரி.'' சித்திக்கி பழைய யானைத் தந்த வியாபாரியாக மாறியவாறு சொன்னார்: "அவர்களுக்கு நல்ல ஒரு பாடம் கற்பிக்க முடிந்ததே! அதுதான் நான் செய்த நல்ல காரியம். அது இருக்கட்டும். நான் என்னுடைய பெட்டிகளை எடுப்பதற்காகவும் உங்களிடம் விடை பெறுவதற்காகவும்தான் வந்தேன். நான் அடுத்த ஸ்டேஷனில் இறங்கப் போகிறேன்.''
அவர் அதைக் கூறி முடிப்பதற்குள், வண்டி அடுத்த ஸ்டேஷனை நெருங்கிவிட்டிருந்தது.
"அப்படியென்றால்... பிறகு பார்க்கலாம்... குட்பை'' என்று கூறியவாறு சித்திக்கி இரண்டு பெட்டிகையும் எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினார்.
அப்படியென்றால், அந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு பீர் புட்டி அல்லாமல் ஒரு வெளுத்த நீக்ரோ பெண்ணும் இருக்கிறாள் இல்லையா? நான் அதை நினைத்து ரசித்துக் கொண்டே தூங்குவதற்காகப் படுத்தேன்.
மறுநாள் காலையில் போர்த்துக்கீசிய எல்லையைக் கடந்து, ந்யாஸாலென்டின் முதல் புகைவண்டி நிலையமான "போர்ட் ஹெரால்”டை அடைந்தது. பயணிகளின் சாமான்களைச் சோதனை செய்து பார்ப்பதற்காக எல்லாரும் அந்த சோதனை நிலையத்தில் இறங்க வேண்டும்.
பெட்டிகள் எல்லாவற்றையும் திறந்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு கிடைத்ததும், நாங்கள் ஒவ்வொருவராக பெட்டிகளை எடுத்து தயார் பண்ணி வைக்க ஆரம்பித்தோம். வீங்கிய உதட்டையும் புடைத்த மூக்கையும் காட்டியவாறு மடகாஸ்கர்காரரும் கீழே இறங்கி, தன்னுடைய பெட்டிகளைத் தேடி எடுக்க ஆரம்பித்தார்.
அவர் தவிட்டு நிறத்தில் இருந்த ஒரு தோலால் ஆன பெட்டியைத் தேடி எடுத்து முன்னால் வைத்து திறக்க நினைத்தார். சாவியை எடுத்து திறக்க முயன்றார். சாவி பொருந்தவில்லை. அவர் சந்தேகப்பட்டு பெட்டியைக் கூர்ந்து கவனித்தார்.
"அய்யோ... இது என்னுடைய பெட்டி இல்லையே!'' என்று கூறியவாறு அவர் பதைபதைப்புடன் அறை முழுவதையும் அலச ஆரம்பித்தார். அதே மாதிரியான இன்னொரு பெட்டி அங்கு யாரிடமும் இல்லை.
"அய்யோ... என் பணப்பெட்டி போயிடுச்சே!'' மடகாஸ்கர்காரர் தலையில் அடித்துக்கொண்டு கூப்பாடு போட்டார். "இதே மாதிரியான ஒரு தோல் பெட்டி இருந்தது. இது என்னுடையதல்ல.''
அவர் அந்த தோல் பெட்டியைத் தூக்கி குலுக்கிப் பார்த்தார். "இது காலி பெட்டியாக இருக்கிறதே, கடவுளே! என் பெட்டியில் நிறைய நகைகளும் பணமும் இருந்தன.''
சித்திக்கி பல வகைப்பட்ட ஆறு பெட்டிகளை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டு திரிவதன் ரகசியம் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. மடகாஸ்கர்காரரின் சிரமமான நிலைமையைப் பார்த்து பரிதாபப்படுவதா, சித்திக்கியின் சாமர்த்தியத்தை நினைத்து சிரிப்பதா... என்ன செய்வது என்று தெரியாமல் நான் அறையை விட்டு எழுந்து வெளியே சென்றேன்.