பிசாசு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6694
ஒரு மூன்று வருடங்கள் ரகசியமாக நான் காதலித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ‘ஹெல'னை... பெயர் அதுவல்ல. எனினும், நான் ‘ஹெலன்' என்றுதான் அழைக்கிறேன். ‘மைடியர் ஹெலன் ஆஃப்...' -இப்படித்தான் காதல் உணர்வு நிறைந்த என்னுடைய இதயம் அவளை அழைக்கிறது. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? ‘ஹெலன் ஆஃப் ட்ராய்'யைப் பற்றி... ங்ஹா... அதே போலத்தான் தோற்றம். இருண்ட ஆழமான பகுதிகளை வெளிப்படுத்தும்- சற்று முன்னோக் கியிருக்கும் கறுத்த விழிகள்... நீண்டு, சிவந்த முகம்... சிவந்த, மென்மையான உதடுகள். பிப்ரவரி 23-ஆம் தேதிதான் நான் முதல் முறையாக அவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுதினேன். அதைத் தொடர்ந்து இதுவரை ஒரு தொண்ணூறு காதல் கடிதங்கள் எழுதி அனுப்பியிருப்பேன். என்னுடைய உயிரோட்டம் நிறைந்த குருதியில் அமிழ்த்தி எழுதிய காதல் கடிதங்கள்! ம்... அவள் பதில் எழுதினாள். என் ஹெலன் பரந்த மனம் கொண்டவள். சாப்பிட்டு முடித்து ஒரு பெரிய கொட்டாவி விட்டுக்கொண்டே அவையனைத்தையும் வாசித்து முடித்துவிட்டு, ஹெலன் எனக்கு பதில் எழுதினாள்:
என்மீது அவள் அன்பு வைத்திருக்கிறாள்- ஆனால் ஒரு சகோதரனிடம் அன்பு வைத்திருப்பதைப்போல. என்ன? என் ஹெலனை பிசாசு என்கிறீர்களா? சட்! உன்னை நான் அடித்து நொறுக்கிவிடுவேன்! ங்ஹா! மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை. இனிமேல் எச்சரிக்கையுடன் இருந்துகொண்டால் போதும்.
என் ஹெலன்! எல்லையற்ற பெண்மைத்தனத்தின் அடையாளம். ஆமாம்... அவளை நான் வழிபடுகிறேன். என்ன? கேட்பதற்கு சுவாரசியமாக இல்லையா? ஓ... அப்படியென்றால், தூங்கிக் கொள்ளுங்கள். குட் நைட்!... ங்ஹா! பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? மைசூர் சமஸ்தானத்தில். அங்கு போயிருக்கிறேனா என்று கேட்கிறீர்களா? சரிதான்! இந்தியா முழுவதும் நான் பயணம் செய்திருக்கிறேன். ஒன்பது பத்து வருடங்கள் தொடர்ந்து அலைந்து கொண்டிருந்தேன். எங்கெங்கெல்லாம் தெரியுமா? இந்தியாவின் பூகோள வரைபடத்தை விரித்துப் பார்க்கும்போது கவனித்திருக்கிறீர்கள் அல்லவா? சிறிது சிறிதாக இருக்கும் கறுப்பு நிற வட்டங்கள்? ங்ஹா... அவையனைத்தும் நகரங்கள். அவற்றில், நூற்றுக்கு எழுபத்தைந்தில் நான் வசித்திருக்கிறேன். ஆஃப்கானிஸ்தான் வழியாக ரஷ்யாவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், வைக்கத்திலிருந்து புறப்பட்டு கைபர் கணவாயை அடைந்தபோது, ஐந்து வருடங்கள் கடந்து விட்டிருந்தன. நத்தை ஊர்வதைப்போல நடவடிக்கை இருந்தது. அப்படியே ரஷ்யாவை அடையும்போது வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிடும் என்ற பயம் உண்டானதால், திரும்பி வந்துவிட்டேன். போனது? நாடுகளைப் பார்ப்பதற்கு. பணம்? அவற்றை எப்படியோ உண்டாக்கினேன். செய்யாத வேலையும், ஏற்காத ஜாதியும், போடாத வேடமும் இல்லை. சூழ்நிலைக்கேற்றபடி நான் எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். ஊ...? அந்த கிருகிரா சத்தத்தைப் பற்றி கேட்கிறீர்களா! ஓ... அது ஏதாவது நாயாக இருக்கும். காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேளுங்கள். அது வாசனை பிடித்துக்கொண்டே காய்ந்து போன சருகுகளின் வழியாக பதுங்கிப் பதுங்கி நடந்து போய்க் கொண்டிருக்கிறது.
டும்கூரில் உண்டான அனுபவத்தைக் கேட்கிறீர்களா? நான் கூற மாட்டேன். நீங்கள் பயந்து விடுவீர்கள். நாய்கள் ஊளையிட்டுக் கொண்டு ஓடித்திரிந்துகொண்டிருக்கும் இந்த நள்ளிரவு வேளை கூறுவதற்கு ஏற்றதல்ல. ஒரு பிசாசைப் பற்றிய விஷயமது. பயமில்லை என்கிறீர்களா? ஓ எஸ்... அப்படியென்றால், கூறுகிறேன். ஆனால், இடையில் புகுந்து எதுவும் கேட்கக்கூடாது. வெறுமனே ‘உம்' கொட்டிக்கொண்டு கேட்டால் போதும்.
ங்ஹா! அந்தக் காலத்தில் நாங்கள் ‘உலக சுற்றுப் பயணம் போய்க்கொண்டிருந்தவர்கள்'. ஆமாம்... என்னுடன் ஒரு நண்பனும் இருந்தான். பறவூரைச் சேர்ந்தவன். என்னுடைய நெருங்கிய தோழனும், சம வயதைக் கொண்டவனுமாக அவன் இருந்தான். பெயர்- சிவராமன் கர்த்தா. மெலிந்து, உயரமாக, மாநிறத்தில் அவன் இருந்தான். நுனி கூர்மையாகவும், மெலிய ஆரம்பித்துமிருந்த மூக்கும், பிரகாசமான கறுப்பு நிறக் கண்களும், சற்று அகலமான முகமும், மெல்லிய உதடுகளும்... பற்கள் இரண்டு வரிசைகளிலும் வெளியே நன்கு தெரியும் வண்ணம் சிரித்துக் கொண்டிருப்பான். கரகரப்பான குரலில் இருக்கக்கூடிய உரையாடலைக் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். யாரையும் பேசியே மயக்கிவிடுவான். யாரும் கோபம் கொள்ள முடியாத அளவுக்கு ஒரு குணத்தைக் கொண்டிருந்தான் கர்த்தா. என்னுடைய நீண்டகால பயணத்திற்கு மத்தியில் எனக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். ஆனால், நான் கோபம் கொண்டு பிரியாத ஒரே ஒரு நண்பன் கர்த்தா மட்டுமே. ‘உங்களுடைய மிகப் பெரிய நண்பன்' - இந்த வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் பத்து முறையாவது கர்த்தா கூறாமல் இருக்கமாட்டான். எதுவுமே தெரியாத ஒரு சிறிய குழந்தை நான் என்று கர்த்தா தன் மனதில் நினைத்துக்கொண்டிருந்தான். அதே நேரத்தில், என்னைப் பார்த்து அவனுக்கு மிகப்பெரிய அச்சம் இருந்தது. என்னுடைய விருப்பத்திற்கேற்றபடிதான் அவன் ஒவ்வொரு செயல்களையும் செய்வான். எங்காவது சென்றால் மனிதர்களைப் பார்ப்பது, உணவிற்கான வழியைக் கண்டுபிடிப்பது- இவைதான் கர்த்தாவின் வேலை.
கையில் கிடைக்கும் பணம் முழுவதையும் என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தான். கண்களில் படும் பலகாரங்கள் எல்லாவற்றையும் வாங்கிவிட வேண்டும்... பெரிய சாப்பாட்டுப் பிரியன் அல்ல. எனினும், அவற்றை வாங்கியே ஆகவேண்டும் என்று நினைப்பான் கர்த்தா. மூக்குப் பிடிக்க சாப்பிட்டு முடித்து, வெளியே சென்று ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தவுடன், ஒரு பொட்டலம் அல்வாவோ, ஜிலேபியோ, வேர்க்கடலையோ... இவற்றில் ஏதாவது கர்த்தாவின் கையில் இல்லாமல் இருக்காது. அப்போது அவனுடைய முகத்தில் தெரியும் உணர்ச்சிகளைப் பார்த்தால், நான் ஏங்கி, ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு கனியை- மிகப்பெரிய தியாகம் செய்து, பறித்துக்கொண்டு வருவதைப்போல இருக்கும். நான் கோபப்பட்டால், சிரித்துக்கொண்டே கூறுவான்:
‘‘டேய் மகனே, உனக்காகத்தான் வாங்கிக்கொண்டு வந்திருக்கேன்!''
அதனால் காசு முழுவதையும் என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற கட்டாயச் சட்டத்தைச் செயல் வடிவத்திற்குக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலை உண்டானது. ங்ஹா... ‘டேய் மகனே' என்றுதான் நாங்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வோம். பள்ளிக்கூடம் மூடப்படாத காலமாக இருந்தால், நாங்கள் சொற்பொழிவு நடத்துவோம். சொற்பொழிவு ஆற்றுவதோ நாட்டு நிலைமைகளை பற்றி... ஏய்! நான் சொற்பொழிவு ஆற்றமாட்டேன். கர்த்தாதான் சொற்பொழிவுகளை நடத்திக் கொண்டிருப்பான். நான் பெரிய ஒரு மனிதனைப்போல- வேட்டைக்குச் செல்லும் வெள்ளைக்காரன் அணியும் ஆடைகளை அணிந்துகொண்டு, கூடியிருப்பவர்களுக்கு முன்னால் கம்பீரமாக அமர்ந்திருப்பேன். ‘ஒருமுறை நான் ஒரு புலியுடன் ஒரு மணி நேரம் கடுமையாகப் போரிட்டேன்.