பிசாசு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6694
அதன் வாலைப்பிடித்து, தலையை சுற்றச் செய்து பாறையில் அடித்துக் கொன்றேன் என்று கர்த்தா அள்ளி விட்டுக் கொண்டிருந்தான். ஒரு நான்கய்யாயிரம் கண்கள் என்னை நோக்கி ஆச்சரியத்துடன் திரும்பின. காதலும் மரியாதையும் வியப்பும் கலந்த பெண்மணிகளின் கண்மணிகள் என்மீது பதிந்தபோது, வெட்கத்தால் அன்று என்னால் மூச்சே விடமுடியவில்லை. ங்ஹா... சிவராமனின் சொற்பொழிவு! ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஆங்கிலத்தில்... ஒரு எம்.ஏ., படித்தவனின் ஸ்டைலில். இண்டர்மீடியட் வரைதான் படித்திருக்கிறான். சொற்பொழிவை எழுதி சீர் செய்வது நான். கர்த்தா யாருக்கும் தெரியாமல் படிப்பான். மிகவும் அருமையாக சொற்பொழிவு ஆற்றுவான். சரி... பள்ளிக்கூடம் மூடப் பட்ட காலத்தில்தான் நாங்கள் டும்கூருக்குச் சென்றோம். டும்கூர்... எதுவுமே இல்லாத தரிசு நிலங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய நகரம். மைசூர் மாநிலம் பெரும்பாலும் வறண்டு காய்ந்துபோன தரிசு பூமியைக் கொண்டதே. மலையும், குன்றுகளும், தரிசு நிலமும். நீருக்கு மிகவும் சிரமம். குளங்கள் ஏராளமாக இருந்தன. விவசாயத்திற்குத் தேவைப்படும் நீர் பெரும்பாலும் குளங்களில் இருந்துதான் கிடைத்தன. ஏதாவதொரு மலையின்மீது ஏறி நின்று கொண்டு மதிய நேரத்தில் பார்க்க வேண்டும். மேகக்கூட்டங்கள் பிரகாசிப்பதைப்போல, ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஏராளமான குளங்களைப் பார்க்கலாம். மைசூர் மாநிலத்தில்தான் ‘நீர்கள்' இருக்கின்றன. உப்பு நீர், சுண்ணாம்பு நீர், புளிப்பு நீர், கந்தக நீர்... சில கிணறுகளில் கசப்பான நீரும் இருக்கும். இருக்கும் ஆறுகள் பெரும்பாலான காலங்களிலும் வறண்டு காய்ந்துபோய்தான் கிடக்கும். வெண்மணல்...
அந்த வகையில் நீர் வற்றிப்போன ஒரு ஆற்றுக்கு அருகிலிருந்த ஒரு சத்திரத்தில்தான் நாங்கள் தங்கியிருந் தோம். பொதுவாக இருக்கக்கூடிய சோம்பலுடனே நான் சத்திரத்தில் அமர்ந்திருந்தேன். நல்ல மதிய நேரம்! கடுமையான வெப்பம் இருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டு முடித்து, வெறுமனே உட்கார்ந்துகொண்டிருந்த காரணத்தால் நான் சற்று கண் அயர்ந்துவிட்டேன். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.
‘‘திறக்கடா, மகனே...'' அன்பு கலந்த கர்த்தாவின் குரல்... கண்ணைக் கசக்கிக்கொண்டே நான் கதவைத் திறந்தேன். என் கண்கள்- கறுத்த, உயரம் குறைவாக இருந்த- அறிமுகமில்லாத ஒரு முகத்தின்மீது சென்று பதிந்தன. ஒரு அங்குலம் நீளத்தில் முடி இருந்த உருண்டையான தலை, தடிமனான மேலுதடு முழுவதும் நீளமாக வளர்ந்திருந்த மீசை, சதைப்பிடிப்பு கொண்ட கூர்மையான நாசி, மிகவும் நெருக்கமாகக் காணப்பட்ட பூனைக் கண்கள், நீளமான கதர் ஜிப்பா, பாதங்கள் வரை நீண்டிருந்த கதர் வேட்டி, காலில் தோல் செருப்பு, கையில் பெரிய பிரம்புக் கழி... அனேகமாக முப்பத்தைந்து வயதிருக்கும்.
‘‘இவர் பெண்கள் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர். பெரிய இந்தி பண்டிதரும்கூட. பண்டிட் நரசிம்மன். உங்களுடன் அறிமுகமாக வேண்டும் என்பதற்காக வந்தார்'' என்ற முன்னுரையுடன் கர்த்தா அறிமுகப்படுத்தினான். எனக்கு நன்கு இந்தி தெரியும் என்பதால், நாங்கள் வெகுசீக்கிரம் நண்பர்களாகி விட்டோம். அவருடைய அமைதியான உரையாடல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. சிரிக்கும்போது அந்த கறுத்து இருண்ட முகத்திலிருந்த இரண்டு வரிசைப்பற்களும் ‘பளபள' வென பிரகாசிக்கும். பூனைக் கண்கள் எந்தவித அசைவுமில்லாமல் ஒளிர்ந்துகொண்டிருக்கும். ஈர்க்கக்கூடிய குரலும், அழகான புன்னகையும்... அரை மணிநேரம் கழிந்து அவர் சென்ற பிறகு கர்த்தா சொன்னான்:
‘‘டேய் மகனே... உன்னுடைய நடத்தையின்மீது அவருக்கு நல்ல அபிப்ராயம் உண்டானது மிகவும் நல்லதாகி விட்டது.''
எனக்கு தாங்கமுடியாத அளவிற்கு கோபம் வந்தது. ‘‘நான் என்ன அந்த அளவிற்கு நாகரீகமற்ற மனிதனா? உனக்கு மட்டும்தான் எப்படி நடந்துகொள்வது என்று தெரியுமாக்கும்!'' கர்த்தா குலுங்கிக் குலுங்கி சிரித்தான். ‘‘அது இல்லடா மகனே! அவர் மிகவும் பெரிய மனிதர். நல்ல செல்வாக்கு கொண்ட ஒரு பொதுநல செயல்பாட்டாளர். விடுமுறைக் காலமாக இருப்பதால் அவர் இப்போது ஒரு இந்திப் பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். இது தவிர, அதிகாரிகளின் வீடுகளிலிருக்கும் மாணவிகளுக்கு ட்யூஷன் கற்றுத் தருகிறார். அவருடைய ஆதரவிருந்தால், நமக்கு இங்கிருந்து நல்ல ஒரு தொகை...''
கர்த்தாவின் அந்தக் கருத்து உண்மையான ஒன்று என்பதாக எனக்குப் பட்டது. நான்கைந்து நாட்கள் தொடர்ந்து பழகியதையடுத்து அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு பெரிதாக இருக்கிறது என்பதையும் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. அவருக்கு இருந்தது வெறும் செல்வாக்கு மட்டுமல்ல; மக்கள் அவர்மீது உயர்ந்த மதிப்பு வைத்திருந்தனர். அவர்மீது ஈடுபாடு வைத்திருந்தனர். பணக்காரர்களும், ஏழைகளும், பதவியில் இருப்பவர்களும்...
நாங்கள் மனதில் நினைத்திருந்ததைவிட அதிகமான உதவி டும்கூரில் எங்களுக்குக் கிடைத்தது. இந்தி மாஸ்டரின் செல்வாக்கே அதற்குக் காரணம்.
அதிகாலை வேளையில் டும்கூரைவிட்டுப் புறப் படவேண்டுமென்று முடிவு செய்திருந்ததால், கர்த்தா பொருட்கள் அனைத்தையும் கட்டி தயார் செய்துகொண்டிருந்தான். மாஸ்டரிடம் நானும் சென்று விடை பெற்றுக் கொள்ளவேண்டுமென்று கர்த்தா கட்டாயப்படுத்திக் கூறினான். என்னுடன் ஒரு கர்நாடக மாணவனையும் துணைக்கு அனுப்பி வைத்தான். அவன் மாஸ்டரின் இந்தி சிஷ்யன். அரைமைல் தூரத்திலிருந்த பெண்கள் பள்ளிக்கூடத்தில் தற்போதைக்கு மாஸ்டர் தங்கியிருந்தார். நகரத்திற்கு வெளியே இருந்த ஒரு மைதானத்திற்கு அருகில் அந்த பள்ளிக்கூடம் இருந்தது.
வழியில் நாங்கள் பேய்களைப் பற்றி பேசிக்கொண்டு வந்தோம்... என்னுடைய ‘ஸ்டாக்'கில் இருந்த ஒரு பேய் பற்றிய கதையை நான் கூறினேன். மலையைப் போல இருந்த ஒரு கரும்பூதம் என்னுடைய நெஞ்சின்மீது ஏறி உட்கார்ந்து, கழுத்தை இறுகப் பிடித்து மூச்சுவிட முடியாமல் செய்த விஷயம்... மாணவனுக்குத் தோன்றியது வேறொன்று. அவன் ஒரு காட்டில் சிக்கிக்கொண்டான். திடீரென்று நான்கு ஆட்கள் தோன்றினார்கள். ஒரு ஆளின் தோல் உரிந்தது. தோல் உரிந்த மனிதனின் சதையை மூன்று ஆட்களும் சேர்ந்து அறுத்து துண்டு துண்டாக்கி பச்சையாக சாப்பிட்டார்கள். அவனையும் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார்கள். அது ஒரு கனவு.
தான் உணர்ந்த வேறொன்றையும் அவன் கூறினான்.
இறந்துபோன குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு அழுதவாறு நடந்துபோய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணின் ஆவியைப் பற்றி... அதை பலரும் பார்த்திருக்கிறார்கள் என்பது அந்த மாணவனின் கருத்தாக இருந்தது. நாங்கள் நகரத்தைவிட்டு மைதானத்தில் கால்களை வைத்தோம். இரவு பத்துமணி தாண்டியிருக்க வேண்டும்.
வறட்சியான காற்று மெதுவாக முனகியவாறு வீசிக்கொண்டிருந்தது. நல்ல இருட்டு. நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்த இருண்ட வானத்திற்குக் கீழே, மேலும் சற்று கறுப்பாக பள்ளிக்கூடம் தெரிந்தது.
பள்ளிக்கூட கட்டடத்தை நாங்கள் நெருங்கிக் கொண்டிருந்தோம். பேரமைதி... காற்றின் இடைவிடாத முனகல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.