பிசாசு - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6694
எதுவும் பேசாமலேயே நாங்கள் நடந்தோம். மாணவன் தன் வீட்டு வாசற்படி வந்ததும், அவன் விடை பெற்றுக்கொண்டான். மிகவும் கவலையைத் தரக்கூடிய ஒரு இறுதிப் பயணம்! ஒன்பது பத்து வருடங்களுக்கிடையில் ஒரு ஐம்பதாயிரம் பெண்களும் ஆண்களும் என்னிடம் இறுதிவிடை கூறியிருக்கிறார்கள். எனினும், வெறுப்பும் ஏமாற்றமும் கோபமும் கவலையும் நிறைந்த அந்த மாணவனின் முகம் என்னுடைய நினைவு மண்டலத்தில் அப்படியே பசுமையாக நின்று கொண்டிருந்தது.
கனவில் நடப்பதைப்போல நடந்து நான் சத்திரத்தை அடைந்தேன். ‘‘என்னடா மகனே... மாஸ்டருடன் சந்திப்பு எப்படி இருந்தது? நீ சண்டை போடவில்லையே?'' வழக்கமான சிரிப்புடன் இருந்த கர்த்தாவின் கேள்விக்கு பதில் கூறுவதற்கு என்னால் முடியவில்லை. மொத்தத்தில்- எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை. சாக்கடைக்குள் புதைந்து போய்விட்டதைப்போல எனக்கொரு தோணல். என்னுடைய நிலைமையைப் பார்த்து கர்த்தா ஆச்சரியமடைந்து. காலிலிருந்து தலை வரை என்னையே பார்த்தான். வியப்புடன் எழுந்து சுட்டிக்காட்டியவாறு கேட்டான்.
‘‘இந்த ரத்தம் எங்கேயிருந்து வந்தது?''
‘‘ரத்தமா?''
பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து...!
என்னுடைய மனம் அதிர்ந்துபோய்விட்டது. பதைபதைப்புடன் நான் பார்த்தேன். ரத்தம்! ஆமாம்... வெள்ளை நிற வேட்டியில் நான்கைந்து இடங்களில் ரத்தம்! என்னுடைய சரீரம் முழுவதும் குளிர்ந்து போய்விட்டது. அணிந்திருந்த ஆடையை வெறுப்புடன் சுழற்றி வராந்தாவில் வீசி எறிந்தேன். தீப்பெட்டியைத் தடவி எடுத்து ஒரு குச்சியை உரசி நெருப்பைப் பற்ற வைத்தேன். காற்று ஓசை உண்டாக்கியவாறு வேகமாக வீசியது. கர்த்தாவின் முகத்தில் வெளிச்சத்தை உண்டாக்கியவாறு நெருப்பு பெரிதாக பற்றி எரிந்தது. குள்ள நரியின் ஊளையிடும் சத்தம் உரத்துக் கேட்டது. கதராடை எரிந்து கொண்டிருப்பதை நான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். வாழ்க்கையில் முதல்முறையாக நான் எரியச் செய்யும் கதராடை!
பதைபதைப்புடன் கர்த்தா என் கண்களையே பார்த்தான். தோளைப் பற்றிக் குலுக்கியவாறு கேட்டான்: ‘‘என்னடா மகனே, இதன் அர்த்தம் என்ன?''
‘‘அர்த்தம்?''
‘‘ங்ஹா... என்ன? சொல்லு... உனக்கு என்ன ஆனது?''
வேட்டி நன்கு எரிந்து முடிந்தது. கொஞ்சம் கறுத்த சாம்பல் மட்டும் எஞ்சியது. அதை காலால் தட்டி விட்டு, முற்றத்தில் சிதறச் செய்தேன். காற்றில் அது பறந்து சென்றது. நான் அறைக்குள் நுழைந்து ஒரு பீடியைப் பற்றவைத்தேன். இடையில் அவ்வப்போது ஓரக் கண்களைக் கொண்டு என்னுடைய செயல்களைக் கூர்ந்து கவனித்தவாறு கர்த்தா அறைக்குள் இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டிருந்தான். நண்பனின் பார்வையையும் நடவடிக்கைகளையும் பார்த்து, நான் எழுந்து சென்று கதவின் தாழ்ப்பாளைப் போட்டேன். நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறினேன். கர்த்தாவின் முகம் பிரகாசமானது. அவன் அறிவுரை கூறினான்:
‘‘டேய், மகனே... நீ குளித்துவிட்டு படுத்துக்கிடந்தால் போதும். எனினும், அந்த இருட்டில் நீ பயப்படவில்லையே! பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறாயே!''
அன்றிரவு அந்தக் குளிரில், கிணற்றின் உப்பு நீரில், கர்த்தா கட்டாயப்படுத்தி என்னை குளிக்கச் செய்தான்.
ங்ஹா! அதிகாலை வேளையில் நாங்கள் டும்கூரை விட்டுப் புறப்பட்டோம். என்ன? பயணத்தின் ஆரம்பத்திலிருந்து கூற வேண்டுமா? சரிதான்... அதற்கு இதைப் போன்ற எவ்வளவோ இரவுகள் வேண்டும். சரி... இருக்கட்டும். நாம் தூங்குவோம். என் சரீரத்தில் உரச வேண்டாம்... சற்று தள்ளிப்படு... ங்ஹா... குட்நைட்! விஷ் யூ ஸ்வீட் ட்ரீம்ஸ்! குட் நை....