பிசாசு - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6694
அடைக்கப்பட்டிருந்த மாஸ்டரின் அறையின் சாளர இடைவெளி வழியாக பொன்னாலான நூலைப்போல வெளிச்சம் தெரிந்தது.
‘‘நரசிம்மஜீ...'' சாளரத்தைத் தட்டியவாறு வெளியே நின்றுகொண்டு நான் அழைத்தேன். மாணவனும் அழைத்தான். கன்னடத்தில் என்னவோ கூறி அழைத்தான். எந்தவொரு அசைவும் இல்லை. நாங்கள் தொடர்ந்து தட்டிக்கொண்டே அழைத்தோம். பேரமைதி... யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
‘‘தூங்கிவிட்டிருப்பார்...'' -நான் கூறினேன். ‘‘ஏய்... இவ்வளவு சீக்கிரம் தூங்கும் பழக்கமில்லை. இன்னொரு கதவு மூடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்போம்...'' மாணவன் திரும்பினான். சிறிய தோட்டத்தின் வழியாக விளையாட்டு மைதானத்தையும் தாண்டி நாங்கள் முன்பக்கத்திற்குச் சென்றோம். தூரத்தில் எங்கோ ஊளையிட்டுக்கொண்டிருக்கும் குள்ளநரிகளின் சத்தம். பொதுச்சாலையிலிருந்த விளக்கின் ஒளி கறுத்த சிமெண்ட் படிக்கட்டில் விழுந்துகொண்டிருந்தது. கதவு திறந்துதான் கிடந்தது. மாஸ்டரின் அறை, கூடத்தின் வடக்கு மூலையில் இருந்தது. நாங்கள் பேசிக்கொண்டே உள்ளே சென்றோம். அடர்த்தியான இருட்டு... காற்றின் முனகல் சத்தத்திற்கு மத்தியில் குள்ளநரியின் ஊளைச் சத்தம் தெளிவில்லாமல் கேட்டது. நான் முன்னாலும், மாணவன் பின்னாலுமாக தட்டுத்தடுமாறி முன்னோக்கி போய்க்கொண்டிருந்தோம். தூண்கள்! தூண்கள்! தலை இடிக்காமல், இருட்டில் தூண்களில் போய் மோதிவிடாமல், கண்பார்வை தெரியாமல், கையையும் கால்களையும் கொண்டு தேடியவாறு நீளமான கூடத்தின் வழியாக முன்னேறிச் செல்லும்போது, என்னுடைய கை குளிர்ச்சியான மென்மையான ஏதோ ஒன்றில் பட்டது. திடீரென்று ஒரு முனகல் சத்தம். இருட்டில் ஏதோவொன்று என்னுடைய சரீரத்தின்மீது சாய்ந்தது. உறுப்புகள் அனைத்தையும் பிடிப்பதைப்போல ஒரு பிடி! என்னுடைய சரீரம் முழுவதும் குளிர்ந்து போய்விட்டது. அதிர்ச்சியடைந்த நான், ஒரு நிமிடம் திகைப்பில் உறைந்துபோய் நின்றுவிட்டேன். பயப்படவில்லை. பலத்தைப் பயன்படுத்தி அதைப் பிடித்திழுத்து விலக்கி உதறியெறிந்துவிட்டு தப்பிப்பதற்கு நான் முயற்சித்தேன். என்னுடைய வாயில் நீர் இல்லை. தொண்டை வற்றிப்போன நிலை. என்னுடைய கை படுவது வெப்பமுள்ள, வழுவழுப்பான மனித சரீரத்தில்! அவிழ்ந்து தாறுமாறாக சிதறிக் கிடக்கும் தலைமுடி! மென்மையான முகம்! உருண்ட, மினுமினுத்துக் கொண்டிருக்கும் மார்பகங்கள்! நிர்வாணமான உடல்! வாயில் எதையோ இறுகக் கடித்துப் பிடித்துக்கொண்டிருக்கிறாள்! இருட்டுக்கு மத்தியில் நடத்திய ஆராய்ச்சியில் நான் தெரிந்துகொண்டது இவ்வளவுதான்... என் இதயம் மிகவும் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. நெற்றியில் குளிர்ச்சியான வியர்வை அரும்பிவிட்டிருந்தது. தலைக்குள் லட்சக்கணக்கான வண்டுகள் ஒரே நேரத்தில் இரைச்சல் போடுவதைப் போல தோன்றியது. அது மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது! அதன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது! என்ன செய்வதென்று தெரியாமல் நான் நின்றுகொண்டிருந்தபோது, மாணவன் பதை பதைப்புடன் கேட்டான்: ‘‘எ... என்ன... அது?'' வேகமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்ததால், உடனடியாக அவன் மனதை அமைதிப்படுத்த முடியவில்லை. ஒரு வகையில் மூச்சைப் பிடித்துக்கொண்டு நான் சொன்னேன்: ‘‘என்னவா? ஒரு பெண்...''
‘‘பெண்?''
‘‘ங்ஹா... பெண்ணேதான். தீப்பெட்டியை உரசு.''
‘‘அய்யோ! தீப்பெட்டி இல்லையே...''
‘‘பரவாயில்லை... பேசாமல், எச்சரிக்கையுடன் திரும்பி நட...''
என்னுடைய இடுப்பிலிருந்த பிடியை விடுவித்துக் கொண்டு, அதன் கையை இறுகப் பற்றிக்கொண்டு, நான் தட்டுத் தடுமாறியவாறு திரும்பி நின்றேன். பின்னால் என்னவோ அசைந்தது. என்ன அது?
தட்டுத் தடுமாறி நாங்கள் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு கதவுக்கு அருகிலிருந்த வெளிச்சத்தில் போய்ச் சேர்ந்தோம். என் இதயம் நடுங்கிக் கொண்டிருந்தது. நிர்வாணமான ஒரு கறுத்த இளம்பெண்! பதினான்கு பதினைந்து வயதிருக்கும். அவளுடைய சிவப்பு நிறப் புடவையின் பாதியளவு வாய்க்குள் திணித்து வைக்கப்பட்டிருக்கிறது. எப்படியோ நாங்கள் அதை வெளியே எடுத்தோம். அவள் மூச்சு விட்டாள். வேகமாக அவள் புடவையைச் சுற்றிக் கட்டினாள். அந்த வேகத்தில் ஒரு நாலணா நாணயம் (கால் ரூபாய்) ‘க்ணிம்' என்று ஓசை எழுப்பியவாறு படிக்கட்டில் விழுந்தது. வெட்கத்துடன் அவள் அதை குனிந்து எடுத்தாள். மாணவன் கன்னட மொழியில் என்னவோ கேட்டான். நிறுத்தி நிறுத்தி தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அவள் என்னவோ சொன்னாள். பயம் நிறைந்திருந்த அந்த பெரிய கண்களைத் திருப்பி இடையில் அவ்வப்போது என்னைப் பார்த்தாள். எனக்கு எதுவுமே புரியவில்லை. மாணவனின் முகம் வெளிறிப் போய், சிறிதுகூட ரத்தமே இல்லாததைப்போல காணப்பட்டது. அவன் தன் தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி தனக்குத் தானே வீசிக்கொண்டு நின்றான். அவள் சாலையின் அந்தப் பக்கத்திலிருந்த ஒரு சிறிய வீட்டைச் சுட்டிக்காட்டினாள். மாணவன் தலையால் கட்டளை யிட்டான். கண்ணீரில் குளித்த விழிகளை அவள் என் முகத்தை நோக்கி உயர்த்தினாள்.
‘‘ஹய்யா... நான்...''
அவள் முழுமை செய்யவில்லை. சிவந்த கன்னங்களின் வழியாக கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.
அந்தக் கண்களில் ஒரு பதைபதைப்பும் பரபரப்பும் காணப் பட்டன. அவள் படிக்கட்டைவிட்டுக் கீழே இறங்கினாள்.
எங்கள் இருவரின் முகங்களையும் மாறிமாறிப் பார்த்து விட்டு, தலையை குனிந்துகொண்டே அவள் நடந்து சென்றாள். இடையில் அவ்வப்போது புடவை நுனியால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். நடந்து நடந்து சாலையைக் கடந்து அந்தச் சிறிய வீட்டின் கதவை அடைந்து, மீண்டும் ஒரு முறை அவள் திரும்பிப் பார்த்தாள். ஒரு கதவு மெதுவாக மூடப்படும் ‘கிர்கிரா' சத்தம் காற்றில் கலந்து ஒலித்தது. அதற்குப் பிறகும் காற்று முனகியவாறு வீசிக்கொண்டிருந்தது. மாணவன் நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே மெதுவான குரலில் சொன்னான்:
‘‘பால்காரியின் மகள். மாஸ்டருக்கு தினமும் பால் கொண்டு தருபவள் இவள்தான்... இன்று...''
அவன் என்னுடைய ‘முகத்தைப் பார்த்தான். கவலை நிறைந்த அந்தப் பார்வை என் இதயத்தில் ஆழமாகப் பதிந்தது. நான் எதுவும் கூறவில்லை. பேரமைதியாக சில நிமிடங்கள் நகர்ந்தன. படிக்கட்டுகளில் கிடந்த ரத்தத் துளிகளின்மீது என்னுடைய பார்வை பதிந்தபோது, மாணவன் தன் முகத்தைத் திரும்பிக் கொண்டான். கவலையுடன் அவன் கேட்டான்.
‘‘மாஸ்டரைப் பார்க்கணுமா?''
‘‘ம்... கட்டாயமில்லை...''
எனினும், கூடத்திற்குத் திரும்பி வந்தோம். நான் அழைத்தேன்: ‘‘நரசிம்மஜீ! நாங்கள் அதிகாலையில் புறப்படுகிறோம். விடைபெற்றுக் கொள்வதற்காக வந்தேன்.''
என்னுடைய குரல் எங்கும் மோதாமல் கூடம் முழுக்க கேட்டது. அதற்குப்பிறகும் கூடம் பேரமைதியுடன் இருந்தது. எந்தவொரு அசைவும் இல்லை. எந்தவொரு பதிலும் வரவில்லை. நாங்கள் வெளியேறி நடந்தோம். மாஸ்டரின் அறைச் சாளரத்தின் இடைவெளியில் நூலைப்போல இருந்த அந்த வெளிச்சம் அப்போது இல்லை.
‘‘நீங்கள் மிகவும் தைரியசாலிதான்...'' அந்த மாணவன் சொன்னான்.
நான் எதுவும் கூறவில்லை.