
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அந்த நகரத்தையே உலுக்கிய இன்னொரு கொலைச் சம்பவம் நடந்தது. இந்த முறை நீதிபதி தன் அன்பு மகளைக் கொலை செய்திருந்தார்.
மரணமடைகிறபோது அந்தப் பெண்ணுக்கு பத்தொன்பது வயது நடந்து கொண்டிருந்தது. பெண்களுக்காக, பெண்களின் முன்னேற்றத்திற்காக, பெண்களின் உரிமைகளுக்காக நடந்த எல்லா போராட்டங்களுக்கும் அவள் தலைமை தாங்கி நடத்தியிருந்தாள். பலரும் அவளின் பங்களிப்பை பலமுறை பாராட்டி இருக்கிறார்கள்.
நீதிபதியும் அவர் வீட்டு வேலைக்காரனும் இப்போது லாக்-அப்பில் இருக்கிறார்கள். என்னுடைய நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் இவர்களின் வழக்கைப் பதிவு செய்தவர். தன்னுடைய காதலியின் தந்தையையே கைது செய்து தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்த அமைதியான காதலனின் நிலைதான் உண்மையிலேயே பரிதாபமானது.
"அவளோட பார்வை'' தாடியில் கை வைத்தவாறு, ஆழ்ந்த சிந்தனையுடன் என்னுடைய நாற்காலியில் அமர்ந்தவாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சொல்லுவார்: "என்னோட நண்பனே, வெண்ணெய் போலிருந்த என்னோட மனசில சூரியனின் ஒரு பிரகாசமான கதிர் ஒரு நாள் வந்து விழந்துச்சு. அது எந்த அளவுக்கு சுகமான ஒரு அனுபவம் தெரியுமா?''
இது நடந்தது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு. என் ஸ்டுடியோவிற்கு அவள் ஒவ்வொரு நாளும் இரண்டு வார காலம் பதிவாக வந்தாள். நீதிபதி கேட்டுக் கொண்டார் என்பதற்காக, அவரின் அன்பு மகளை நான் ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் இன்ஸ்பெக்டரும் அந்தப் பெண்ணும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள். ஒரே நேரத்தில் நான் அவளின் இரண்டு படங்களை வரைந்தேன். ஒன்று எனக்கு. இன்னொன்று நீதிபதிக்கு. அவள் அது குறித்து ஒன்றுமே சொல்லவில்லை. மேஜை மேல் கைகளை ஊன்றிக் கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அவளின் படத்தை நான் நீதிபதிக்குக் கொடுத்தேன். மென்மையான வெள்ளை ஆடை அணிந்து
பூமியைத் தேடி வந்திருக்கும் அப்சரஸ் என மென்னகை புரிந்து கொண்டிருக்கும் அவளின் இரண்டாவது படத்திற்கு "சொர்க்கத்தில் இருந்து ஒரு கவிதை" என்று பெயரிட்டு நான் வைத்துக் கொண்டேன். ஓவியக் கண்காட்சியில் அந்த ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. இது ஒருபுறமிருக்க, அதே ஓவியத்தை ஒரு காலண்டர் கம்பெனி ஆறாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது. இந்த விவரங்களை எல்லாம் ஒரு பரிசுப் பொருளுடன் அவளுக்கு எழுதி அனுப்பினேன். அதற்கு அவள் என்ன பதில் எழுதினாள் தெரியுமா?... "ஓவியரே! நீங்கள் அனுப்பியிருந்த இந்தத் தங்கத்தால் ஆன கைக் கடிகாரம் மிக விலை உயர்ந்தது என்று நினைக்கிறேன். இதை ஏற்றுக் கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்று கூறிவிடலாமா என்று பலமுறை யோசித்தேன். கடைசியில், ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்று தீர்மானித்தேன். ஆனால், என் அறையில் இருக்கிற ஓவியத்தின் முகத்தில் ஒரே கவலை... ஏக்கம்... சோகவயப்பட்ட விழிகளால் அந்த ஓவியம் என்னையே பார்க்கிறது. அதனால் எப்போதும் இதைக் கையில் கட்டிக் கொண்டிருப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்."
அதற்கு அடுத்த நாள் அவள் கல்லூரிக்குச் செல்லும்போது, மார்போடு சேர்த்து புத்தகங்களைப் பிடித்திருந்த இடது கையின் மணிக்கட்டில் நான் அனுப்பியிருந்த தங்கக் கடிகாரம் பொன்னொளி வீசியதைப் பார்த்தேன். அவள் ஸ்டுடியோவுக்கு வரும்போதும் போகும்போதும் பெரும்பாலும் இன்ஸ்பெக்டர் அங்கு இருப்பார். இப்படி தனக்குள் ஒரு அமைதியான காதலை அவர் நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டிருந்தார். அந்த ரகசியக் காதலுக்கு சாட்சி நான் மட்டுமே. என்னுடைய கவனம் முழுவதும் அவரின் காதல் தீயை எப்படி அணைப்பது என்பதிலேயே இருந்தது.
"நீங்க ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டர்"- ஒருநாள் நான் சொன்னேன்: "அவளோ நீதிபதியோட மகள்...! இந்தக் காதல் நடக்கக்
கூடியதா? உங்களுக்குள் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்கு பார்த்தீங்களா...?"
"சரிதான்..."- அவர் நான் சொன்னதை ஒப்புக் கொண்டார். இது நடந்து இரண்டு மாதங்கள் கழித்து அவர் என்னிடம் கேட்டார்: "நான் ஒரு போலீஸ் கமிஷனரா ஆயிட்டா? "
"பிரச்சினையே இல்ல..."-நான் சொன்னேன்.
அவர் சொன்னார்:
"அப்படின்னா அதற்கு நான் முயற்சிக்கிறேன்."
நான் அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். இந்தச் சமயத்தில்தான் டாக்டரின் மகன் பிரின்ஸிபாலின் மகனைக் கொலை செய்த சம்பவமும் அதைத் தொடர்ந்து டாக்டரின் மகனைத் தூக்கில் தொங்கவிட்டதும் நடந்தது. இது நடந்து நூற்று நான்காம் நாள்- அதாவது போனமாதம் இரண்டாம் தேதி இரவு நீதிபதி தன் மகளைக் கொலை செய்தார்.
இந்தக் கொலையைப் பற்றி நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சத்தியமான உண்மை என்று குற்றவாளிகள் ஒத்துக் கொண்டனர்.
அந்தச் சம்பவம் நடந்தது இரவு பத்து மணிக்குமேல். விவரிக்கப்படும் சம்பவத்தைப் பற்றி எதுவுமே இன்ஸ்பெக்டருக்கு- சொல்லப்போனால் தெரியவே தெரியாது. ஸ்டேஷன் பாரா பார்த்துக் கொண்டிருந்த ஆளை ஒரு கப் காப்பியும், ஒரு பாக்கெட் சிகரெட்டும் வாங்கி வரச் சொல்லி அனுப்பிய இன்ஸ்பெக்டர் மேஜை மேல் கால்கள் இரண்டையும் தூக்கிப் போட்டு நீட்டியவாறு நாற்காலியில் மல்லாக்க சாய்ந்து அமர்ந்திருக்கிறார். அவரின் மனதில் என்னென்னவோ சிந்தனைகள். எல்லாவற்றையும் அசை போட்டவாறு கண்கள் மூடி அவர்
ஓய்வெடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். நகரத்தின் ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிட்டிருந்தது. சுண்ணாம்பு பூசிய சுவர்களில் மின்விளக்கின் ஒளிபட்டு பிரகாசிப்பதை அவர் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சுவர்களுக்கு நீல வண்ணம் பூசினால் இன்னும் நன்றாக இருக்குமே என்று அவர் மனம் அப்போது நினைத்தது. இதை நினைத்தவாறு அவர் கண்களை மூடினார். இரண்டு நிமிடங்கள் அவர் கண்களை மூடியிருப்பார். வெளியே காலடி ஓசைகள் கேட்டன. ஸ்டேஷன் பாராதான் வந்து கொண்டிருக்கிறார் என்று அவர் நினைத்தார். ஆனால், வந்த ஆள் உள்ளே வரவில்லை.
"இங்கே கொண்டு வரவேண்டியதுதானே... எவ்வளவு நேரமாச்சு..." இன்ஸ்பெக்டர் கூறினார்.
பதிலுக்கு கம்பீரமான- அதே சமயம், மரியாதை கலந்த குரல்.
"இன்ஸ்பெக்டர்..."
இன்ஸ்பெக்டர் திடுக்கிட்டு, கழுத்தைப் பின்பக்கமாய் திருப்பிப் பார்த்தார். பார்த்தவர் ஸ்தம்பித்துப் போனார். அவருக்கு முன்னால் பயந்து நடுங்கிக் கொண்டே வீட்டு வேலைக்காரன்; அவனுக்குப் பின்னால் பயங்கர கோபத்துடன் நீதிபதி! வேலைக்காரன் தன் கையில் கனமான ஏதோ ஒரு பொருளை உருண்டையாக வெள்ளைத் துணியில் சுற்றி வைத்திருக்கிறான். அந்த உருண்டையான துணிப் பொட்டலத்துக்குக் கீழே சிவப்பாக ரத்தம் "சொட், சொட்" என்று விழுந்து கொண்டிருக்கிறது. நீதிபதியின் வலது கையில் கூர்மையான ஒரு பெரிய கத்தி, இடது கையில் ஒரு கட்டு கடிதங்கள். நீதிபதியின் விழிகளில் கோபமும், ஆக்ரோஷமும் ஏராளமாகத் தெரிந்தன!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook