ரகசியம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7043
உண்மையாக சொல்லப் போனால், அது ஒரு முகப்பரு உண்டாக்கிய தழும்பு. அந்தத் தழும்புதான் அவளை அவரை நோக்கி இழுத்தது. ஆனால், மிருனாளினி டீச்சர் அது எதையும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. ‘‘குஞ்ஞிராமன் டிரைவரை எதற்குத் திருமணம் செய்தாய்’’ என்று யாராவது கேட்டாள், அவள் அலட்சியமாகக் கூறுவாள். ‘‘ஓ... அது அப்படி நடந்திருச்சு!’’
மாதவியின் குழந்தை மீண்டும் அழுகிறது. ‘‘குட்டிக் கண்ணா... ஓ...ஓ...ஓ...’’ என்று மாதவி குழந்தையைத் தூங்க வைக்க முயற்சித்தாள். குஞ்ஞிராமன் டிரைவரின் மனம் மிருனாளினியின் வெளிறிப் போன வயிற்றை நோக்கித் தாவியது. அவள் தற்போது கர்ப்பமாக இருக்கிறாள். நான்கு மாதம் கடந்தால், அவளும் தன்னுடைய குழந்தையை இப்படி தாலாட்டு பாடி கொஞ்சித் தூங்க வைத்துக் கொண்டிருப்பாள். அந்தக் காட்சி அவருடைய இதயத்தில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது.
டிரைவர் எழுந்தார். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக வீட்டிற்குச் சென்று, மிருணாளினியின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் ஆவல் கொண்டார். க்ளீனர் பையன் இல்லையென்றாலும், தான் மட்டும் தனியாக மலையை விட்டு இறங்கி காலையில் வீட்டை அடைய வேண்டியதுதான் என்று முடிவெடுத்து, அவர் லாரியில் ஏறி என்ஜினை ஸ்டார்ட் பண்ணினார்.
நல்ல நிலவு வெளிச்சம் வயநாட்டின் பள்ளத்தாக்குகள் நிலவு வெளிச்சத்தில் மறக்க முடியாத ஒரு அழகைப் படைத்துக் கொண்டிருநந்தன. அதை ரசிப்பதற்கு அவருக்கு கண்கள் இல்லை. நேரமும் இல்லை. டிரைவரின் அழகுணர்வு கண் விழிப்பது. மிருணாளினியின் முகத்தைப் பார்க்கும்போது மட்டும்தான். நெற்றியின்மீது சிதறி விழுந்திருக்கம் சுருள் முடியுடன் அவள் மெத்தையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சியைத் தான் தனக்கு முன்னால் தெரிந்த பள்ளத் தாக்குகளின் காட்சிக்கு பதிலாக அவர் கண்டார்.
மலைக்கு மேலே முதல் திருப்பத்தை அடைந்தபோது ஒரு மனிதன் லாரிக்கு முன்னால் வந்து நின்று கொண்டு கையை நீட்டினான். டிரைவர் லாரியை நிறுத்தினார்.
‘‘எங்களை கொஞ்சம் மலைக்குக் கீழே விட முடியுமா? லக்கிடி மூலையைத் தாண்டி காட்டு யானைகள் இறங்கியிருக்கின்றன என்று கொஞ்ச நேரத்திற்கு முன்னால் கடந்து சென்ற லாரிக்காரர்கள் சொன்னாங்க. நாங்க தாமரைச் சேரிக்கு நடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.’’
ஒரு முஸ்லீம். அந்த மனிதனுடன் இன்னொரு முஸ்லீமும் இருந்தான். துணைக்கு ஆட்கள் வந்து சேர்ந்தது மாதிரியும் ஆனதே என்று நினைத்து டபிரைவர் அவர்களை லாரியில் ஏற்றுவதற்கு ஒப்புக் கொண்டார். ‘‘அப்படின்னா... பின்னால்... காப்பி மூட்டைகளுக்கு மேலே ஏறி படுத்துக்கோங்க.’’
அந்த நடந்து செல்லும் மனிதர்கள் இருவரும் காப்பி மூட்டைகளுக்கு மேலே பற்றிக் கொண்டு ஏறினார்கள். ‘‘ஏறியாச்சா? லாரியை விடட்டுமா?’’ டிரைவர் அழைத்துக் கேட்டார். ‘‘விடுங்க...’’ ஒருவன் பதில் சொன்னான். லாரியில் மலையில் இறங்க ஆரம்பித்தது.
பின்னால் ஏறிப் படுத்திருந்த அந்த இரண்டு மனிதர்களும் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். டிரைவர் சிறிதுநேரம் அவர்களுடைய உரையாடலை கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களுடைய முதலாளி ஒருநாள் ஏதோ ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து, அவளை அனுபவித்த ஒரு சம்பவத்தைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கதையின் முதல் பகுதியை அவர் கேட்கவில்லை. அந்தப் பெண்ணைத் தன்னுடைய ரகசிய இல்லத்திற்கு வரைவைப்பதற்காக அந்த விடாக்கண்டனான முதலாளி எப்படிப்பட்ட தந்திரத்தை பயன்படுத்தினார் என்ற விஷயம் அவருக்குத் தெரியாது.
‘‘முதலாளிக்கு அந்த டீச்சரிடம் இந்த அளவிற்கு அதிகமான ஈடுபாடு தோன்றியதற்கு காரணம் என்னவென்று தெரியுமா அபுபக்கர்?’’
அவர்களில் ஒருவனின் கேள்வி.
‘‘நல்ல நிலவு வெளிச்சத்தில் வெள்ளரிக்காயைப் போன்ற ஒரு பெண் ஆச்சே அவள்! நான் பார்த்திருக்கிறேன்.’’ அபுபக்கரின் பதில்.
‘‘அவளை சும்மால்ல முதலாளிக்குப் பிடிச்சது... ஒரு விஷயம் தெரியுமா அபுபக்கர்? அவளுக்கு ஒரு விசேஷம் இருக்கு. முதலாளிதான் சொன்னார். அவளுடைய மார்பகங்களில் ஒண்ணு சின்னதாகவும் ஒண்ணு பெரியதாகவும் இருக்குமாம். ஒண்ணு பாக்குக்காயின் அளவு. இன்னொண்ணு தேங்காய் அளவு. ஹ... ஹ... ஹ... அந்த வித்யாசம்தான் நம்ம முதலாளிக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு.’’
குஞ்ஞிராமன் டிரைவரின் இதயத்தில் ஒரு குண்டு வெடித்ததைப் போல இருந்தது. ஸ்டியரிங் சக்கரத்தில் இருந்த அவருடைய பிடி நழுவி விலகிச் சென்றது. அந்த ஆபத்து நிறைந்த வளைவில் இருந்து அவர் லாரியை எப்படியோ ஓட்டிக் காப்பாற்றினார்.
மிருணாளினி டீச்சரின் மார்பகங்களின் அமைப்பும் அந்த முஸ்லீம் கூறியதைப் போலத்தான் இருந்தன. அவளுடைய மார்பகங்களின் அளவு சமமாக இருக்காது. ஆனால், அது அவளுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய ரகசியம் என்று அவர் நினைத்திருந்தார்.
டிரைவரின் மனதிலும் கண்களிலும் இருட்டு நுழைந்தது- ஆபத்தான ஒரு பதைபதைப்பு கலந்த இருட்டு. அவருக்கு முன்னால் வழி திரும்பவில்லை. திடீரென்று தோன்றிய கடுமையான திருப்பங்களில் அவர் சக்கரத்தைத் திருப்பி ஓட்டுகிறார். லாரி முரண்டு பிடிக்கிறது. அலறுகிறது, குதிக்கிறது - கீழே இருக்கும் ஆழமான பள்ளத்தாக்குகளை நோக்கிச் சாய்கிறது. திடீரென்று நிமிர்ந்து திரும்புகிறது.
‘அது அவளாக இருக்காது.’ டிரைவர் தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொள்ள முயற்சித்தார். இரண்டு அளவுகளில் உள்ள பெண்கள் வேறு சிலரும் இருக்கக்கூடாது என்றில்லையே!
ஆனால், நிலவு வெளிச்சத்தில் வெள்ளரிக்காயின் நிறம்- அப்படி ஒரே மாதிரி இருக்குமா? அவர் ‘ஹ்ர’ போல இருந்த ஒரு திருப்பத்திலிருந்து சக்கரத்தை ஒரு மரணப் பிடி பிடித்தார்.
‘அந்த முஸ்லீம்களிடைமே கேட்டு விடுவோம்- அந்தப் பெண் யார் என்று, அடிவாரத்தை அடையட்டும்.’ இப்படி மனதில் நினைத்துக் கொண்டே அவர் மலைப்பாதை வழியாக மிகவும் வேகமாக இறங்க ஆரம்பித்தார்.
லாரி தாமரைச்சேரி பஜாரை அடைந்தபோது, நான்க மணி ஆகிவிட்டிருந்தது. குஞ்ஞிராமன் டிரைவர் ஒரு தேநீர்க் கடைக்கு முன்னால் லாரியை நிறுத்தினார். அந்த முஸ்லீம்களுக்கும் ஒவ்வொரு கோப்பை சூடான தேநீரை வாங்கிக் கொடுத்து, அவர்களிடமிருந்து அந்த ரகசியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்து அவர் பின்னால் திரும்பி அழைத்தார். ‘‘ஏ காக்கா... தாமரைச் சேரி வந்திருச்சு இறங்குங்க...’’
பதில் இல்லை.
‘‘இன்னும் என்ன தூக்கம்?’’ டிரைவர் மட்கார்டின் மீது மிதித்து நின்று கொண்டு, சற்று எட்டிப் பார்த்தார்.
அந்த மூட்டைகளின் மீது ஒரு உயிரும் இல்லை.