இறுதி விருந்தாளி - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6790
கடிதம் கிடைத்ததும் நான் அங்கு போயிருக்கலாம். அவளைத் திருமணம் செய்திருக்கலாம். ஆனால், அவளுடைய தாய், தந்தைக்குப் பயந்து நான் உடனே நகரத்தை விட்டுக் கிளம்பி என் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு, நான் பல இடங்களிலும் அலைந்து திரிஞ்சேன். பட்டினி கிடந்தேன். நோயால் பீடிக்கப்பட்டேன். கிழவனாக ஆனேன். எனக்கென்று யாருமில்லாத மனிதனாக ஆனேன். அப்படி இருக்கும் போதுதான் என் நாக்கில் ஒரு பழுப்பு தோன்றியது. அது புற்றுநோயாக வர வாய்ப்பு இருக்கிறது என்று டாக்டர் சொன்னார். உடனே பம்பாய்க்குப் போகும்படியும் டாட்டா மெமோரியல் மருத்துவமனைக்குச் சென்றால், நான் ஒருவேளை காப்பாற்றப்படலாம் என்றும் அவர் சொன்னார். என் சகோதரியின் மகன் சசி பம்பாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அவனுக்குக் கடிதம் எழுதிப் பணம் வரும்படி செய்தேன். அதற்குப் பிறகு இங்கே வந்தேன்."
மாதவன் பிள்ளை தொடர்ந்து சொன்னார்: "அப்போது தான் அனுசூயாதேவி இங்கே பெரிய அந்தஸ்துடன் வாழந்து கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அவளைப் பார்க்க வேண்டுமென்று நான் நினைத்தேன். நான் இழப்பதற்கு எதுவும் இல்லையே! ஏதாவது கிடைத்தால் லாபம்தானே?"
"அவங்க எழுதின கடிதம் கையில இருக்கா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
மாதவன் பிள்ளை தலையை ஆட்டினார். "அது மட்டும்தான் வாழ்க்கையில் என் சம்பாத்தியமா இருக்கு"- அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: "நான் அவளுக்குக் கடிதம் எழுதியது தவறு என்றால், என்னை நீங்கள் தண்டிக்கலாம். நான் சிறையில் இருக்கலாமே! கொஞ்ச காலம் அரசாங்கத்தின் செலவில் இருக்கலாம். அவள் உங்களை என்னைக் கைது செய்றதுக்காக அனுப்பி வைத்தாளா? புற்று நோய் பாதித்திருக்கும் இந்தக் கிழவனை?"
"அனுசூயாதேவி என்னை அனுப்பி வைக்கல. அனுப்பவும் முடியாது"- இன்ஸ்பெக்டர் சொன்னார்: "அவங்க இறந்துட்டாங்க. நேற்று இரவு அவங்களை யாரோ குத்திக் கொலை செய்திருக்காங்க. அது யாரென்று விசாரிப்பதற்காகத்தான் வந்திருக்கேன்."
"நான் இல்ல..."- மாதவன் பிள்ளை சொன்னார்: "நான் எந்தக் காலத்திலும் அவளைக் கொல்ல மாட்டேன். நான் எதற்கும் லாயக்கு இல்லாதவனா இருக்கலாம். ஆனால், நான் ஒரு கொலை செய்யக்கூடியவன் இல்லை."
"அது எனக்குத் தெரியும்"- இன்ஸ்பெக்டர் சொன்னார்: "உங்களுடைய மருமகன் நேற்று இரவு எங்கே போயிருந்தான்?"
"அவன் இங்கேதான் இருந்தான். படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தான்"- பிள்ளை சொன்னார்: "அவனுக்கு அவளுடைய முகவரிகூட தெரியாது. அவனைச் சந்தேகப்படாதீங்க. அவன் நிரபராதி. அவன்கூட வசிக்க வந்ததால் அவனுக்கும் பிரச்சினையாயிடுச்சு. நான் கேரளத்திலேயே கிடந்து இறந்திருக்கலாம்."
இன்ஸ்பெக்டர் எழுந்தார்: "நான் போய் வரட்டுமா?"- அவர் சொன்னார்: "மீண்டும் எப்போதாவது பார்ப்போம்."
4
பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் சுரேந்திர மேத்தாவை எதிர்பார்த்து அவருடைய அறைக்கு வெளியில் இருந்த வராந்தாவில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார். ஒரு இளம்பெண் அவருக்கு அருகில் வந்து நின்று கொண்டு சொன்னாள்: "என்னிடம் அந்தக் கொலை வழக்கு சம்பந்தமா பல தகவல்கள் இருக்கு."
இன்ஸ்பெக்டர் எதுவும் கூறவில்லை. அவளைப் பார்க்கும் போது ஒரு ஹிஸ்டீரியா வந்தவள் என்று யாராக இருந்தாலும் கூறுவார்கள். மெலிந்து ஒட்டிப்போன உடல். ஒளிர்ந்து கொண்டிருக்கும் கண்கள்.
"என் பெயர் மேரி!"- அவள் சொன்னாள்: "நான் சுரேந்திர மேத்தாவின் சிஷ்யை. அவருடைய ரகசியங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும்."
"நான் மேத்தாவிடம் பேசுவதற்காகத்தான் வந்திருக்கேன். சிஷ்யையிடம் அல்ல"- இன்ஸ்பெக்டர் சொன்னார்.
"அவர் உணவு சாப்பிட்டுவிட்டு வரட்டும். அதுவரை என்னிடம் கேள்விகள் கேளுங்கள்"- அவள் சொன்னாள்.
சுரேந்திர மேத்தா அனுசூயாவை மதிக்கும் ஒரு மனிதர் என்று மேரி சொன்னாள். அவர் அவளுக்குக் காதல் கடிதங்கள் எழுதி அனுப்பியது மட்டுமல்ல- அவளைப் போய் பார்ப்பதும் உண்டு. கொலை நடந்த இரவு வேளையில் அவர் அவளுடைய வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ஆடை அணிந்து சென்றிருக்கிறார். அவர் வாடகைக் கார் பிடிப்பதைப் பார்த்த போது, 'எங்கு போகிறீர்கள்?' என்று மேரி அவரிடம் கேட்டிருக்கிறாள். அனுசூயா வீட்டில் நடக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ளச் செல்வதாக அவர் கூறியிருக்கிறார். அவர் அணிந்திருந்த ஆடைகள் விநோதமாக இருந்திருக்கின்றன. கருப்பு நிற பேன்ட், கருப்புநிற சட்டை, கருப்புநிற கைக்குட்டை, மரணச் சடங்கில் அஞ்சலி செலுத்துவதற்காகப் போவதைப்போல அவருடைய அப்போதைய நிலை இருந்தது என்-று சொன்னாள் மேரி. அப்போது சுரேந்திர மேத்தா அவளிடம் எதுவும் சொல்லவில்லையாம்.
"எனக்கு அனுசூயா தேவி மீது மிகப் பெரிய பொறாமை இருந்ததாக அவர் நினைத்திருந்தார். எனக்கு எதற்கு அந்த நடுத்தவர வயதைக் கொண்ட பெண்ணிடம் பொறாமை இருக்க வேண்டும். அனுசூயாதேவியைப் பற்றி காதில் கேட்க முடியாத பலதரப்பட்ட கதைகள் நகரத்தில் உலவிக் கொண்டிருந்தன. அவங்களோட சொந்த வாழ்க்கை அவ்வளவு நல்லதாக இல்லை. அவங்களுக்குப் பண்பாடு பற்றிய அக்கறையே இல்ல..."
மேரி பேசிக் கொண்டிருந்த போது சுரேந்திர மேத்தா அங்கு வந்தார். அவர் இன்ஸ்பெக்டரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார். கதவை அடைத்த பிறகு அவர் சொன்னார்:
"சுவர்களுக்கும் காது உண்டு."
"நீங்க நேற்று இரவு அனுசூயா தேவியின் விருந்திற்குப் போயிருந்தீங்களா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"ஆமா... நான் ஏழரை மணிமுதல் இரவு பதினோரு மணிவரை அங்கு இருந்தேன்"- மேத்தா சொன்னார். அவருடைய கைகள் காரணமே இல்லாமல் நடுங்கிக் கொண்டிருந்தன.
"உங்களுக்கும் அனுசூயா தேவிக்குமிடையில் உள்ள உறவு என்ன?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"எனக்கு அவங்கமீது உயர்ந்த வழிபாடு உண்டு"- சுரேந்திர மேத்தா சொன்னார்: "வாழ்க்கையில் நான் இந்த அளவுக்கு வேற யாரையும் விரும்பியது இல்லை. அவங்க மிகவும் கவலையில இருந்தாங்க. தனிமையில இருந்தாங்க. இந்த நகரத்தை விட்டு, என்னுடன் குஜராத்துக்கு வரும்படி அவங்களை நான் எத்தனையோ தடவை வற்புறுத்தினேன். அப்படி வந்திருந்தால் அவங்களோட உயிர் என்னால பிழைத்திருக்கும். இங்கே இருக்கும் எல்லோரும் அவங்களோட ரகசிய எதிரிகளா இருந்தாங்க. அவங்களோட கணவரையும் சேர்த்துத்தான் சொல்றேன். நான் அவங்களை சந்தோஷத்துல மிதக்க வைத்திருப்பேன். பாதுகாப்பான சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்திருப்பேன். ஆனால், அவங்க என்னைச் சிரிச்சு போகச் சொல்லிட்டாங்க. என்னை முட்டாள்தனமான சிறுவன் என்று அழைத்து அவங்க கிண்டல் பண்ணினாங்க. நான் வயதில் அவங்களவிட மிகவும் இளையவன். எனக்கு முப்பத்தைந்து வயதுதான் ஆகுது.