விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 24
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
"இல்லை...'' உடனடியாக அவர் அதை மறுத்தார். "நான் அப்படியொரு விஷயத்தை கனவில்கூட நினைக்கவில்லை.''
"ஏன் தேவையில்லை என்று நினைக்க வேண்டும்? நீங்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளுங்கள். எதற்கும் உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது!'' சுசீலா அமைதியாகச் சொன்னாள்.
"நான் அதை விரும்பவில்லை. சுசீலா.'' அவர் சொன்னார். சூழ்நிலையை மாற்றுவதற்காக அவளைப் பார்க்காமலே அவர் கேட்டார்: "சுசீலா, நீ நல்லா இருக்கியா?''
"நானா? சுகமாகத்தான் இருக்கேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம்.'' தான் எந்த நிமிடத்திலும் பைத்தியம் பிடித்துவிட்டவளைப்போல அழவோ, உரத்த குரலில் கத்தவோ ஆரம்பித்து விடுவோமோ என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், அப்படி நடக்க வேண்டும் என்று அவள் விரும்பவில்லை. அவளுடைய மனதில் கடுமையான ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. நாசம் பிடித்த மவுனம் அவர்கள் இருவருக்குமிடையே பரவிவிட்டிருந்தது. இந்த முறை ஆசிரியர்தான் அதைக் கலைத்தார். "நான் முயற்சித்தேன்...'' அவர் கூறிக் கொண்டிருந்தார்.
"உன்னை அங்கேயிருந்து காப்பாற்றுவதற்கு உடல்ரீதியாக என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை எல்லாவற்றையும் நான் செய்தேன். ஆனால், எந்தவொரு பிரயோஜனமும் உண்டாகவில்லை. அவர்கள் நல்ல செல்வாக்கு படைத்தவர்களும் முரட்டுத்தனம் கொண்டவர்களுமாக இருக்கிறார்கள். சுசீலா, உனக்குத்தான் தெரியுமே?'' மீண்டும் பாழாய் போன மவுனம் பரவியது. மனதை முழுமையாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மவுனம். சுசீலா அதை ஏற்றுக்
கொள்வதைப்போல கூறினாள்: "எனக்குத் தெரியும்.'' தொடர்ந்து ஆசிரியரைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்: "பரவாயில்லை...'' ஒரு நம்பிக்கையுடன் அவள் சொன்னாள்: "இப்போ என்ன மாறுதல் உண்டாகியிருக்கு?''
"சுசீலா, நான் உன்னை இழந்துவிட்டேன். குழந்தைகள் விஷயம்தான் கஷ்டம். அவர்களுக்கு விஷயத்தைக் கூறி புரிய வைக்கிற சிரமத்தை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? அவர்கள் இரவில் கண்விழித்து தங்களின் தாயைத் தேடுவார்கள். எதையும் காதில் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். நான் கூறும் எதுவுமே அவர்களுக்குப் புரியாது. வினோதமான ஒரு நிலைமை அது. சுருக்கமாகச் சொல்லப்போனால்- கவலைக்குரிய நிலைமை.''
மீண்டும் முன்பு நிலவிய மவுனம்.
"சரி...'' விடை பெற்றுக் கொள்வதைப் போல சுசீலா முணுமுணுத்தாள். ஆனால், அவர் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கும்போது, அங்கிருந்து கிளம்புவது என்பது சிரமமாக இருந்தது.
அவரும் என்னவோ முணுமுணுத்தார். ஆனால், அங்கிருந்து சிறிது கூட அசையவில்லை. சுசீலா அங்கிருந்து அகலாமல் இருக்க, தான் எப்படிக் கிளம்புவது என்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். இருவரும் அங்கேயே நின்றிருந்தார்கள்.
திடீரென்று சுசீலாவின் உள்மனதில் இருந்து தாங்கிக் கொள்ள முடியாத கோபம் கொதிக்க ஆரம்பித்தது. தன்னுடைய கணவரின் கோழைத்தனத்தின்மீது வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்கு உள்ள மிகப் பெரிய கோபம்! பொறுத்துக்கொள்ள முடியாத செயலற்ற நிலையிலிருந்து உருவான கோபம்! அவள் ஆவேசத்துடன் கூற ஆரம்பித்தாள்.
"குழந்தைகளை முன்னால் வைத்துக்கொண்டு அந்த போக்கிரிகள் என்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றபோது, வீட்டிலிருந்து உங்களுடைய கண்களுக்கு முன்னால், அவர்கள் என்னை பலவந்தப்படுத்தி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு போனபோது, நீங்கள் எதுவுமே செய்யவில்லை. நீங்கள் ஏன் உடனடியாக அந்த மாளிகைக்கு நெருப்பு வைக்கவில்லை?''
"விஷயம் அதுவல்ல சுசீலா. நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்.'' ஆசிரியர் விளக்கிக் கூற விரும்பினார். அவர் அதைக் கூறுவதற்கு முயற்சித்தார். ஆனால், ஆசிரியரால் எதையும் கூற முடியவில்லை. அவர் மவுனமாக இருந்தார்.
"சரி... நீங்கள் சிலவற்றைச் செய்தீர்கள். பிரயோஜனம் எதுவும் உண்டாகவில்லை. நடந்தது அதுதான்.'' அவள் ஆவேசத்துடன் கூறிக் கொண்டிருந்தாள்: "ஆனால், இப்போது நீங்கள் மேலும் சில விஷயங்களைச் செய்யப் போகிறீர்கள் அல்லவா? நீங்கள் என்னைக் கைகழுவிவிட்டீர்கள். மனைவியை, தன்னுடைய தங்கமான குழந்தைகளின் அன்னையை போய்க் கொண்டிருந்த பாதையில் விட்டுட்டீங்க. என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் செய்த இறுதி முயற்சி இதுதானா? நான் இங்கு எப்போதும் தரம் தாழ்ந்த ஒரு பெண்ணைப்போல வாழ வேண்டுமா என்ன? வாழ்க்கை முழுவதும் கணவராக, என்னுடைய அனைத்து சொத்துமாக நினைத்து வாழ்ந்த நான் இப்போது உங்களுக்கு எதுவுமே இல்லாதவளாக ஆகிவிட்டேன். அப்படித்தானே! இந்த அளவுக்கு கையற்ற நிலையில் இருப்பேன் என்று நான் எந்தச் சமயத்திலும் நினைத்ததே இல்லை. ஒரு வைப்பாட்டியின் வாழ்க்கை...''
ஒரு வார்த்தைகூட வாய் திறக்க முடியாத நிலையில் இப்போது ஆசிரியர் ராமகிருஷ்ணா இருந்தார்.
சுசீலா கோவிலைவிட்டு வெளியேறி, மாட்டு வண்டியில் மாளிகைக்குத் திரும்பினாள்.
19
சுசீலா திரும்பிச் செல்வதைப் பார்த்தவாறு ஆசிரியர் கோவிலின் கர்ப்பக் கிரகத்தில் நின்றிருந்தார். மனைவியின் குத்தலான வார்த்தைகள் உண்டாக்கிய வருத்தம் அவருடைய இதயத்தை மிகவும் அதிகமாக வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. கோழைத்தனமும் பயந்தாங்கொள்ளித்தனமும் சேர்ந்து அவருடைய இதயத்தை அரித்துத் தின்று கொண்டிருந்தன.
அவர் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்தார். "நான் ஒரு புழு. கேவலமான ஒரு சாதாரண சிறிய புழு! நான் எந்த அளவுக்கு மிகவும் சாதாரண மனிதனாக இருந்திருக்கிறேன்! சொந்த மனைவியைக்கூட காப்பாற்ற முடியவில்லையே!" ஒரு கோபம் ஆசிரியரைப் பிடித்து இறுக்கியது. கோபத்தின் காரணமாக அவரிடம் குறிப்பிடத்தக்க மாறுதல் உண்டானது. போலீஸ் அதிகாரி கூறிய விஷயங்களை அவர் மனதில் நினைத்துப் பார்த்தார்.
ஒரு பொருளின் பாதுகாப்பை ஏற்றெடுக்க முடியாமல் இருக்கும் வரையில், அது நம்முடையது என்று கூறுவதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. உரிமைக்குச் சொந்தம் கேட்கக் கூடிய மனிதன் தன்னுடைய பொறுப்பு என்ன என்பதை விளக்கிக் கூறுவதற்கும் கடமைப்பட்டிருக்கிறான். அது முடியாமல் போய் விட்டால்? என்ன நடக்கும்? அதிகபட்சம்... மரணம். ஆனால், அதற்கு ஏன் முயற்சிக்க வேண்டும்? தைரியத்துடன் மனிதன் போராட வேண்டும். ஒரு இறுதிப் போர்... மனிதன் என்ற நிலையில் தன்னுடைய மதிப்பை அவன் போற்றி பாதுகாக்கத்தான் வேண்டும். தனிமை என்ற ஒன்று இருக்கிறதே! அதை அவன் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.'
திடீரென்று ஆசிரியருக்கு ஒரு புத்துணர்ச்சி உண்டானது. அவரிடம் மொத்தத்தில் ஒரு மாறுதல் உண்டானதைப்போல இருந்தது. அநீதிக்கு எதிராக மனிதன் போராட வேண்டியதிருக்கிறது. ஆண் தன்னுடைய ஆண்மைத்தனத்தை நிரூபிப்பதற்காக இறுதி நிமிடம் வரை போராட வேண்டியதிருக்கிறது இந்த வகையில் சிந்திக்கும்போது, தனக்குத்தானே அவர் கூறிக் கொண்டார்: "ஆமாம்... அநீதிக்கு எதிராக நான் போராட வேண்டியதிருக்கிறது. நான் கட்டாயம் போராடுவேன்! இந்த உறுதியான சபதத்துடன் ஆசிரியர் கோவிலின் கர்ப்ப கிரகத்திற்கு வந்தார். பூசாரி அங்கே இருந்தவாறு அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.