விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 26
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
தன்னுடைய அமைதியற்ற மனநிலையை மறப்பதற்காக அவர் மது அருந்த ஆரம்பித்தார். விஸ்வம் குடித்துக் கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் குடித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் எழுந்து அறையில் ஒரு இடத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சாட்டையுடன் சுசீலாவைத் தேடி வந்தார். எதையும் கூறாமல் இரக்கமே இன்றி அவளை அடிக்க ஆரம்பித்தார்.
சுசீலா அமைதியாக சாட்டை அடிகள் முழுவதையும் தாங்கிக் கொண்டாள். பிறகு கட்டிலுக்குச் சென்று ஒரேயடியாக படுத்துக் கொண்டாள். தன்னுடைய தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பற்றி அவள் தனக்குள் ஆச்சரியப்பட்டாள். தன்னால் எப்படி அந்த அடிகள் அனைத்தையும் தாங்கிக் கொள்ள முடிகிறது என்று அவள் வியப்படைந்தாள். அடித்து... அடித்து கை வலித்தவுடன் சாட்டையை வீசி எறிந்து விட்டு, விஸ்வம் சுசீலாவுடன் சேர்ந்து கட்டிலில் போய் படுத்துக்கொண்டார். அடுத்த நிமிடம் சுசீலா அவரை பலமாக கைகளால் வளைத்து இறுக்கிக் கொண்டாள். அந்த நேரத்தில் அவள் அளவுக்கு மேலே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாள். அவளுடைய உடலில் தலையிலிருந்து கால் வரை காமம் நிறைந்து நின்றிருந்தது. சுசீலா விஸ்வத்தை இறுக அணைத்துக் கொண்டாள்.
அன்றொரு நாள் கோவிலில் தன் மனைவியைச் சந்தித்ததற்குப் பிறகு ஆசிரியரின் நடவடிக்கைகளில் கணிசமான மாற்றம் உண்டானது. இப்போது அவர் கோழை அல்ல. முழுமையான தைரியசாலியாக மாறிவிட்டிருந்தார். எப்போதும் போல வேலைகளைச் செய்துகொண்டிருந்தாலும், அதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சங்கள் வந்து சேர்ந்திருந்தன. பள்ளிக்கூடத்திற்கு வெளியே அவர் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்தார். பலகையின் மீது தினமும் ஆசிரியர் "இன்றைய சிந்தனைக்குரிய விஷயம்'' என்று எழுத ஆரம்பித்தார். முதல் நாள் அவர் எழுதினார்: "விழிப் படையுங்கள்! நீங்கள் தைரியத்துடன் முன்னோக்கிச் செல்லுங்கள்!''
"அநீதியான செயல்களைச் செய்பவர்களைவிட குற்றவாளிகள் அநீதியை சகித்துக்கொள்பவர்கள் தான்." இரண்டாவது நாள் ஆசிரியர், எழுதினார்.
மூன்றாவது நாள் அவர் இப்படி எழுதி வைத்தார். "இந்தியர்கள்தான் உலகத்திலேயே மிகவும் ஒதுக்கப்பட்டவர்கள். காரணம்- அவர்கள்தான் மிகவும் அதிகமாக வறுமையின் பிடியில் சிக்கிக்கிடப்பவர்களும், இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். அளவுக்கும் அதிகமாக உயிர் பயம் கொண்டவர்களாக பாரதத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதனால் பெரிய ஆபத்துகள் நிறைந்த வேலையைச் செய்வதைவிட எந்த அளவுக்கு வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்தாலும் சரி, அதே நிலையில் வாழ்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் பணத்தின்மீது மோகம், அதிகார தாகம் ஆகிய விஷயங்களில் அவர்கள் உலகத்தில் மற்ற யாரையும்விட முன்னால் இருக்கிறார்கள்." -இப்படிப்பட்ட வாசகங்களை அவர் தினமும் எழுதி வைப்பார். கிராமத்து மனிதர்கள் மிகவும் கவனமாக அதை வாசிப்பார்கள். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆசிரியரின் உதவியுடனோ, எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களின் உதவியுடனோ வாசகங்களைப் படித்து சற்று புரிந்து கொள்வது என்பது வழக்கமான செயலாக இருந்தது. வாழ்க்கைக்கு புதிய ஒரு அர்த்தம் வந்து சேர்ந்தது. ஒரு புதிய பிரகாசமும் சுறுசுறுப்பும் கிராமத்து மனிதர்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக தெரிய ஆரம்பித்தது.
இந்த புரிதல் விஷயத்தில் பூசாரியின் பங்களிப்பும் சாதாரணமானதல்ல. கோவிலுக்கு வரும் கடவுள் பக்தர்களைத் தன்னுடைய நம்பிக்கையை நோக்கி அவர் வரச்செய்து கொண்டிருந்தார். தர்மத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்த தன்னுடைய பார்வையை அவர் விளக்கிக் கூறினார்.
"விழிப்படையுங்கள்! தைரியத்துடன் முன்னோக்கிச் செல்லுங்கள்! அநீதிக்கு எதிராகப் படை திரண்டு போராடுங்கள்!''
ஆசிரியருக்கும் பூசாரிக்கும் தங்களுடைய முயற்சிகளில் ஒவ்வொரு நாளும் வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. நவமி நாளன்று இந்த வெற்றியை முதல் தடவையாக பார்க்க முடிந்தது. "ராமநவமி" நாளன்று கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக சந்தோஷத்துடன் கொண்டாடக் கூடிய எருமைச் சண்டை நடந்து கொண்டிருந்தது.
எருமைகள் இரண்டும் தூசியைக் கிளப்பிக் கொண்டு ஆவேசத்துடன் ஒன்றையொன்று முட்டிக்கொண்டிருந்தன. மக்களின் ஆரவாரம் காற்றில் உரத்து கேட்டுக் கொண்டிருந்தது. இப்போது கிராமத்து மக்களின் எண்ணத்தில் ஒரு எருமை ஜமீன்தாருடையது; இன்னொரு எருமை தங்களுடையது. அது ஒரு எருமைச் சண்டை அல்ல. மாறாக, மக்களுக்கும் ஜமீன்தாருக்குமிடையே நடக்கும் பெரிய போர்! ஜமீன்தார் சகோதரர்களும் சண்டையைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள்.
ஆனால், மக்கள் அவர்களைப் பார்த்து சிறிதுகூட பயப்படவோ, மதிப்பு தரவோ இல்லை. பூசாரியும் ஆசிரியர் ராமகிருஷ்ணாவும் பார்வையாளர்கள் மத்தியில் இருந்தார்கள். அவர்கள் இருவரும் சுற்றி நடந்து ஊர்க்காரர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். கிராமத்தின் எல்லையைத் தாண்டி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சியில் அவர்கள் இருந்தார்கள்.
இரவில் கிராமத்தின் எல்லையைத் தாண்டி பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மனிதனின் கடமையைப் பற்றி பூசாரி கிராமத்து மக்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தார். ஆசிரியர் கடமையைச் செய்வதற்கான வழிமுறைகளைக் கூறிக் கொண்டிருந்தார்.
"பல எறும்புகள் ஒன்று சேர்ந்தால், ஒரு கல்லை நகர்த்த முடியும் என்றால், அனைவரும் ஒன்றாக நின்று அநீதியான செயல்களைத் துரத்துவதில் என்ன சிரமம் இருக்கிறது?'' புதிய பிரகாசத்திற்கு ஆழமும் பரப்பும் உள்ள ஒரு அர்த்தத்தைத் தருவது மட்டுமே பொதுக்கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. அதில் அவர்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவும் செய்தது.
மறுநாள் கிராமத்து மக்கள் மிகவும் கம்பீரமாக "ராமலீலா"வைக் கொண்டாடினார்கள். மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து கோவிலின் வாசலில் வந்து கூடினார்கள்.
கதை "ராவண வத"மாக இருந்தாலும், ஜமீன்தார்களையும் சேர்த்துக் கொண்டு மறைமுகமாக சித்தரித்து, முற்றிலும் வித்தியாசமான முறையில் அந்த முழு கதையிலும் நடித்தார்கள். ராவண வதம் நடந்து கொண்டிருக்கும்போது, எப்போதும் இல்லாத அளவுக்கு ஆவேசமடைந்த மக்கள் உரத்த குரலில் சத்தமிட்டார்கள்: "அவனைக் கொல்லு.... அயோக்கியன்!'' "வதம்" நடந்து முடிந்துவிட்டிருந்தது. ராவணனின் வேடம் தரித்த மனிதன் இறந்ததைப் போலவே தரையில் கிடப்பதைப் பார்த்ததும் அது பெரிய ஜமீன்தார்தான் என்று எல்லாரும் நினைத்தார்கள். ராவணனுடன் ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் ஜமீன்தார்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹெட்கான்ஸ்டபிள் அங்கு வந்தார். அவர்களுடைய உரையாடல் அதற்குப் பிறகும் நிற்கவில்லை என்பது மட்டுமல்ல- மேலும் சத்தமாக ஒலிக்கவும் செய்தது. கான்ஸ்டபிள் ஒன்றிரண்டு ஆட்களை வெறித்துப் பார்த்தபோது, அவருடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே அவர்கள் சொன்னார்கள்: "இதோ ராவணனின் சேனாதிபதி வந்திருக்கிறார். ஜமீன்தார்களின் வால்! லஞ்சம் வாங்கிக் கொண்டு காரியங்களை மறைத்து விடும் வேலைக்காரன்!''
ஹெட் கான்ஸ்டபிள் மக்களின் முகங்களைப் பார்த்தார். எல்லோருடைய முகங்களிலும் தைரியமும் தன்னம்பிக்கையும் வெளிப்பட்டன. அந்த தைரியத்தின் முன்னாலும், தன்னம்பிக்கையின் முன்னாலும் அவர் பின்வாங்குவதைத் தவிர, வேறு வழியில்லை.