விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 27
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
வந்ததைப்போலவே அவர் திரும்பிச் சென்றார். "ராமலீலா" முடிவடைந்ததும், பூசாரி கிராம மக்களிடம் சொன்னார்: "நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், சிரிப்பையும் மோசமான வார்த்தைகளையும் நிறுத்திவிட்டு, அநீதிக்கு எதிராகப் போராடுவதற்குத் தயாராகுங்கள்!''
21
மாளிகையில் ஜமீன்தார் சகோதரர்கள் தங்களுடைய லீலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். சுசீலாவும் தன் அறையில் தன்னை அழகுபடுத்திக் கொண்டு விஸ்வத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் மாளிகையின் புதிய வாழ்க்கையுடன் முழுமையாக இணைந்துவிட்டிருந்தாள். விஸ்வம் வந்தவுடன், அவள் அவரை மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டு காதில் மெதுவான குரலில் சொன்னாள்: "என் வயிற்றில் உங்களுடைய குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது.''
அவர் அளவற்ற சந்தோஷத்துடன் சுசீலாவை அணைத்துக் கொண்டார்.
அதிகாலைப் பொழுது புலரப் போகிறது. எங்கிருந்தோ காகம் கரையும் சத்தம் கேட்டது. எங்கிருந்தோ கோழி கூவும் சத்தம் கேட்டது. பொழுது விடியும் நேரத்தில் கிராமத்தின் ஒவ்வொரு வீடும் ஆட்கள் யாருமே இல்லாமல் இருந்தது. காலியாகக் கிடந்த வீடுகளில் கால்நடைகள் இருந்தாலும், எங்கும் ஒரு மனிதனைக்கூட பார்க்க முடியவில்லை. என்னவென்று தெரியாத காரணத்தால், கிராமம் முழுவதும் யாரோ கூறி காலியாகக் கிடப்பதைப்போல தோன்றியது.
ஆண்கள், பெண்கள், வயதான கிழவர்கள், குழந்தைகள் - கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எல்லாரும் கோவிலில் ஒன்று கூடியிருந்தார்கள். விரிந்த கண்களுடன் முழுமையான அமைதியுடன் எல்லோரும் நின்றிருந்தார்கள். சிறு குழந்தைகள்கூட சத்தம் போடாமல் இருந்தனர். லாந்தரின் மஞ்சள் வெளிச்சத்தில் அந்த மக்கள் கூட்டம் மிகுந்த ஆச்சரியத்திற்குரியதாக இருந்தது. பூசாரியும் ஆசிரியரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். கூட்டத்தைப் பிளந்து கொண்டு பூசாரி கடவுளின் சிலைக்கு அருகிலிருந்த கர்ப்பக் கிரகத்திற்குச் சென்றார். சபை மண்டபமும் கோவிலின் வாசலும் மக்களின் கூட்டத்தால் நிறைந்திருந்தன. ஒவ்வொரு நிமிடமும் கடந்து செல்லச் செல்ல, அதற்குப் பிறகும் ஆட்கள் வந்து கொண்டேயிருந்தார்கள்.
பூசாரி அதிகாலை நேர பூஜையை ஆரம்பித்தார். ஆசிரியர் மக்களுக்கு மத்தியில் நடந்து கூட்டம் கூடி நின்றிருந்த ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அநீதிக்கு எதிரான கூட்டு முயற்சியின் இறுதி கால்வைப்பாக அது இருந்தது. ஒன்று- செயல்படுவது! இல்லாவிட்டால் - மரணம். மக்கள் தீர்மானித்துவிட்டிருந்தார்கள்.
அநீதியின் ஒட்டுமொத்த சின்னமாக இருந்த மாளிகை கோவிலில் இருந்து பார்க்கும்போது நன்கு தெரிந்தது. அதுதான் நோக்கமே. அதற்கு உள்ளேயும் அசைவற்று அமைதியும் சந்தோஷமான சூழ்நிலையும் நிறைந்திருந்தன. மனிதர்களும் மிருகங்களும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல மூன்று சகோதரர்களும் ஒரு அறையில் புலர்காலைப் பொழுதின் சுகமான தூக்கத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். விஸ்வம் சுசீலாவுடன் சேர்ந்து கட்டிலில் படுத்திருந்தார். இரவு முழுவதும் எரிந்து கொண்டிருந்த விளக்கு இப்போதும் மங்கி மங்கி எரிந்து கொண்டிருந்தது. அணையப் போகும் நிலையில் இருந்த அதன் மங்கலான வெளிச்சத்தில் விஸ்வத்தின் ஒரு கை இப்போதும் சுசீலாவின் மார்பில் கிடப்பது தெரிந்தது. சமீபகாலமாக ருக்மிணி தனியாகத்தான் படுத்து உறங்குகிறாள். அவளும் தன்னுடைய அறையில் உறங்கிக் கொண்டிருந்தாள். கனவு கண்டதைப்போல அவள் திடுக்கிட்டு எழுந்தாள். தன்னைச் சுற்றி யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டவுடன், அவள் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
இரவு முடிவடைந்து கொண்டிருந்தது. கிழக்கு திசையில் மெதுவாக பிரகாசம் பரவிக் கொண்டிருந்தது. சூரியனின் ஒளிக் கதிர்கள்! பறவைகளின் "கலகல" சத்தம் அதிகாலைப் பொழுது சூரியனை வரவேற்றுக் கொண்டிருந்தது. ருக்மிணி மீண்டும் கண் விழித்தாள். எப்போதும்போல கண் விழிக்கும் செயலே அது. அவளுடைய அறையின் சாளரத்திலிருந்து சூரிய வெளிச்சத்தின் மெல்லிய நீல நிறத்தில், ராஜவர்மாவின் அழகான ஏதோ ஓவியத்தைப்போல கோவில் தெரிந்தது. சாளரத்தின் முன்னால் போய் நின்று கோவிலைப் பார்த்துக் கொண்டே ருக்மிணி கைகளைக் கூப்பினாள். கோவிலைச் சுற்றி அங்குமிங்கும் தனித்தனியாகவும் கூட்டமாகவும் ஏராளமான ஆட்கள் கூடி நின்றிருப்பதை அவள் பார்த்தாள். மொத்தத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தைப் போல... அவள் ஆச்சரியப்பட்டாள். "என்ன ஆச்சு?" தனக்குத்தானே அவள் கூறிக் கொண்டாள். "என்னவோ இருக்கு!" உடனடியாக அவள் சாளரத்தின் அருகில் இருந்து நகர்ந்து வாசலுக்குச் சென்றாள். ஒரு வேலைக்காரன்கூட அங்கு எங்கும் இல்லை. "சாதாரணமாக நான் எழுந்திருக்கும்போதே வேலைக்காரர்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டிருப்பார்கள். போச்சம்மாவைக் கூட காணோமே! ஏன் யாரும் வேலைக்கு வரவில்லை?" அவள் மீண்டும் ஆச்சரியப்பட்டாள்.
வேலைக்காரர்கள் அனைவரும் மாளிகையின் பின்பகுதியில்தான் தங்கியிருந்தார்கள். அவள் அடுத்த நிமிடம் அங்கு சென்றாள். தொடர்ந்து பல தடவைகள் அழைத்தாள்: "போச்சம்மா... ஏய் போச்சம்மா... டேய் ராமேலு...'' ஆனால், எந்தவொரு பயனும் உண்டாகவில்லை. அவளுக்கு ஒரு பதிலும் எங்கிருந்தும் கிடைக்கவில்லை. ஒரு இருமல் சத்தம்கூட எங்கேயிருந்தும் கேட்கவில்லை. அப்படியே இல்லையென்றாலும், எப்படி கேட்கும்? வேலைக்காரர்களின் வீடுகள் முழுவதும் காலியாக அல்லவா கிடக்கின்றன?
ஏமாற்றத்துடன் திரும்பி வந்து அவள் சமையல் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். வேலைக்காரர்கள் வராததால், அது உண்டாக்கிய ஆச்சரியமும் அவளை இடையில் அவ்வப்போது மனதில் அமைதி இல்லாமல் செய்து கொண்டிருந்தது" "இன்று அவர்களுக்கு என்ன ஆயிடுச்சு? அவர்கள் ஏன் வரவில்லை?"
விஸ்வம் கண் விழித்துக் கீழே சென்றார். காலைக் கடன்கள் எல்லாம் முடிந்து அவர் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தார். ருக்மிணியும் அவருக்கு அருகில்தான் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் அவரிடம் பேசுவதற்கு உண்மையிலேயே விரும்பவில்லை. ஆனால், தன்னுடைய மனதில் இருந்த ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே, தன் கணவரைப் பார்க்காமலேயே அவள் சொன்னாள்: "இதுவரை ஒரு வேலைக்காரன் கூட வரவில்லை!''
விஸ்வம் டூத் பிரஷ்ஷை எடுக்கும் முயற்சியில் இருந்தார். உடனே அதை வேண்டாம் என்று நிறுத்திவிட்டு, மாளிகையின் பின்பகுதிக்குச் சென்றார். சற்று மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே அவர் வேலைக்காரர்களை அழைத்தார். ஆனால், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. முழுமையான அமைதி மட்டுமே நிலவிக் கொண்டிருந்தது. தொடர்ந்து அவர் கர்ஜித்தார்.
"டேய் ராமேலு, நீ என்ன செத்துப்போயிட்டியா?'' அவர் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பொறுமையை இழந்து விட்டு, தொடர்ந்து முணுமுணுத்தார்: "அவர்களுக்கு என்ன ஆச்சு? எல்லாரும் செத்துப் போயிட்டாங்களா? இல்லாவிட்டால், விஷயம் வேறு ஏதாவதா?"
அதற்குள் அண்ணா, பிரசாத், அஞ்சய்யா ஆகியோரும் கீழே வந்துவிட்டார்கள். விஸ்வமும் பின் பகுதியிலிருந்து அப்போது வந்துவிட்டிருந்தார். இயல்பான குரலில் அவர் சொன்னார்: "அண்ணா, ஒரு வேலைக்காரனும் இல்லை. யாரும் இதுவரை வந்து சேரவில்லை. இந்த அட்டூழியத்துக்கு எதிராக ஏதாவது செய்தே ஆக வேண்டும்.''