விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 25
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
"எப்படி இருக்கிறாய் மகனே?'' பூசாரி கேட்டார்.
"பூசாரி...'' ஆசிரியர் சொன்னார்: "சிறிது நேரத்திற்கு முன்னால் நான் என்னுடைய மனைவியைப் பார்த்தேன்.''
"அப்படியா? அவங்க திரும்பவும் உன் மன அமைதியைக் குலைச்சிட்டாங்களா? உன் மன அமைதி திரும்பவும் இல்லாமற் போய்விடுமா? அப்படியென்றால் உள்ளே போய் கடவுளிடம் பிரார்த்தனை செய். எல்லாவித அமைதிக்காகவும் பிரார்த்தனை செய். உண்மையாக கூறப்போனால், திருமணம் என்பது சொர்க்கத்தில்தான் நடக்கிறது. நாம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்கள்தான். அத்துடன் மன அமைதிக்காக வேண்டிக் கொள்வதற்கும்...'' பூசாரி ஆசிரியரைத் தேற்றுவதைப்போல கூறினார்.
இந்த முறை ஆறுதல் உண்டாகிற வகையில் இருந்த பூசாரியின் வார்த்தைகள் ஆசிரியரிடம் சொல்லிக் கொள்கிற மாதிரி மாற்றத்தை உண்டாக்கவில்லை. அவர் பூசாரியிடம் உடனடியாக வாதம் செய்தார். "நாம் கோழைகளாக இருக்க வேண்டும் என்றா கடவுள் விரும்புகிறார்? சாதாரண மரத்தைப் போல வாழ வேண்டுமென்றா கடவுள் நினைக்கிறார்? தன்னம்பிக்கைதான் மனிதனை மனிதனாக ஆக்குவது.
இல்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?'' ஆசிரியர் தொடர்ந்து சொன்னார்: "பூசாரி, மிகவும் சிறிய மிருகம்கூட... ஏன்...? எறும்புகூட சவாலைச் சந்திக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு மனிதன், அவன் எந்த அளவுக்கு சிறியவனாக இருந்தாலும் சரி... கைகளைக் கட்டிக்கொண்டு தன்னுடைய மரியாதையும், தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் ஆதரவையும் இரக்கமே இல்லாமல் மிதித்து நசுக்கப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா?'' ஒரே மூச்சில் கூறி முடித்த ஆசிரியர். பூசாரியின் பதில் என்ன என்பதைக் கேட்பதற்காக சற்று நிறுத்தினார். ஆனால், அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. ஆசிரியர் கூறிய விஷயங்களை அவர் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஆசிரியர் பூசாரிக்கு, பூசாரியின் மொழியிலேயே கூறி புரிய வைக்க முயற்சித்தார்: "பூசாரி, கோழைகளையும் புழுக்களையும்போல வாழ்வதுதான் மனிதர்களின் கடமை என்று கடவுள் நம்மிடம் கூறியிருக்கிறாரா என்ன?
"யதா யதாஹி தர்மஸ்ய
க்லாநீர் பவதி பாரத
அப்யுத்தான மதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்யஜாம்யஹம்
பரித்ராணாய சாதுனாம்
வினாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தாபனார்தாய
சம்பவாமி யுகே யுகே."
கீதையில் வரும் இந்த சுலோகத்திற்கு என்ன அர்த்தம்? கடவுள் எங்கே இருக்கிறது? சுதர்சன சக்கரத்தைக் கையில் வைத்துக்கொண்டு கருடன்மீது அமர்ந்து பயணம் செய்து தெய்வம் என்றைக்காவது பூமியில் அவதரிக்குமா? பிறகு... கெட்டவர்களை அழிக்குமா? அப்படியென்றால், அந்த நல்ல நாள் என்று வரும்? இல்லை பூசாரி, இல்லை... உண்மையாகக் கூறுவதாக இருந்தால், கடவுள் எள்ளில் எண்ணெய் கலந்திருப்பதைப்போல மனிதனிடம்தான் இருக்கிறார்.''
அப்போது பூசாரி இதை மட்டும் சொன்னார்:
"கதிர்பர்த்தாப்ரபு: ஸாக்ஷி
நிவாஸ: சரணம் ஸுஹ்யல்
ப்ரபவ: ப்ரச்சய: ஸ்தானம்
நிதானம் பீஜமவ்யயம்.''
ஆசிரியர் கேட்டார்: "தெய்வம் என்றால் என்ன? நாம் மனிதர்கள் என்ற தெய்வங்கள் அல்லவா? நாம் செய்ய வேண்டியது- அநீதிக்கு எதிராக போராடுவதுதான். கெட்ட செயல்களைச் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும். மனிதன் ஆதரவற்றவன். அப்படி இருக்கும் மனிதனின் மனிதத் தன்மையைப் போற்றிக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். தெய்வத்தின் அம்சம் இல்லாமல், பிறகு இது என்ன? அநீதிக்கு எதிரான போரில் மனிதன் தோல்வியைத் தழுவலாம். நீதியை வென்றெடுப்பதில் நாம் வெற்றி பெறாமல் போகலாம்.'' திடீரென்று அவர் தன்னுடைய அனுபவங்களை நினைக்க ஆரம்பித்துவிட்டார். "காரணம் கடவுள் அளவற்ற பலம் கொண்டவர்தான். ஆனால், கீதையில் சொல்லப்பட்டிருக்கவில்லையா? "கர்மண்யே வாதிகார ஸ்தே யா ஃபலேஷ்ய கதாச்சன" என்று? ஒரு மனிதன் தோல்வியை அடைந்திருக்கலாம். திரும்பத் திரும்ப
தோல்வியைச் சந்தித்தான் என்றுகூட ஆகலாம். ஆனால், ஒரு நல்ல உலகத்திற்காக- எல்லா வகையான அநீதிகளுக்கும் எதிராக எப்போதும் மனிதர்கள் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். அது மனிதனின் கடமை. உண்மையாகக் கூறப்போனால் நீதியைப் போற்றிப் பாதுகாப்பதுதான் தெய்வம் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயம். நான் சொல்வது உண்மைதானே, பூசாரி?''
பூசாரியிடம் கூற நினைத்த விஷயங்கள் எல்லாவற்றையும் கூறி முடித்தபோது, ஆசிரியரிடம் என்னவென்று விவரிக்க முடியாத ஒரு மன அமைதி உண்டானது. ஆசிரியரின் வார்த்தைகள் இந்த முறை ஒரு மறு சிந்தனைக்கு பூசாரியைத் தூண்டியது. பூசாரியின் மனதில் ஒரு மிகப்பெரிய போராட்டமே நடந்துகொண்டிருந்தது. அப்போது அவர் எதுவும் பேசவில்லை, அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து ஆழமான சிந்தனையில் ஈடுபட்டார். இரண்டு பேரும் மவுனமாக இருந்தார்கள். இறுதியில் பூசாரிதான், மவுனத்தைக் கலைத்தார். "நீ சொன்னது சரிதான் மகனே''. ஆசிரியரின் கரத்தைப் பிடித்துக்கொண்டே அவர் சொன்னார்: "முற்றிலும் சரி... முற்றிலும்...''
சுசீலா மாளிகைக்குத் திரும்பி வந்தாள். அவள் கவலை நிறைந்த மனநிலையுடன் இருந்தாள். சூரியன் மறைந்து, இருள் படர்ந்து கொண்டிருந்தது. விஸ்வம் சுசீலாவுடன் சேர்ந்து அவளுடைய அறைக்குள் சென்றார். கூடத்தில் ருக்மிணியைப் பார்த்தாலும், அவர் அந்தப் பக்கம் பார்க்கக்கூட இல்லை. சுசீலாவின் அறையில் இருக்கும்போது, விஸ்வம் அவளை கரங்களுக்குள் கொண்டு வர விரும்பினார். ஆனால், சுசீலா வெறி பிடித்த சிங்கத்தைப்போல அடுத்த நொடியே போராடி விலகிக் கொண்டாள். அவள் கர்ஜித்தாள். "இங்கேயிருந்து வெளியே போங்க... உங்களுக்குத் தோணுறப்போ... தோணுறப்போ... படுக்குறதுக்கு நானொண்ணும் தேவடியா இல்லை. உங்கள்மீதும் உங்களுடைய மாளிகையின் மீதும் எனக்கு ஒரே
வெறுப்பாக இருக்கு. இங்கேயிருந்து வெளியேறுங்க. விளையாட்டையெல்லாம் மனைவியிடம் வச்சுக்கோங்க.''
கூடத்தில் நின்று கொண்டு ருக்மிணி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள். சொல்லப் போனால் சுசீலாவுக்கு ஒரு அடி கொடுத்தால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது. தன் கணவரை விட்டெறிந்து பேசுவதா! ஆனால், அந்த விஷயத்தில் அவளுக்கு ஒரு வகையான சந்தோஷம் உண்டானதைப்போல தோன்றியது. தன்னை ஒதுக்கிய விஸ்வம் மீண்டும் தன்னைத் தேடி வருவாரே என்ற சந்தோஷம் அவளுக்கு உண்டானது.
20
விஸ்வம் சுசீலாவின் அறையிலிருந்து வெளியேறி தன்னுடைய அறைக்குச் சென்றார். ருக்மிணி தேநீருடன் அறைக்குள் வந்தாள். "தேநீர் குடிங்க... மிகவும் களைப்பாக இருப்பீங்க.'' பல நாட்களுக்குப் பிறகு அவள் விஸ்வத்திடம் பேசினாள்.
ஆனால், அவர் பதிலெதுவும் கூறவில்லை. தேநீரையும் பருகவில்லை. சுசீலாவைப் பற்றிய சிந்தனையிலேயே அவர் மூழ்கிவிட்டிருந்தார்.
"நீ எதற்கு இங்கே நின்று கொண்டிருக்கிறாய், நாயே? நீயும் உன் தேநீரும்...'' விஸ்வத்திற்கு தன் மீதே ஒரு வகையான வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், அவருடைய மனைவியிடம் வெளிப்படுத்தியது அந்த வெறுப்பையும் கோபத்தையும் தான்.