விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
"ஹும்...'' அண்ணாவின் பதில் அது மட்டுமே. அஞ்சய்யா, பிரசாத் ஆகியோரும் ஒரு வார்த்தைகூட பேசாமல் தங்களின் அன்றாடச் செயல்களில் மூழ்கியிருந்தார்கள்.
சுசீலாவும் கண் விழித்து எழுந்து சற்று தூரத்தில் தெரிந்து கொண்டிருக்கும் கோவிலைப் பார்ப்பதற்காக சாளரத்தின் அருகில் போய் நின்று கொண்டிருந்தாள். பல்லக்கின் தாளத்துடன் மெதுவாக ஒரு ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்படுவதை அப்போது அவள் பார்த்தாள். கைகூப்புவதற்குக்கூட மறந்து அவள் நின்ற இடத்திலேயே நின்று விட்டாள்.
கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் ஒட்டுமொத்த கிராமமும் இருந்தது. பூசாரிதான் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினார். அவருக்கு மிகவும் அருகில் ஆசிரியரும் இருந்தார். பல்லக்கின் தாளத்திற்கேற்ப முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலத்தில் இருந்தவர்களின் முகங்களில் புதுமையான ஒரு ஆவேசமும் சுறுசுறுப்பும் தெரிந்தன.
ருக்மிணியும் சாளரத்தின் வழியாக ஊர்வலத்தைப் பார்த்தாள். தர்மசங்கடமான நிலையில் சிக்கிக் கொண்டுவிட்டதைப்போல பதைபதைப்பு நிறைந்த விழிகளுடன் அவள் அண்ணாவின் அருகில் ஓடினாள். ஊர்வலத்தை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டிக் கொண்டே அவள் கேட்டாள்: "என்ன அது?''
"கோவிலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டிருக்கிறது. இன்று ஏதாவது விசேஷம் இருக்கிறதா என்ன?'' ஊர்வலத்தைப் பார்த்தவுடன் அண்ணா கேட்டார்.
"ஏதோ விசேஷம் இருக்கு. அது மட்டும் உண்மை.'' பிரசாத் சொன்னார்.
"சாதாரணமா நமக்கு தகவலை முன் கூட்டியே சொல்லிவிடுவாங்களே!'' அஞ்சய்யா கோபத்துடன் சொன்னார்.
"சரி... விசேஷமா அதில் எதுவும் இல்லை. அவர்கள் பிறக்கிறார்கள். திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு, அவர்களுடைய திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். பிறகு, அவர்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள். சரி... பதைபதைப்பதற்கு இதில் என்ன புதுமை இருக்கிறது?'' அண்ணா கேட்டார்.
"ஆனால், ஊர்வலம் இந்த வழியில் வரவில்லையே?'' அஞ்சய்யா சொன்னார்.
"இந்த வழியில்தான் அவர்கள் வரவேண்டும். அவர்கள் இங்கு வராமல் போகமுடியாது. இங்கு வந்து தலை குனியாமல்- மாளிகைக்கு முன்னால் கடந்து செல்லாமல் இருக்க அவர்களுடைய தாத்தாக்களுக்குகூட தைரியம் இருந்ததில்லை'' அண்ணா ஆணவத்துடன் சொன்னார்.
"வேலைக்காரர்களும்...'' விஸ்வம் மீண்டும் கூறினார். அப்போது அண்ணாவிற்கு கோபம் வந்துவிட்டது. "அவங்க இங்கே வரட்டும். சாட்டையால் அடித்து எல்லாரையும் நான் ஒரு வழி பண்றேன்.''
அதற்குப் பிறகு எல்லாரும் அவரவர்களுடைய வேலைகளில் மூழ்கிவிட்டார்கள். ருக்மிணி சமையல் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். அஞ்சய்யாவும் பிரசாத்தும் வயலுக்குச் செல்வதற்குத் தயாரானார்கள். அன்றாட வேலைகள் முடிந்து, சுசீலா குளித்துக் கொண்டிருந்தாள்.
பல்லக்கின் தாளத்திற்கேற்றபடி நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலத்தின் உற்சாகம் அதில் கலந்து கொண்டிருந்த முகங்களில் தெரிந்தது. ஊர்வலம் வந்து கொண்டிருப்பது மாளிகையை நோக்கி அல்ல என்பதைத் தெரிந்து கொண்டவுடன் அஞ்சய்யா சொன்னார்:
"அவர்கள் கிராமத்தை விட்டு வெளியே போய்க் கொண்டிருக்கிறார்களே?''
"ஹும்...'' என்று கூறியவாறு அந்த நிமிடமே பிரசாத் அஞ்சய்யாவைப் பார்த்தார். கட்டளையிட்டால் ஊர்வலத்தில் வந்து கொண்டிருப்பவர்களை மாளிகையின் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறேன் என்று கூறுவதைப்போல அவருடைய பார்வை இருந்தது. ஆனால், இருவரும் அமைதியாக இருந்தார்கள். ஆவேசத்துடன் நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தவர்களை அமைதியான விழிகளுடன் பார்த்துக் கொண்டு நின்றிருக்க மட்டுமே அவர்களால் முடிந்தது.
ஊர்வலம் கிராமத்தின் எல்லையை அடைந்ததும், மிகவும் அருகிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் அதில் வந்து சேர்ந்து கொண்டார்கள். ஊர்வலம் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பியது. பல்லக்கின் சத்தம் மேலும் சற்று உரத்துக் கேட்டது.
அஞ்சய்யாவும் பிரசாத்தும் மாட்டு வண்டியில் ஏறி வயலுக்குப் புறப்பட்டார்கள். கிராமத்தில் யாரையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. காலியாக இருந்த கிராமத்திலிருந்து சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த பல்லக்கின் சத்தம் தொடர்ந்து அவர்களுடைய காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. முற்றிலும் மனிதர்கள் இல்லாமலிருந்த கிராமத்தின் வழியாக முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது காளைகளின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மணிகள் உண்டாக்கிய ஓசை பல்லக்கின் சத்தத்தில் கேட்கவே இல்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆனால், ஒரு வார்த்தைகூட வாய்திறந்து பேசிக்கொள்ளவில்லை. மனிதர்கள் யாரும் இல்லாத கிராமத்தை விட்டு அவர்கள் வயலுக்குச் செல்லும் வழியில் திரும்பினார்கள்.
மாளிகையில் நின்று கொண்டு ருக்மிணி விஸ்வத்திடம் கூறினாள்:
22
"இன்று இங்கே ஒரு வேலைக்காரன்கூட இல்லை. இந்த வேலைகள் அனைத்தையும் என்னால் எப்படி தனியாகச் செய்ய முடியும்? தனியாக இதைச் செய்தால், சோர்ந்து விழுந்து சாக வேண்டியதுதான்...'' சுசீலாவை மனதில் நினைத்துக் கொண்டே அவள் கூறினாள்: "அவளும் கொஞ்சம் வேலைகளைச் செய்யட்டும். குறைந்தபட்சம் இன்றைக்காவது...''
விஸ்வம் சுசீலாவின் அறைக்குச் சென்று அவளிடம் சொன்னார்: "வீட்டு வேலைகளில் ருக்மிணிக்கு கொஞ்சம் உதவியாக இரு. இன்று வேலைக்காரர்கள் யாரும் வரவில்லை!''
உடனடியாக சுசீலா கீழே இறங்கிச் சென்றாள். சமையலறையில் கால்களை வைத்ததுதான் தாமதம், அவள் ருக்மிணியிடம் கேட்டாள்: "நான் என்ன செய்யணும்?''
"செய்ய வேண்டியது என்ன என்று ஒரு ஆள் சொல்லித்தரணுமா?'' ருக்மிணி தெளிவானக் குரலில் சொன்னாள்: "அதெல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்குச் செய்ய முடிந்ததை செய்யுங்கள். தளர்ந்து விழுந்து இறந்தே போனாலும் சரி... நான் யாருடைய உதவியையும் விரும்பவில்லை!''
புன்னகைத்துக் கொண்டே சுசீலாவும் சமையலறை வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். இருவரும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ருக்மிணி தேநீர் தயாரித்து முடித்து சுசீலாவுக்கும் கொடுத்தாள். ஒருசில நிமிடங்களுக்காவது இருவரும் தங்களுக்கிடையே ஏதோ சில விஷயங்களைப் பங்கு வைத்துக் கொள்கிறோம் என்பதை தேநீர் கோப்பையை வாங்கும்போது சுசீலாவும், கொடுக்கும்போது ருக்மிணியும் உணர்ந்திருந்தார்கள்.
மாளிகையின் கிணற்றின் கரையில் அமர்ந்து கொண்டு அண்ணா உடம்பு முழுவதும் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அதிகாலை சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு அண்ணாவின் உறுதியான உடல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எண்ணெய் தேய்த்துக்
கொண்டிருக்கும்போது, அண்ணா உடம்பைச் சற்று சொறிந்தார். சொறிந்த இடத்திலிருந்து ரத்தம் கசிவதைப் பார்த்ததும் அவர் வேலைக்கு வராமற்போன வேலைக்காரர்களை வாய்க்கு வந்தபடி திட்டினார்: "ராஸ்கல்ஸ்.''
அண்ணா சிந்திக்க ஆரம்பித்தார்: "வேறு யாராவது என்னுடைய உடம்பில் எண்ணெயைத் தேய்க்கும்போது அரிப்பு வந்தால், எண்ணெய் தேய்ப்பவனின் தலையில் அடித்துப் பிளந்து விடுவேன். ஆனால், என்னுடைய தலையை எப்படி..."
சமையலறையில் ருக்மிணியும் சுசீலாவும் பேசிக் கொண்டே வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். தங்களுடைய கவலைகளை எப்படியோ இருவரும் புரிந்து கொண்டுவிட்டனர். இன்றுபோலவே, எதிர்காலத்திலும் தங்களுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதைப் பற்றி அவர்கள் இருவரும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.