விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 29
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
இன்று அண்ணா சற்று அதிகமான கோபத்தில் இருந்தார். "ராஸ்கல்ஸ்! ஒருவன்கூட வரவில்லை" இன்று குளிப்பதற்கான நீரை அவரே வாரி நிறைத்தார். குளித்து முடித்து அவர் மது அருந்துவார். குடித்தார். மீண்டும் குடித்தார். திடீரென்று விஸ்வம் அவரின் அருகில் வந்து நின்றார்.
"அவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.'' நடுங்கிக் கொண்டிருந்த குரலில் அவர் சொன்னார்.
ஊர்வலம் மெதுவாக மாளிகையை நோக்கி வந்து கொண்டிருந்தது. பல்லக்கின் தாளமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. அதன் மெல்லிய சத்தம் மாளிகையில் கேட்டது. மாளிகையிலிருந்து ஊர்வலம் சற்று தூரத்தில் எறும்பின் அணிவரிசையைப்போல தெரிந்தது.
விஸ்வத்தின் வார்த்தைகளைக் கேட்டதும் அண்ணா மிகவும் சாதாரண குரலில் சொன்னார்: "வரட்டும். இங்கே வந்து...'' தன்னுடைய கால்களைச் சுட்டிக் காட்டி கொண்டே அண்ணா தொடர்ந்து சொன்னார்: "தலை குனியாமல் அவர்கள் எங்கே போவார்கள்? ம்... சீக்கிரம் போய் நீயும் தயாராகு... உன் மனைவியிடமும் அலங்கரித்துக் கொண்டு நிற்கும்படி சொல்லு. நாசமா போனவர்களுக்கு தரிசனம் தருவதற்கு நான் இதோ தயாராகி விட்டேன்.''
ஊர்வலம் மாளிகையை நெருங்கி வந்து கொண்டிருந்தது. பல்லக்கின் சத்தத்தை இப்போது முழுமையாகக் கேட்க முடிந்துது.
"நீ தயாராகி விட்டாயா?'' அண்ணா விஸ்வத்திடம் கேட்டார்.
"ம்... நான் தயாராகி விட்டேன். ஆனால், இதுவரை ருக்மிணியால் தயாராக முடியவில்லை. அவள் அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள்.'' விஸ்வம் சொன்னார்.
"இந்த பெண்கள்...'' முணுமுணுத்துக் கொண்டே அண்ணா சொன்னார்: "எப்போதும் இப்படித்தான். அலங்கரிக்க ஆரம்பித்து எவ்வளவு நேரமாச்சு...!''
சுசீலா ருக்மிணிக்கு உதவிக் கொண்டிருந்தாள். கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டு ருக்மிணியின் தலைமுடியை அலங்கரிக்கும் போது, அவள் சொன்னாள்: "ருக்மிணி, நீங்க அழகியாக ஆகிக் கொண்டிருக்கிறீங்க...''
அப்போது கீழே இருந்து விஸ்வம் கூறுவது காதில் விழுந்தது: "சீக்கிரம்... அண்ணா வெளியே வந்துவிட்டார்!''
முகத்தின் மிடுக்கிற்கு எந்தவொரு குறைவும் உண்டாகாமல் பார்த்துக் கொண்டே அண்ணா மாளிகையிலிருந்து சாதாரணமாக வெளியே வந்தார். ஊர்வலத்தில் மிகவும் முன்னால் இருந்தவர்கள் பரம்பரை
பரம்பரையாகச் செய்வதைப்போல அண்ணாவின் முன்னால் படுத்து அவருடைய கால்களைப் பிடித்தார்கள். ஆனால், சாதாரண ஒரு வணங்கக்கூடிய விழலாக அது இல்லை. மாறாக, கால்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். எண்ணற்றவர்களை உதைத்த கால்களை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ கால் பார்த்து நின்றிருந்த அண்ணாவுக்கு அப்போது வெளிப்பட்ட மாறுபாடு புரிந்தது. கால்களை பின்னோக்கி இழுக்க முயற்சிக்கும்போது, அண்ணாவின் இடுப்பும் ஆட்களின் கைகளின் பிடியில் சிக்கிவிட்டிருந்தது.
பல்லக்கின் மிகப் பெரிய சத்தம் காற்றில் முழங்கிக் கொண்டிருந்தது. ஊர்வலத்தின் கோபக் குரல் அந்த முழங்கிக் கொண்டிருந்த சத்தத்துடன் சேர்ந்து கொண்டது.
அறையின் சாளரத்தின் வழியாக சுசீலா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ருக்மிணி சில நிமிடங்களுக்கு முன்புதான் படிகளின் அருகில் போய்விட்டிருந்தாள். உடனடியாக அவள் சாளரத்தின் அருகில் வந்து ஊர்வலத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். கத்தியை வைத்திருந்த ஒரு கை உயர்ந்ததும், அண்ணாவின் தொப்பை வயிற்றில் ஆழமாக இறங்கியதும் திடீரென்று நடைபெற்றன. அவருடைய குடல் வெளியே தெரிந்தது. சில நிமிடங்கள் சுசீலா தீப்பந்தத்தைப் பார்த்த பன்றியைப்போல திகைத்துப்போய் நின்றுவிட்டாள். அவளால் எதையும் பேசமுடியவில்லை. தொடர்ந்து அவள் ஓடி படிகளின் அருகில் சென்றாள். வேகமாக முற்றத்திற்குச் சென்று அவள் விஸ்வத்தையும் ருக்மிணியையும் தடுத்தாள்: "கொன்று விட்டார்கள்... அவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள்... அவர்கள்...'' விஸ்வத்தின் கையைப் பிடித்துக் கொண்டே சுசீலா சொன்னாள்: "அய்யோ... வெளியே போகாதீங்க...''
சுசீலா என்ன கூறுகிறாள் என்பதே விஸ்வத்திற்குப் புரியவில்லை. அவள் என்ன கூற விரும்புகிறாள்? அசாதாரணமான ஏதோ நடந்திருக்கிறது. வெளியே பல்லக்கின் பயத்தை வரவழைக்கக் கூடிய சத்தம் உரத்துக் கேட்டுக் கொண்டிருந்தது. ஊர்வலத்தின் கோபம் கலந்த சத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது. உடனடியாக அவர் ஓடி மேலே சென்றார். சாளரத்தின் வழியாகப் பார்த்தபோது, அவரால் தன்னுடைய கண்களையே நம்ப முடியவில்லை. அண்ணாவின் வெட்டப்பட்ட உடல் கால்களால் மிதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது!
ஒரு கற்சிலையைப் போல அவர் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டார். என்ன நடந்தது? சுவரில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவருக்கு சுய உணர்வு வந்துவிட்டது. துப்பாக்கியைக் கையில் வைத்திருந்தாலும், அவருடைய கைகள் ஆலமரத்தின் இலைகளைப்போல நடுங்கிக் கொண்டிருந்தன. ஊர்வலத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டி, நடுங்கிக் கொண்டிருந்த கைகளுடன் அவர் குண்டுகளைப் பொழிய வைத்தார். "தாய்... தாய்... தாய்..." என்ற சத்தம் பல்லக்கின் தாளத்துடனும் ஊர்வலத்தின் ஆரவாரத்துடனும் சேர்ந்து கலந்தது. இப்போது ஊர்வலம் மேலும் அதிகமான வெறியுடன் இருந்தது. அத்துடன் கட்டுப்பாடு கைகளை விட்டுப் போகவும் செய்தது. மனித உடல்களின் துண்டுகள்... காயம் பட்டு விழுந்து கிடந்த மனிதர்களை மிதித்துக் கொண்டு மக்கள் கதவை மிதித்து உடைக்க ஆரம்பித்தார்கள். விஸ்வம் குண்டுகளைப் பொழிந்து கொண்டேயிருந்தார்.
கதவுகள் உடைக்கப்படுவதைப் பார்த்ததும், சுசீலா உரத்த குரலில் கத்தினாள்: "அவர்கள் உள்ளே வருகிறார்கள்.'' அவள் ஓடி மேலே வந்தாள். ருக்மிணி முற்றத்தில் சிலையைப்போல நின்று கொண்டிருந்தாள். ஒரு புதிய மணமகளைப்போல தோன்றிய ருக்மிணியின் சுய உணர்வு உண்மையிலேயே இல்லாமற்
போய்விட்டிருந்தது. முகத்தில் காயத்தின் அடையாளங்கள்! இடிவிழுந்ததைப்போல அவள் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.
மேலே வந்தவுடன் சுசீலா, குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்த விஸ்வத்தைப் பிடித்துக் கொண்டே சொன்னாள்: " வேண்டாம்... தயவுசெய்து குண்டுகளைப் பொழியாதீர்கள். அவர்கள் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மேலே வருகிறார்கள். குண்டுகளைப் பொழியச் செய்யாதீர்கள். அவர்கள் இதோ... வந்து விட்டார்கள்.''
அதற்குள் விஸ்வத்தின் ஒரு குண்டு ஆசிரியரின்மீது பாய்ந்துவிட்டிருந்தது. ஊர்வலத்தின் கர்ணகொடூரமான ஆரவாரத்துடன், தகர்ந்து விழுந்து கொண்டிருந்த கதவுகளின் சத்தமும் சேர்ந்தபோது, அந்த இடமே அதிர்ந்து கொண்டிருந்தது. கொடூரமான சண்டையில் காரணமாக மாளிகையில் இருந்த நாய்கள்கூட நீட்டி ஊளையிட்டுக் கொண்டிருந்தன. பயந்து அரண்டுபோன கால்நடைகள் முழுவதும் வால்களை உடல்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டன.
"வேண்டாம்... இனிமேல் குண்டுகளைப் பொழியாதீர்கள்... உடனடியாக இங்கிருந்து ஓடிப்போயிடுங்க!'' கெஞ்சியவாறு சுசீலா சொன்னாள். அதற்குப் பிறகு சிறிதும் தாமதிக்காமல் அவள் விஸ்வத்தை பிடித்து இழுத்து மாளிகையின் பின் பகுதிக்குக் கொண்டு செல்ல ஆரம்பித்தாள். "உடனடியாக இங்கிருந்து ஓடி தப்பிச்சிடுங்க... எங்காவது ஓடிப்போங்க விஸ்வம்...'' அவள் மீண்டும் கெஞ்சினாள். அதற்குள் விஸ்வமும் மிகவும் பரிதாபமான நிலையில் பயந்து அரண்டு போய்விட்டிருந்தார்.