விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 30
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
இருவரும் பின் பகுதிக்கு ஓடினார்கள். வேகமாக கதவைத் திறந்து அவசர அவசரமாக எங்கு போகிறோம் என்றே தெரியாமல் அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள்.
ஊர்வலத்தில் வந்தவர்கள் பயங்கரமான கர்ஜனையுடன் முற்றத்திலும் படிகளிலும் திண்ணையிலும் பரவி நின்றிருந்தனர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்தக் கூட்டத்தில் ருக்மிணியை ஒரு முறை பார்த்தாலும். அவளுடைய அழுகையை கர்ஜனை அப்படியே அழுத்திவிட்டது.
கிளிகளின் "கலகல" சத்தத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால், எங்கும் ஒரே அமைதி படர்ந்துவிட்டிருந்தது. அஞ்சய்யாவும் பிரசாத்தும் வயலை அடைந்தபோது, அங்கு யாருமில்லை. ஆட்கள் யாருமே இல்லாத வயல். தளர்வாதம் பாதித்திருந்த ஒரு வயதான கிழவன் மட்டும் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான். அவனால் நடக்க முடியவில்லை.
"மற்ற தொழிலாளர்கள் எங்கே?'' கோபத்துடன் அவர்கள் கிழவனிடம் கேட்டார்கள். ஆனால், அவனோ மவுனமாக இருந்தான்.
அவர்கள் அவனை அடிக்க ஆரம்பித்தார்கள். அடிகள் வாங்கி உடல் முழுவதும் வலிக்க, அந்த அப்பிராணிக் கிழவன் முணுமுணுத்தான்: "நீங்கள் இதற்கான பலனை அனுபவிப்பீர்கள்... நீங்கள் இதற்கான பலனை கட்டாயம் அனுபவிப்பீர்கள்.''
யாரோ அவர்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். ஒரு மிருகம் வந்து கொண்டிருப்பதைப்போல அப்போது அவர்களுக்கு தோன்றியது. பகல் நேரத்தில் கனவு காண்பதைப்போல அது ஒருமுறை கண்களில் படும். பிறகு திடீரென்று மறைந்தும் போகும். பிறகு ஓடி வந்து கொண்டிருக்கும் மனிதனை அவர்கள் விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவன் வயலில் வந்து சேர்ந்தான். மாளிகையில் நடைபெற்ற சம்பவங்களை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவன் அஞ்சய்யாவிடமும் பிரசாத்திடமும் கூறினான். அதைக் கேட்டதும் இருவரும் ஒரே குரலில் கூறினார்கள்.
"இல்லை... இல்லை... அப்படி எந்தச் சமயத்திலும் நடந்திருக்காது!''
வயலைத் தேடி வந்த மனிதன் இப்போதும் மேலும் கீழும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். "அவர்கள் உங்களையும் கொல்வதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள்.'' நடுங்கிக்கொண்டிருந்த குரலில் அவன் சொன்னான்.
23
இனம் புரியாத ஆபத்து அஞ்சய்யாவையும் பிரசாத்தையும் சூழ்ந்துவிட்டிருந்தாலும், வயலுக்கு வந்திருந்த மனிதன் என்ன கூறுகிறான் என்பது அவர்களுக்கு முழுமையாகப் புரிந்தது. அங்கிருந்து ஓடி தப்பிப்பதற்கு அவர்களால் முடியாது. தூரத்திலிருந்து வந்து கொண்டிருந்த பல்லக்கின் சத்தம் தெளிவாகக் கேட்டது. ஒருவரோடொருவர் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளாமல் வருவதைச் சந்திப்போம் என்ற முடிவுக்கு இருவரும் வந்துவிட்டிருந்தார்கள். அதற்கான ஆயத்தங்களையும் ஆரம்பித்தார்கள். வருபவர்களைச் சந்திப்பதற்கு ஏற்றபடி துப்பாக்கியையும் மற்ற ஆயுதங்களையும் கையில் எடுத்து வைத்துக் கொண்டார்கள். அவர்களுடைய ஒவ்வொரு கால் வைப்பிலும் மிருகங்கள்மீது இருப்பதைப் போன்ற ஆர்வமும் பயமும் உண்டாகிக் கொண்டிருந்தன. பல்லக்கின் சத்தம் உரத்து கேட்டுக் கொண்டிருந்தது. வயல் முழுவதும் ஒரே அமைதி! வருபவர்களைச் சந்திப்பதற்கு தயார்படுத்திக் கொண்டு அஞ்சய்யாவும் பிரசாத்தும் நின்றிருந்தார்கள்.
பல்லக்கின் உரத்த தாளத்திற்கேற்ப ஊர்வலம் வயலில் வந்து கொண்டிருந்தது.
இரண்டு சகோதரர்களும் ஊர்வலத்தை நோக்கி குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தார்கள். குண்டு வெடிப்பதும், கல் எறிதலும் நடந்தும் ஊர்வலம் அவர்களை நோக்கி வேகமாக வந்து கொண்டுதான் இருந்தது. துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்தவுடன் மக்கள் கடலுக்கு முன்னால் அவர்களால் எதுவுமே செய்ய முடியாமற் போய்விட்டது. ரத்தத்தில் குளித்து கிடந்த அவர்களுடைய இறந்த உடல்கள
மிதித்துக் கொண்டு ஊர்வலத்தில் வந்தவர்கள் வயலில் இருந்த அறைக்கு நெருப்பு வைத்தார்கள். பல்லக்கின் பெரிய தாளம் ஒவ்வொரு நிமிடமும் கர்ண கொடூரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அத்துடன் முழுமையான அமைதியற்ற நிலையும்!
மிதித்து நசுக்கப்பட்ட வயல்கள்... பற்றி எரிந்து கொண்டிருந்த வயலின் அறை. ஊர்வலம் பல்லக்கின் தாளத்திற்கேற்றபடி மீண்டும் முன்னோக்கி நகர்ந்தது. வயலை நோக்கிச் சென்றவர்களில் சிலர் அந்த வழியே உயிரைக் கையில் பிடித்து ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வத்தைப் பார்த்தார்கள். அவர்கள் அவரைப் பிடிப்பதற்காக ஓடினார்கள்.
மாளிகையில் இருந்த சில ஊர்வலத்தில் வந்த மனிதர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். கோபம் தாண்டவமாடிக் கொண்டிருந்த முகங்களுக்கு மத்தியில் சில நொடிகளில் பூசாரியைக் காணவில்லை. ஆனால், திடீரென்று ஊர்வலத்தின் கூட்டத்தில் அவரும் எங்கோ மறைந்து விட்டார். இப்போது தாளம் மட்டும்... பல்லக்கின் தீவிரமான தாளம் மட்டும்...!
விஸ்வமும் சுசீலாவும் உயிரைப் பிடித்து ஓடிக் கொண்டிருந்தார்கள். ஓடிக் கொண்டிருக்கும்போது சுசீலா சற்று நின்றாள். "எங்கே அவள்? ருக்மிணி...? அவளுக்கு என்ன நடந்திருக்கும்? வாங்க... நாம் திரும்பிச் செல்வோம். திரும்பிச் சென்று அவள் எங்கே இருக்கிறாள் என்பதைக் கண்டு பிடிப்போம்!''
"வேண்டாம்!'' விஸ்வம் சொன்னார்.
"இப்போது அவள் எங்கே இருப்பாள்? இப்போது அவளுக்கு என்ன நடந்திருக்கும்?'' பதைபதைப்புடன் சுசீலா கேட்டாள்.
"ருக்மிணி தானே தப்பித்துக் கொள்வாள்.'' சுசீலாவைப் பிடித்து இழுத்தவாறு விஸ்வம் சொன்னார். மீண்டும் இருவரும் ஓட ஆரம்பித்தார்கள். ஓடி ஓடி இறுதியில் அவர்கள் ஒரு மலையின் அருகில் போய் நின்றார்கள். ஒருவரோடொருவர் கைகளைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டே அவர்கள் மலையின்மீது ஏற ஆரம்பித்தார்கள். அவர்கள் முழுமையாகத் தளர்ந்துபோய்விட்டிருந்தார்கள்! எனினும், உயிர் பயம் அவர்களை ஒரு இடத்திலும் நிற்பதற்குக்கூட அனுமதிக்கவில்லை. தூரத்தில் வந்து கொண்டிருந்த பல்லக்கின் சத்தம் அவரைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது.
மலையின் மேலே இருந்து பார்க்கும்போது, தூரத்தில் முற்றிலும் தகர்ந்துபோன மாளிகையும் அதன் இடிந்த பகுதிகளும் தெரிந்தன. மிதித்து நசுக்கப்பட்ட வயல்கள்! எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்த வயலின் அறை. விஸ்வமும் சுசீலாவும் ஒரு பாறையின் மறைவில் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடந்தார்கள். பல்லக்கின் தீவிர சத்தம் எப்போதும் காதுகளில் வந்து மோதிக் கொண்டேயிருந்தது. ஊர்வலம் மலைக்கு கீழே வந்துவிட்டிருந்தது. இருவரும் ஈர விழிகளுடன் பார்த்தார்கள். ஊர்வலம் ஆவேசத்துடன் வேக வேகமாக மலையின்மீது ஏறிக் கொண்டிருந்தது.
"நாம் இங்கேயிருந்து உடனடியாகத் தப்பிக்கணும்.'' சுசீலா சொன்னாள்: "என்னால் இனிமேல் ஒரு அடிகூட ஓட முடியாது''
"பரவாயில்லை....'' - விஸ்வம் சுசீலாவைத் தேற்றினார்: "அவர்களால் நம்மைக் கண்டு பிடிக்க முடியாது!''
"விஸ்வம், அவர்கள் நம்மைக் கண்டுபிடித்துவிடுவார்கள்... கட்டாயம் கண்டுபிடித்துவிடுவார்கள். வேண்டுமானால் அதற்கு இன்னும் கொஞ்சம் நேரமாகலாம். அவ்வளவுதான்.'' சுசீலா சொன்னாள்.
"ம்... கண்டு பிடிப்பார்கள்!'' அடக்க முடியாத கோபத்துடன் விஸ்வம் என்னவோ முணுமுணுத்தார்.
"இனி என்ன வித்தியாசம் இருக்கிறது! எது எப்படி இருந்தாலும் உங்களுடன் இருக்கிறேனே என்பதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். நாம் சேர்ந்து இறப்போம்.'' சுசீலா சொன்னாள்.
"சுசீலா, அப்படின்னா உன் கணவர்...?''