விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
சுசீலாவை மேலும் அதிகமாக கவலையிலும் துயரம் நிறைந்த சிந்தனையிலும் ஆழ்த்தி விட்டு அங்கிருந்து வெளியேறி போச்சம்மா ருக்மிணியிடம் சென்றாள். தொடர்ந்து இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அங்கும் கூற ஆரம்பித்தாள்.
"போச்சம்மா, அப்படின்னா... நீ சுசீலாவின் கணவரைப் பார்த்தாய்?'' ருக்மிணி கேட்டாள்.
"ம்ஹும்! நான் எதற்குப் பார்க்கணும்? உண்மையாகவே அங்கே போய் அவரைப் பார்த்ததைப்போலவே நான் சொன்னேன். அவ்வளவுதான்.'' போச்சம்மா சொன்னாள்.
போச்சம்மாவின் பச்சைப் பொய்யின் காரணமாக சுசீலா மிகவும் கவலையில் மூழ்கினாள். அவர் திரும்பவும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். அதனால்தான் அவர் என்னைப் பொருட்படுத்தவில்லை. என்னை விடுதலை செய்ய நினைக்கவில்லை. பிறகு.. அவர் சுகமாக இருக்கிறாராம்... நான் இல்லாமல்! குழந்தைகளும் சுகமாக இருக்கிறார்களாம்... இது எப்படி உண்மையாக இருக்கும்? அப்படியென்றால்...?
இந்த "அப்படியென்றால்" சுசீலாவின் உள்மனதில் புதிய ஒரு உரிமைக்கு பிறவி கொடுத்தது. சாயங்காலம் விஸ்வம் சுசீலாவைத் தேடி வந்தபோது அவள் சொன்னாள்: "எனக்கென்று தனியாக ஒரு சமையலறையை ஏற்பாடு செய்து தாங்க. எனக்கென்று பாத்திரங்களையும்... பிறகு... எனக்கு மட்டுமே என்று இந்த மாளிகையில் ஒரு குளியலறை வேண்டும். எனக்குத் தேவையான உணவை இனிமேல் நானே தயாரித்துக்கொள்ளப்போகிறேன். இன்று முதல் நான் என்னுடைய விருப்பப்படி வாழப் போகிறேன்.''
சுசீலாவின் வார்த்தைகளைக் கேட்டவுடன், எப்போதும்போல விஸ்வம் மவுனமாக நின்று கொண்டிருந்தார். ஒரு முடிவான தீர்மானத்துடன் அவர் வெளியே வந்தார்.
இரவில் எப்போதும்போல ஜமீன்தார் சகோதரர்கள் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். போதை முழுமையாக தலைக்குள் ஏறியபோது, தங்களுக்கு விருப்பமுள்ள விஷயமான புதிய இளம் பெண்ணைப் பற்றி அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.
"ஆசிரியரின் மனைவி இனிமேல் தேவையில்லை. நாம் அவளை வெளியேற்றி விடுவோம்.'' அண்ணா சொன்னார்.
"சுசீலா தேவையில்லை. ஆரம்பத்தில் பார்க்க சரியா இருந்தாள். ஆனால், இப்போ பழசா ஆயிட்டாள்...'' அஞ்சய்யா சொன்னார்.
"ஆமாம்... ஒரு பிராமண விபச்சாரி...'' பிரசாத் சற்று தெளிவான குரலில் கூறினார். "அவளை வெளியேற்றி வேலை செய்ய விடுங்க.''
"ம்... இனிமேல் அவளை ஆசிரியர் திரும்ப ஏற்றுக்கொள்ள போவதில்லை.'' அண்ணா சொன்னார்: "அப்போ வேலைக்கும் போகாமல் வேறென்ன செய்வாள்?''
மூவரும் ஒரே குரலில் கூறினார்கள்: "ஒரு பிராமண விபச்சாரி!'' ஒரு கர்ஜனையுடன் அவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். "அந்த புழு அவளுடைய கணவராக இருந்தான். நம்முடைய விரலைக்கூட அவனால் தொட முடியவில்லை. ஹா... ஹா... ஹா... இனி அவளை வெளியேற்றி விடுவோம். நமக்கு அவள் தேவையில்லை.'' மூவரும் ஒன்றாகத் தீர்மானித்தார்கள்.
அப்போது விஸ்வம் எழுந்து நின்று கொண்டு சொன்னார்: "இல்லை... அவளை வெளியேற்ற முடியாது. சுசீலா இந்த மாளிகையில் இருக்கிறாள். இனிமேலும் அவள் இங்கேயேதான் இருப்பாள்.''
மற்ற மூவரும் அவரையே ஆச்சரியத்துடனும் கவலையுடனும் பார்க்க ஆரம்பித்தார்கள்.
"நான் அவளை இங்கே குடியமர்த்தியிருக்கிறேன்.'' விஸ்வம் வெளிப்படையாகக் கூறினார்: "இனிமேலும் நான் அவளை இங்கேயே தான் குடிவைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.''
அப்போது அண்ணா மெதுவான குரலில் சொன்னார்: "நீயா? அவளை வீட்டிலிருந்து தூக்கி எடுத்துக்கொண்டு வரும்போது எதுவுமே செய்யாத நீயா இப்படிப் பேசுகிறாய்? நீ அவளை இங்கே குடி வைக்கப் போறேன்னா சொல்றே? போதாததற்கு... உனக்குப் பக்கத்திலேயே உன் மனைவி வேறு இருக்கிறாள்.''
"அப்படிச் செய்ய முடியாது. எங்களோட விஷயம் வேறு. நீ அவளை இங்கே குடி வைக்க முடியாது.'' அஞ்சய்யா சொன்னார்.
18
வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோபத்துடனும் போதையுடனும் மூன்று பேரும் எழுந்தார்கள். விஸ்வமும் திடமான முடிவுடன் எழுந்து நின்றார். அவர்களிடம் அவர் உரத்த குரலில் கூறினார்: "நான் உயிருடன் இருக்கும் காலம் வரை சுசீலா இந்த மாளிகையில்தான் வசிப்பாள். நான் மீண்டுமொருமுறை தெளிவாகக் கூறுகிறேன் அவளை இங்கேயிருந்து வெளியேற்றுவதற்கு உங்களால் முடியாது. நாளை முதல் தன்னுடைய உணவை அவள் தானே தயாரித்துக் கொள்வாள்.''
கதவின் மறைவில் நின்று கொண்டு எல்லாவற்றையும் ருக்மிணி கேட்டுக் கொண்டிருந்தாள். சகோதரர்கள் மூன்று பேரும் அமைதியாக இருந்தார்கள். அவர்களால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. என்ன கூறுவது என்ற தர்மசங்கடமான நிலையில் அவர்கள் இருந்தார்கள்.
"அடி முட்டாள்!'' அண்ணா முணுமுணுத்தார்.
"அவன் ஆரம்பத்திலிருந்தே அப்படித்தானே?'' அஞ்சய்யா அடுத்த நொடியிலேயே சொன்னார்.
"அவன் அந்த பிராமண விபச்சாரியை தன்னுடன் குடி வைத்துக்கொள்வதுதான் அவனுடைய நோக்கமாக இருந்தால், அவளைக் கொன்று விடுங்க...'' பிரசாத் கோபத்துடன் சொன்னார்.
அவர்கள் அமர்ந்து மீண்டும் குடிக்க ஆரம்பித்தார்கள். இப்போது விஸ்வம் மீண்டும் குடிக்கவில்லை. சகோதரர்களிடமிருந்து அவர் தன்னுடைய அறைக்குச் சென்றார். இன்று ருக்மிணி கட்டிலில் இல்லை. அறையின் ஒரு மூலையில் தரையில் படுத்திருந்தாள். அவர் தன் மனைவியைப் பார்த்தாலும், அவளின் அருகில் செல்லவோ ஏதாவது பேசவோ இல்லை. விளக்கை அணைத்துவிட்டு அமைதியாகக் கட்டிலில் போய் படுத்தார்.
சாதாரண ஒரு விபச்சாரி என்ற நிலையில் சுசீலா இப்போது மாளிகையில் நினைக்கப்படவில்லை. ஒரு மனைவியின் நிலையில் அவள் இப்போது கருதப்பட்டாள். ஒருநாள் அவள் நன்கு அலங்கரித்துக் கொண்டு மாட்டு வண்டியில் கோவிலுக்குச் சென்றாள். மாளிகையைச் சேர்ந்த மாட்டு வண்டியில் ஏறி சமீபகாலமாக சுசீலா அவ்வப்போது தான் மட்டும் தனியாகக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தாள். பூசாரி அவளைப் பார்த்தார். அவள் அவரைப் பார்த்து வணங்கினாள். உடனடியாக ஆசீர்வதித்தவாறு பூசாரி சுசீலாவிடம் சொன்னார்: "எல்லாவிதமான செல்வங்களும் கிடைக்கட்டும் மகளே.''
அவள் கோவிலைச் சுற்ற ஆரம்பித்தாள். அப்போது திடீரென்று சுவரின் மறைவில் சிலையுடன் ஒட்டியவாறு ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். மெல்லிய இருட்டு பரவிவிட்டிருந்தாலும், ஆசிரியர்தான் அது என்பதை சுசீலா புரிந்து கொண்டாள். ஆசிரியரேதான். தங்களின் செயலை மறந்துவிட்டு, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். உலகமே நின்று விட்டதைப்போல தோன்றியது. என்ன பேச வேண்டுமென்றோ என்ன செய்ய வேண்டுமென்றோ யாருக்கும் தெரியவில்லை. கண்களை இமைக்காமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்கள். இறுதியில் மவுனத்தை சுசீலாதான் கலைத்தாள். ஒரு விதத்தில் அவளால் பேச முடிந்தது. "குழந்தைகள் சுகமாக இருக்கிறார்களா?'' சுசீலா கேட்டாள்.
"சுகமாக இருக்கிறார்கள்.''
"வீடு...?''
"ம்... அங்கே அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.'' அவர் சொன்னார்.
"நீங்கள்...? நீங்கள் திரும்பவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேனே!''