விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 19
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
ருக்மிணி சுசீலாவின் அறைக்குள் சென்றதும், போச்சம்மா நேராக ஜமீன்தார்களின் அறைக்குள் நுழைந்தாள். நான்கு பேரும் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்கள். ஆசிரியரின் மனைவி நேற்றிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்ற விஷயத்தை போச்சம்மா கூறியவுடன்
அண்ணா சொன்னார்: "நீ எதற்கு கவலைப்படுறே? அதெல்லாம் சரியாகிவிடும். ஆரம்பத்தில் எல்லா பெண்களும் இப்படித்தான் இருப்பாங்க. பிறகு படிப்படியாக சரியா ஆயிடுவாங்க.''
அண்ணாவின் வார்த்தைகளைக் கேட்டு விஸ்வம் குறிப்பாக எதையும் கூறவில்லையென்றாலும், அவருடைய முகத்தில் வருத்தம் பரவிவிட்டிருந்தது. மற்ற சகோதரர்கள் சிரித்துக் கொண்டே ஏதோ பொழுதுபோக்காகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கேட்டது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்பதைப்போல போச்சம்மா வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.
15
ருக்மிணி சுசீலாவின் அறையிலிருந்து வெளியே வந்தபோது, உணவு முழுவதையும் அவள் சாப்பிட்டு விட்டிருக்கின்றாள் என்பதை அவள் கையிலிருந்த பாத்திரம் தெளிவாகக் காட்டியது. ஆள் அரவமற்றுக் கிடந்த கூடத்தின் படிகளில் இறங்கி ருக்மிணி சமையலறைக்குள் சென்றாள். அங்கு போச்சம்மா இல்லை. அவள் சமையலறையில் எஞ்சியிருந்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
ருக்மிணி சுசீலாவின் அறையிலிருந்து வெளியேறியவுடன், விஸ்வம் அங்கு வந்தார். அவருக்கு போதை ஏறியிருக்கவில்லை. எனினும், மேலும் கீழும் மூச்சுவிட்டுக் கொண்டே நடந்தபோது, சற்று போதை இருப்பதைப்போல தெரிந்தது.
மெதுவாக... மிகவும் மெதுவாகக் கதவைத் திறந்து அவர் உள்ளே சென்றார். உடனடியாகக் கதவை அடைக்கவும் செய்தார். ஆள் அரவமற்ற கூடத்தின் இருட்டில் பதுங்கிக் கொண்டு, இன்னொரு நிழல் ஓசையற்ற கால்களுடன் கதவின் அருகில் வந்தது. உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக “நிழல் கதவுடன் காதைச் சேர்த்து வைத்துக் கொண்டு நின்றிருந்தது. போச்சம்மாதான் அது. சிறிது நேரம் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு நின்றிருந்து விட்டு,மெதுவான காலடிச் சத்தங்களுடன் அவள் திரும்பிச் சென்றாள்.”
அறைக்குள் விரிப்பில் படுத்திருந்த சுசீலாவிடமிருந்து சற்று தள்ளி விஸ்வம் விலகி நின்றிருந்தார். விஸ்வம் வந்திருக்கும் விஷயத்தை அவள் அறிந்திருப்பாளோ என்னவோ? சுசீலா கண்களை மூடியவாறு படுத்திருந்தாள். அவளைப் பார்த்தபோது விஸ்வத்திற்கு இரக்கம் உண்டானது. அதையும் தாண்டி கருணையும். ஆனால், அந்தக் கருணை கொடிய காமமாக மாறுவதற்கு அதிக நேரம் ஆகவில்லை. சுசீலாவின் அளவெடுத்தாற்போன்று அமைந்த அவயங்களின்மீது அவருடைய கண்கள் ஊர்ந்தன. அவளிடம் ஏதோ கூற வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், ஒரு வார்த்தைகூட பேச வரவில்லை. பாம்பு இரையைப் பிடிப்பதைப்போல விஸ்வம் சுசீலாவை நெருங்கினார். கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காமம்! சிற்றின்பப் பார்வை!
வரவேற்பரையில் உணவையும் மதுவையும் சாப்பிட்டவாறு, மற்ற மூன்று சகோதரர்களும் போதையில் மூழ்கி விட்டிருந்தனர். போச்சம்மா நேராக சமையலறைக்குச் சென்றாள். அப்போது ருக்மிணி உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பூகம்பம் வந்து விட்டதைப் போல, போச்சம்மா அவளுடைய காதில் என்னவோ முணுமுணுத்தாள். விஸ்வம் சுசீலாவின் அறைக்குள் சென்றிருக்கிறார் என்பதை அவள் கூறிக் கொண்டிருந்தாள்.
சுசீலாவின் அறைக்குள் நுழைந்தவுடன் காமவயப்பட்ட விஸ்வம், உணர்ச்சியை அடக்குவதற்காக அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தார். தளர்ந்து போயிருந்த அவள் எதிர்ப்பைக் காட்டினாலும், அதனால் எந்தவித பிரயோஜனமும் உண்டாகவில்லை.
ருக்மிணி மிகவும் கவலையில் ஆழ்ந்தாள். கடுமையான கவலை தங்கி நின்றிருந்த கண்களுடன் தன்னுடைய அறையில் அவள் மட்டுமே தனியாகப் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள்.
செய்ய நினைத்ததை செய்து முடித்துவிட்டு விஸ்வம் சுசீலாவின் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து கதவை மூடிவிட்டு, அறைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவருடைய காலடிச் சத்தத்தைக் கேட்டபோது, ருக்மிணி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப்போல விரிப்பில் படுத்திருந்தாள். வேண்டுமென்றே விஸ்வத்திற்கு படுப்பதற்கு மிகவும் குறைவான இடத்தை மட்டுமே ஒதுக்கி வைத்துவிட்டு அவள் படுத்திருந்தாள். அறைக்குள் வந்தவுடன், சிறிது தயக்கத்துடன் விஸ்வம் அந்த காலியாகக் கிடந்த இடத்தில் படுத்தார். “அந்த அப்பிராணி பெண்ணின் விஷயத்தில் தான் எப்படி உள்ளே நுழைந்தோம்- படுக்கையில் படுத்துக் கொண்டே விஸ்வம் சிந்தனையில் மூழ்கினார். அவருக்கு இரக்கம் தோன்றியது. தன்னுடைய தவறைப் பற்றி அவர் முழுமையாக உணர்ந்தார். அப்போது ருக்மிணி சற்று தள்ளிப் படுத்தாள். விஸ்வம் அதே நிலையில் படுத்திருந்தார்.” அவரை நோக்கிக் திரும்பிப் படுத்துக் கொண்ட ருக்மிணி சொன்னாள்: "நீங்க ஏன் அவளைத் தேடிப் போனீங்க? நான் என்ன செத்தா போயிட்டேன்?''
விஸ்வம் அவளையே பார்த்தார். ஆனால், ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர் மேலே வெறுமனே பார்க்க ஆரம்பித்தார்.
"எனக்கு செத்துப் போயிடலாம்னு தோணுது.'' ருக்மிணி சொன்னாள். ஆனால், விஸ்வம் எதுவும் பேசாமல் அமைதியாகப் படுத்திருந்தார்.
"இனிமேல் எந்தச் சமயத்திலும் நீங்கள் சுசீலாவைத் தேடிப் போகக் கூடாது. அவள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். எல்லாரும் சேர்ந்து அந்த அப்பிராணிப் பெண்ணை நாசம் பண்ணிட்டீங்க.இல்லாவிட்டாலும், உங்களுடைய மூத்த அண்ணன் இப்படித்தானே செய்வார்! அவருக்கு மனைவி இல்லை என்பது சரி... ஆனால், உங்களுக்கு நான் இல்லையா? இந்த மாதிரியான கேவலமான விஷயங்களில் நீங்கள் ஏன் ஈடுபடுறீங்க?''
அதற்குப் பிறகும் விஸ்வம் எதுவும் பேசவில்லை. அவர் எழுந்து விளக்கை அணைத்தார். தொடர்ந்து விரிப்பில் படுத்து தன் மனைவிக்கு நேராக முதுகைக் காட்டிக்கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.
பலாத்காரம், இன்னொரு மனிதனின் மனைவியுடன் படுப்பது ஆகிய சுகமான கற்பனையில் சந்தோஷம் நிறைந்ததாக அந்த இரவு அவருக்கு இருந்தது. அதே நேரத்தில், மற்ற மூன்று சகோதரர்களும் சுசீலாவின் அறைக்குள் நுழைந்து என்னெனவோ கூறிக் கொண்டிருந்தார்கள். மது அருந்தி... மது அருந்தி... ஜமீன்தார் சகோதரர்களின் குரல்கள் முழுமையான உளறல்களாக இருந்தன.
ஆசிரியர் ராமகிருஷ்ணா ஏமாற்றத்துடன் நகரத்திலிருந்து மிகவும் கறுத்துப் போன முகத்துடன் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் அவர் தீவிரமாக சிந்திக்க முயற்சித்தார். “இனி என்ன வழி? இது ஒரு உச்சக்கட்டம். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உண்மையிலேயே இது ஒரு கற்சுவர்தான். மிகவும் பெரியதாகவும், உயரம் அதிகம் கொண்டதாகவும் இருக்கக் கூடிய ஒரு கற்சுவர்! தன்னுடைய இருப்பைத் தொடர்வதற்கு, பலவீனமானவனைப் பொறுத்த வரை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போவது மட்டுமே இருக்கக்கூடிய ஒரே வழி. இப்போது சுசீலா என்னுடன் இல்லை. இந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்றி வளர்ப்பதற்கு நான் இருந்தாக வேண்டும்.