விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
அமைதி அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதை இல்லாமற் செய்தது மூத்த குழந்தையின் கேள்விதான்: "அம்மா எப்போ திரும்பி வருவாங்க?'' ஆனால், அந்தக் கேள்விக்கு பொறுத்தமான ஒரு பதிலை ஆசிரியரால் தர முடியவில்லை.
அவர் இதுவரை தடை செய்து வைத்திருந்த கண்ணீர், "எங்களுடைய அம்மா எப்போ திரும்பி வருவாங்க?" என்று கேட்டவுடன், வெளியேறி வந்துவிட்டது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவர் அடுத்த நிமிடம் வாசலிலிருந்து அறைக்குள் சென்றார். கைக்குட்டையை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டு வெளியே சென்றபோது, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது முன்பு இருந்ததைவிட தன்னிடம் மன அம்மதி இருப்பதை ஆசிரியர் உணர்ந்தார். அடுத்த நிமிடம் தன்னுடைய பொறுப்பைப் பற்றிய புரிதலுக்கு அவர் வந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அவர் பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். மாணவர்கள் எல்லாரும் ஏற்கெனவே வீட்டுக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். அவருடைய வீட்டைப்போலவே பள்ளிக்கூடமும் ஆள் அரவமற்று யாருமே இல்லாமல் இருந்தது. அவர் பள்ளிக்கூடத்தை மூட ஆரம்பித்தார். கதவுகளையும் சாளரங்களையும் மூடும்போது, நடைபெற்ற சம்பவங்கள் அவருக்கு முன்னால் தோன்றிக்கொண்டிருந்தன. அவர் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். மாணவர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று ஒரு அழுகைக் குரல் காற்றில் தவழ்ந்து வந்தது!
ஒருவிதமாக அவர் எப்படியோ வெளியே வந்தபோது... அந்த மறக்க முடியாத சம்பவம் ஆசிரியரின் உள் மனதில் என்ன காரணத்தாலோ காயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. பாம்பு கடித்து விட்டதைப்போல... தன்னுடைய இருத்தலின்மீது யாரோ நெருப்பைப் பற்றவைத்துவிட்டதைப்போல... அதற்குப் பிறகு அந்த நெருப்பில் தான் அங்குலம் அங்குலமாக கரிந்து எரிந்து கொண்டிருப்பதைப்போல...
அவர் யாரிடம் என்றில்லாமல் கூறினார்: "ஏதாவது செய்தே ஆக வேண்டும். இதற்கு எதிராக கட்டாயம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்.'' அவர் தொடர்ந்து சொன்னார்: "நான் எதிர்ப்பது என்று தீர்மானித்துவிட்டேன். ஆமாம்... என்னால் இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.''
அந்த உறுதியான தீர்மானம் ஆசிரியரின் முகத்தில் முழுமையாக வெளிப்பட்டது. பள்ளிக்கூடம் மூடப்பட்ட பிறகு, நேராக வீட்டுக்கு வந்தார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் அவர் சொன்னார்: "நான் திரும்பி வரும் வரை நீங்கள் இப்படி ஏதாவது விளையாடிக் கொண்டிருங்கள். அதிகமாக சத்தம் போட வேண்டாம்.''
அவர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது. தங்களின் தந்தை எங்கே போகிறார் என்று இருவரும் கேட்கவில்லை.
ஆசிரியர் வெளியேறினார்.
"குழந்தைகளுக்கு இப்போது விஷயங்களைப் புரிந்துகொள்ளக் கூடிய அறிவு இருக்கிறது. தங்களின் தாயைப் பற்றி எதுவுமே கேட்பதில்லையே! நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எவ்வளவு சீக்கிரம் விஷயங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்! இல்லை... இல்லை... அவர்கள் இப்போதும் சிறு குழந்தைகள்தான்... சிறு குழந்தைகள்..." தனக்குத்தானே கூறிக்கொண்டு ஆசிரியர் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார்: "இவர்கள் என் பிள்ளைகள்... இவர்களுக்கு நிறைய தைரியம் இருக்கிறது. அதாவது...''
சந்தேகம் நிறைந்த ஒரு விதை அவருடைய மூளையில் முளைத்தது. குழந்தைகள் தன்மீது இரக்கம் எதுவும் காட்டவில்லை! தனக்கு தொந்தரவு தராமல் இருப்பது...
ஏதோ அடி வாங்கியதைப்போல, ஆசிரியர் இப்போது எதையும் சிந்திக்காமல் நடந்து கொண்டிருந்தார். வழியில் கிராமத்து மனிதர்கள் ஆசிரியரைப் பார்த்ததும், ஒரு வார்த்தைகூட பேசாமல் அவரையே பார்க்க மட்டும் செய்தார்கள். கிராமத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள்- அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியரின் மாணவர்கள்தான்- அவரைப் பின்பற்றி நடந்து சென்றார்கள். ஆசிரியரின் கால்கள் நேராக மாளிகையை நோக்கி நடந்து கொண்டிருந்தன. தானே நடக்கவில்லை- மாறாக, யாரோ தன்னை வற்புறுத்தி இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்பதைப்போல ஆசிரியர் உணர்ந்தார்.
முற்றிலும் செயலற்ற மனிதனாக ஆகிவிட்டதைப்போல ஆசிரியர் மாளிகைக்கு முன்னால் சென்றார். அதன் பிரம்மாண்டமான வெளிக்கதவு அடைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் ஒரே அமைதி...
"உள்ளே என் மனைவி சிறை வைக்கப்பட்டிருக்கிறாள். ஒருவேளை, அவர்கள் அவளை வேறு எங்காவது கொண்டு போய் விட்டிருப்பார்களோ? எது எப்படி இருந்தாலும், ஜமீன்தார் சகோதரர்கள் உள்ளேதான் இருப்பார்கள். போக்கிரிகள், அயோக்கியர்கள், ஓநாய்கள்... என் மனைவியைப் பறித்துக்கொண்டு சென்றவர்கள் நிச்சயம் உள்ளேதான் இருப்பார்கள்." சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. முழு உடலும் துடித்தது!
எப்படி... இவையெல்லாம் எப்படி நடந்தன?
திருமணமான ஒரு பெண் வீட்டிலிருந்து பறித்துக் கொண்டு போகப்பட்டிருக்கிறாள். ஏராளமான மனிதர்களுக்கு முன்னால்... பட்டப்பகல் வேளையில் கடத்திக் கொண்டு போகப்பட்டிருக்கிறாள். அதிகம் எதற்கு? தன்னுடைய கணவர், குழந்தைகள் ஆகியோர் முன்னால் இருக்கும்போதல்லவா அவர்கள் இந்தக் கொடுமையான... மோசமான செயலைச் செய்திருக்கிறார்கள்? வெட்கம் நிறைந்த ஒரு
பெரிய அலை அவரைச் சுற்றி வளைத்து, பயம் நிறைந்த கோபத்தில் மூழ்கடிக்க ஆரம்பித்தது. முன்பு இருந்ததைப்போல முழு வயிறும் பற்றி எரிவதைப்போல அவருக்குத் தோன்றியது.
இது மனைவியை இழப்பதற்காகவா? இல்லாவிட்டால் பயமா? இல்லாவிட்டால்... சாதாரண பசியா?
"இவருக்கு பைத்தியம் பிடிக்கப்போகிறது.'' அருகில் நின்றிருந்த யாரோ ஒரு ஆள் கூறியது ஆசிரியரின் காதுகளில் விழுந்தது: "இவருக்கு பைத்தியம் பிடிக்கப் போகிறது.''
அவர் மிகவும் வேகமாக அங்கிருந்து நடந்தார். மாளிகையிலிருந்து வெளியேறி தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த அவமானத்திலிருந்து தப்பிப்பதற்காக அவர் சற்று தூரத்திற்குச் செல்ல விரும்பினார். அவருடைய நோக்கம் கோவிலுக்குச் செல்வதாக இருந்தது. ஆசிரியர் ஓடி அங்கு சென்றார். அங்கு முழுமையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. கோவிலில் யாருமில்லை. ஆமாம்... அவரை வெறித்துப் பார்ப்பதற்கு அங்கு யாருமே இல்லை. சில பசுக்களையும் நாய்களையும் தவிர வேறு யாருமில்லை.
11
ஆசிரியர் நேராக சபை மண்டபத்திற்குச் சென்றார். கிராமத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அவர் இப்போதுதான் முதல் முறையாக கோவிலுக்கு வந்திருக்கிறார். அவருடைய கண்களில் புதிதாக ஒரு இடத்தைப் பார்க்கும்போது உண்டாகக்கூடிய சந்தோஷம் அதிகமாகவே இருந்தது. அந்தப் பழமையான கோவில் அவரைச் சாதாரண அளவிலொன்றும் ஈர்த்துவிடவில்லை. குளிர்ச்சியாகவும் பிரகாசமாகவும் இருந்த சூழ்நிலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. திருட்டு நடந்த பிறகு பூசாரி அமர்ந்திருந்த மண்டபத்தின் அதே தூணில் சாய்ந்து அவர் உட்கார்ந்தார். கர்ப்பக்கிரகத்தில் இருந்த விக்கிரகத்தைப் பார்த்தார். ஒரு சிறு குழந்தையைப்போல ஆசிரியர் குலுங்கிக் குலுங்கி அழ
ஆரம்பித்தார். கவலையைக் குறைக்கக் கூடிய அழுகை... அங்கு அவர் தன்னுடைய வேதனைகளை மறைத்து வைத்திருப்பதற்கு விரும்பவில்லை.