விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
இன்று அவர் சற்று அதிகமான திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் காணப்பட்டார். ஆசிரியரைப் பார்த்தவுடன் வாய்க்குள் போட்ட வெற்றிலையைத் துப்பியவாறு, மிகவும் அமைதியான குரலில் அவரிடம் கேட்டார்: "ஆசிரியர் அய்யா, என்ன விஷயமாக வந்தீங்க?''
"ஜமீன்தார்களுக்கு எதிராக ஒரு புகார் கொடுக்கணும். அவர்கள் என்னுடைய மனைவியை பலவந்தப்படுத்தி கொண்டு சென்றுவிட்டார்கள்.'' ஆசிரியர் எழுந்து நின்று கொண்டு சொன்னார்.
ஆசிரியரின் வேண்டுகோளை மிகவும் சாதாரணமாக நினைப்பதைப் போல காட்டிக்கொண்டு, உடனடியாக ஹெட் கான்ஸ்டபிள் மெதுவான குரலில் முனகினார்: "ம்...''
வெற்றிலைக்கும் பீடிக்கும் ஆர்டர் செய்துவிட்டு எதையோ தீவிரமாக சிந்திப்பதைப்போல தொடர்ந்து அவர் நாற்காலியில் சாய்ந்து
உட்கார்ந்தார். வெற்றிலையும் பீடியும் வாங்கிக்கொண்டு வரும் வரை கண்களை மூடிக்கொண்டு அவர் அதே நிலையில் உட்கார்ந்திருந்தார். இரண்டும் வந்து சேர்ந்தவுடன் ஆசிரியரிடம் கூறினார். "உங்களுடைய மேலான வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எல்லா விஷயங்களையும் பார்த்துக்கொள்வோம். ஆசிரியர் அய்யா, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம்.''
"எதைப் பார்த்துக்கொள்வீர்கள்? நீங்க என்ன கூறுகிறீர்கள்? வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரணை நடத்தணும் என்றல்லவா நான் கேட்டுக் கொண்டேன்?''
"ஆசிரியர் அய்யா... எல்லாவற்றிலும் கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கணும்.'' அவருடைய பதைபதைப்பைத் தடுத்துக் கொண்டு ஹெட் கான்ஸ்டபிள் சொன்னார். "மனிதன் முழுமையான அமைதி நிலையில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களை நன்கு சிந்தித்த பிறகு நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும் தேவையற்ற மன அழுத்தமும் பரபரப்பும் பதைபதைப்பும் இருப்பதால் எதுவுமே நடந்துவிடப் போவதில்லை. நடக்குமா? உங்களுடைய மனைவியை பலவந்தப்படுத்தி கொண்டு போய்விட்டார்கள் என்பதென்னவோ உண்மை. அது உண்மையிலேயே கவலைப்படக் கூடிய விஷயம் தான். ஆனால், வெற்றிலை போடாமலும் பீடி புகைக்காமலும் இருப்பதால் அவங்க திரும்பி வந்து விடுவாங்களா? ஆசிரியர் அய்யா, நிதானமாக கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க. மனிதனாக இருந்தால், பிரச்சினைகளைச் சந்திப்பதற்கு தைரியம் இருக்க வேண்டும். தைரியம்... எது எப்படி இருந்தாலும், எல்லா சூழ்நிலைகளையும் புரிந்து கொண்ட பிறகு மட்டுமே எதையும் செய்ய முடியும்.''
இவ்வளவு விஷயங்களும் நடந்த பிறகு, ஆசிரியரின் மனதிற்குள் இருந்த வெறுப்பு மேலும் அதிகமானது. அவர் வெற்றிலை போடவோ, பீடி புகைக்கவோ இல்லை.
"இனிமேல் உங்களுடைய விருப்பம். ஆசிரியர் அய்யா, உங்களுடைய அனுமதியுடன் நான் கொஞ்சம் வெற்றிலை போட்டுக் கொள்ளட்டுமா? அதற்குப் பிறகு புகார் என்ன என்று கேட்கிறேன்.'' அவர் வெற்றிலையை வாய்க்குள் நுழைத்தார். தொடர்ந்து பீடியைப் பற்ற வைத்தார். ஆசிரியரிடமிருந்து நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் கேட்கத் தொடங்கவும் செய்தார். அதற்கிடையில் தேநீருக்கு ஆர்டர் கொடுத்தார். தேநீர் மேஜைமீது வரும் வரை அவர் சிந்தனையில் மூழ்கியிருந்தார். தேநீர் வந்து சேர்ந்தவுடன் அதை குடிப்பதற்கு அவசரத்தை வெளிப்படுத்தியவாறு ஆசிரியரிடம் கூறினார்: "ஆசிரியர் அய்யா, உங்களுடைய தொண்டை வறண்டு போயிருக்கும். அது மட்டுமல்ல. நீங்கள் இங்கே வருவது இதுதான் முதல் முறை. அப்படித்தானே? தேநீர் பருகியே ஆக வேண்டும்.''
வேறு வழியில்லாமல் ஆசிரியர் தேநீர் குடிக்க ஆரம்பித்தார். தேநீர் பருகி முடிப்பதற்கு முன்பே ஹெட் கான்ஸ்டபிள் சொன்னார்: "ஆசிரியர் அய்யா, நீங்க நாளைக்கு திரும்பவும் வாங்க. அப்போது நாம் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி தீவிரமாக சிந்திப்போம். அவசரப்பட்டு எந்தவொரு காரியத்தையும் செய்துவிடாதீர்கள். செய்தால், எந்தவொரு பிரயோஜனமும் கிடைக்கப்போவதில்லை. குறிப்பாக- விஷயங்கள் இந்த அளவிற்குத் தீவிரமானதாக இருக்கும்போது...'' இதைக் கூறிவிட்டு அவர் யாரோ ஒரு ஆளை அழைத்தார்.
"ஆசிரியர் அய்யாவை பள்ளிக்கூடத்தில் விட்டுட்டு வா.'' அவர் தொடர்ந்து ஆசிரியரைப் பார்த்துக் கொண்டே சொன்னார். "அப்படின்னா... நான் மற்ற ஃபைல்களைப் பார்க்கட்டுமா?''
ஏமாற்றத்துடன் ஆசிரியர் அங்கிருந்து வெளியே வந்தார். மாணவர்கள் இப்போதும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவருடைய மூளை கட்டுப்பாட்டை இழந்துவிட்டிருந்தது. எதையும் அவரால் முறையாக சிந்திக்க முடியவில்லை. ஆசிரியர் வேகமாகத் தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தார். அங்கு கூடி நின்றிருந்த கிராமத்து மக்கள் அனைவரும் அமைதியாக நடந்து செல்லும் ஆசிரியரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
10
ஆசிரியர் தன்னுடைய வீட்டுக்கு திரும்பி வந்தார். பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் முன்பு இருந்ததைப்போலவே நின்று கொண்டிருந்தனர். எதுவுமே பேசாமல் எல்லாரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்பதைப்போல அவர்களின் முக வெளிப்பாடு இருந்தது. கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விஷயங்கள் எதுவும் புதிதாக இருக்கவில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவிக்கு நிம்மதி உண்டானது. ஆசிரியர் வந்து சேர்ந்தவுடன், பொறுப்பிலிருந்து அவள் விடுதலை பெற்றுவிட்டாள் அல்லவா? ஏற்கெனவே அவள் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு, குடிப்பதற்கு நீர் தந்து நன்கு கவனித்திருந்தாள். ஆசிரியரும் ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று அவள் நினைத்தாள். அவள் அவரிடம் அதை மனம் திறந்து கூறவும் செய்தாள். ஆனால், "வேண்டாம்'' என்று ஆசிரியர் பதில் கூறிவிட்டார். அப்போது அவள் அவருக்கு அறிவுரை கூறுவதைப் போல சொன்னாள்: "பட்டினி கிடப்பதால் என்ன பிரயோஜனம்? உணவு சாப்பிடாமல் இருந்தால், அப்படி இருப்பவர்களுக்கு ஏதாவது நடக்குமா? தங்களுடைய உடலை எப்படி இருந்தாலும் அவரவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.''
குழந்தைகளை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டியவாறு கிழவி தொடர்ந்து சொன்னாள்:
"இந்தக் குழந்தைகளை மனதில் நினைத்தாவது சீக்கிரமா ஏதாவது சாப்பிடுங்க."
ஆசிரியர் இப்போதும் கற்சிலையைப்போல நின்று கொண்டிருந்தார். அவர் என்ன சாப்பிடுவார்? முற்றிலும் அசாதாரணமான வகையில் இப்போது அவருடைய ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது.
அதே இடத்தில் அவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் பாசம் கலந்த கோபத்துடன் கிழவி ஆசிரியரிடம் சொன்னாள்: "சுத்த பட்டிக்காட்டானைப்போல நடக்கக் கூடாது. நீங்கள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்தானே? உங்களுக்கு ஏதாவது உடல் நல பாதிப்பு உண்டானால், பிறகு இந்தப் பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது?''
யார் பார்த்துக்கொள்வார்கள்? ஆசிரியரின் வயிற்றுக்குள் இருந்த கலக்கத்தை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
இது என்ன? இது பசியா? அல்லது தன்னுடைய அன்பு மனைவியை தன்னிடமிருந்து தனிமைப்படுத்துவதா? உண்மையிலேயே இது என்ன? என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆசிரியர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
தன்னுடைய வார்த்தைகள் வெறும் முணுமுணுப்புக்களாக மட்டுமே ஆகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டவுடன், என்னவோ முனகியவாறு கிழவி வீட்டுக்குத் திரும்பினாள். மிகச் சிலரைத் தவிர, பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் அவரவர்களுடைய வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டிருந்தனர்.