விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
விளையாட்டின் தன்மைக்கேற்ப சிறுவர்கள் ஒருவரையொருவர் மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு சண்டை போட ஆரம்பித்தார்கள். இடையில் அவ்வப்போது அவர்கள் ஜமீன்தாரை "திருடன்... திருடன்...'' என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அந்த வழியாக ஒரு ஆள் நடந்து வந்து கொண்டிருந்தான். ஜமீன்தாரை "திருடன்'' என்று கூறுவதைக் காதால் கேட்டு அவன் அதிர்ந்து போய்விட்டான். அந்தப் பகுதியில் எங்கும் ஜமீன்தாரின் ஆட்கள் எப்படியோ இல்லாமற்போனது நல்லதாகிவிட்டது என்று அவன் நினைத்தான்.
"இனிமேல் எந்தச் சமயத்திலும் இந்த மாதிரியான விளையாட்டை விளையாடக்கூடாது.'' மூன்று நான்கு அடிகளைக் கொடுத்துக் கொண்டே அவன் சிறுவர்களைத் திட்டினான்.
சிறுவர்கள் நீர் வழிந்த கண்களுடன் விலகி நின்றிருந்தார்கள். அந்த மனிதன் மேலும் ஒருமுறை முன்னெச்சரிக்கையாகச் சொன்னான்: "இனிமேல் என்றைக்காவது இப்போ விளையாடியதைப் போன்ற விளையாட்டை விளையாடினால், என்னுடைய கடுமையான அடி உதைகளை வாங்குவீங்க.''
தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டே அவன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்: "இந்தப் பள்ளிக்கூடத்துக்கு என்றைக்கு ஆசிரியர் வரப்போகிறாரோ? ஊரில் இருக்கும் எல்லா சிறுவர்களும் போக்கிரிகளாக ஆகிவிட்டிருக்காங்க!''
ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். சங்கராந்தி நாளன்றே.
கிராமத்திற்கான புதிய ஆசிரியர் தன் மனைவியுடனும் இரண்டு குழந்தைகளுடனும் ஜட்காவில் ஏறி வந்து கொண்டிருந்தார். கிராமத்தின் எல்லையில் நுழைந்தவுடன், புதிய இடத்திற்கு வந்திருக்கிறோம் என்ற உற்சாகம் முழுவதும் மனைவிக்கு இல்லாமற் போய்விட்டது. பிள்ளைகள் இருவரும் புதிய இடத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள். பள்ளிக்கூடம் உண்மையிலேயே எங்கே இருக்கிறது என்பதைக் கூறுவதற்கு அதைப்பற்றி நன்கு தெரிந்திருக்கக் கூடிய ஒரு மனிதனை ஆசிரியரின் கண்கள் தேடிக் கொண்டிருந்தன. சில நிமிடங்களுக்கு முன்னால் சிறுவர்களைத் திட்டிய அந்த மனிதனைத்தான் இறுதியில் அவர் பார்த்தார்.
"பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியைச் சற்று சொல்ல முடியுமா?'' ஆசிரியர் அந்த மனிதனிடம் கேட்டார்.
உடனடியாக அவன் ஆசிரியரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தான்.
"நான் புதிதாக வந்திருக்கும் ஆசிரியர்... ராமகிருஷ்ண ரெட்டி...''
அவன் உற்றுப் பார்த்ததற்கான உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டதைப்போல ஆசிரியர் சொன்னார். மனைவியையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டே தொடர்ந்து சொன்னார். "நான் இந்த ஊருக்கு மாறுதல் பெற்று வந்திருக்கிறேன்.''
"சிறுவர்கள் மிகவும் போக்கிரிகளாக மாறிவிட்டிருக்கிறார்கள் மாஸ்டர்'' என்று கூறிக்கொண்டே அவன் ராமகிருஷ்ண ரெட்டியை வணங்கினான். பள்ளிக்கூடத்திற்குச் செல்லக் கூடிய வழியைக் கூறிவிட்டு, புதிய
ஆசிரியர் ஊருக்கு வந்திருக்கும் தகவலை ஊரெங்கும் கூறுவதற்காக அவன் மிகவும் வேகமாக முன்னோக்கி நடந்தான்.
6
வண்டி பள்ளிக்கூடத்திற்கு முன்னால் வந்து நின்றது. பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே ஆசிரியருக்கு தங்குவதற்கான ஒரு வீட்டையும் அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். அங்கு போய் சேர்ந்தவுடன், ஆசிரியரின் பார்வை முதன்முதலாக போய் விழுந்தது பள்ளிக்கூடத்திற்கு முன்னால் இருந்த ஒரு குழியின் மீதுதான். அந்தக் குழியை முடிந்த வரையில் சீக்கிரம் மண்ணைப் போட்டு மூட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே ஆசிரியர் ஜட்காவை விட்டு இறங்கினார். அவருடைய மனைவி சுசீலா, குழந்தைகளுடன் மிகவும் கவனமாக கீழே இறங்கினாள். வண்டிக்காரனின் உதவியுடன் அவர் பொருட்கள் அனைத்தையும் வீட்டின் வாசலில் கொண்டு போய் வைத்தார்.
ஏதாவது எடுக்காமல் விட்டு விட்டோமா என்று பார்ப்பதற்காக சுசீலா ஒவ்வொரு பொருளையும் எண்ண ஆரம்பித்தாள். பொருட்கள் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கவில்லை. தாழ்ப்பாளுக்குக் கீழே இருந்த தூசியை வாயால் ஊதிவிட்டவாறு ஆசிரியர் கதவைத் திறந்தார். அறைக்குள்ளிருந்து தாங்க முடியாத அளவிற்கு கெட்ட நாற்றம் வர ஆரம்பித்தது.
அப்போது சுசீலா சொன்னாள்: "இதை இப்போதே சுத்தம் செய்தாகணும். நீங்க அந்த சாளரங்கள் எல்லாவற்றையும் கொஞ்சம் திறந்து விடுங்க.''
அவள் மீண்டும் பொருட்களைக் கணக்கிட்டுப் பார்க்க ஆரம்பித்தாள். ஆசிரியர் உள்ளே சென்று சாளரத்தைத் திறந்தார். சுத்தமான காற்று கெட்ட நாற்றத்தை விலகி ஓடச் செய்தது. திரும்ப வாசலுக்கு வந்து அவரும் மனைவியும் சேர்ந்து பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைத்தார்கள். குழந்தைகளை பலகையில் உட்கார
வைத்துவிட்டு, அறை முழுவதையும் அடித்து வாரி சுத்தம் பண்ணுவதில் மனைவி மூழ்கினாள். ஆசிரியரும் வீட்டை வீடாக வைத்திருக்கும் முயற்சியில் தன் மனைவிக்கு உதவ ஆரம்பித்தார்.
திடீரென்று இளைய குழந்தை அழ ஆரம்பித்தது. அவர் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்தார். தொடர்ந்து அழுகையை நிறுத்துவதற்காக குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தபோது, கூறத்தக்க நோக்கம் எதுவும் இல்லாமல் மூன்று நான்கு ஆட்கள் தன்னுடைய வீட்டைப் பார்த்து நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். அவர்களிடம் ஏதாவது பேசிப் பார்ப்போமா என்று மனதில் நினைத்தபோது, உள்ளேயிருந்து மனைவியின் குரல் கேட்டது.
"ஏங்க... கொஞ்சம் இங்கே வாங்க.''
உடனடியாக ஆசிரியர் உள்ளே சென்றார். ஆண்- பெண் கடவுள்களின் புகைப்படங்களை எடுத்து அவற்றில் படிந்திருந்த தூசியை சுசீலா தட்டி நீக்கிக் கொண்டிருந்தாள்.
மூத்த குழந்தை தன் அன்னையின் அருகில் உட்கார்ந்து புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், அடுத்த நொடியே தன் தந்தையின் மடியை விட்டு தம்பியும் இறங்கி அங்கு போய் உட்கார்ந்தான். ஆசிரியரும் மனைவியும் புகைப்படங்களைச் சுவரில் தொங்க விடுவதில் மூழ்கி விட்டிருந்தார்கள்.
ஜமீன்தார் சகோதரர்கள் வயலில் இருந்த அறையில் சீட்டு விளையாட்டில் ஆழ்ந்துவிட்டிருந்தார்கள். அத்துடன் பனங்கள்ளு குடிப்பதிலும் பனங்கள்ளை உள்ளே போகச் செய்வதற்கு மத்தியில், அவர்கள் சில நேரங்களில் முன்பக்கமிருந்த சாளரம் வழியாக தொழிலாளிகளைப் பார்க்கவும் செய்தார்கள். ஜமீன்தார்கள் வேலையாட்களுக்குத் தேவைப்படும் கட்டளைகளை அங்கே உட்கார்ந்து கொண்டுதான் கூறுவார்கள். அவர்களுக்கு மத்தியில் வேலை செய்து
கொண்டிருக்கும் பெண்களை அவர்கள் கண்களை உயர்த்திப் பார்க்கவும் செய்தார்கள்.
ஜமீன்தார் சகோதரர்களைப் பொறுத்த வரையில் இந்த விஷயங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கக்கூடிய வழக்கமானவையாக இருந்தன. சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போதே, பனங்கள்ளை உள்ளே போகச்செய்து கொண்டும் பொழுதைக் கழிப்பதற்காக வயல், வயலில் இருக்கும் அறை, கிராமம், தொழிலாளிகளின் சோம்பேறித்தனம் ஆகியவற்றைப் பற்றி பேசிக்கொண்டும் இருப்பது அவர்களுடைய அன்றாடப் பொழுதைக் கழிக்கும் செயல்களாக இருந்தன. இறுதியில் ஏதாவதொரு இளம் பெண்ணின் உடலழகைப் பற்றி பேசி தினமும் இந்தச் செயலை முடிப்பார்கள்.
எப்போதும்போல மூத்த சகோதரர் பிரசாத்திடம் சொன்னார்: "இந்த முறை திருவிழா மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டது. ம்... அந்தப் புதிய பசு நல்ல கறவை இருக்கக் கூடியதுன்னு தோணுது.''