விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்காக கிராமத்தின் ஹெட் கான்ஸ்டபிள் சம்சுதீன் தன் கையில் ஒரு சிறிய பிரம்பை வைத்துக் கொண்டு, சபை மண்டபத்திற்கு ஒரு ரகசிய காவல்துறை அதிகாரியைப் போல, நகைகள் வைக்கப்பட்டிருக்கும் குழியின் அருகில் வரை சென்றார். மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டதைப்போல திடீரென்று அவருடைய கண்கள் டாலர்மீது சென்றது. எதுவும் பேசாமல் அந்த நிமிடமே அந்த டாலரை எடுத்துப் பாக்கெட்டிற்குள் வைத்தார். அதற்குப் பிறகு தன்னுடைய மேலதிகாரி கூறுவதைப்போல ஹெட் கான்ஸ்டபிள் கூறினார்:
"நாம் ஒரு பஞ்சாயத்து நடத்துவோம்.''
பாக்கெட்டிற்குள்ளிருந்து பாதிக்கு மேலாக தேய்ந்து போயிருந்த சிறிய ஒரு பென்சிலை எடுத்து, நின்று கொண்டே அவர் டைரியில் என்னவோ எழுத ஆரம்பித்தார்.
கோவிலில் நின்றவாறு சம்சுதீன் டைரியில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தபோது, விஸ்வத்தின் மனைவி ருக்மிணி வெறுப்பு கலந்த குரலில் அவரிடம் கேட்டாள்: "இரவு முழுவதும் நீங்கள் எங்கே இருந்தீங்க! நீண்ட நேரம் நீங்கள் வருவீர்கள் என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். தூங்கக்கூட முடியவில்லை.''
மனைவியின் கேள்விக்கு விஸ்வம் எந்தவொரு பதிலும் கூறவில்லை. என்னவோ முணுமுணுத்தவாறு அவர் முகத்தைத் திருப்பிப் படுத்துக்கொண்டார்.
மாளிகையைத் தாண்டியிருந்த ஆரவாரமும் இதற்குள் மேலும் அதிகமாகிவிட்டிருந்தது. எல்லாரையும்விட மூத்தவரான பெரிய ஜமீன்தார் பாதி தூக்கத்திலிருந்து பொறுத்துக்கொள்ள முடியாமல் கண்விழித்து எப்போதும்போல உரத்த குரலில் கேட்டார்: "யார்? என்ன விஷயம்? இந்த ஆட்கள் ஏன் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்?''
ஆனால், கோபம் கலந்த வார்த்தைகள் மிகவும் அமைதியாக அவரைத் தேடி திரும்ப வந்து கொண்டிருந்தது.
ஆனால், முன்பே கண் விழித்து எழுந்துவிட்ட வேலைக்காரன், எஜமானரின் கோபம் கலந்த வார்த்தைகள் காதில் விழுந்த அக்கணமே தயங்கித் தயங்கி கதவின் அருகில் வந்தான். வெளியே நின்று கொண்டே அவன் தடுமாறுகிற குரலில் சொன்னான்:
"கோவிலில் கொள்ளை நடந்துவிட்டது. கடவுள்மீது இருந்த நகை திருடப்பட்டு விட்டது.''
இயல்பான ஆவேசத்துடன் தொடர்ந்து அவன் பயந்து கொண்டே அமைதியாக இருந்தான்.
அப்போது பெரிய ஜமீன்தார் மேலும் சற்று உரத்த குரலில் சொன்னார்: "அப்படின்னா, சம்சுதீனுக்கு தகவல் கொடு. இங்கே கூட்டம் கூடி நின்று கொண்டு ஆரவாரம் உண்டாக்குவதால் என்ன கிடைக்கப் போகிறது? பிறகு, போலீஸ் என்று ஒன்று எதற்கு இருக்கு?''
வெளியே கேட்டுக் கொண்டிருந்த ஆரவாரத்தைவிட ஜமீன்தாரின் கர்ஜனைதான் அவனை முழுமையாக சுய உணர்விற்குக் கொண்டுவந்தது. கிராமத்தின் தலைவராக அவர் இருந்தார். கோவில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் கவனித்துச் செய்யக்கூடிய உரிமை பரம்பரை பரம்பரையாக அவருக்குக் கிடைத்திருந்தது. சோர்வுற்ற கண்களுடன் கட்டிலை விட்டு எழுந்த ஜமீன்தார் சட்டையை எடுத்து அணிந்தார். அதற்குப் பிறகு வெளியே வந்தார்.
வெளியே கூடி நின்றிருந்த ஆட்கள் கோவிலில் நடைபெற்ற திருட்டைப் பற்றிக் கூறி கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள்: "எஜமான், கொஞ்சம் தயவு காட்டணும். கோவிலுக்கு வரணும். இன்று வரை இப்படிப்பட்ட ஒரு காரியம் நடந்தது இல்லை. உண்மையாகக் கூறப்போனால், இது ஒரு கெட்ட சகுனம்!''
மக்கள் கூட்டத்தை முழுமையாக ஒருமுறை பார்த்துக் கொண்டே, ஒரு வயதான கிழவன் ஜமீன்தாரிடம் பணிவுடன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்:
"நாம் இதைப் பற்றி தீவிரமாக சிந்தனை செய்து ஏதாவது செய்தே ஆக வேண்டும். எஜமான், ஆட்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.''
பெரிய ஜமீன்தார் வேண்டுகோளை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு சொன்னார்: "சரி... நான் இதோ வருகிறேன்.'' தொடர்ந்து அவர் கட்டளையிட்டார்: "இப்பவே நீங்கள் போய் நான் இதோ வருகிறேன் என்று அவர்களிடம் சொல்லுங்கள். சீக்கிரம், பன்றிகளே!''
அவர்கள் செல்வதற்கு முன்பே அவர் அறைக்குள் சென்றார். அதற்குள் அஞ்சய்யாவும் பிரசாத்தும் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டிருந்தார்கள். அவர்கள் சாதாரண குரலில் கேட்டார்கள்: "வந்தது யார்?''
3
எதுவுமே நடக்கவில்லை என்பதைப்போல சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அவர் சொன்னார்: "கோவிலில் திருட்டு நடந்திருக்கிறதாம். விஷயம் தெரிந்த அக்கணமே பன்றிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆரவாரம் உண்டாக்க இங்கே வந்துட்டாங்க!'' ஒரு மோசமான வார்த்தையைக் கூறிக்கொண்டே அவர் அஞ்சய்யாவையும் பிரசாத்தையும் பார்த்தார்.
அஞ்சய்யாவும் பிரசாத்தும் அர்த்தம் நிறைந்த பார்வையுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். கோவிலுக்குச் செல்வதற்காக அண்ணா தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்த ஆரவாரங்கள் அனைத்தையும் கேட்டு, விஸ்வம் முழுமையாக கண் விழித்து எழுந்திருந்தார். ஆனால், என்ன காரணத்தாலோ அவருடைய கண்கள் மூடியே இருந்தன. ருக்மிணியோ முதலிலேயே எழுந்துவிட்டிருந்தாள். திடீரென்று அவளுடைய பார்வை தன் கணவரின் கழுத்தில் போய் நின்றது. "டாலர் எங்கே?'' அவள் கேட்டாள்.
அந்த நொடியே விஸ்வம் கழுத்தில் தன் விரல்களால் தடவிப் பார்த்தார். அவர் கண்களைத் திறந்துகொண்டு என்னவோ சிந்தனையில் மூழ்கினார். ஆனால், ருக்மிணியால் நீண்ட நேரம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவள் கேட்டாள்: "நீங்கள் அதை எங்காவது ஒளித்து வைத்திருக்கிறீர்களா?'' விஸ்வம் தன் மனைவியைச் சற்று நேரம் பார்க்க முயற்சித்தார். ஆனால், அது பயனற்றுப் போனது. பதைபதைப்புடன் "ஆமாம்'' என்று கூறினாலும், அபத்தமாகக் கூறிவிட்டோமே என்று பயந்து கொண்டு, அடுத்த நொடியே திருத்திக் கொண்டு "இல்லை'' என்று என்னவோ முணுமுணுத்தவாறு அவர் கட்டிலை விட்டு எழுந்தார். மனமில்லா மனதுடன் ருக்மிணியும் எழுந்திருக்க வேண்டியதிருந்தது. தூக்கக் கலக்கத்தை நீக்குவதற்காக கண்களை நன்றாகக் கழுவி விட்டு, ஹேங்கரில் இருந்து சட்டையை எடுத்து அணிந்துகொண்டு விஸ்வம் கீழே இறங்கினார்.
கீழே அண்ணாவும் அஞ்சய்யாவும் பிரசாத்தும் தேநீர் பருகுவதற்காக அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து அவரும் உட்கார்ந்தார். சற்று தூரத்தில் ருக்மிணி கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். ஒரு மடக்கு தேநீர் குடித்தவுடன், இயல்பாகவே உற்சாகம் தோன்றியது என்றாலும், உண்டான நடுக்கத்துடன் அவர் சொன்னார்: "நேற்று இரவு என் டாலர் காணாமல் போயிடுச்சு! போயிடுச்சுன்னு தோணுது.''
ஆனால், விஸ்வத்தின் பதைபதைப்பு சகோதரர்கள் யாரிடமும் எந்தவொரு பின்விளைவையும் உண்டாக்கவில்லை. வழக்கம்போல் தேநீர் பருகிக்கொண்டு அவர்கள் விஸ்வத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அஞ்சய்யா தன் தம்பியைத் திட்டிக்கொண்டே சொன்னார்: "நீ என்றைக்குத்தான் ஒரு ஆளாக ஆவது? நீ நன்றாக வரப்போவதே இல்லை. இல்லாவிட்டாலும், நீ அப்படித்தான். தேவையில்லாததையே செய்வாய். டாலர் காணாமல் போனபிறகும், உன்னோட சிறு பிள்ளைத்தனம் மாறவே இல்லையே! கஷ்டம்... கொஞ்சமாவது சாமர்த்தியம் இருக்கணும்.''