விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
4
மந்திரவாதியை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த ஆட்கள் அஞ்சய்யா மோட்டார் சைக்கிளில் நகரத்திற்குச் செல்வதைப் பார்த்தார்கள். மோட்டார் சைக்கிளின் சத்தம் கிராமத்து மக்களுக்கு மிகவும் கர்ண கடூரமாகத் தோன்றியது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சற்று பயத்துடன் விளையாடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டார்கள்.
கிராமத்தைச் சேர்ந்த நாய்களுக்கு மோட்டார் சைக்கிளின் பின்னால் ஓடுவது என்பது ஒரு தமாஷான விஷயம். ஒரு பெரிய நாய், மோட்டார் சைக்கிளைப் பிடித்தே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் அதற்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், ஊர்திக்கு முன்னால் நாயின் வேலை விலை போகவில்லை.
"மந்திரவாதி வந்துவிட்டார்... மந்திரவாதி வந்துவிட்டார்...'' மந்திரவாதி வருவதைப் பார்த்துவிட்டு கிராமத்து மனிதர்கள் மெதுவான குரலில் ஒருவரோடொருவர் கூறிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அவருடைய உடலில் இருந்து அசாதாரணமான வாசனை வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் பாதி நிர்வாண கோலத்தில் மந்திரவாதி இருந்தார். அங்கு வந்து சேர்ந்தவுடன், அண்ணா, பிரசாத் ஆகியோருக்கு முன்னால் மந்திரவாதி தலையைக் குனிந்து கொண்டு நின்றார். அவருடைய கண்கள் கம்பீரமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. உதடுகளில் அர்த்தம் நிறைந்த ஒரு புன்சிரிப்பு! பூஜை சடங்குகளுக்காக அவர் சபை
மண்டபத்திற்கு வெளியே இருந்த முற்றத்திற்கு வந்தார். என்னவோ முணுமுணுத்து விட்டு, அவர் சிறிது அரிசியை காற்றில் வீசி எறிந்தார். அதற்குப் பிறகு ஒரு சாட்டையை எடுத்து தன்னைத்தானே அடித்துக்கொள்ள ஆரம்பித்தார். கண்களை மூடியிருந்த மந்திரவாதியின் குரலுக்கு தனிப்பட்ட ஒரு லயம் இருந்தது.
மந்திரவாதியின் சடங்குகளில் அண்ணா அந்த அளவுக்கு ஆர்வம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், பிரசாத்தின் நடவடிக்கை அதற்கு நேர் மாறாக இருந்தது. மந்திரவாதியின் செயல்கள் அனைத்தையும் அவர் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார். அண்ணா சம்சுதீனிடம் கேட்டார்: "எஸ்.ஐ.க்கு நெய் கிடைத்திருக்குமல்லவா?'' இருவரும் எஸ்.ஐ.யின் திறமையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். கண்களை மூடிக்கொண்டிருந்த மந்திரவாதியின் தாள லயத்துடன் வந்த குரலை அடையாளம் தெரிந்த உடனே அண்ணா அவரிடம் கேட்டார்: "சொல்லு... திருடன் யார்?''
மக்கள் ஆர்வம் கொண்ட பார்வையுடன் இரண்டு பேரையும் பார்க்க ஆரம்பித்தார்கள். மந்திரவாதி என்ன கூறுவார்? திருடன் யாராக இருக்கும்?
மந்திரவாதி கூற ஆரம்பித்தார்:
"வடக்கு திசையில் ஒரு புதர் காடு!
புதருக்குக் கீழே திருடனின் நண்பன்!
உயரமும் தடிமனும் கொண்டவன்!
அவன் மோசமானவன்! கோழியை அறுப்பவன்!
வடக்கு திசையில் ஒரு புதர்காடு!''
நடனமாடிக் கொண்டு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு தொடர்ந்து திருடனைப் பற்றி தெளிவில்லாத குரலில் குறிப்பாக உணர்த்திக் கொண்டிருந்தாலும், மந்திரவாதி யாருடைய பெயரையும் வாய்திறந்து கூறவில்லை.
பூசாரியின் முகம் என்ன காரணத்தாலோ கவலையுடன் இருந்தது. அவருடைய நடுங்கிக் கொண்டிருந்த உதடுகள் என்னவோ கூறுவதற்காகத் துடித்தன. மக்களின் முகங்களும் வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்குக் கனமேறிப் போய் காணப்பட்டன. தங்களுடைய கோபத்தையும் கவலையையும் அவர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். அண்ணா அதிகாரக் குரலில் சம்சுதீனிடம் கூறினார்: "என் கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. அவன்தான் திருடன். அந்த கிழவியோட மகன்... ஓடி தப்பிப்பதற்கு முன்னால் அந்தப் போக்கிரியைப் பிடிங்க.'' சம்சுதீன் சைகையைப் புரிந்து கொண்டார்.
மந்திரவாதி ஏற்கெனவே கூறியதையே கூறிக்கொண்டிருந்தார்.
"வடக்கு திசையில் ஒரு புதர் காடு.''
வடக்கு திசையில்தான் மாளிகை இருக்கிறது. மாளிகையின் ஒரு மரத்தடியில் இருந்து கொண்டு ஒரு கோழியின் கழுத்தை விஸ்வம் அறுத்தார். கோழியின் வெப்பமான ரத்தத் துளிகள் அவருடைய கையில் தெறித்து விழுந்தன. விஸ்வத்தைப் பொறுத்த வரையில் கோழியை அறுப்பது என்பது தினந்தோறும் நடக்கக்கூடிய ஒரு சம்பவமே எனினும், உயிர் போகும் வேதனையில் துடிக்கும் கோழிக்கு முன்னால் அவருடைய வறண்டு போன முகம் சந்தோஷமும், ஒரு சிறு குழந்தையின் முகத்தில் இருப்பதைப் போன்ற கள்ளங்கபடமற்ற தன்மையும் கொண்டு காணப்படும். துடித்துக் கொண்டிருக்கும் கோழியைப் பார்த்த பிறகுகூட அதைப் பார்த்ததைப்போல ருக்மிணி
காட்டிக்கொள்ள மாட்டாள். பூஜையில் மூழ்கியிருக்கும் அவள் உடனடியாகக் கண்களை மூடிக்கொள்வாள்.
நடுப்பகல் நேரத்தில் வெயில் ஆட்களை சுட்டெரித்துக் கொண்டிருந்தது. எனினும், அவர்கள் நாலா பக்கங்களிலும் கூடி நின்றிருந்தார்கள். சம்சுதீனும் மற்றவர்களும் கிஸ்தய்யாவை அடித்து உதைத்தனர். மாதிக கிராமம் முழுவதும் கொள்ளை, கொலை, திருட்டு ஆகியவற்றைச் செய்வதில் புகழ் பெற்றிருந்த கிஸ்தய்யாவின் தாய் இளம் வயதிலேயே விதவையாகிவிட்டிருந்தாள். மனைவியும் குழந்தைகளும் கிஸ்தய்யாவை அடித்து உதைப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். ஒரு வார்த்தைகூட வாய்திறந்து பேசாமல் கிராமத்தின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றிருப்பது தாங்கள்தான் என்பதைப்போல கல்லைப் போன்று கனம் கொண்ட மனதுடன் அண்ணாவும் பிரசாத்தும் நின்று கொண்டிருந்தார்கள். கூட்டமாகக் கூடி நின்று, அந்த தமாஷைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் பல்வேறு உணர்ச்சிகளும் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. அந்த முகங்களில் பரிதாபம் தோன்றியது. பயம் இருந்தது. கோபமும் கோழைத்தனமும் அதிகமாகத் தெரியும் பரிதாபமான- ஒரு வகையான ஆண்மையற்ற தன்மை இருந்தது. கிஸ்தய்யாவை அடித்து அடித்து சம்சுதீன் இறுதியில் மேலும் கீழும் மூச்சு விட ஆரம்பித்தார். அவருடன் இருந்தவர்கள் கைகளைப் பின்னால் பிடித்து கட்டிவிட்டு, அந்த அப்பாவி மனிதனைப் பிடித்து இழுத்து மாட்டு வண்டியில் கொண்டு போய் போட்டார்கள். அவனுடைய வயதான தாய் மயக்கமடைந்து தரையில் விழுந்து அழ ஆரம்பித்தபோது, அவள் முகத்தில் நீர் தெளித்து அவளைச் சமாதானப்படுத்தினார்கள். தன்னுடைய மகன் நிரபராதி என்று அவள் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாள்.
மாட்டு வண்டி காவல் நிலையத்திற்குச் செல்லும் சாலையில் சென்றது. அண்ணாவும் பிரசாத்தும் திருட்டைப் பற்றி எதற்கு என்று தெரியாமலே கவலையில் மூழ்கியிருந்தனர். அஞ்சய்யா நகரத்திற்குச் சென்றிருந்ததால், விஸ்வம்தான் வயல் பக்கம் சென்றார். அங்கு தொழிலாளிகள் தங்களுடைய வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். வயலின் வழியாக நடந்து செல்லும்போது இடையில் அவ்வப்போது விஸ்வத்திற்கு இதற்கு முன்பு நன்கு பழக்கமான பாதைகூட தவறிக் கொண்டிருந்தது. எதையோ நினைத்ததைப்போல, விஸ்வத்தின் கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது. ஒவ்வொரு முறை தொடும்போதும் டாலர் இல்லாத உணர்வு அவருக்கு உண்டானது. உடனடியாக அவருடைய மனம் வேறெங்கோ போய்விடும். அவருடைய சுய உணர்வு அற்ற தன்மையை தொழிலாளிகள் அறிந்திருக்கவில்லை. இடையில் அவ்வப்போது அவர்களுடைய கண்கள் அவர்மீதும் அவருடைய கழுத்திலும் போய் நின்றன. ஒரு இடத்தை அடைந்தபோது தன்னிடம் ஒரு தொழிலாளி என்னவோ கூறியதைப்போல விஸ்வத்திற்குத் தோன்றியது. அந்த நிமிடமே நின்று கொண்டு அவர் கேட்டார்: "நீ ஏதாவது சொன்னியா?''
அந்த கேள்வியைக் கேட்டவுடன் தொழிலாளிகளின் முகங்களில் மவுனத்துடன் சிறிது பயமும் தோன்றியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு கிழவன் சொன்னான்: "இல்லை எஜமான்... நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு? எதுவுமே சொல்லவில்லை. ம்... வெயிலுக்கு நல்ல சூடு இருக்கு.''